அழகான பொய்களில்
கரையாத
உன் உள்ளத்தை,
அன்பான கோபத்தில்
கலைத்து
விட்டேன் பாரடி!!!
கீர்த்தனாவின் அம்மாவிற்கு மணமக்கள் இருவரும் தனியே பேச சென்றது உள்ளுக்குள் உதறலாகவே இருந்தது. எங்கே கீர்த்தனா தன்னுடைய கனவுகளை பற்றி மாப்பிள்ளையிடம் பேசி, தன் பிரகாசமான எதிர்காலத்தை கெடுத்துக் கொள்வாளோ என்று அஞ்சினார். ஆதலால் அவர்கள் இருக்கும் நிலையினை அறிந்து கொள்ளும் பொருட்டு, தூரத்தில் தெப்பத்து மீன்களுக்கு பொறியினை தூவி கொண்டிருந்த தனது மகனின் அருகில் வந்தார்.
"டேய், இங்க வாயேன்..."
"என்னம்மா?"
"நீ தண்ணி குடிக்க போறது மாதிரி அந்த பக்கம் போய் அக்காவும் மாமாவும் எங்க இருக்காங்க என்ன பண்றாங்கன்னு பாத்துட்டு வர்றியாடா?"
"சரிம்மா..."
"டேய்... டேய்.. ஒரு நிமிஷம், யாருக்கும் தெரியாம பாத்துட்டு வா..."
"ஓகேம்மா..." என்று மெதுவாக மற்றவர் பார்வையில் இருந்து களன்று கொண்டான் அந்த சிறுவன்.
சென்றவன் சில நிமிடங்கள் கழித்து திரும்பி வந்து, "அம்மா, அக்காவும் மாமாவும் முதல் பிரகார மூலையில இருக்கே அந்த அரச மரத்து பிள்ளையார் பக்கத்தில ஏதோ ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா பேசிட்டே நடந்துட்டு இருக்காங்கம்மா...." என்று அவரது காதினில் ரகசியமாக ஓதினான்.
"ஹப்பாடா..." என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டார் கீர்த்தனாவின் அம்மா.
அந்த இன்ட்ரஸ்டிங்கான பேச்சு எதைப்பற்றி என்பதை சம்பந்தப்பட்ட அவ்விருவர் மட்டுமே அறிவார்கள். அரச மரத்தடியில் இருந்த பஞ்சமுக விநாயகரை வழிபட்டுவிட்டு இரண்டாம் பிரகாரத்தில் நுழைந்தனர் கீர்த்தனாவும் மணியும்.
மணி, "உங்களுக்கு அறிவியல், கண்டுபிடிப்புகள் சம்மந்தமான விஷயம்னா ரொம்ப பிடிக்குமா?"
"ஆமாங்க... ஏன் உங்களுக்கு புடிக்காதா?"
"எங்கங்க? நான் எயிட்த் ஸ்டாண்டர்டு படிக்கும்போது கல்யாணின்னு ஒரு சயின்ஸ் டீச்சர் வந்தாங்க. அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் சின்ன சின்ன மிஸ்டேக்குக்கு எல்லாம் எங்கள அடி பின்னி எடுத்துடுவாங்க. அவங்க மேல இருந்த பயத்திலேயே எனக்கும் என் ஃப்ரெண்ட்ஸ்க்கும் சயின்ஸ்ஸே புடிக்காம போயிருச்சு... நீங்க ரொம்ப லக்கி, உங்களுக்கு ரொம்ப அன்பான டீச்சர் கிடைச்சிருப்பாங்க போல. அதான் சயின்ஸ்ல இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க, கரெக்டா?"
மெல்லமாய் சிரித்தவள், "அப்டியெல்லாம் இல்லங்க, ஸ்கூல் படிக்கிற வரைக்கும் எனக்கு எங்க அம்மா தான் வீட்டு பாடம் சொல்லி தருவாங்க. பாடம் படிக்கும் போதே அது சம்பந்தப்பட்ட விஷயங்களையும் சொல்லி கொடுத்துடுவாங்க. அப்டி அவங்க சொல்லி தெரிஞ்சுகிட்ட விஷயங்கள் மூலமாத்தான் தான் எனக்கு சயின்ஸ்ல ஆர்வம் வந்துச்சு."
"சாரி டூ ஆஸ்க் திஸ், நீங்க என்ன படிக்கிறீங்க?"
"பிஎஸ்ஸி பிசிக்ஸ்"
"என் லைஃபு பிச்சுகிச்சு...."
"என்னங்க? என்ன சொன்னீங்க?"
