This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Sunday 25 November 2018

இசைக்கருவிகள்


பல்லவர்கள், சேர, சோழ, பாண்டியர்கள், என பல சாம்பிராஜ்யங்களில் அரசவைகளில் இசைக்கப்பட்ட இசைக்கருவி எப்படி இருந்திருக்கும்? அந்த இசை கருவிகளை பற்றி தற்போது ஏதேனும் தெரிந்து கொள்ள முடியுமா? எனும் அறிவுப்பசியை உடையவர்கள் அத்தனை பேருக்கும் இந்த பதிவு நல்ல விருந்தாக அமையும்.


சங்ககாலம் தொட்டு இசைக்கப்பட்டு வந்த வித விதமான இசைக்கருவிகளை இயன்ற அளவு தேடிப்பிடித்து தந்திருக்கிறேன். இசையொலியின் பல நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்கும் இசையறிவில் வளர்ந்து இசையின் அழகை துய்ப்பதற்கும், சிறப்பாக மொழி கலவாத தனியிசையின் மேன்மையை உணர்வதற்கும் இசைக்கருவிகள் பெரிதும் பயன்படுகின்றது. இசை கருவிகளின் வகைகள் மொத்தமே நான்குதான்.


நரம்புக் கருவிகள் 


துளைக் கருவிகள் 


தோற்கருவிகள் 


கன கருவிகள் 


     ஆனால் இந்த நான்கும் எத்தனை விதங்களில் வாழ்ந்து சென்றிருக்கின்றன என்று பாருங்கள். 



உடல்


உடல் என்பது தோற்கருவி வகையைச் சார்ந்த ஒரு தமிழர் இசைக்கருவி ஆகும். இது தவிலைவிட பெரிய சீரான உருளை வடிவுடையது. பெரிய உடல், சின்ன உடல், சன்ன உடல் என்று அளவின் அடிப்படையில் மூன்று வகை உடல்கள் உள்ளன.


இடக்கை


உடுக்கைவிட சற்று பெரிய அளவிலானது இடக்கை. இக்கருவியின் நடுப்புறத்தைவிட, பக்கவாட்டில் உள்ள வளைய முகங்களின் விட்டம் அதிகமாக இருக்கும். இடக்கை மீது கம்பளத்தாலான அறுபத்தி நான்கு நூல் உருண்டைகள் உள்ளன. இவை அறுபத்தி நான்கு கலைகளைக் குறிக்கும். இடக்கையின் இரு முகங்களில் ஒன்று ஜீவாத்மாவையும், ஒன்று பரமாத்மாவையும் குறிக்கும். வளையத்தில் உள்ள ஆறு ஓட்டைகள் ஆறு வேதங்களை குறிக்கிறது.


கஞ்சிரா 


உடும்புத் தோலினால் செய்யப்படும் இசைக் கருவியாகும். வனவிலங்குகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் முகமாக இவ்வகையான இசைக்கருவிகளின் விற்பனை தமிழ்நாட்டில் பொதுவாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தாடப்பலகை, கனகதப்பட்டை, டேப் தாஸ்ரித பட்டை முதலியனவும் கஞ்சிரா வகையில் சேரும்.


