செவ்வண்ண மலர் சரமெடுத்து
செதுக்கி செய்த நிலவழகியே,
உன் ஒளிபடர திறந்து கிடக்கிறதடி
என் இதயமெனும் இல்லம்.
இருபது ஆண்டுகளாக மூன்று வேளையும் பாசமாக சமைத்து பரிமாறும் அன்னையின் கைமணத்தையும் அவரது அடுப்படி கஷ்டத்தையும் உணராத பிள்ளைகளுக்கு, இரண்டே நாட்களில் அடித்து துவைத்து உணர வைத்து விடுகிறது வெளியூர் வாழ்க்கை. நெடுநாட்களாக வேறு ஊர் சென்று தங்கிவிட்டு வீடு திரும்பும் பெரும்பாலானோரது மிகப்பெரிய ஏக்கம் தன் வீட்டில் அம்மா கையினால் மணக்க மணக்க சமைக்கப்பட்ட உணவாகவே இருக்கும்.
அதிகாலை நேரத்து இன்ப நித்திரையில் மூழ்கி இருந்த மணியினது மூக்கினை தீண்டிய சூடான இட்லியின் வாசம் அவன் சித்தத்தை கலைத்திட்டது. பல நாள் கழித்து நுகர்ந்த அந்த வாசத்திற்கே வாசகனாகிப் போய் ஒரு நெடிய நெளிப்பு நெளித்துவிட்டு தன் அறையிலிருந்து எழுந்து ஹாலுக்கு வந்தான். அண்ணியும் அம்மாவும் அடுப்படிக்குள் மாற்றி மாற்றி எதையோ உருட்டிக் கொண்டிருக்க ஹாலில் அண்ணனின் நான்கு வயது குழந்தை ஷாலினி பந்து விளையாடி கொண்டிருந்தாள். குழந்தையை கண்காணிக்கும் தூரத்தில் இருந்த மணியின் அப்பா செய்தித்தாளில் எதையோ புரட்டிபடி இருக்க, அவர் அருகில் போய் அமர்ந்தான் மணி.
அப்பா, "ஜானகி உன் புள்ள எந்திரிச்சுட்டான் பாரு, அவனுக்கு காபி போட்டு குடு..." என்றுவிட்டு, தன் கையில் இருந்த நியூஸ் பேப்பரை உதறி மடித்து அவன் கையில் கொடுத்தார். பேருக்கு சில பக்கங்களை புரட்டி விட்டு மூடி வைத்தவன் முன்னால் ஒரு பெரிய டம்ளர் நிறைய சுடச்சுட காபி வந்து நின்றது.
"ஏம்மா இவ்ளோ சூடா கொண்டு வந்திருக்கீங்க? எனக்கு எப்பவும் போல ஆறவச்சு குடுங்கம்மா..."
"நீ என்ன பச்ச குழந்தையாடா, ஆறின காபி குடிக்க? பொண்ணு பாத்து கல்யாணம் பண்ண போறோம், இன்னமும் ஆறுன காபி கேக்குற?"
"ம்மா... மெட்ராசுக்கு போனா சூடாத்தான குடிக்கிறேன், எனக்கு நம்ம வீட்ல இருக்கிற வரைக்கும் மட்டும் ஆத்தி குடும்மா..."
"நேத்து பொறந்த புள்ள ஷாலினி, அவ சூடா காபி குடுக்க பழகிட்டா. நீ என்னடான்னா இன்னும் ஆறினாத்தான் குடிப்பேன்னு அடம்புடிக்கிறியேடா?"
"ம்மா..." என்று சிணுங்கினான்.
"ஏன்டா படுத்துற? எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு, நீயே அடுப்படிக்கு போய் இன்னொரு டம்ளர தேடி எடுத்துட்டு வந்து ஆத்தி குடிச்சுக்கோ, போ..." என்றவர் குளித்துவிட்டு வந்த மணியின் அண்ணனுக்கு இட்லியினை பரிமாற சென்று விட்டார்.
