சின்ன சின்ன அரும்பெடுத்து சிதறாமல் நான் தொடுத்தேன்
வண்ணமலர் மாலையென வடிவெடுத்த நேரத்தில்
வாசல் தேடி வந்தவனே என்னுயிரின் வாசமென நிலைத்தவனே
நீயின்றி ஒருநாளும் நிலைக்காது என்னுயிர் இனிதானே
'உள்ளுணர்வு' இறைவன் மனிதனுக்கு குடுத்திருக்கும் வரங்களில் இதுவும் ஒன்று. நாம் பேசும் வார்த்தைகளை கவனத்துடன் தேர்ந்தெடுத்து பேச சொல்லி பெரியவர்கள் சொல்வது அவை நம் எண்ணங்களின் வெளிப்பாடு என்பதால்தான்.
மகிழ்வுடன் புறப்பட்ட மாலதியின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் பார்வதியை துணுக்குற வைத்தன.
இருந்தாலும் அவரும் மாலதியிடம், "அதுகென்னமா இனி அவளை நாங்க பத்திரமா பாத்துக்கறோம். நீங்க முன்னாடி போங்க, நாங்க ஒரளவு வேலைய முடிச்சிட்டு பின்னாடியே வரோம்" என்று சொல்லி வழியனுப்பி வைத்தார்.
கார் சென்று சிறிது நேரத்துக்கு பின் எதிர்காலம் குறித்த வண்ண கனவுகளுடன் ஆவலே வடிவாய் தன் அருகில் அமர்ந்திருந்த மனைவியை பார்த்து ஒரு கேள்வி கேட்டார் நாராயணன்...
"நீ பாட்டுக்கு பால்குடி மாறாத பாப்பாவ அண்ணிக்கிட்ட விட்டுட்டு என்கூட வந்துட்டியே அவ்வளவு காதலா என்மேல?" என்று கேட்டார்.
அதற்கு மாலதியோ, "காதல் இல்லைங்க அதுக்கும் மேல... ஒரு உதாரணத்துக்கு சொல்லட்டுமா? இப்போ மரணமே வந்தா கூட உங்களை விட்டு என்னால பிரிய முடியாதுங்க..." என்றாள்.
அவளின் உணர்வு பூர்வமான பதிலில் காரில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் உறைந்து போயினர்.
ஆம் அங்கு அவர்களின் வருகையை எதிர்பார்த்திருந்த காலனும் கூட அவர்களின் காதலை கண்டு வியந்து போனான்.
காரை ஓட்டிக் கொண்டிருந்த நாராயணன் இந்த பதிலால் கவனம் சிதறிய ஒரு நிமிடத்தில் காலன் அவன் கடமையையும் முடித்துவிட்டான்.
கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதி காலனுக்கு உதவி செய்தது. விபத்து நடந்த இடத்திலேயே நாராயணன் உயிரிழக்க, அவருக்கு முன் தன் உயிரை துறந்து மேலுலகம் சென்று அவருக்காக காத்திருந்தாள் மாலதி.
பின்னிருக்கையில் அமர்ந்திருந்ததால் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட சுந்தரமும் அவன் அன்னையும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
விஷயத்தை கேள்விப்பட்ட ஈஸ்வரனோ ஒருகணம் இறந்து பிழைத்தார். இது பொய்யாக இருக்க கூடாதா? என்ற வேண்டுதலுடன் மருத்துவமனைக்கு வந்த ஈஸ்வரன் தம்பதியை காவல் அதிகாரிகளும் மருத்துவரும் அழைத்து சென்று காட்டியபோது, தன் தம்பியயும் அவன் மனைவியயும் சடலங்களாக கண்டதிலேயே பாதி உயிராகி போனார்.
நிலை குலைந்த அவரிடம் மெல்ல சுற்றி இருந்தவர்கள் தேற்றி ஆபத்தான கட்டத்தில் இருக்கும் இருவரை பற்றியும் கூறினார்கள்.
அங்கு அவரை பார்க்கவென்றே இருந்தது போல் ஊசலாடிக் கொண்டிருந்த சுந்தரத்தின் அன்னை உயிர், தன் மகனை ஈஸ்வரனிடம் ஒப்படைத்து விட்டு விடைபெற்றது.
சொந்த பந்தங்களின் உதவியோடு இறுதி சடங்கை முறைப்படி நிறைவேற்றிய ஈஸ்வரன், ஊசலாடும் சுந்தரத்தை காக்கவேண்டி இறையிடம் முறையிட்டார்.
காலன் அவர் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பானா? சுந்தரம் பிழைப்பானா? வரும் நாட்களில் தெரிந்து கொள்வோம்....
(தொடரும்)
No comments:
Post a Comment