மெல்ல மெல்ல பூக்கும் சின்ன பூவைப் போல அறியா வயதில் எனைத்தேடி வந்த தேவதை அவள், என் காதலுக்கு உயிர் கொடுக்க நினைத்து தன் கடந்த காலத்தை தெரிந்தே இறந்த காலமாக மாற்றியவள், நான் கொஞ்சம் கலங்க கண்டாலும் உடனே உயிர் பதறும் தாயை போல உள்ளங்கையில் என்னை தாங்குபவள், செல்ல திமிரில் கொஞ்சல் மொழியில் கோபம் என்ற கணை எடுத்து என் கண்ணை பார்த்து மிரட்டுபவள், உடலுக்குள் ஊறும் உயிராய், திருமணம் என்று ஒன்று நிகழும் முன் மனையாளாக என்கரம் பற்றி உறுதுணையான உறவாய் வந்தவள், என்னவள்......
வெள்ளி முளைத்த பிறகும் விழியினை விரிக்க முடியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் சிற்பிகா. அழுதழுது சிவந்திருந்த அவள் விழிகளை பார்த்துக் கொண்டே படுக்கைக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் இளவவளன். நேற்று இரவில் தன் அறையில் இருந்து எடுத்து வந்திருந்த மரப்பாவையினை மார்போடு அழுந்த பற்றியபடியே இரவெல்லாம் துயின்று இருக்கிறாள் என்று அவனுக்கு பார்த்த உடனே தெரிந்துவிட்டது. இருவரது அமைதியையும் காண பொறுக்காமல், இளஞ்சூரிய கதிர்கள் சாளரத்தின் வழியே அறைக்குள் நுழைந்து அதீத வெளிச்சத்தை பரப்பிவிட்டது. வெளிச்சத்தின் காரணமாக, பொழுது விடிந்து விட்டதை உணர்ந்த சிற்பிகா தன் பட்டுப்பூச்சி இமைகளை திறக்க, எதிரில் புன்னைகை முகத்தோடு அவன் இருந்தான்.
விருட்டென்று எழுந்து அமர்ந்தவள், "இளவரசே... தாங்கள் எப்படி பெண்களின் மாளிகைக்குள் இந்நேரத்தில் வந்தீர்கள்? பட்டத்து அரசியின் மெய்க் காவலர்கள் தங்களை அனுமதித்திருக்க மாட்டார்களே..."
"வாயில் வழி வருபவனுக்கு தானே அனுமதி தேவை... நான் மேல் மாடத்தின் துவார வழியே இறங்கியவன் இல்லையா?"
"அப்படி என்றால் அனுமதியின்றி நுழைந்திருக்கிறீர்களா?..." என்றதற்கு ஆம் என தலையாட்டினான்.
"என்ன காரியம் செய்து விட்டீர்கள்? மாலையில் தங்களைக் காண நானே வருவேன் என்று சொல்லியிருந்தேனே? பிறகேன் இந்த விபரீத விளையாட்டு தங்களுக்கு? இது மட்டும் மகாராணியார் செவிகளுக்கு சென்றால், என்னை உண்டு இல்லை என்று செய்து விடுவார்..."
"ஏன்?..." என்றான் ஏதுமறியா பிள்ளை போல...
"ஏனென்று தங்களுக்கு தெரியாதா? திருமணத்திற்கு முன்பு நம் இருவரையும் தனி அறையில் சந்திக்க கூடாது என்று தங்களின் அன்னை முன்பே சொல்லி இருக்கிறார் இல்லையா..."
"பிறகேன் பெண்ணே நேற்றிரவு என் அறைக்கு தனியே வந்தாய்?"
"திருமண சேதி பற்றி சொல்ல வந்தேன், இது ஒரு தவறா?..."
"நான் மட்டும் என்ன, தினம் தினம் சுவர் ஏறி வருகிறேனா? என்னால் கரைந்த மைவிழியில் மீண்டும் மை தீட்டிவிட்டு செல்ல வந்தேன். இது ஒரு தவறா?" என்றான் அவள் கேட்ட அதே தோரணையில்.
தன் மனவருத்தம் உணர்ந்து வந்திருக்கிறான் என்றதுமே சிற்பிகா சிறிது நாணம் பூசி தலை கவிழ, அவளின் அருகில் வந்தமர்ந்த இளவளவன், "உன் அல்லி விழிகளில் செந்தாமரை ஏன் மலர்ந்தது கண்ணே? திருமணத்தை மறுக்கிறேன் என்று என் மேல் வருத்தமா?" என்றான்.
"வருத்தம்தான்... ஆனால் திருமணத்தை மறுத்ததற்காக இல்லை. நான் சொல்ல வந்ததை தாங்கள் முழுமையாக செவி மடுத்துக் கேட்காமல் போனதற்காக..."
"அப்படி என்னடி சொல்ல வந்தாய் என் வகுள மலரே?"
