Click here to get all parts |
தெய்வமுமே கொஞ்சம்
மதிப்பிழந்து போகுமடி...
தொலைந்த நின் குறுநகையை கேட்டு
கோபக் கோதையுனை
கெஞ்சத்தான் மனம் தோன்றுதடி...
கீர்த்தனாவின் முகபாவனைகளும் நக்கலான சிரிப்பும், 'இந்த அவமானம் உனக்கு தேவையா?' என்பதை போல் மணியை வகையாய் வச்சு செய்தது. அவள் கிண்டல் சிரிப்பாலேயே தன்னை படு கேவலமாய் கலாய்ப்பது தெரிந்து இருந்தாலுமே, அசராமல் காலரை தூக்கி விட்டுக் கொண்டு மணி முன்னால் நடக்க அவளும் எழுந்து அவனை பின் தொடர்ந்தாள்.
தன் முதுகுக்குப் பின்னால் வேண்டுமென்றே முணுக் முணுக்கென்று நக்கலாய் சிரித்துக் கொண்டு வருபவளை பார்த்து, "ஏங்க? ஏன்?...." என்றான்.
அவளோ சிரிப்பினூடே, "அந்த பாப்பா தேங்க்யூ அங்கிள்னு சொல்லும்போதே மரியாதையா கிளம்பி இருக்கலாம்ல. தேவையில்லாம வாயைக் கொடுத்து வம்புல மாட்டி, அத சமாளிக்கிறதுக்காக ஒரு கேவலமான ஃபேஸ் எக்ஸ்பிரஷன் குடுத்தீங்க பாருங்க, அத பாத்ததுல இருந்தே என்னால சிரிப்ப அடக்க முடியலங்க, சாரி..."
"விடுங்க விடுங்க, இதையெல்லாம் ஒரு அவமானமா நெனச்சா அது எங்க ஆண்கள் இனத்துக்கே கேவலம்."
"ஓகே ஓகே, ஒத்துக்கிறேன் உங்க மீசையில மண்ணு ஒட்டல..."
"ஹலோ, நீங்க மட்டும் ஒழுங்கா? கொஞ்ச நேரம் முன்னாடி நம்மள தனியா போய் பேசிட்டு வாங்கன்னு சொன்னதுக்கு, உங்க அம்மா கிட்ட பர்மிஷன் கேட்டு பல்பு வாங்கல? உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?..."
"அது பொண்ணுங்க நேச்சர். எங்க போனாலும் அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டுத்தான் போவோம், அப்படி செய்றதால நாங்க எங்க இருந்தாலும் அம்மாவும் அப்பாவும் எங்க கூடவே இருக்கிறதா ஒரு பாதுகாப்பு உணர்வு வரும், எந்த பயமும் இல்லாம ஜாலியா என்ஜாய் பண்ண முடியும். அவசரத்துல வீட்ல சொல்லாம போனாலோ, இல்ல திருட்டுத்தனமா வெளியில போனாலோ அஞ்சு நிமிஷத்துக்கு மேல போன இடத்துல நிம்மதியா இருக்கவே முடியாது. அம்மா தேடுவாங்களோ, அப்பாக்கு தெரிஞ்சவங்க பார்த்திடுவாங்களோன்ற மைண்ட் செட் தான் இருக்கும், ஒரு சொட்டு சந்தோஷம்கூட இருக்காது."
"நீங்க உணர்ச்சிப் பூர்வமா சொல்றத பார்த்தா உங்களுக்கு இதுல நிறைய அனுபவம் இருக்கும் போலயே? அடிக்கடி காலேஜ்ஜ கட்டடிச்சிட்டு ஜூட் விட்ருவீங்களோ "
"அறிவுக்கு அனுபவம் தேவை இல்லைங்க, நம்மள சுத்தி நடக்கிறத தீர்க்கமா கவனிச்சு பார்த்தே கத்துக்கலாம்..."
"ம்ஹூம்...." என்றான் அவன் நக்கலாக.
"ம்..." என்றாள் அவள் அழுத்தமாக.
பேச்சு மும்மரத்திலிருந்த அவள் அடுத்த அடி எடுத்து வைக்கையில் தரையில் இருந்த ஏதோ ஒன்று அவள் பாதத்தில் நறுக்கென்று குத்திட, "ம்மா...." என்று அலறினாள்.