"ஹான்.. ஒண்ணுமில்லங்க.. உங்கள பிரில்லியண்ட்னு சொன்னேன்."
"அப்படியா என் காதில நீங்க வேற எதையோ சொன்ன மாதிரி விழுந்துச்சு..."
'விழுந்திடுச்சா? ஓ... மை காட்... ஆரம்பமே அபசகுணமா இருக்குதே...' என்று நினைத்தவன் அவள் மனதினை டைவர்ட் செய்யும் விதமாக, "ஆமா நீங்க யாரோ டெஸ்லாங்கிறவர பத்தி ஏதோ சொல்ல ஆரம்பிச்சிங்கள்ல..."
கீர்த்தனா, "டெஸ்லா ஒரு வித்யாசமான சயின்டிஸ்ட்ங்க. இப்ப நம்ம யூஸ் பண்ணிட்டு இருக்கிற லேப்டாப், டிரான்ஸ்பார்மர், எக்ஸ்ரே, ரேடார், கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் உட்பட அத்தனைக்கும் விதை போட்டவரு டெஸ்லா. ரேடியோவ முதல்ல கண்டுபிடிச்சது கூட டெஸ்லா தான், ஆனால் மார்க்கோனி நடுவுல புகுந்து அதுல சின்ன சின்ன கரெக்ஷன் பண்ணி மார்க் வாங்கிட்டாரு."
மணி, "ஏங்க, இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு?"
" நம்பிக்க இல்லைனா கூகுள்ல போய் டெஸ்லாவை பத்தி படிச்சு பாருங்க, அப்ப தெரியும் அவர் எவ்வளவு பெரிய சைன்டிஸ்ட்னு"
"சரி, அவ்ளோ பெரிய சைன்டிஸ்ட் ஏன் எங்க எடிசன் அளவுக்கு பாப்புலர் ஆகாம போனாரு?"
"டெஸ்லாவோட எல்லா ஐடியாலயும் மண்ணை அள்ளிப்போட்ட பெருமை உங்க எடிசனுக்குத்தான் சேரும்."
"அது எப்டிங்க, எடிசன் அடுத்தவன் கண்டுபிடிப்ப ஒண்ணும் இல்லாம செய்ய முடியும்?"
"டெஸ்லா, எடிசனோட கம்பெனில வேலை பாக்குற ஆளா இருந்தா, எடிசனால இத செய்ய முடியும்ல?"
"ம்.... ஆனா எடிசன பொறுத்தவரைக்கும் இது தன்னோட கம்பெனிக்கும் தனக்கும் பெருமைதானா?"
"அது அப்டி இல்லங்க, பிரபலமா இல்லாத ஒரு வேலைக்காரனோட கண்டுபிடிப்பு, உலக அளவுல பேரு வாங்கின தனக்கு எதிரா இருந்தா அவரு எப்டி ஏத்துக்குவாரு?"
"எடிசனவிட பெருசா அப்டி என்னத்த கண்டுபிடிச்சாரு டெஸ்லா?"
"டெஸ்லாவோட டிசி கரென்ட், எடிசனோட ஏசி கரண்ட்க்கு பெரிய எதிரியா இருந்துச்சு. அதுனாலயே அந்த டிசி கரெண்ட்ட ரொம்ப ரொம்ப டேன்ஜரா உலகத்துக்கு முன்னாடி சீன் காட்டிட்டாரு தெரியுமா?"
"அப்போ அத டெஸ்லா சரியானதுன்னு நிரூபிச்சு இருக்கலாமே, இல்ல அதவிட பெட்டரா எடிசன் கண்டுபிடிச்சு இருக்கலாமே...."
"டெஸ்லாக்கு உதவி பண்ண யாருமே இல்ல, அதுவும் போக எடிசன் ஒரு பக்கா கார்ப்பரேட் கிரிமினல்ங்க. அவருக்கு அறிவியல்ல இருந்த போதைய விட பணம், புகழ் இரண்டு மேலேயும் அளவுக்கதிகமான போதை இருந்துச்சு. அவரோட கண்டுபிடிப்பு எல்லாத்தையும் அப்போதைக்கு இருந்த மிகப்பெரிய கம்பெனிகளோட டை அப் பண்ணி இருந்தாரு. அப்படிப்பட்ட லெஜன்ட் தன்னவிட பெட்டரா ஒருத்தன் இலவசமா கண்டுபிடிப்ப குடுத்து, அறிவியல்ல புரட்சி பண்றத பொறுத்துக்குவாரா?"
"என்ன அறிவியல்ல புரட்சியா?"