"ஹும்... உங்களுக்கு எப்பவும் உங்க மூத்த புள்ள தானே முக்கியம், போங்க போங்க..." என பொய்யாய் கோபித்துக் கொண்ட மணி கிச்சனுக்கு செல்ல எழுந்திரிக்கையில் அவனுடைய அண்ணி ஒரு காலி டம்ளரோடு வந்து நின்றார்.
"தேங்க்ஸ் அண்ணி... அம்மா பாருங்க உங்களை விட எங்க அண்ணி எவ்வளவோ தேவலை..."
அண்ணி, "ஏன் தம்பி? தெரியாமத்தான் கேக்குறேன், அது என்ன ஆறுன காப்பி குடுக்கிறதில்ல அப்படி ஒரு ஆசை உங்களுக்கு?"
"அது ஒரு ரசனை அண்ணி, இளஞ்சூடா இருக்குற காபிய வாயில இருந்து எடுக்காம ஒரே மூச்சுல குடிச்சா செம டேஸ்ட்டா இருக்கும், நீங்களும் ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க..."
அண்ணி, "ஐயோ, வேணாம்ப்பா... எனக்கெல்லாம் காப்பி சூடா இல்லன்னா தொண்டைக்கு கீழே போகவே போகாது."
அண்ணன், "மணி, நீ பேசுற விதத்த பாத்தா மெட்ராஸ்ல வேற எதையோ ஒரே மூச்சுல குடிக்க ட்ரை பண்ண மாதிரி தெரியுதே..."
அம்மா, "ஏன்டா அப்டியா?"
"அம்மா அவன் என்ன சொன்னாலும் நம்புவீங்களா? அப்பா பாருங்கப்பா அண்ணனையும் அம்மாவையும், எப்ப பாரு என்ன கிண்டல் பண்ணிட்டே இருக்காங்க, அவங்கள என்னன்னு கேளுங்கப்பா..."
அப்பா, "அவங்களுக்கு வேற வேலையில்ல, நீ போய் வேகமா குளிச்சிட்டு வாடா. பொண்ணு வீட்டுக்காரங்க நேரா சிவன் கோவிலுக்கு வந்திடுவோம்னு சொல்லி இருக்காங்க, நல்லநேரம் முடிய முன்னாடி நாமளும் சீக்கிரமா கோவிலுக்கு கிளம்பணும். பேசிட்டே இருந்தா நேரம் போயிடும், அவங்களோட வாயடிக்காம போய் வேலைய பாரு..."
"ம்..." என்றவன் குளியல் அறைக்குள் நுழையும் நேரத்தில் வீட்டிற்கு வெளியே 'வடை வடை... வடை வேணுமா வடை...' என்ற குரல் கேட்டது. பாத்ரூமுக்கு உள்ளே போன வேகத்திலேயே வெளியே ஓடி வந்த மணி, "அம்மா வடை வருது, எனக்கு ஒரு செட் தயிர் வடை வாங்கி வைங்கம்மா..." என்றான்.
"டேய், உனக்கு கல்யாணம் பண்ற வயசு வந்திடுச்சு... நீ என்னடான்னா வடை வேணும், ஆறவச்ச காபி வேணும்னு சின்னப் புள்ளை மாதிரி நடந்துக்கிறியேடா. இன்னிக்கி போற இடத்துலயும் இதே மாதிரி அடம் புடிச்சு தொலைக்காத, பொண்ணு வீட்டுக்காரங்க யாராவது கேட்டா சிரிக்கப் போறாங்க..."
"ம்மா... கல்யாணத்துக்கும் வடை காப்பிக்கும் என்னம்மா சம்பந்தம் இருக்கு? கல்யாணத்துக்கு அப்புறம் வடை திங்க கூடாதுன்னு யாரு சொன்னா? வேற எங்க வடை வாங்கி சாப்பிட்டாலும் நம்ம ஊர் டேஸ்ட் வரமாட்டேங்குதும்மா, அதனால தான் கேட்கிறேன். வடைக்காரரு போயிட போறாரு, சீக்கிரமா போய் வாங்கி வைங்கம்மா..."
"சரி சரி வாங்குறேன், நீ சீக்கிரமா போய் குளிச்சுட்டு வாடா, வேற யாருக்கெல்லாம் வடை வேணும்?..." என்று கணக்கெடுக்க ஆரம்பித்தார்.