"என்னங்க, என்ன ஆச்சு?"
"கால்ல ஏதோ குத்திடுச்சு" என்றவள் காலைத் தூக்கி பார்க்க ஒரு ஊசி போன்ற சிறிய மரக்குச்சி அவள் காலில் குத்தி பாதி ஒடிந்த நிலையில் தொங்கிக்கொண்டு நின்றது. கோவில் நிர்வாகிகள் பிரகாரத்தின் ஓரங்களில் நிழலுக்காக இடம் ஒதுக்கி மரம் வளர்த்து இருந்தனர், அதில் அளவுக்கு மீறி வளரும் மரங்களை அவ்வப்போது வெட்டுவது வாடிக்கை. அப்படி இன்று காலை வெட்டிய கிளையின் மர குச்சிகள் தரையில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன, அதில் ஒன்றுதான் கீர்த்தனாவின் பாதத்தைப் பதம் பார்த்தது.
மணி, "நான் வேணும்னா ஹெல்ப் பண்ணவா?"
"இல்லங்க, லேசாதான் குத்தி இருக்கு, நானே எடுத்திடுவேன்."
குச்சியை லாவகமாக காலில் இருந்து வெளியே எடுத்தவள் காயம் தந்த வேதனையால் கோபத்தில், "மரத்த வெட்டுறவங்க அப்படியே கீழேயும் லேசா கூட்டி விட்டு இருக்க கூடாதா? குழந்தைங்க பெரியவங்க நடக்குற இடம்னு கொஞ்சமாவது அக்கறை இருக்குதா? முதல்ல இங்க மரத்த வளர்த்தவர்கள சொல்லணும், இதுக்கு பதிலா பிரகார பாதையில ஒரு ஷெட் போட்டா நடக்கிறவர்களுக்கு நல்லா இருக்கும்ல. தேவை இல்லாம மரத்தை வளர்த்துகிட்டு, அது வளர வளர வெட்டி கிட்டு, எடத்தயும் கிளீன் பண்ணாம குப்பையா விட்டுட்டு..." என்று வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டே சென்றாள்.
"தப்ப நம்ம மேல வச்சுகிட்டு, தப்பே செய்யாத மரத்த ஏங்க திட்றீங்க?"
"தப்பா? நான் என்ன தப்பு செஞ்சேன்?"
"மரத்துக்கு சொந்தமான இடத்தில் நாம நுழைஞ்சு கிட்டு மரத்தை திட்டுறது ஞாயமா?"
"ஏங்க, இந்த கோயில் மரத்துக்கு சொந்தமான இடமா? அப்புறம் மனுஷங்க சாமி கும்பிட காட்டுக்குள்ள போகணுங்கிறீங்களா? நான் டெஸ்லாவ பத்தி சொன்னதுக்காக, நீங்களும் அறிவுப்பூர்வமா பேசுற மாதிரி என்ன இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்றீங்களா?"
"ஏங்க, உங்க அளவுக்கு இல்லைன்னாலும் எங்களுக்கும் கொஞ்சூண்டு அறிவு இருக்கு. கல்யாணத்துல இஷ்டமில்லாத பொண்ண இம்ப்ரஸ் பண்ணி நான் என்ன செய்ய போறேன்?"
"இஷ்டம் இல்லனு சொன்னேனா?"
"அதான் உங்க மூஞ்சியே சொல்லுதே, இந்த கல்யாணத்துல உங்களுக்கு இஷ்டம் இல்லன்னு... உங்கள கல்யாணம் பண்ணிட்டு கல்யாணத்துக்கு அப்புறம் சண்டையும் சச்சரவுமா ஆளுக்கொரு ரூம்ல வாழ்றதவிட, நான் இப்படியே முரட்டு சிங்கிளா கெத்தா வாழ்ந்துட்டு போயிடுவேன்."
"ஆஹான், சரி போறதுக்கு முன்னாடி எம்மேல ஏதோ தப்புன்னு சொன்னீங்களே, அது என்னனு சொல்லிட்டு போங்க..."
"உங்க மேல தப்பு சொல்லலை, பொதுவா நம்ம மேல தப்புன்னு தான் சொன்னேன்."
"புரியலியே...."