கைச்சிலம்பு ஆட்டம் 


இரண்டு சிலம்புகளை வைத்துக்கொண்டு ஆடும் தமிழக நாட்டுப்புற ஆட்டமாகும். மாரியம்மன் திருவிழாக்களிலும், கிராமிய தேவதைகளின் முன்பும் இவ்வாட்டம் ஆடப்படுகிறது. 'சக்தி கரகம்' எடுத்து வரும்பொழுது மாரியம்மன் தாலாட்டுப் பாடல்களைப் பாடிக்கொண்டே இச்சிலம்பாட்டம் ஆடி வருவர். மூன்று பம்பைகள், ஒரு உடுக்கை, நான்கு ஆட்டக்காரர்கள் இவை மூன்றும் சேர்ந்தே இந்தக் கூத்துவர், இதில் எது குறைந்தாலும் கூத்து நடக்காது. கையில் பூசாரிக் கைச்சிலம்பு என்ற இரண்டு வெண்கலத்தால் செய்யப்பட்ட சிலம்பு இசைக்கருவியை வைத்து ஆட்டுவர். காலில் சதங்கையும் கட்டியிருப்பர். பம்பை இசைக்கும், தவில் நாதசுரஇசைக்கும் கூட இவர்கள் சிலம்பாட்டம் ஆடுகின்றனர். குருவின் துணையுடன் நையாண்டி, நடநையாண்டி போன்ற மெட்டுகளுக்கு ஏதுவாக ஆடுவர். சிலம்பின் ஒலியும், கால்களின் சதங்கை ஒலியும் நாட்டுப்புற பாடலின் இசையுடன் இணைந்து காண்பவரை ஈர்க்கும் தன்மையுடையது பூசாரி கைச் சிலம்பாட்டமாகும்.


தவண்டை


உடுக்கை ரூபத்தில் உள்ள பெரிய தாளக் கருவியே தவண்டை ஆகும். வழக்கமாக மாரியம்மன் கோவில்களில் இந்த இசைக் கருவிவாசிக்கப்படுவதைக் காணலாம். தவண்டை, குச்சியால் அடித்து வாசிக்கப்படுகின்றது.


உடுக்கை


தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம். உலோகத்தால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால் இதை இடை சுருங்கு பறை என்றும் துடி என்றும் அழைப்பர். கரகம் ஆடும் போதும், பஜனைகளின் போதும், பூசாரியை உருவேற்றுவதற்காகவும் இது முழக்கப்படுவதுண்டு.


தண்ணுமை


மிருதங்கம் அல்லது  தண்ணுமை என்பது தென்னிந்தியாவில்பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மதங்கம் என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே 'மிருதங்கம்' என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது. பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. 


கடம்


கடம் கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி ஆகும். இது ஒரு பெரிய மண் பானையில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும். கட இசைக்கலைஞர்கள் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார்.

கர்நாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, மிருதங்கத்தைப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்த படுகின்றது.


கொடுகொட்டி.


கொடுகொட்டி என்பது தோற்கருவி வகை சார்ந்த தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்று. இது ஒரு வகைப் பறை எனும் முழவுக்கருவியாகும். இதனைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்திலும் தேவாரத்திலும் உள்ளன. இக்கருவி தற்காலத்தில் கிடுகிட்டி என்றழைக்கப்படுகிறது. நாகசுரக் கச்சேரிகளிலும் இடம்பெறுகிறது.


சிறுமுரசு


சிறுமுரசு அல்லது சாயரட்சை மேளம் என்பது தோற்கருவி வகை சார்ந்த ஒரு தமிழர் இசைக் கருவி. இது "சிறிய அரைச்சட்டியில் புள்ளிமான் தோல் கொண்டு வார்க்கப்பட்டது." இதனை கோயில்களில் மாலை வழிபாடுகள் முடிந்ததும் இசைக்கப் பயன்படுத்தினர்.


பெருமுரசு


பெருமுரசு தோற்கருவி வகை சார்ந்த ஒரு தமிழர் இசைக் கருவி. இது அரைக் கோள வடிவுடையது. இது "பெரிய இருப்புச் சட்டியில் மாட்டுத் தோலை வார்த்து உருவாக்கப்படும்."[1] பண்டைக் காலத்தில் அறவிப்பு அல்லது தொடர்பாடல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.


சேமக்கலம்


சேமக்கலம் என்பது கஞ்சக்கருவி வகை சார்ந்த ஒரு தமிழர் இசைக் கருவி. இது தூய வெண்கலத்தால் ஆனது. தாதராட்டத்தில், கோயில்களில், இறப்பு வீடுகளில் இக்கருவி இசைக்க படுகிறது.