"ம்... புரட்சின்ற வார்த்தை போராளிகளுக்கு மட்டும்தான் சொந்தம்னு யாரு சொன்னது? அது எல்லா துறையிலுமே இருக்குங்க, நமக்குத்தான் தெரியல..."
"அப்படின்னா எடிசனுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்ல வர்றீங்களா?"
"இல்லங்க... டெஸ்லா, எடிசன் ரெண்டு பேருமே ரொம்ப பெரிய அறிவியல் மேதைகள். டெஸ்லா புதுசு புதுசான விஷயங்கள கண்டுபிடிக்கவும் அதை பொதுமக்களுக்கு இலவசமா கொடுக்குறதுக்கும் விரும்பினாரு. ஆனா அப்போ இருந்த கார்ப்பரேட் கம்பெனியோட நடைமுறை வியாபாரச் சுரண்டலுக்கு இந்த கான்செப்ட் ஒத்துவரல. ஒருபக்கம் எடிசன் பிஸினஸ் ரிலேட்டடா தன்னோட திறமைய வெளிப்படுத்துனது கம்பெனிஸ்க்கு மிகப்பெரிய அட்வான்டேஜ் ஆகிடுச்சு, அதுனால எடிசனையே எல்லாரும் தூக்கி நிறுத்துனாங்க. இன்னொரு பக்கம் டெஸ்லாவோட கண்டுபிடிப்பு இலவசம்ங்கிறதால ஈசியா திருட்டு போக ஆரம்பிச்சது."
"இந்த அளவுக்கு ஒருத்தரால சுயநலம் இல்லாமல் இருக்க முடியுமா?"
"இருக்க முடியும் என்று வாழ்ந்து காட்டினவர் எங்க டெஸ்லா. அவரு சாகுறதுக்கு முன்னாடி கூட, 'என்னோட கண்டுபிடிப்புகள் எல்லாம் திருட்டு போனதில வருத்தமில்ல. ஆனால் திருடனவங்க அதுக்கு மேல அதை டெவலப் பண்ண வழி யோசிக்காம போயிட்டாங்களேனுதான் வருத்தமா இருக்கு'ன்னு சொன்னாராம்."
"ப்பா.... செமங்க உங்க டெஸ்லா."
"ஆமாங்க... அவர மாதிரி வேற எந்த சயின்டிஸ்ட்டாலயும் இருக்கவே முடியாது."
"வேற எந்தெந்த சயின்டிஸ்ட் பத்தி எல்லாம் உங்களுக்கு தெரியும்?"
"நிறையபேர் தெரியும்... ஆனா அவங்க எல்லாரும், தன்னோட கனவுகளையும் கண்டுபிடிப்புகளையும் பொதுவுடமை ஆக்கின எங்க டெஸ்லா பக்கத்துல நிக்க முடியாது. ஒருத்தர் தன்னோட கனவ, எந்த பிரதிபலனும் இல்லாம இன்னொருத்தருக்கு விட்டு கொடுக்கிறது எவ்வளவு பெரிய வலி தெரியுமா?"
"உங்களுக்கு ஏதாவது கனவிருக்கா?"
"ம் இருக்கு, ஆனா..." என்றவள் சட்டென்று சுதாரித்து மணியின் முகம் பார்க்க, அவனது விழிகளிரண்டும் அவள் முகத்திலேயே நிலைகுத்தி நின்றிருந்தது.
"ஹலோ மிஸ்டர், என்ன?... பேசிப்பேசியே ஏத்திவிட்டு என் மனச ஆழம் பாக்குறீங்களா?"
"சே.. சே.. டெஸ்லாவோட அப்டியே உங்கள பத்தியும் தெரிஞ்சுக்கலாமேன்னு..."
"போதும்ங்க... முன்ன பின்ன தெரியாத பொண்ணு கிட்ட இப்படித்தான் உங்க வாய் வித்தைய காட்டுவீங்களா?"
"ஹலோ... நான் ஒண்ணும் ரோட்ல போற பொண்ணுகிட்ட வழிஞ்சுகிட்டு நிக்கல. உங்களுக்கும் எனக்கும் கல்யாண ஏற்பாடு நடக்குது, உங்களபத்தி தெரிஞ்சுக்க நான் ஆசைப்பட கூடாதா? அதான் உங்களுக்கு புடிச்ச டாபிக்ல நைசா பேசி கரெக்ட் பண்ண..." என்று முடிக்கும் முன் அவனுடைய மனசாட்சி, 'உளறிட்டேயேடா மணி....' என்று உரக்கச் சொல்லியது.