"இந்த மண்ணு மரத்துக்கு சொந்தமானது, மரத்த நம்மளோட வசதிக்காக வெட்றது மரத்துக்கு நாம செய்ற அநியாயம்ங்க... அத அதோட இடத்தில சுதந்திரமா வாழ விட்டுட்டு, நாம நமக்கான இடத்துக்கு ஒதுங்கி போகணும்."
"அப்போ கோவில், வீடு, ஆபீஸ் இதெல்லாம் தூக்கி ஊருக்கு வெளியில வச்சுட்டு, ஊருக்குள்ள மரம் வளர்க்கணும்னு சொல்றீங்களா?"
"நிச்சயமா...."
"என்ன?...."
"ஸீ, எல்லா மரமும் எல்லா இடத்திலையும் வளர்ந்திடாது, அதுக்குன்னு உரிய மண்ணுலதான் அந்தந்த மரங்கள் நல்லா வளரும். மரமே வளராத இடம்னு ஒவ்வொரு ஊர்லயும் ஒரு இடம் இருக்கும், அந்த இடத்தை மனுஷங்க வாழ பயன்படுத்தி இருக்கணும்."
"அப்டி செஞ்சா ஒவ்வொரு வேலைய செய்றதுக்கும் நம்மளோட நேரமும், பணமும் அதிகமாக செலவாகும்ல."
"கரெக்ட், அப்படி விரயமாகுற அந்த நேரத்தையும் பணத்தையும் மிச்சம் பண்ற மாதிரித்தான் அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்திருக்கணும். அத விட்டுட்டு நம்ம வசதிக்காக இயற்கைய அழிக்கிறது நம்மள நாமளே அழிச்சுக்கிறதுக்கு சமானம், அதோட ஆரம்பம் பாக்குறதுக்கு சாதாரணமா ஒண்ணும் நடக்காத மாதிரி இருந்தாலும் முடிவு ரொம்ப விபரீதமாக இருக்கும்."
"விபரீதமான்னா?"
"இயற்கையும் பொண்ணும் ஒண்ணுங்க, அளவுக்கதிகமா அதோட இடத்தை நாம எடுக்க முயற்சி செய்ய கூடாது. அப்படி செஞ்சா அது தன்னைத் தானே நிலை நிறுத்திக்க, ஒருநாள் மொத்தமா தன் எதிரிய வாஷ் அவுட் பண்ணிட்டு போயிடும். உதாரணமா சென்னையில வெள்ளம் வந்ததே அதுமாதிரி... உலகத்தில எங்கேயோ ஒரு மூலையில வாழ்ந்த டெஸ்லாவையும் அவரோட கண்டுபிடிப்பையும் காப்பாத்தாம போனதுக்கு இவ்வளவு வருத்தப்படுறீங்களே. நம்ம முன்னோர்கள் வாழ்ந்து, நமக்கு அப்புறம் நம்மோட சந்ததிகள் தலைமுறை தலைமுறையா வாழப்போற பூமி இது. இதக்காப்பாத்த நமக்கு எந்த அடிப்படை அறிவும் இல்லாம போயிடுச்சு பாருங்க... நான் உங்களையும் உங்க டெஸ்லாவையும் குறை சொல்றதுக்காக இப்டி பேசல, நம்ம முன்னோர்கள நாம இப்ப ஆஹா ஓஹோன்னு பேசுற மாதிரி, நம்ம சந்ததி நம்மள பேசலைனாலும் பரவாயில்ல. 'அடச்சீ அத்தனை இயற்கை வளத்தையும் அழிச்சுட்டு போயிட்டானுங்க, அறிவுகெட்ட ஜென்மங்க'ன்னு சொல்லிட கூடாதேன்ற வருத்தத்துல பேசுறேன்."
"என்னங்க நீங்க? சாதாரண இயற்கைய பெருசா பில்டப் பண்றீங்க?"
"என்னங்க சாதாரண இயற்கைன்னு சொல்லிட்டீங்க? இயற்கை நாம கும்பிடுற கடவுளவிட சக்தி வாய்ந்தது. நாம இங்க வாழ்றதுக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கோ அதவிட அதிகமா இந்த மரத்துக்கு, அந்த அணிலுக்கு, இந்த சின்ன எறும்புக்கு உரிமை இருக்கு. உணவுச் சுழற்சியோட அடிப்படையே இயற்கைதான், அது இல்லன்னா நாமளும் இல்லாம போயிடுவோம்."
