எதுகையும் மோனையும்
என் கவிதனில்
கவலைக்கிட மாகின்றன...
உன்பெயரின் இனிமையினை
எந் நாதனில்
ஒருமுறை ருசித்த பிறகு....
பனிக்காலத்தின் தண்மை முடிந்து வெயில் காலத்தின் வெம்மை தொடங்கும் மாசி மாதத்தின், ஒரு அந்தி மாலை நேரம்... ஆதவனது கடைக்கண் பார்வை தீண்டியதில் வானமகள் தன் அங்கமெல்லாம் செவ்வண்ணம் பூசி செக்கச் சிவந்து நின்ற அந்த நேரத்தில், நிலவின் மகளான நம் நாயகி கீர்த்தனா கோபத்தில் முகமெல்லாம் செக்க செவேலென சிவக்கும் படியாக நின்றிருந்தாள்.
மதுரை மாநகரின் தென்கிழக்கு மூலையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவள், இளமையிலேயே குடும்ப சூழ்நிலை புரிந்ததால் பொறுப்புகளை சிரமேற் கொண்ட புத்திசாலிப் பெண் கீர்த்தனா. அவளது கோலிக்குண்டு கண்களும், கோதுமை நிற தேகமும், வானவிலென விரிந்து நிற்கும் புருவமும் அவளை காண்போர் மனதினில் பசை ஏதுமின்றி பசுமரத்தாணி போல ஒட்டிக்கொள்ளும். அவள் உடன் பயிலும் தோழிகள் அவளை ஊமை குசும்பு நிறைந்தவள் என்று சூடம் அடித்து சத்தியம் செய்தாலும் நாம் நம்ப முடியாத அளவிற்கு சாந்தமான முக வடிவத்தினை பிரம்மனிடம் இலவச இணைப்பாக பெற்று வந்திருக்கிறாள் நம் கீர்த்தனா...
பொதுவான இளவயது பெண்ணிற்கே உரிய குறும்புத்தனங்கள் அவளுக்குள் இருந்தாலும், படிப்பு விஷயத்தில் அவள் ரொம்பவே படுசுட்டி. பள்ளியில் படிக்கும் நான் தொட்டு, தற்பொழுது படித்துக் கொண்டிருக்கும் பிஎஸ்சி இறுதியாண்டு வரை அவளது மதிப்பெண் எப்போதும் முதல் மூன்று இடங்களுக்குள் தான் இருக்கும். தன்னைப் போலவே தன் குறும்புக்கார தம்பியையும், காதை திருகி படிக்க வைத்து நல்ல மதிப்பெண் எடுக்க வைத்துவிடும் கெட்டிக்காரி.
வீட்டு ஹாலில் இருந்த தொலைக்காட்சியிலிருந்து மாலை நேரத்து சுப்ரபாதம் சன்னமான குரலில் ஒலித்து கொண்டிருக்க, அதன் எதிரில் கீர்த்தனாவின் தம்பி பாடம் படித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். உள்ளே அடுப்பங்கரையில் கடமையே கண்ணாக அவளின் அம்மா அடுத்த வார காலை டிபன் முழுமைக்குமாக கிரைண்டரில் மாவு ஆட்டிக்கொண்டு இருந்தார்.
அவருக்கு தங்களது பேச்சு சத்தம் கேட்காதபடி உள் அறைக்குள்ளே கிசுகிசுப்பான குரலில் ராதா, "ம்ச்ச்... இப்ப ஏன்டி மூஞ்சியை இப்டி தூக்கி வச்சிட்டு இருக்க? நம்மள மீறி எதுவும் நடக்காது, கொஞ்சம் நார்மலாத்தான் இருமேன்டி..." என்று தன் தோழியை தேற்ற முயன்றாள்.
"வேடிக்க பாக்குற உனக்கெப்படி தெரியும் என்னோட கஷ்டம்? அவ்ளோதான்... என் ஆச, என் கனவு, என் உழைப்பு எல்லாம் அவ்ளோதான்... அத்தனையும் குழிதோண்டி புதைச்சுட்டு எங்க அம்மா சொல்றதத்தான் நான் செஞ்சாகணும்..."
"நீ ஏன் சாதாராண விஷயத்துக்கு இவ்வளவு ஓவரா ரியாக்ட் பண்ற? நாளைக்கி உன்ன பொண்ணு பாக்கத்தான வர்றாங்க, நாளைக்கே உன்ன கல்யாணம் பண்ணி கையோட கூட்டிட்டு போகப் போறதில்லையே... எனக்கென்னமோ நீ ஒருதடவ உன்னோட ஆசைய பத்தி அந்த பையன் கிட்ட பேசி பார்த்தா என்னன்னு தோணுதுடி?"
