ஹலோ உறவுகளே...
நான் ராமராஜன்(48). இது என் முதல் முயற்சி என்பதால் முன்ன பின்ன இருந்தா பொறுத்துக்கோங்க.
எனக்கு படிக்கப் பிடிக்கும் அதேமாதிரி நாமளும் ஏதாவது எழுதனும்னு ரொம்ப நாளாவே ஆசை இருந்துச்சு, ஆனா எங்க போய் எழுதுறதுன்னு தெரியல. பொத்தாம் பொதுவா எழுதினா வாசிப்பாளர்கள் எழுதத் தெரியாமல் ஏன்யா எழுத வரீங்கன்னு கேப்பாங்களே.... அப்படின்னு ஒரு சின்ன தயக்கம் இருந்துச்சு.
இந்த கூட்டாஞசோறு பகுதியில எழுத பழகலாம் சொன்னதும் யோசிக்காம இறங்கிட்டேன். நான் எழுத்தாளர் ஆக போறேன்னு என் மனைவியிடம் சொன்னதும் என்னவோ செஞ்சு தொலைங்க என்ன டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா சரின்னுட்டா. சொல்லிட்டு போறா என் முதல் படைப்பை வாசித்தபிறகு அவளே என்னை தேடி வருவா...
மனைவின்ற வார்த்தைக்கு அர்த்தமே வீட்டை விளங்க செய்பவள்ங்க.
மனை=வீடு
வி=விளங்கச்செய்பவள்.
திருமணம் அப்படின்ற நிகழ்ச்சி மூலமா நமக்கு மனைவி மட்டும் கிடைக்கிறதில்ல, மனைவிங்கற பேருல ஒரு தோழி, ஒரு குரு, ஒரு அம்மா, ஒரு வழித்துணை, ஒரு சுமைதாங்கி, ஒரு எதிரி இன்னும் சொல்லப் போனா அவள் ஒரு நிழல்....
நாம அவகிட்ட ஆழ்மனதிலிருந்து சொல்ற சொல்லும், அவ கையில கொடுத்தா பொருளும் அவளைத் தாண்டி எங்கேயும் போக முடியாது. சில சமயம் நமக்கே திரும்பி வராது அது வேற விஷயம், ஆனாலும் மனைவி ஒரு பொக்கிஷம் புதயலையே தன் பொறுப்பில் வைத்திருப்பாள் என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஒருநாளில் ஆயிரம் முறை நம்மை திட்டி தீர்த்தாலும் தினமும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது சிரிச்ச முகமா வாசலைப் பார்த்து நீப்பாளே, அப்பவே அவ பேசினது எல்லாம் மனசில இருந்து அழிஞ்சு போயிருக்கும். ஒரு நாள் அவ வீட்டுல இல்லாம வெறும் வீடா இருந்தா சுருக்குனு ஒரு வலி வருமே, அந்த உணர்வ சொல்ல எந்த மொழியிலயும வார்த்தையை கிடையாது.
எந்த ஆம்பளைக்குமே மனசுல இருக்கிற அன்பை தன் துணையிடம் சரியாய் வெளிப்படுத்த தெரியாது, அது இளைஞனானாலும் சரி, வயசான கிழவனா இருந்தாலும் சரி... சின்னதா ஒரு சிரிப்பு, செல்லமா ஒரு பாராட்டு, கொஞ்சலா ஒரு மன்னிப்பு எத்தனை பேரு செஞ்சிருக்கோம்? மனைவி வாய்விட்டு கேட்டாலும் கூட நாம செய்றது கிடையாது.
இருந்தாலும் நம்மள கட்டிக்கிட்ட பாவத்துக்கு, உடலளவிலும் மனதளவிலும் எல்லா வித கஷ்டங்களையும் அனுபவிக்கிற அந்த ஜீவனுக்கு, வயசு இருக்கும் போதே அப்பப்ப நேரம் ஒதுக்குங்க... வயசான பிறகு நேரம் இருக்கும், வசதி இருக்கும் மனைவியும் இருப்பா, ஆனா எங்கேயும் போய் வர முடியாத தேய்மானங்களுடன்...
ஒரு காலத்துல அவளும் நம்மை போல படிப்பு, வேலை, தோழிகள், ஊர் சுற்றல் என்று பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தவள்தான். கல்யாணம் ஒன்னு ஆனதும் காலையில கண்ணு முழிச்சதுல இருந்து ராத்திரி கண்ண மூடி தூங்குற வரைக்கும், அவளோட உலகம் அந்த நாலு சுவத்துக்குள்ள அடங்கிப் போகிறது. டிவியும் செல்போனும் வேடிக்கை காட்டுமே தவிர, வேறு எதுவும் செய்யாது.
எந்த ஊரு மனைவியும் சினிமாவிலும் கதைகளிலும் வரும் சூப்பர் மேன் ஹீரோக்களை விரும்புவதில்லை, அது அவளுக்கான பொழுதுபோக்கு மட்டுமே. அவளது தேவை மிக மிக குறுகியது.
ஒவ்வொரு நாளும் அவளுக்கென நாம் செலவு செய்யும் ஐந்து நிமிடங்கள்.
அந்த நிமிடத்தில் அவள் மேல் நம் காதலை உணர்த்திடும் நான்கு வார்த்தைதள்.
தினமும் குறைந்தது மூன்றே மூன்று முத்தம், அது பறக்கும் முத்தமோ இல்லை வாட்ஸப்பில் பகிரும் முத்தமோ.
அவ்வப்போது இரண்டே இரண்டு வார்த்தை, லவ்யூ...
அதுவும் முடியவில்லை என்றால், அவளுக்கென ஒரே ஒரு ஆலிங்கனம்.....
மனைவி எனும் அழியா சொத்தினை இருக்கும்போது தொலைத்துவிட்டு, இல்லாத நேரம் தேடி அலையாதீர்கள்.
No comments:
Post a Comment