தமுக்கு


தமுக்கு என்பது தகவல் தெரிவிக்க உதவும் ஒரு இசைக் கருவியாகும்.


தம்பட்டம்


தம்பட்டம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இதன் ஒரு பக்கம் தோலால் மூடப்பட்டிருக்கும். டண்டண் என்று கேட்கும் படியாக கிராம தேவதைகளின் திருவிழாக்களில் ஓர் இனத்தார் தம்பட்டங்களை வாசிப்பதை காணலாம்.


தாரை


தாரை எனப்படுவது 12 அடி வரையான நீளத்தைக் கொண்ட ஒரு பழந்தமிழ் ஊதுகருவி. பல்வேறு சடங்குகளில் இக் கருவி பயன்படுகிறது. இக் கருவி சீரான, இடை நிற்காத இசை தருவது.


தாளம்


தாளம் எனப்படுவது ஒரு கஞ்ச வகை தமிழர் இசைக்கருவி. இதற்கு சிங்கி, மணி, ஜாலர் என வேறு பெயர்களும் உள்ளன. இது கைக்கு அடக்கமான வட்ட வடிவிலான உலோகத்தால் ஆன இரு பாகங்களைக் கொண்டது. இரண்டையும் சேர்ந்து தட்டி தாளம் எழுப்புவர். பல்வேறு இசைக்கருவிகள் சேர்ந்து வாசிக்கப்படும் போது இசையின் கால அளவுகளை நெறிப்படுத்தும் கருவி தாளம் ஆகும்.


திமிலை


திமிலை என்பது தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். இது மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவியாகும். இது பாணி எனவும் அழைக்கப்படுகிறது. மணற்கடிகார வடிவில் இருக்கும் திமிலை இசைக்கருவியானது கேரளா மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் இசைக்கப்படுகிறது. நன்கு செப்பம் செய்யப்பட்ட பலா மரத்தில் செய்யப்பட்டு கன்றின் தோலால் (குறிப்பாக 1-2 ஆண்டேயான கன்றின் தோல்) மூடப்பட்ட இருமுக முழவுக்கருவிகளுள் ஒன்று. இக்கருவி பஞ்சவாத்தியம் எனப்படும் கருவிகளுள் ஒன்றாக கேரளா மாநிலக் கோவில்களில் இசைக்கப்படுகிறது.


திருச்சின்னம்


திருச்சின்னம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு காற்று வாத்தியம் ஆகும். இது ஜோடிக் குழாய்களால் ஆனது. இந்த இசைக் கருவி தாஸரிகளால் ஆலய வழிபாட்டின் போது வாசிக்கப் படுகின்றது.


நகரா


நகரா என்பது ஒரு தோல் இசைக்கருவியாகும். மிகப்பெரிய வடிவம் கொண்ட இந்த இசைக்கருவி பெரும்பாலும் கோவில்களில் நுழைவாயில் அருகே இடம்பெற்றிருக்கும்.


ஐம்முக முழவம்


பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் வடிவத்தில் மிகவும் பெரிய தோலிசைக்கருவி ஆகும். குடமுழா, குடபஞ்சமுகி என்று இதற்கு பல பெயர்கள் உண்டு. தமிழ்நாட்டில் சில பெருங்கோவில்களில் மட்டும் இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.


பம்பை


பம்பை போன்ற தோல் இசைக்கருவிகளை "அவனத்த வாத்தியம்" என்று வகைப்படுத்தி உள்ளார்கள். "அவனத்த" என்றால் மூடிய என்று பொருள். பலா மரத்தில் உருளை வடிவத்தில் செய்யப்பட்ட பம்பையின் இரு பக்கங்களிலும் முரட்டு தோல் மூடியுள்ளது. பலா மரத்துக்குப் பதிலாக பித்தளையாலும் பம்பை செய்யப்படுவதுண்டு.