"ஆனா அதுங்களவிட மனுஷனுக்குத்தான் அறிவு ஞாஸ்தி இல்லையா? அப்போ நமக்குத்தான முன்னுரிமை..."
"இந்த உலகத்துல மனுஷங்க இல்லைனாலும் இயற்கை இருக்கும், ஆனால் இயற்கை இல்லைனா எந்த உயிரினமும் இருக்கவே முடியாது. இன்னொரு உயிரோட உணர்வ புரிஞ்சுக்கலைன்னா நம்மள ஆண்டவன் ஆறறிவோட படைச்சதுக்கு அர்ததமே இல்ல..."
"உணர்வ புரிஞ்சுக்கிறதா?... மரத்துக்கும் உயிர் இருக்குன்னு சொல்றீங்களே, அதோட உணர்வ நான் எப்படி பாத்து புரிஞ்சுக்குறதுன்னு சொல்லுங்க பாக்கலாம்?"
"பார்வையால பார்த்தா உங்களால அத ரசிக்கத்தான் முடியும், உணரனும்னா நீங்க அத தொட்டு பாக்கனும்" என்று ஓரு திசையில் கை நீட்டினான்.
அங்கே அக்கோவிலின் ஸ்தல விருக்ஷம் இருந்தது, அதன் அருகில் வந்தவள் தன் மென் விரல் கொண்டு மெதுவாக அம்மரத்தினை வருடிப்பார்த்தாள். பல நாட்களாக வெயிலிலும் மழையிலும் கிடந்து காய்ந்து பாறை போன்ற உறுதியான தோற்றத்தில் இருந்தன அம்மர பட்டைகள். தன் விரல் தீண்டியதும் அது அகம் மலர்வதை போல அவளுள் ஒரு உணர்வு எழுந்தது. அக்கம் பக்கத்தில் ஆள் நடமாட்டத்தை பார்த்துவிட்டு மெதுவாக மரத்தை கட்டி அணைத்தாள், அவள் அங்கங்கள் எங்கும் மரம் பட்டு உரசியதில் வார்த்தக்குள் வராத ஒரு உணர்வு உள்ளுக்குள் ஊறியது. ஏதோ தோன்றியவளாக தன் தலையை நிமிர்த்தி மரத்தின் தலையை பார்த்தாள். அதிகாலை காற்றின் விளைவாக ஆடிய உச்சிக்கிளைகள் அவளிடம் அளவளாவ முனைவதாய் அவளுக்கு தோன்றிற்று. அந்த நொடிதனில் அப்பெரிய மரம் தன் ஐந்தடி உருவத்திற்கு, அடங்கி கட்டுப்பட்டு தன் செல்ல பிராணியாக உருமாறுவதைப் போல் அவள் உணர்ந்தாள். இப்போது இம்மரத்தின் ஒரு கிளையினை வெட்டினால், தன்னுடலில் ஒரு பாகம் குறையும் பொழுது எவ்வளவு வலிக்குமோ அவ்வளவு வலி அதற்கும் ஏற்படும் என்று அவளால் உணர முடிந்தது.
இதுவரையில் தன்னை அதிகம் தெரிந்த அறிவாளி என்று நினைத்திருந்தவள், தன்னுள் இப்புது பார்வையை புகுத்தியவனை திரும்பி பார்த்தாள். பிரகார மதில் சுவற்றில் கைகட்டி, தலைசாய்த்து, சாய்ந்து நின்றபடி அவளது செய்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இதைப்போலவே அவனையும் தன்னால் தொட்டு உணர முடியுமா? என்றொரு கேள்வி அவளுள் தோன்றியது. ஆரம்பத்தில் தற்பெருமை பேசுவதாகவும், அதன் பின் தன்னை ஆழம் பார்ப்பதாகவும், தான் கோபித்து கொண்டதும் விலகி நிற்பதுமாக இருந்த அவன் கண்கள், இப்போது மண்ணையும் மரத்தையும் மட்டுமல்ல மனையாளின் மனதையும் அவளின் கனவையும் உணர்ந்து கொள்வேனடி சகி என்றுரைப்பதைப்போல் தோன்றியது...