"இல்ல... அவன் விட மாட்டான். அவன் மட்டும் இல்ல எவனா இருந்தாலும் ஒத்துக்கவே மாட்டான். அறுபதாயிரத்துக்கு மேல சம்பளம் வாங்குற ஒருத்தன் ஆறாயிரம் ரூபா சம்பளத்துக்கு தன்னோட பொண்டாட்டிய வேலைக்கு அனுப்புவானா? "
"சம்பள பணத்த அப்டியே அவன் அம்மா அப்பாக்கு குடுக்குறேன்னு சொல்லிப்பாருடி கண்டிப்பா ஒத்துக்குவான். உன் ஆசையும் நிறைவேறிடும்..."
"லூசாடி நீ? நான் எங்க அம்மாவுக்கு மகளா வேலைக்கு போறதுக்கும், அந்த குடும்பத்து மருமகளா வேலைக்கு போறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு..."
"புரியலியே...."
"இங்க இருக்கிற வரைக்கும் வேலைக்கு போறது என் கனவுன்னு சொல்றது, அங்க போனதும் என் கடமைனு மாறிடும்டி... என்னோட ஆசை ரொம்ப சாதாரணமானது, எங்க அம்மா மாதிரியே நானும் வேலைக்கு போகணும், நான் படிச்ச படிப்ப வீணாக்காம என்னால முடிஞ்ச அளவுக்கு சம்பாதிக்கணும், அம்மாவோட வீட்டு சுமைய குறைக்கணும், என் தம்பிக்கு என்னோட பணத்தில காலேஜ் பீஸ் கட்டணும்... இதெல்லாம் ரொம்ப நாளைக்கி செய்யணும்னு நான் கேக்கல ஒரு ரெண்டு வருஷந்தான கேக்குறேன், அதுக்கு கூட எங்க வீட்ல ஒத்துக்க மாட்டேங்குறாங்கடி..." என்று சொல்லி முடிக்கையில் அவளின் விழிகள் இரண்டும் நீர் கோர்த்துக் கொண்டன.
"சரிடி... இருந்தாலும் நாளைக்கே மேரேஜ் பிக்ஸ் ஆயிடும்னு எந்த உறுதியும் இல்லைல. ரெண்டு வீட்டு ஆளுங்களுக்கும் ஒத்து போகாணும், வரதட்சணை, வயசு, ஜாதகம் அப்படின்னு நிறைய ஸ்டேஜ் தாண்டித்தான் கல்யாணம்னு ஒன்னு நடக்க போகுது. அதனால நீ கண்டதையும் நெனச்சு மனச போட்டு குழப்பிக்காம நாளைக்கி போய் ப்ரீயா அவன சைட் அடிச்சுட்டு வருவியா..."
"நீ இப்ப எங்கிட்ட நல்லா வாங்க போறடி..." என்று அவள் இவளை அடிக்க விரட்ட, விட்டால் போதும் என்று அவளிடமிருந்து தப்பித்து ஹாலுக்கு வந்த ராதா, "நான் கிளம்புறேன் ஆன்ட்டி..." என்றாள்.
அடுக்களையில் இருந்து கீர்த்தனாவின் அம்மா, "ஒரு நிமிஷம் இங்க வாம்மா..." என்றார்.
"என்ன ஆன்ட்டி?"
"உன் ப்ரெண்டு என்ன சொல்றாம்மா?"
"ஒண்ணுமில்ல ஆன்ட்டி, அவளுக்காக நீங்க கஷ்டப்படுறீங்க. உங்களுக்காக அவ உங்க கஷ்டத்த கொஞ்சம் ஷேர் பண்ணிக்கனும்னு நினைக்கிறா, அவ்வளவுதான்... நீங்க எதுக்கும் கவல படாதீங்க, முதல்ல நாளைக்கி போய் பையன பாத்துட்டு வாங்க, அப்புறம் நடக்குறத நாம அப்புறம் பாக்கலாம் ஆன்ட்டி" என சிறிது நம்பிக்கை தந்து விடைபெற்றுச் சென்றாள்.
கவலையும் கோபமும் ஒருசேர்ந்ததனால், கீர்த்தனாவிற்கு நகரும் நொடிகள் எல்லாம் நெருஞ்சி முள் போல நெஞ்சுக் குழி நடுவினில் நெருடலாய் இருந்திற்று. மனக் குமுறலை இறக்கி வைக்க உதவிய தோழியும் அவள் இல்லம் தேடி சென்றுவிட்டாள், ஆதலால் தன் துக்கத்தினை மறைக்க மிகச்சிறந்த கருவியாகிய தூக்கத்தினை தேர்ந்தெடுத்தாள்.