பேரிகை


பேரிகை என்பது தகவல் தெரிவிக்கப் பயன்பட்ட ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி, திருமணச் செய்தி, ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அறிவிக்க இந்தக் இசைக் கருவியைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட யானையின் முதுகில் பேரிகையை வத்து முழக்குவர். அதன் பின்பு சொல்ல வேண்டிய தகவல் தெரிவிக்கப்படும். இப்படி அறிவிப்பவர்கள் வள்ளுவர்கள் எனப்பட்டனர்.


பேரிமத்தளம்


பேரிமத்தளம் என்பது தோற்கருவி வகையைச் சார்ந்த தமிழர் இசைக் கருவி ஆகும். இது மிருதங்கத்தை விட நீண்டது. பலாக்கட்டையால் செய்யப்பட்டு ஆட்டுத் தோல் போர்த்தப்படுவது. அரளிக்குச்சியால் ஒரு முகத்தில் மட்டும் வாசிக்கப்படுவது. தற்காலத்தில் சில பெரிய கோயில்களில் மட்டும் உலாவின் போது பயன்பாட்டில் இருக்கிறது.


மண்மேளம்


மண்மேளம் என்பது தோல் கருவி வகை தமிழர் இசைக்கருவி. இது பானை வடிவில் மண்ணால் செய்யப்பட்டு இரு பக்கமும் மாட்டுத் தோல் வார்க்கப்பட்ட ஒரு கருவி. பொதுவாக ஒரு பக்கம் கையாலும் மறுபக்கம் குச்சியாலும் வாசிப்பர்.


முகவீணை


முகவீணை அல்லது கட்டைக்குழல் என்பது ஒரு துளைக் கருவி வகை தமிழர் இசைக் கருவி. நாதசுவரம் போன்று ஆனால் அதை விட குட்டையானது. பரவலாக அறியப்பட்ட நாதசுவரத்தின் ஆதிவடிவம்.தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில், இக்கலை மிகச் சிலரால் நிகழ்த்தப்படுகிறது. அருந்ததியர் சாதியினர் மட்டுமே இக்கலையை நிகழ்த்துகின்றனர்.

கட்டைக்குழல், தவில், பம்பை, உறுமி ஆகிய இசைக்கருவிகள், இக்கலையில் பயன்படுத்தப்படுகின்றன. இக்கருவியில் ஓசையிடுவதற்கு, ஏதுவாக ஏழு துளைகள் காணப்படும். இக்குழலின் ஓசை, நாயனத்தின் ஓசையைவிட, உச்ச நிலை அதிர்வைக் கொண்டது. திரைப்பட இசையினையே இக்கலைஞர்கள் பெரிதும் இசைக்கின்றனர்.

கோயில்களிலும், ஆட்டங்களிலும், கூத்துக்களிலும் இக்கருவி பயன்பட்டு வந்திருக்கிறது. இக்கலையின் நிலை, தற்போது மதிப்பிழந்து காணப்படுகிறது.


முரசு


முரசு என்பது ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.

இந்த முரசுகளில் மூன்று வகை உண்டு.


வீர முரசு


இது போர்க் காலங்களில் பயன்படுத்தப்படுவது. போருக்குச் செல்லும் முன்னும், போர் நடக்கும் போதும், போர் முடிந்த பின்பும் முரசு கொட்டுதல் அக்கால வழக்கம். இந்த முரசுவிலிருந்து வெளிவரும் சப்தம் வீர உணர்வினைத் தோற்றுவிப்பதாக இருக்கும். இந்த முரசு வைப்பதற்காகவே உயரமான இடத்தில் தனி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த மேடையை முரசுக் கட்டில் என்று சொல்வர்


தியாக முரசு


இது பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்ட முரசு இது.