"ஹை.. ஹை.." என்று சந்தோஷமாக ஆடியபடி குளிக்கச் சென்றவன், குளித்து முடித்து கண்ணாடி முன்பு வந்து நிற்கையில் அவனுள் ஆயிரமாயிரம் குழப்பங்கள்... இது நேரம் வரை அவனது சிந்தையில் நுழையாத கீர்த்தனா, இப்பொழுது அவன் மனம் முழுவதும் ஆக்கிரமித்து அவன் மனதை கலைத்திருந்தாள்.
'அந்த பொண்ணு போட்டோவுலயே ரொம்ப அழகா இருந்தாளே, அப்போ நேர்ல பாக்க எப்படி இருப்பா? நாமளும் அவ ரேஞ்சுக்கு அழகா டிரஸ் பண்ணி, டிப்டாப்பா போய் இறங்கனும். அப்பத்தான் பார்க்குறவங்க எங்கள மேட் பார் ஈச் அதர் னு சொல்லுவாங்க. எந்த ட்ரஸ்ஸ போடலாம்?' என பீரோவினை குடைந்தவனின் கைகளில் ஒரு நீல நிற ஜீன்ஸ் பேண்ட் சிக்கியது.
'இல்ல இல்ல இது வேணாம்... பேண்ட்டையே இப்படி கிழிச்சு போட்டிருக்கான், இவன் கைல நம்ம பொண்ண கொடுத்தா குரங்கு கையில சிக்கின பூமாலை மாதிரி ஆக்கிட போறான்னு சொல்லிடுவாங்க... வேற எத போடலாம்?' என்று யோசித்தவனது கண்களுக்கு போன பொங்கலுக்கு வாங்கிய வேஷ்டி சட்டை தென்பட்டது. அந்த நீலவண்ண காட்டன் சட்டையும், அதே வண்ணத்தில் மெல்லிய பார்டர் வைத்த வேஷ்டியும் அவனோடு கச்சிதமாய் பொருந்தி இருப்பதாய் அன்றைய தினம் அனைவரும் பாராட்டியது ஞாபகம் வரவே அதையே எடுத்து அணிந்து கொண்டான்.
அடுத்ததாக 'எந்த சென்ட்டை போடலாம்? வாசம் தெரியாத அளவிற்கு லேசாக தெளித்து கொள்ளலாமா, இல்லை நாலா பக்கமும் நன்றாக அடித்து விடுவோமா?' என்ற யோசனை அவனை ஆக்கிரமிக்க, ஹாலில் இருந்த அம்மா, "சீக்கிரமா சாப்பிட வாடா, நேரமாகுது" என்று குரல் கொடுத்தார்.
"ஹான்... இதோ ரெண்டு நிமிஷத்துல வந்திடுறேன்மா" என்ற பதில் குரலை ஹாலுக்கு அனுப்பிவிட்டு, 'ஓவரா ஸ்மெல் வந்து ஒருவேளை பொண்ணு மயங்கி விழுந்துவிட்டான்னா, அதை விட அசிங்கம் என் வாழ்க்கையிலேயே கிடையாது. போடலைனா 'சிட்டில பெரிய ஜாப்ல இருக்கான், வெளியில் கிளம்பும்போது சென்ட் போடணும்னு கூட தெரியாதா?' அப்படின்னு எனக்கு டீசன்ஸி இல்லன்னு நினைச்சிடுவாளோ... எதுக்கு வம்பு நம்ம லைட்டா போட்டுக்குவோம்...' என்று ஒரு மனதாய் முடிவெடுத்து முடிக்கையில் அவனது அறையின் வாசலில் அண்ணி குழந்தையும் கையுமாக வந்து நின்றார்.
"நேத்து வரைக்கும் கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்ன புள்ள, இன்னிக்கி கண்ணாடி முன்னாடி கால் மணி நேரமா நிக்குதே, அது ஏன் கொழுந்தநாரே?"
"அதுவா, அழகுக்கு அழகு சேர்க்கிறேன் அண்ணி... இன்னிக்கு என்ன பார்த்ததும் அந்த பொண்ணு, கட்டுனா இவனத்தான் கட்டுவேன்னு ஒத்தக்கால்ல நிக்க வேணாம்?"