தயக்கத்தை விடவும் அவன் மேல் ஆர்வம் மேலோங்க அவனருகில் வந்து நின்றவள், "நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நான் உங்க கைய ஒரு தடவை தொட்டு பார்க்கலாமா?" என்றாள்.
"இதுல என்ன இருக்கு? தாராளமா தொட்டு பாருங்க..." என்று கை குலுக்குவதை போல தன் வலது கரத்தை நீட்டியதும் அவளும் தன்னுடைய வலது கரத்தினை அதன் அருகே நீட்டினாள். அவளுக்கு அது முதல் ஆண் கையின் அருகாமையாதலால், ஒரு பார்வையிலேயே இரண்டிற்கும் அத்தனை வித்தியாசம் தெரிந்தது. கீர்த்தனாவின் கை சின்ன விரல்களோடு அளவில் சிறியதாய் பஞ்சு பஞ்சென்று இருக்க, மணியினுடைய உள்ளங்கையோ விரிந்து உறுதியாகவும், அவன் விரல்கள் ஐந்தும் அளவில் பெரியதாய் தடித்து நீண்டு இருந்ததை கண்டதும், 'ஏன் இத்தனை பெரிய வித்தியாசத்தோடு படைத்தான் இறைவன்?' என அவளுக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் தோன்றி மறைந்தன...
அவள் சுட்டுவிரலை நீட்டி அஞ்சி அஞ்சி தன் உள்ளங்கையை தொடுவதை கண்ட மணி, "எனக்கு குஷ்டம் எல்லாம் இல்லைங்க, நீங்க தைரியமா தொடலாம்..." என்றான் கிண்டலாக.
ஓரக்கண்ணால் அவனை முறைத்துவிட்டு, நடுக்கத்தோடே அவன் கரம் பற்றினாள் அவள். மணியின் கையை தீண்டியதுமே உலகத்தின் மையப்புள்ளி தானாக மாறிவிட்டதை போலொரு பரிதவிப்பு, அன்னையின் கண் பார்வைக்குள் இருப்பதை போன்ற பாதுகாப்பு, காதலுக்கும் காமத்திற்கும் மத்தியில் சிக்கியதாய் ஒருவித குறுகுறுப்பு, உடலின் உள்ளிருந்த உயிர் உலகை தாண்டி பறந்துவிட்டதாய் ஒரு பிரமிப்பு, தன் கைக்குள் அவன் முழுவதுமாய் புகுந்து இருப்பதை போல் ஒரு விருவிருப்பு...
மழை கண்ட மயில் போல அவள் உள்ளம் கூத்தாடுவதை உணரமுடியாத அவனோ, அவள் அச்சத்தால் விழிபிதுங்கி நிற்பதாய் நினைத்துக்கொண்டு, 'ஏண்டா மணி... ஒரு மரம், எவ்வளவு அழகா தன்னோட ஃபீலிங்ஸ்ஸ காட்டி பொண்ண இம்ப்ரஸ் பண்ணிடுச்சு... ஆனா நீ? ஆறறிவு இருந்தும் ஒண்ணும் நடக்கல... மரத்தை விட நீ மட்டமா போயிட்டியேடா? ' என சத்தமாகவே புலம்பினான். அவன் வார்த்தைகள் செவிகளுக்குள் நுழைந்ததும் நடப்பு உலகிற்கு திரும்பியவள், இருக்கும் இடத்தை உணர்ந்ததும் சட்டென்று சுதாரித்து கைகளை அவன் கைகளுக்குள் இருந்து எடுத்துக் கொண்டாள்.
மணி, "சரி, நாம வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சு, நம்ம வீட்டு ஆளுங்க தேடி வர முன்னாடி நாம வெளி மண்டபத்துக்கு போவோமா?"
"ஒரு நிமிஷம் கொஞ்சம் உங்களோட கர்ச்சிப் தர்றீங்களா?" என்று தயங்கி தயங்கி கேட்டாள்.
"ஷ்யூர்..." என்றவன் மயிலுக்கு போர்வை தந்த பேகன் போல கர்ச்சீப்பை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
சில நிமிடங்கள் கழித்து கீர்த்தனா, "கர்ச்சிப் குடுத்ததுக்கு தேங்க்ஸ்ங்க..." என்று நீட்டியதை சரியாக கவனிக்காமல் வாங்கி பாக்கெட்டுக்குள் போட்டுவிட்டு முன்னால் நடக்க தொடங்க, அவளும் குறும்புப் புன்னகையோடு அவனை பின்தொடர்ந்தாள்.