நியாய முரசு


நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட முரசு இது. (மனுநீதிச் சோழன் அரண்மனை முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி இது போன்றது)


முழவு


முழவு என்பது தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு முழவுக்குப் பெயர் அமைத்திருக்கலாம். பனைமரத்தடி, பலாப்பழம் போன்றவை இதற்கு உவமையாக சுட்டப்பட்டுள்ளன. இது குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பிச் சுவைக்கும் கருவியாகும். முழவு என்ற சொல் தாளக் கருவிகளைச் சுட்டும் பொதுச் சொல்லாகவும், ஒரு குறிப்பிட்ட கருவியைச் சுட்டும் சொல்லாகவும் இலக்கியங்களில் இடம் பெறுகிறது. சிலப்பதிகார காலத்தில், தாளக் கருவிகளுள் ‘தண்ணுமை’ தலைமைக் கருவியாய் விளங்கியது.


பாண்டில் 


பாண்டில் என்னும் சொல் வெண்ணிறத்தைக் குறிக்கும். வெண்ணிற மூடாக்கு வண்டி, வெண்ணிற விரிப்புள்ள கட்டில், வெண்ணிறமுள்ள சங்கு, வெண்ணிறத் தோலால் போர்த்தப்பட்ட யாழ்ப்பெட்டி, மகளிர் இடுப்பில் அணிந்து கொள்ளும் வெண்ணிற ஒட்டியாணம், வெள்ளி விளக்கு முதலான பொருள்களை உணர்த்தும். 


யாழ்


யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச் கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது.


வீணை


வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.


வீணை வகைகள்

உருத்திரவீணை

விசித்திர வீணை

சித்திரவீணை

நவசித்திரவீணை

சாத்வீக வீணை

அன்சவீணை


ஊதல் (சங்ககாலம்)


சங்ககால ஊதல் வகைகளில் குழல், தூம்பு முதலானவை குறிப்பிடத்தக்கவை.

முழவு, ஆகுளி, தட்டை, எல்லரி, பதலை முதலானவை முழக்கும் பறைக்கருவிகள். கோடு என்னும் யாழ் நரம்புக்கருவி. கூத்தர் இவ்வகையான இசைக்கருவிகளை வழிநெடுக முழக்கிக்கொண்டே ஊர் ஊராகச் செல்வதும் ஊர்மக்களுக்கு இசையோடு பாடி ஆடிக் காட்டுவதும் வழக்கம்.


குழல்


குழல் தொன்றுதொட்டு இன்றும் பயன்பாட்டில் உள்ள இசைக்கருவி.


உயிர்த்தூம்பு


ஊதும் துளைகளைக் கண்ணாகக் கொண்ட இதன் இசை யானை பிளிறுவது போல இருக்கும்.


குறும்பரந்தூம்பு


இது ஏழிசைப் பண்ணில் இளியிசையைக் கூட்டித் தரக்கூடியது.


ஆகுளி 


 என்பது ஒருவகைச் சிறுபறையாகும். இந்தத் தாளவிசைக்கருவி முழவுக்கு இணையாகவும் துணையாகவும் அமையும். துடி - கொம்பு - ஆகுளி - இவை மூன்றும் ஐவகை நிலங்களில் குறிஞ்சித்திணைக்குரிய இசை கருவியாகக் குறிப்பிடப்படுகின்றன.


கொம்பு


கொம்பு எனப்படுவது ஒரு தூம்பு வகை தமிழர் இசைக்கருவி ஆகும். இது ஒரு ஊது கருவி. நாட்டுப்புற இசையிலும் கோயில் இசையிலும் கொம்பு இசைக்கருவி பயன்படுகிறது.

கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது.


எக்காளம் 


என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக்கருவிகளில் ஒன்றாகும். இது நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவிஆகும். எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் பகையரசரை வென்ற மன்னவர் எக்காளம் இசைத்து மகிழ்வர். ஆலய வழிபாட்டு ஊர்வலங்களிலும் இது இசைக்க படுகின்றது. சிறுதெய்வ வழிபாட்டின் சாமியாடுதல் அல்லது அருள் ஏறுதல் நிகழ்வில் உடுக்கை மற்றும எக்காள இசையின் பங்கு முக்கியமானது.


