காதை கூலாக்கும் உலகின் முதல் ஹெட்போன்
எந்நேரமும் கையில் அலைபேசியை வைத்துக்கொண்டு இருந்தாலே தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாதவர்கள் பலருள்ள இந்த காலத்தில் ஒருநாளின் பெரும்பகுதியை கேமிங் என்னும் கணினி சார்ந்த விளையாட்டில் செலவிடுபவர்களை பற்றி சொல்லவே வேண்டாம்.
வெகுநேரம் தொடர்ந்து கேம் விளையாடுபவர்களுக்கு பெரும் தொல்லை மனிதர்கள் அல்ல; குறிப்பிட்ட சில மணிநேரத்தில் காது வலிக்க செய்யும் ஹெட்போன்கள்தான். விலையுயர்ந்த ஹெட்போன்களை பயன்படுத்தினால் அசௌகரியம் வேண்டுமானால் குறையலாம். ஆனால், ஹெட்போன்களிலிருந்து உண்டாகும் வெப்பத்தை கட்டுப்படுத்தவே முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், ஹெட்போன்களிலிருந்து வெளியாகும் வெப்பத்தை அறவே நீக்கும் சிறப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய உலகின் முதல் ஹெட்போனை எச்.பி. நிறுவனம் வெளியிட்டுள்ளது.
எச்.பி ஓமென் மிட்பிரேம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கேமிங் ஹெட்போனின் இருபுறமும் (காதில் சொருகுமிடம்) கணினிகளின் நினைவகமான சிபியு-வை குளிர வைக்க பயன்படுத்தப்படும் தெர்மோஎலெக்ட்ரிக் கருவியை பயன்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த எச்.பியின் கேமிங் விழாவில் குறிப்பிடப்பட்டிருந்த இந்த ஹெட்போனை, அக்டோபர் மாத இறுதியிலிருந்து பொது மக்கள் வாங்க முடியும்.
No comments:
Post a Comment