ஷ் அப்பாடி என்ன விலை விக்கிது பார் இந்த நெல்லிக்காய் என முனகியவாறே மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்த நெல்லிக்காயுடன் தன் வீட்டுக்குள் நுழைய முயன்ற பக்கத்து வீட்டு கமலா பாட்டியை அசிரீரிபோல தடுத்தாட்கொண்டது வேற யாரோ இல்லிங்க நம்ம பாலு தாத்தாதான் கமலா பாட்டிக்கு பாலுதாத்தா அத்தை மகன் (கமலா பாட்டி பாலுதாத்தாவ விட ஒருநாள் முன்னாடி பிறந்தவங்க)
என்ன கமலி இப்ப தான் மார்கெட் போயிட்டு வரயா என அரட்டையை (மாலு பாட்டி பாஷையில ஜொள்ளு)துவங்கினார் நம்ம பாலுதாத்தா (எல்லாம் மாலு பாட்டி கோவிலுக்கு போய் இருக்கிற தைரியம்தான்)
என்ன பாலு விஸ்தாரமா காத்து வாங்கிண்டு இருக்கறாப்புல இருக்கு மால்ஸ் வீட்டுல இல்லயா ? என கமலா பாட்டி எதிர் கேள்வி போட
அந்த கிழவி இப்போதான் கோவிலுக்கு போய் கொஞ்சநேரம் ஆறது ஆமாம் நீ என்ன சந்தியாகாலத்துல (மாலை நேரம்) மார்கெட் போயிட்டு வந்திருக்க என்னதான் அப்படி வாங்கினே காட்டேன் பாப்போம் என உரிமையாக அவர் கையில் இருக்கும் பையை பிடுங்கி பார்க்க அதில் நெல்லிக்காய்கள் சும்மா அதிர்ந்தன.
தாத்தாவின் கூடவே எட்டி பார்த்த அவரின் வானரபடைகளின் முகம் போன போக்கை பார்க்க கமலாபாட்டிக்கு சிரிப்பாய் வந்தது ஆனால் தாத்தாவின் முகமோ ஆயிரம் சூரியனாய் ஒளிர்ந்தது மறுகணமே கூம்பியும் விட்டது.
இதை கண்ட கமலா பாட்டி ஏண்டா பாலு என்னாச்சு என கேட்க நெல்லிக்காய பாத்த உடனே எங்க அம்மா போடுற தயிர் நெல்லிக்காய் ஊறுகாய் நியாபகம் வந்திடுத்து கமலி என சொல்ல...
இதுக்கு எதுக்கு முகத்தை தூக்குற மாலு கிட்ட சொன்னா அவ போட்டு தரப்போறா என சொல்லி சமாதானபடுத்த முனைந்தார் கமலா பாட்டி ...
ஹீம் அவதானே நல்லா போட்டு குடுத்துட்டாலும் என நொடித்தார் அந்நேரம் பார்த்தா கோவிலுக்கு போன மாலு பாட்டி திரும்பிவந்து சேர அவரின் வருகையை கண்டு கொண்ட கமலா பாட்டி சரி பாலு நான் கிளம்பறேன் என நழுவதொடங்கினார்.
இது புரியாத நம்ம பாலுதாத்தா கெஞ்சும் குரலில் கமலி நீதான் நெல்லிக்காய் தயிர் ஊறுகாய் நல்லா போடுவியே நீ போடும்போது அந்த கிழவிக்கு தெரியாம கொஞ்சம் எனக்கு குடேன் என கேட்க தனது தோழனின் கோரிக்கையை ஏற்று கொள்வதாய் தலையசப்பின் மூலம் தெரிய படுத்தி விட்டு அவ்விடம் விட்டு எஸ்கேப் ஆனார் கமலி பாட்டி.
அவர் கிளம்பும் முன் தாத்தாவை பார்த்து பரிதாப பார்வை ஒன்றை வீசிவிட்டு செல்ல அதன் அர்த்தம் புரியாது திகைத்த பாலு தாத்தாவை நடப்புக்கு கொண்டு வந்தது அவருக்கு பின்னால் இவ்வளவு நேரம் சத்தம் காட்டாது நின்றிருந்த மாலுபாட்டியின் ஆவேச குரல்.
எழு கழுதை வயசு ஆச்சு இன்னும் நாக்கை கட்ட தெரியலை எனக்கு தெரியாம பக்கத்து வீட்டுகாரிகிட்ட நெல்லிக்காய் ஊறுகாய் அதுவும் தயிர் நெல்லிக்காய் ஊறுகாய் வாங்கி சாப்பிட சொல்லுது...
கொஞ்சமாவது வயசுக்கு தகுந்த நடப்பு வேணும் இந்தோ இருக்குற கோவிலுக்கு போயிட்டு வரத்துக்குளே அக்கம்பக்கம் இருக்குறவங்க கிட்ட கிழவி இத பண்ணா அதை பண்ணாஅப்படி இப்படினு என்னபத்தி குத்தம் சொல்லலேனா பொழுதே போகாதே உங்களுக்கு அப்படி என்ன இந்த வயசுல ஜொள்ளு என எகிற மாட்டி கொண்டு முழிப்பது தாத்தாவின் முறையாயிற்று.
சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த கமலிபாட்டி விடு மாலு யார் கிட்ட கேட்டான் எங்கிட்டதானே? இதுக்கு ஏன் இப்படி கோவிச்சுகுற அவன் சொன்னா நான் நம்பிறுவேனா நீ இந்தாத்துக்கு வந்ததுல இருந்து அவனை எப்படி பாத்துக்கறேனு நானும் தினமும் பாத்துண்டுதானே இருக்கேன் எதோ சொல்லிட்டான் நு அவனை காய்ச்சாதே உனக்கும் அந்த தயிர் நெல்லிக்காய் ஊறுகாய் பிடிக்கும்தானே அப்புறம் என்ன ? என சமாதானபடுத்த சுற்றி நின்ற வானரங்கள் ஓ மாலுபாட்டிக்கும் தயிர் நெல்லிக்காய் ஊறுகாய் பிடிக்குமா?
ஆமாம் கமலி பாட்டி அப்படி என்ன இருக்கு நெல்லிக்காய் ல என கேட்க தாற்காலிக போர்நிறுத்தம் செய்த மாலுபாட்டி பாலுதாத்தா கமலா பாட்டி என மூவரும் சேர்ந்து சொன்ன விஷயங்கள் எல்லாத்தையும் தொகுத்து போட்டிருக்கேன் எல்லாரும் படிச்சுட்டு உங்களுக்கு தெரிஞ்சத நாலுபேருக்கு சொல்லி குடுங்கப்பா
நெல்லிக்காய் நன்மைகள்
அடங்கியுள்ள சத்துக்கள்
• புரதம் – 0.4 கி
• கொழுப்பு – 0.5 கி
• மாச்சத்து – 14 கி
• கல்சியம் – 15 மி.கி
• பொஸ்பரஸ் – 21 மி.கி
• இரும்பு – 1 மி.கி
• நியாசின் – 0,4 மி.கி
• வைட்டமின் ´பி1` - 28 மி.கி
• வைட்டமின் ´சி` - 720 மி.கி
• கரிச்சத்து
• சுண்ணாம்பு
• தாதுப் பொருட்கள்
• கலோரிகள் – 60
இளமை தோற்றம்
நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது.
இதயம்
உடலில் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் உறுப்பு இதயம். நெல்லிக்கனிகளை சாப்பிடும் போது அதிலுள்ள புளிப்பு தன்மை கொண்ட ரசாயனங்கள், இதயத்தில் ரத்தம் உறைதல், அடைப்பு போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது.
சிறுநீரகம்
உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றுவது சிறுநீரகங்கள். ஒரு சிலருக்கு சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்படிப்பட்டவர்கள் நெல்லியை அதிகம் உண்ண சிறுநீர் நன்கு பிரியும்.
கண்கள்
நம்முடைய உடலில் முக்கியமான உறுப்பு கண்கள். நெல்லிக்காய்களில் வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளது இதை அடிக்கடி உண்பவர்களுக்கு வயதாவதால் ஏற்படும் கண்பார்வை குறைபாடுகள் நீங்கும். பார்வை தெளிவு ஏற்படும்
எலும்புகள்
நம் வாழ்நாளின் இறுதிவரை நமது உடலில் வலுவாக இருக்க வேண்டியது எலும்புகள். நெல்லிக்கனியில் எலும்பின் வளர்ச்சிக்கும், வலுவிற்கும் தேவையான வைட்டமின்கள் நிறைய இருக்கின்றன. எனவே அவற்றை உண்பது எலும்புகளின் ஆரோக்கியமான நிலைக்கு நல்லதாகும்.
முடிகொட்டுதல்
தலைமுடி உடலின் ஆரோக்கியத்தை மட்டும் குறிப்பதில்லை, தலையை வெளிப்புற சூழல்களிலிருந்தும் பாதுகாக்கவும் செய்கிறது. முடிவளர்ச்சிக்கு தேவையான சத்துக்களும், வேதிப்பொருட்களும் நெல்லிக்கனிகளில் நிறைந்து உள்ளன. இதை தொடர்ந்து உண்பவர்களுக்கு முடிகொட்டும் பிரச்சனை குறைகிறது.
மஞ்சள் காமாலை
கல்லீரலில் ஏற்படும் கிருமி தோற்றால் ஏற்படும் ஒரு நோய் மஞ்சள் காமாலை. இந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் தொடர்ந்து நெல்லிக்கனிகளை உண்பதால் ஈரலில் இருக்கும் கிருமிகள் அழிந்து மஞ்சள் காமாலை குணமாகும்.
பித்தப்பை
நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் சத்துகளை சக்தியாக மாற்றுவதில் பித்தப்பை முக்கிய பங்கு வகிக்கிறது. நெல்லிக்கனிகளில் இருக்கும் ரசாயனம் பித்தப்பைகளில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
ரத்தம்
நெல்லிக்கனியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் கழிவு பொருட்களை நீக்கி, ரத்தத்தை தூய்மை செய்து உடலில் சுறுசுறுப்பை அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
வயிற்று புண்
தினந்தோறும் சிலர் கண்ட உணவு வகைகளை உண்பதால் வயிற்றில் புண்கள் அஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன. நெல்லிக்காய்களை தினமும் சாப்பிட்டு வருவதால் வயிற்று புண்கள் மற்றும் வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகளும் நீங்கும்.
No comments:
Post a Comment