"ஒத்தக்கால்லயா? நல்லா நிக்குமே... அத்த... உங்க புள்ள சொல்ற சங்கதிய கேட்டீங்களா, கட்டுனா இவரத்தான் கட்டுவேன்னு பொண்ணு ஒத்தக்கால்ல நிக்கணுமாம். அதுக்குன்னு கொழுந்தனாரு ஒரு முழு சென்ட்டு பாட்டிலயே மேல அள்ளி தெளிச்சுட்டு இருக்காப்ல..."
ஹாலில் இருந்து அம்மா, "அடேய்... பொண்ணு மூச்சு முட்டி மயங்கி விழுந்துறாமடா..." என்றார்.
மணி, 'சத்திய சோதன... அதுசரி, நம்ம அம்மாவும் நம்மள மாதிரிதான திங்க் பண்ணும், இதுக்குப் பேருதான் ஒரே ரத்தம்ங்கிறது...' என்று அம்மாவைப்பற்றிய சிந்தனையில் மணி இருக்க அவனது அண்ணி, "தம்பி, விட்டத்த பார்த்து கனா கண்டது போதும் சீக்கிரம் ரெடியாகி வாங்க, உங்களைத் தவிர எல்லாரும் ரெடியாகியாச்சு..." என்று விரட்டிவிட்டு சென்றார்.
'இதற்கு மேல் இங்கே நின்றால் அம்மாவே நம்மை தேடி வந்துவிடுவார்' என்று அவசர அவசரமாக தலைவாரி விட்டு ஹாலுக்கு வந்தவனுக்கு, சூடான இட்டிலியும் சுவையான தக்காளி சட்னியும் கூடவே ஒரு கிண்ணத்தில் தயிர் வடையும் பரிமாறப்பட்டது. பஞ்சு போல் இருந்த இட்லியின் மேல் நான்கு கரண்டி சட்டினி ஊற்றி அபிஷேகம் செய்து அது நன்றாக ஊறிய பின் பிசைந்துவிட்டு ஆசையாக அள்ளி வாயில் போட, அது தேவாமிர்தமாக உருமாறி உள் நாக்கில் இறங்கியது. அருகில் கொஞ்சம் அழுத்தி தொட்டாலே கரைந்து விடுமென நிலையில் இருந்த தயிர் வடையையும் அவன் தொண்டை குழி கவனிக்க மறக்கவில்லை.
அண்ணன், "டேய் கல்யாணம் பண்ண போறோம், நீ என்னடான்னா இன்னும்..." என்று ஆரம்பிக்க,
"அட நிறுத்துங்கடா... நானும் காலையில இருந்து பாத்துக்கிட்டே இருக்கேன், நான் எதச்செஞ்சாலும் 'உனக்கு கல்யாணம் பண்ண போறோம், நீ இன்னும் இப்டி இருக்க... உனக்கு கல்யாணம் பண்ண போறோம், நீ இன்னும் இப்டி இருக்க...'ன்னு ஒவ்வொருத்தரா வரிசையில வந்து சொல்லிட்டு போறீங்க. நானா கல்யாணம் பண்ணி வைங்கன்னு உங்கள கேட்டேன்? நீங்கதான நல்ல பொண்ணு, நல்ல குடும்பம், வயசு ஏறுதுன்னு ஆயிரத்தெட்டு நொட்ட சொல்லி என்ன வர சொன்னீங்க. ஆப்ட்ரால் ஒரு இட்லி சாப்பிடக்கூட உரிமை இல்லைனா எதுக்கு இந்த கல்யாணம்? எனக்கு ஒன்னும் வேண்டாம், நான் சென்னைக்கே திரும்பி போறேன்..." என்றவன் தட்டோடு எழுந்து தன் அறைப்பக்கம் போக முயல மொத்த குடும்பமும் அவனை பார்த்து கேலியாய் சிரித்தது.