இரவு பத்து மணியினை நெருங்குகையில் மகனை உறங்க வைத்துவிட்டு, கீர்த்தனாவின் அறைக்கு வந்த அவளின் அம்மா வாஞ்சையாக உறங்குபவளின் தலையை வருடினார். அவருடைய கணவன் தனக்கென தன்னலமாய் தனி ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு பிரிந்து போன பிறகு தனிமரமாய் வாழ்க்கையை நடத்த துணிந்து தானே தந்தையுமானார். அவர் பிள்ளைகளிடம் எந்த அளவிற்கு கண்டிப்பானவரோ அதைவிட அதிக பாசமானவர்.
அவரின் விரல் ஸ்பரிசத்தில் கண்விழித்த கீர்த்தனா, தான் கொண்டிருந்த மனக்குறை மறந்து, "ம்மா... என்னம்மா என்ன ஆச்சு? தூங்கலையா?" என்றாள்.
"நீ நிம்மதி இல்லாம இருக்கும்போது எனக்கெப்படிடி தூக்கம் வரும்..."
பதில் மொழியின்றி கீர்த்தனா தலைகுனிந்து இருக்க அவளின் அம்மா, "இங்க பாருடி, நான் செய்யிறது எல்லாமே உன்னோட நல்லதுக்காகத் தான்டி..." என்றார்.
"தெரியும்மா, ஆனா இந்த கல்யாணத்தை மட்டும் ரெண்டு வருஷம் கழிச்சு வச்சுக்குவோமே. நீங்க வருஷ கணக்கா சேத்து வச்ச பணத்தை எல்லாம், ஒரே நிமிஷத்தில என் கல்யாணத்துக்காக கரைச்சுட்டா, வீட்டு செலவுக்கு தம்பியோட படிப்புக்கு என்ன செய்வீங்க?"
"அதுதான் உன் பிரச்சனைனா அந்தக் கவலை இனிமே உனக்கு வேண்டாம், அஞ்சு வருஷத்துக்கு முன்னால தாத்தாவுக்கு வந்த பென்ஷன் பணத்துல எனக்கு ஒரு பெரிய தொகை தந்திருக்காரு. அத தனியா எடுத்து என் பேர்ல போட்டு வச்சிருக்கேன், எங்க செலவுக்கு அதுவே போதும்டி. அதைத் தவிர உனக்கு வேற ஏதாவது பிரச்சனை இருக்கா?"
சில நிமிட அமைதிக்கு பிறகு "அம்மா... நான் வேலைக்கி போகனும்மா, அப்டி சொல்லி சொல்லித்தான என்ன வளத்தீங்க, அதுக்காகத்தான நானும் ராத்திரி பகல்னு பாக்காம கஷ்டப்பட்டு நல்லா படிச்சேன், இப்போ வந்து அந்த ஆசை எல்லாத்தையும் துடைச்சி எறிஞ்சிட்டு கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னா, ஒரே நாள்ல என்னால எப்டிமா மனச மாத்திக்க முடியும்?"
"அப்டி சொல்லி வளத்ததாலதான் நீ நல்லா படிச்ச... எந்த கஷ்டம் வந்தாலும் தாங்குற அளவுக்கு தைரியமா இருந்த... என்னோட உதவி இல்லாம சுயம்மா முடிவு எடுக்குற அளவுக்கு பக்குவமா யோசிச்ச... நான் கேக்காமலே தம்பியோட தேவைகளையும் பாத்து பாத்து செஞ்ச... ஆனா இனிமே உனக்கு அந்த கவலை எதுவும் வேண்டாம், கடவுள் புண்ணியத்துல உனக்கு ஒரு நல்ல வரன் நம்ம வீடு தேடி வந்திருக்கு, நீ இனிமே சந்தோஷமா வாழணும்டி..."
"நல்ல வரன் வந்துட்டா உடனே கண்டிப்பா கல்யாணம் பண்ணனிடனுமா?
அப்புறம் எதுக்காக என்ன இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வச்சீங்க?"
"படிப்புன்ற ஒரு பிடிமானம் எனக்கு இருந்ததாலதான் உங்க அப்பா நம்மள நிராதரவா விட்டுட்டு போனதுக்கு அப்புறம், என்னால பச்ச குழந்தைங்களா இருந்த உங்கள வச்சு காப்பாத்த முடிஞ்சது. என்னதான் நான் உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்தாலும் நமக்கு மேல விதின்னு ஒன்னு இருக்கு. அதால உன் வாழ்க்கையில நாளைக்கி ஒரு கஷ்டம் வந்தா, உனக்கும் ஒரு பிடிமானம் வேணும் இல்லையா? அதுனாலதான்டி..."
"அப்போ கண்டிப்பா இந்த கல்யாணத்த நடத்தியே தீருவீங்கள்ல?"
