தடுமாறும் நேரத்திலும்
தடம் மாறாமல் காத்தவளே
தாயெனவே தாங்கி நின்றாள்
தாரம் இவள் என்னவளே
பச்சை பசேல் என்ற வயல்வெளி , சுத்தமான காற்று,இயற்கை அன்னையின் அருட்கொடையாய் நிறைந்து இருக்கும் சோழவந்தான் கிராமத்தில், சிவந்த நிறம், கம்பீரமான தோற்றம் , அளவான உயரம் , என ஊரே மெச்சும்படி வாழும் ஈஸ்வரன் -பார்வதி தம்பதிகள்.
முன்னோர் சேர்த்து வைத்த சொத்துக்களுடன் தன் சுய உழைப்பில் விவசாயம் செய்திடும் நிலக்கிழார்.
இவருக்கு ஒரு தம்பி அவர்தாங்க நாராயணன். பிச்சை எடுத்தாவது படிக்க சொன்னாங்க அவ்வை பாட்டி. ஆனா நாராயணன் படிக்க போன இடத்துல படிப்போட சேத்து காதலயும் கத்துக்கிட்டாரு.
இவரோட காதல் வானில் சிறகடித்து பறந்த ஜோடி கிளி பேரு மாலதி. அப்பா அம்மா இல்லாதவங்க சிற்றன்னையின் வளர்ப்பில் வளர்ந்தவங்க.
மாலதியின் சிற்றன்னைக்கு ஒரு மகனும் உண்டு சிறு வயதில் இருந்து ஏழ்மை என்பதால் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பணப்பேய்கள் இவர்கள் இருவரும்.
எனவே மாலதி இவர்கள் பிடியில் இருந்து மீளவேண்டி நாராயணனை வற்புறுத்தி, வீட்டுக்கு தெரியாமல் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்தார்.
முதலில் அண்ணனுக்கு தெரியாமல் திருமணம் செய்ய நாராயணன் தயங்கினாலும் முடிவில் மாலதி மீது கொண்ட காதலே வென்றது.
திருமணம் முடிந்து மாலையும் கழுத்துமாக ஈஸ்வரன் வீட்டுக்கு வந்தனர் நாராயணன் தம்பதிகள்.
முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் மனதை சமாதான படுத்திக்கொண்டு, அவர்களை ஏற்று கொண்டனர் ஈஸ்வரன் தம்பதி.
நாராயணனின் காதலும், ஈஸ்வரனின் பெருந்தன்மையிலும், பார்வதியின் அன்பிலும், அவர்களின் மகன் பாஸ்கரின் குறும்பிலும், வாழ்வு வசந்த காலமாய் மாறியது மாலதிக்கு . புகுந்த வீட்டையும் அதன் மனிதர்களையும் உயிரென மதித்து வாழ துவங்கினாள்.
ஒரு மாலை வேளையில் பாஸ்கருடன் விளையாடிக் கொண்டிருந்த மாலதி மயங்கி விழ சிறுவன் பாஸ்கர் போட்ட கூச்சல் மருத்துவரை அவளை அழைத்து செல்ல வைத்தது.
அவர்கள் குடும்பத்திற்கு மேலும் ஒரு மகிழ்வாக மாலதி கருவுற்றிப்பது தெரிய வர அன்றைய கொண்டாட்டத்தில் குடும்பத்தினர் முகம் மகிழ்ச்சியில் விகாசித்து இருந்தது.
விதியோ தன் கோரமுகத்துடன் சிரித்தது இனி- (தொடரும்)
No comments:
Post a Comment