திருச்சின்னம் 


இது சமயச் சடங்குகளில் பயன்படுத்த படுகின்ற கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு காற்று வாத்தியம் ஆகும். இது ஜோடிக் குழாய்களால் ஆனது. இந்த இசைக் கருவி தாஸரிகளால் ஆலய வழிபாட்டின் போது வாசிக்கப் படுகின்றது.


கொக்கறை


கொக்கறை என அறியப்படும் நெருக்கமான இரு இசைக்கருவிகள் உள்ளன. ஒன்று மாட்டின் கொம்பால் செய்யப்படுவது. மற்றையது இரும்புக் குழல். முதலாவது கோயிலிலும், இரண்டாவது சாற்றுப்பாடலின் போதும் பயன்படுத்தப்பட்டது.


சங்கு


சங்கு என்பது ஒரு காற்று இசைக் கருவி. தமிழர் மற்றும் இந்திய இசையில், பண்பாட்டிலும், கோயில் வழிபாட்டின் போதும் பயன்படுகிறது. இந்து சமயம் , வைணவ கடவுளான விஷ்ணுவின் சின்னமாக சித்தரிக்கப்படுகிறது.


நமரி


நமரி என்பது ஒரு தமிழர் இசைக்கருவி. மேள தாளங்களோடு வாசிக்கப்படும் ஓர் ஊதுகருவி. இது யானையின் பிளிறல் போன்று ஒலி எழுப்பக் கூடியது. இதனை கொண்டாட்ட நிகழ்வுகளிலும் துக்க நிகழ்வுகளிலும் வாசிப்பர்.


நாதசுவரம்


நாதசுவரம் துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது.


மகுடி


மகுடி இந்தியாவில் தோற்றம்பெற்ற ஒரு பண்பாட்டு இசைக்கருவி ஆகும். சமயச் சடங்குகளில் பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவின் கிராமிய இசையிலும் பாம்பாட்டிகளாலும் பன்னெடுங்கலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


வீளை 


என்பது வாயால் எழுப்பப்படும் ஒருவகை இசை. வாயில் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து வைத்தோ, ஆள்காட்டி விரலை மட்டும் மடித்து வைத்தோ எழுப்பப்படும் வீளை ஒலி பேரொலியாக இருக்கும். விரல் வைத்து ஒலிக்கும் வீளையைச் சங்க பாடல்கள் மடிவிடு வீளை எனக் குறிப்பிடுகின்றன. நன்னெறியாளர் சொல்லித்தரக் கூடாத கலைகளில் ஒன்று வீளை என்கிறது ஆசாரக்கோவை.


இவை தவிர விளக்கமே கிடைக்காத இன்னும் பல இசைக்கருவிகளையும் நம் முன்னோர்கள் கையாண்டு இருக்கிறார்கள். அவைகள்,



ஏழில்


கத்திரிகை


கண்டை


கரதாளம்


கல்லலகு


கல்லவடம்


கவிழ்


கழல்


காளம்


கிணை


கிண்கிணி


கிளை


கின்னரம்


குடமுழா


கையலகு


கொட்டு


சச்சரி


சலஞ்சலம்


சல்லரி


சிரந்தை


சின்னம்


தகுணிச்சம்


தக்கை


தடாரி


தட்டழி


தத்தளகம்


தண்டு


தமருகம்


துத்திரி


துந்துபி


துடி


தூரியம்


தொண்டகம்


நரல் சுரிசங்கு


படகம்


படுதம்


பணிலம்


பல்லியம்


பறண்டை


பாணி


பிடவம்


மணி


மருவம்


முரவம்


முருகியம்


முருடு


மொந்தை


வங்கியம்


வட்டணை


வயிர்


வெங்குரல்


      ஹப்பா சொல்லி முடிக்கிறதுக்குள்ள வாய் வலிச்சிடும் போல....


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.