"ஆமாடி தங்கம், பொண்ணா பொறந்த எல்லாரும் ஒருநாள் தன் வீட்ட விட்டு இன்னொரு வீட்டுக்கு போய்த்தான் ஆகனும். அப்படி அவ போற இடத்த பெத்தவங்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்லதா தேடுவாங்க... ஏன்னா அதுக்கு பிறகு அவளோட நல்லது கெட்டது, கஷ்ட நஷ்டம் எல்லாத்தையும் அவங்க கூடத்தானே அனுபவிக்கனும். அந்த வகையில இது ரொம்ப நல்ல குடும்பம்டி, மாப்பிள்ளைக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, சொக்கத்தங்கம் மாதிரி பையனாம்டி. குடும்ப நிலமை புரிஞ்சு மெரிட்ல படிச்சு, யாருடைய உதவியும் இல்லாமல் வேலைக்கு சேர்ந்து இன்னிக்கி ஒரு நல்ல நிலைமைக்கு வந்து இருக்கற சுயம்பு மாதிரி மாப்பிள்ள பையன்டி. ஏற்கனவே பையனோட அண்ணனுக்கு கல்யாணம் ஆகி குடும்பம் குழந்தைனு திருச்சில செட்டில் ஆகிட்டாரு. உன் மாமனாரும் நம்ம ஊர்லயே வேலை பாக்குறதால உனக்கு போற இடத்துல எந்த பிக்கல் பிடுங்கலும் கிடையாது. கல்யாணம் முடிஞ்ச கையோட சென்னையில உன்னையும் உன் புருஷனையும் தனிக்குடித்தனம் வச்சிடுவாங்க. மாப்பிள்ளை வீட்டு ஆளுங்களே தேடி வந்து சம்மந்தம் செய்றதால உனக்கு போற வீட்டில நல்ல மரியாதையும், எல்லாரோட பாசமும் கிடைக்கும். நாளைக்கு எனக்கு ஏதும் ஆனாகூட உன் வாழ்க்கை எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கும்டி, அதுதான் எனக்கும் வேணும். நான் சொல்றது புரியுதா?"
"ம்...."
"அப்போ நாளைக்கி பொண்ணு பாக்க அவங்க வரும்போது..."
"ம்... ம்... ஒழுங்கா நடந்துக்குறேன்..."
"அத கொஞ்சம் சிரிச்சுகிட்டு தான் சொல்லேன்."
"ஈ........ ஒழுங்கா இருக்குறேன்... போதுமா?"
"ஹா.. ஹா.. போடிக்கழுத... சரி, காலையில மாப்பிள்ளை போட்டோவ உன் ஸ்டடி டேபிள் மேல வச்சேனே, பாத்தியா பாக்கலையா?"
அவள் முழித்த முழியே போட்டோவினை பார்க்கவில்லை என்று சொல்லிட, அவளின் அம்மா, "மாப்பிள்ள நல்லா முகலட்சணமா ராஜாவாட்டம் இருக்காரு, போட்டோ இன்னும் டேபிள் மேல தான் இருக்கு, வேணும்னா எடுத்து பாத்துக்கோடி" என்றுவிட்டு ஹாலுக்கு போய் மகன் அருகினில் போர்வையினை இழுத்து முடி படுத்துக்கொண்டார்.
சில நிமிடங்களுக்கு உறக்கம் வராமல் உளன்று கொண்டிருந்தவள் ஓசையின்றி எழுந்து ஸ்டடி டேபிளின் முன்னால் வந்து நின்றாள். அங்கே வெள்ளை நிற கவரினில் ஒரு போட்டோ நெடு நேரமாக வெளியேற தவிப்பது போல லேசாக தலையை நீட்டிக்கொண்டு இருந்தது.
'என் எதிர்கால எதிரி எப்படித்தான் இருக்கான்னு பார்ப்போமே...' என்று புகைப்படத்தை வெளியே எடுத்தாள். முதலில் அவள் பார்வைக்கு பட்டது புகைப்படத்தின் பின்பக்கம், "மணிகண்டன்" என்று எழுதப்பட்டு இருந்த அவனுடைய பெயர் தான்...
போட்டோவினை திருப்பி பார்த்தாள்... மாநிறத்தில் ஆஜானுபான தேகமும், குறும்பு கொப்பளிக்கும் கருவண்டு கண்களும், கையிலிருந்த மலர் கொத்தினை விட மந்தகாசன புன்னகையுமாய் அவளை பார்த்து சிரித்தான் மணி.
"இடியட்...." என்றவள் அவன் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைக்க, அங்கே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மணி, "ம்மா..." தன் தலையை தேய்த்து விட்டு கொண்டே புறண்டு படுத்தான்...
No comments:
Post a Comment