அண்ணன், "சரிடா, சரிடா... இனிமே நாங்க யாரும் எதுவும் சொல்லல, வா வா.. ஹால்லையே உக்காந்து சாப்பிடு. இந்தா, இந்த செயினையும் மோதிரத்தையும் போட்டுக்க, அப்பத்தான் பாக்குறதுக்கு மாப்பிள்ள மாதிரி இருப்ப..."
"ம்... அப்டியே தம்பிக்கி நீயே போட்டு விடுண்ணா, என் கையும் வாயும் ரொம்ப பிஸியா இருக்கு..."
அண்ணிக்கும் குழந்தைக்குமான தங்க நகைகளை அணிவித்து கொண்டிருந்த அம்மா, "டேய் மணி, ஆட்டோவுக்கு சொல்லியாச்சு, சீக்கிரமா சாப்பிட்டு முடிடா..." என்றார்.
மணி சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் ஒருமுறை கண்ணாடி முன் நின்று தனது அலங்கார அழகினை உறுதி செய்து கொண்டு கிளம்பினான். ஐந்து நிமிட பயணத்தில் அவர்கள் குறிப்பிட்ட அந்த சிவன் கோவில் வந்தது. அது ஐந்நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெரிய சிவன் கோவில். அந்த காலத்திலேயே பாறைகளால் இருபதடி மதில் சுவர் வைத்து கட்டப்பட்டு, ஊருக்கே நீர் பஞ்சம் வராத அளவிற்கு அகன்ற பெரிய குளம் வெட்டப்பட்டு, இரண்டு மூன்று ஏக்கர் அளவிற்கு பரந்து விரிந்து வானுயர நிற்கும் மிகப்பெரிய கோவில்.
கோவில் நுழைவிடத்திலேயே ஒரு மண்டபம் இருந்ததால் மணமகன் குடும்பத்தினர் அங்கேயே ஒரு நல்ல இடம் பார்த்து கூட்டமாக அமர்ந்தனர். சில நிமிட இடைவெளிக்கு பிறகு மணமகளின் குடும்பத்தினர், அந்த மண்டபத்தின் அருகில் வந்து இறங்குவதை கண்டதும் மணியின் மனதில் இனம்புரியா பதற்றம் வந்து ஒட்டிக்கொண்டது.
'ஹைய்யா... சித்தி வந்தாச்சு...' என்று கத்தும் குழந்தையின் குரல் கேட்டதும், மணியின் நரம்புகளுக்குள் மின்னல் வெட்டியது போல ஒரு சிலிர்ப்பு தோன்றி மறைந்தது. அவள் வரும் திசை பார்த்து நின்ற இமைகளிரண்டும் புத்தம்புது இசையெடுத்து தாளம் தட்ட, நாவடக்கம் விரும்பா அவனது நாவு பற்களுக்கு பின்னால் ஓடி ஒளிந்து கொள்ள, ஆண்பிள்ளை என்றதொரு கர்வம் மறைந்து நெஞ்சுக்குள் நாணமெனும் போர்மேகம் சூழ, அவளை காண துடிக்கும் தன் ஐம்புலன்களின் ஆர்ப்பாட்டத்தை வேறெவரும் அறியும் முன்பே அச்சப்பட்டு கர்ச்சிப்பில் மூடி வைத்தான்.
பத்துபேர் கொண்ட கூட்டத்தின் இடையே பட்டு புடவை சரசரக்க, பஞ்சு போன்ற கூந்தல் காற்றில் ஆட, பொற்குவியல் போன்றதொரு தோரணையில் தனித்தன்மையோடு அன்ன நடந்து வந்தாள் அவள். கண்டவுடனே அவளை கைபிடித்து கொள்ளச்சொல்லி துள்ளிச்செல்லும் என் மனதை கட்டிவைக்க கையோடு கயிறெதுவும் எடுத்து வரவில்லயே நான்! எனினும் பாதகமில்லை, அவள் சூடியிருக்கும் மல்லிகை சரத்தின் ஒருபாதி பகிர்ந்தளித்தால் போதும், தறிகெட்டு தாவும் என் மனதை இழுத்து பிடித்து கட்டிவைத்துவிடுவேன். ஆனால், யார் அவளிடம் கேட்டு வாங்கி தருவார்?
No comments:
Post a Comment