"இடியட்...." என்று திட்டியவள் வேக வேகமாக எதிர் மூலையிலிருந்த முருகன் சன்னதியை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
"ஓகே மேட்டர் ஓவர்... நாம இனிமே நம்ம வேலைய பாக்க வேண்டியதுதான்..."
விருவிருவென்று போன கீர்த்தனா, கல்யாண கோலத்தில் இருந்த அப்பன் முருகனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு அப்படியே ஓரமாக அமர்ந்தாள். அவள் போன பிறகு பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து, காலையில் இருந்து விடுபட்ட வேலையான பேஸ்புக் மீம்களை படித்துக்கொண்டே வந்தான் மணி.
அவன் முருகன் சந்நிதிக்குள் நுழையும் பொழுது பட்டுப்பாவடை அணிந்த ஒரு நான்கு வயது பெண் குழந்தை, முருகனின் முன்னால் பீடத்திலிருக்கும் பெரிய மயிலின் காதை எட்டி பிடிக்க முயன்று மேலும் கீழுமாக குதித்து கொண்டிருந்தாள். என்ன முயன்றும் அவளால் அந்த மயிலின் கழுத்து வரையில்தான் போக முடிந்தது.
இரண்டடி இடைவெளியில் வயிற்று குழந்தையோடு அமர்ந்திருந்த அவளின் அம்மா, "பாப்பா போதும்மா... அம்மாட்ட வாடா... பொறந்த நாள் அதுவுமா கீழ விழுந்திடாதடி..." என்று விடாமல் அழைத்துக்கொண்டே இருந்தார்.
மணி, "ஓய் பட்டுபாவாடை ஏஞ்சல், மே ஐ ஹெல்ப் யூ?"
தன் நெற்றி முடி ஒதுக்கி, "எஸ்..." என்றாள்.
மணி குழந்தையை மயிலின் காதுவரை தூக்கியதும், "மேத்ஸ் டேபிள் மிஸ்டேக் இல்லாம எழுதனும், அம்மாக்கு குட்டி தம்பி பொறக்கனும், அப்பா நிறைய சாக்லேட் வாங்கி தரணும், கம்மிங் சன்டே அனு மாதிரியே நானும் தீம் பார்க் போகனும்..." என்று ஒருடஜன் கோரிக்கைகளை மயிலின் காதினில் போட்டுவிட்டு கீழே இறங்கினாள்.
குழுந்தையின் அம்மா, "ரொம்ப தேங்க்ஸ் தம்பி, கோவிலுக்கு வந்ததுல இருந்து, சிவனோட நந்தி, புள்ளையாரோட எலி, முருகனோட மயிலுன்னு பாரபட்சம் இல்லாம எல்லா சாமிட்டயும் இதையே கேட்டுட்டு இருக்கா."
மணி, "இருக்கட்டும்க்கா குழந்தைதான..."
"குட்டிம்மா, அங்கிள் உன்ன தூக்கினாங்கள்ள, அவங்களுக்கு தேங்க்யூ சொல்லு..."
முத்துப்பல் தெரிய "தேங்க்யூ அங்கிள்..." என்றது குழந்தை.
"அங்கிள்னு எல்லாம் கூப்பிட வேணாம், அழகா தேங்க்யூ மாமான்னு சொல்லு பாக்கலாம்..."
பெரிய மனுஷி போல தலையில் கை வைத்துக் கொண்ட குழந்தை, "ஷப்பா... ஏன் எல்லா பாய்ஸ்ஸூம் என்ன மாமான்னே கூப்பிட சொல்றீங்க?" என்றாள்.
"எல்லாருமா கேக்குறாங்க?"
"ம்... எங்க பக்கத்துவீட்டு ராமு அங்கிளும் இப்டித்தான் பண்றாரு. அடுத்து என்ன? எங்கிட்ட கிஸ் கேக்க போறீங்களா?"
"இல்ல, என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?"
"சீ.. இடியட்... அம்மா இங்க பாரும்மா இந்த பாய் கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க..." என்று வயிற்றைப் பிடித்து சிரித்துக் கொண்டிருந்த அவளுடைய அம்மாவிடம் ஓடி விட்டாள்.
"அரையடில இருந்தாலும் சரி அஞ்சடில இருந்தாலும் சரி, பொண்ணுங்க எல்லாரும் திட்றதுல கூட ஒரே டிசைனாவா இருப்பீங்க?"
இது நேரம் வரையில் கீர்த்தனா வாயை மூடி அடக்கி வைத்திருந்த சிரிப்பு இப்பொழுது பொத்துக் கொண்டு வெளியே வந்தது.
No comments:
Post a Comment