'என்ன பேசுகிறார்களோ? ஏது பேசுகிறார்களோ?' என்று பதற்றத்தில் இருந்த கீர்த்தனாவின் அம்மாவிற்கு தான் அவர்களின் வருகை முதலில் தெரிந்தது. பெற்றவர்களை தான் திறமையாக நடித்து ஏமாற்றி விட்டதாய் நினைக்கும் ஒவ்வொரு பிள்ளையிடமும், ஏமாறுவதைப்போல நடிக்கும் பெற்றவர்கள் இருப்பது ஆச்சரியமான உண்மை. கோவிலின் உள்ளே நுழைந்த பொழுது கடமைக்கென தலைகவிழ்ந்து இருந்தவள், இப்போது நிஜமான வெட்கத்தோடு தலைகவிழ்ந்து வருவதை கண்டதும் அவரின் பெற்ற வயிறு குளிர்ந்து போயிற்று.
"அப்பனே ஆண்டவா... அடுத்த பிரதோசத்துக்கு பால் குடம் கொண்டுவந்து உன்ன குளிர்விக்கிறேன் ஐயா...." என்று அந்த கோவிலில் மூலவருக்கு இஷ்டமான அபிஷேக ஆராதனைகளை பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டார் அவர்.
கூடியிருந்த கூட்டத்திலிருந்து யாரோ ஒருவர் மணமக்களிடம், "என்னப்பா பேசி பாத்தீங்களா? ரெண்டு பேருக்கும் புடிச்சிருக்கா?" என்று கேட்டார்.
மணி பதில் சொல்லும் முன்பே கீர்த்தனா, "ம்..." என்று விட அவன் ஆச்சரியமான அதிர்ச்சியோடு அவளை பார்த்தான்.
அவள் தன் கைகளுக்குள் அவனுடைய கர்ச்சீப்பை இறுக்கமாக பிடித்துக்கொண்டு வெட்கச்சிரிப்போடு அவனை பார்க்க, 'என் கர்ச்சிப் அவகிட்ட இருக்குதுன்னா என் பாக்கெட்டுக்குள்ள எத வச்சேன்?' என வேகமாக தன்னுடைய வேஷ்டி பாக்கெட்டுக்குள் கைவிட்டான். தொட்டவுடன் பட்டுப்போல மிருதுவாக இருந்த அந்த கைக்குட்டை, நான் உன்னவளின் உடைமை என்று சொல்லாமல் சொல்லியது.
"என்ன மாப்பிள்ள எதுவும் சொல்லாம நிக்கிறாரு?" என்றொரு குரல் வர,
"ம்... புடிச்சிருக்கு..." என்றான்.
மணியின் அப்பா, "அப்புறமென்ன, அடுத்த வாரம் ஞாயித்துகிழமை நாள் நல்லா இருக்கு. அன்னிக்கே தட்டு மாத்தி பூ வச்சிடுவோம், பொண்ணு படிப்பை முடிச்சதும் கல்யாணத்த வச்சிக்கலாம்..." என்றதும், அனைவரும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு நகர்ந்தனர். பேச்சுவார்த்தை முடியும் வரையில் தலை கவிழ்ந்தே இருந்தவள், வீடு செல்வதற்காக அனைவரும் எழுந்தவுடன் பிரிவின் பரிதவிப்போடு தலை நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
அவனோ குறும்பாக சைகையில், 'ஐ ஏம் வாட்ச்சிங் யூ...' என்றான்.
'நீ எங்கிருந்தாலும் என்ன செய்தாலும், இப்போதிருந்து மனதால் நானும் உன் உடனிருப்பேன்....' என்று அவன் உணர்த்துவது புரிய, சந்தோஷத்தில் திக்குமுக்காடிய அந்த பேதை, தன் வெட்கத்தை மறைக்க நினைத்து அன்னையின் பின்னால் ஒளிந்து நின்று கொண்டாள்.
அடுத்து வரப்போகும் நிச்சய நிகழ்விற்காக இரண்டு உள்ளங்களும் எதிர்பார்ப்போடு காத்திருக்க தொடங்கின.
No comments:
Post a Comment