"தங்களின் தமையனுக்கு பொறையாறு எனும் குறுநில மன்னனின் மகள் பூங்கோதையை மண முடிக்க ஏற்பாடு செய்வோமா என்று தங்களிடம் யோசனை கேட்க வந்தேன். அவள் என் சிறுவயது தோழி, மிக மிக பொறுமையாக குணம் வாய்ந்தவள், முடி இளவரசனின் குணத்திற்கு நிச்சயம் பொருத்தமாக இருப்பாள். பெரும் ராஜ்யத்தின் மூத்த இளவரசனை மணம் முடிக்க அவர்களும் மறுப்பு சொல்ல மாட்டார்கள். நமக்கு திருமண பேச்சு ஆரம்பித்த போதே உங்களின் தமையனாரது பேரும் இதில் அடிபடும் என்று எனக்கு தெரியும். அவர் மறுத்தாலும் எப்படியாவது நாம் அவரை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று நினைத்தேன். ஆதலால் அதைப்பற்றி தங்களிடம் பேசி முடிவு எடுக்க நினைத்து, நேற்று இரவு தங்கள் அறைக்கு வந்தேன். ஆனால் முழுதாய் சொல்லி முடிக்கும் முன்பு முன்கோபம் தங்களின் மூளையை குழப்பிவிட்டது..."
'நான் மனதில் நினைத்ததை என்னவள் செயலால் செய்து காட்டிவிட்டாளே...' என்று உணர்ச்சிப் பெருக்கில் இளவளவன், "நான் ஒரு மடையன் சிற்பிகா... கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்திருக்கிறேன்."
"தாங்கள் மடையன் இல்லை மன்னவா, மழலை... அதனால்தான் இத்தனை வயதிலும் மரப்பாவையை வைத்து விளையாடுகிறீர்கள்" என்ற நேரம் அவள் அறைக்கதவு தட்டப்பட்டது.
அறைக்கு வெளியே சிற்பிகாவின் தோழிகள், "கோவில் பூஜைக்கான நாழிகை நெருங்கிவிட்டது, தாழ் திறவுங்கள் இளவரசி..." என்று கூச்சலிட தொடங்கினர்.
"அடடா... இளவரசே என் தோழிகள் வந்துவிட்டார்கள் போலிருக்கிறதே, நீங்கள் விரைந்து இங்கிருந்து செல்லுங்கள், அவர்கள் கண்ணில் பட்டுவிட்டால் ஆபத்து..."
"எதுவாகினும் பரவாயில்லை, நான் தாங்கிக் கொள்வேன். நீ தாழ் திற..."
"என்ன ஆனது தங்களுக்கின்று, ஏன் இப்படி விதண்டா வாதத்தில் ஈடுபடுகிறீர்கள்?"
"இந்நோயை கவிஞர்கள் காதல் பித்து என்பர்... மண்ணில் வளராத மரத்தில் பூத்த, செம்மாதுளை மலரிலிருந்து அதிகாலை சொட்டும் தேனை அருந்தினால் விமோசனம் உண்டாம். அது எங்கிருக்கிறதென்ற ரகசியம் அறிந்தால் எனக்கு சொல்வாயா?" என்று அவள் செவ்விதழ்களை வருடி விட்டான்.
"ஆஹான்... தங்களுக்கு இவ்வளவு சொன்னவர்கள் அந்த செம்மாதுளையின் உள்ளிருக்கும் பற்கள் கொடூரமானவை என்று சொல்ல மறந்து விட்டனரா? வேண்டுமானால் நான் நிரூபிக்கிறேன் மீண்டும் விரலை நீட்டுங்கள் பார்க்கலாம்."
"இல்லை வேண்டாம்..." என்று தன் கைவிரல்களை ஒளித்து வைக்க, வெளியே இளவளவனின் அன்னை, "அம்மா... சிற்பிகா தேவியே... பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாளே துயில் எழுந்து விட்டாராம், உனக்கு இன்னும் எழ மனம் இல்லையா? இத்தனை பேர் கூச்சலிட்டும் அப்படி என்னடி உறக்கம் உனக்கு? அத்தையாரே வந்து எழுப்ப வேண்டும் என்று காத்திருக்கிறாயோ?" என்று கோபமாக குரல் கொடுத்தார்.
சிற்பிகா பதற்றத்தோடு, "அத்தான்... மகாராணியாரே வந்துவிட்டார்... விளையாட்டு வினையாகிவிட்டது பாருங்கள்... உங்களால் இன்று எனக்கு அர்ச்சனை கிடைக்கப் போவது உறுதியாகி விட்டது..." என்று இல்லாத கண்ணீரை வழித்தெடுக்க, அவனோ பயத்தில் திணறும் அவள் முகத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
"இன்னும் என்ன வேடிக்கை? கிளம்புங்கள் விரைவாக...."
"கொடுக்க வேண்டியதை கொடுத்தால் இந்த க்ஷணமே கிளம்பி விடுகிறேன்."
"இது என்ன புது பழக்கம் அத்தான்..."
"நேற்று இரவில் நீ எனது அறைக்கு வந்ததிலிருந்து உதித்ததாக இருக்கலாம்."
வெளியே மகாராணி, "என்ன ஆனது சிற்பிகா? உனக்கு ஏதும் உடல் நலமில்லையா? கதவினை காவலர்களை கொண்டு திறக்க சொல்லட்டுமா?..." என்றார்.
"வேண்டாம் மகாராணி, எனக்கு ஒன்றும் இல்லை. இதோ இப்பொழுது வந்து விடுகிறேன்..." என்றுவிட்டு இளவளவனிடம் மெதுவாக, "என்னை பார்த்தால் தங்களுக்கு பாவமாகக் இல்லையா? கிளம்புங்கள் இளவரசே..." என்றாள்.
"எனக்கு இரக்க குணம் குறைவடி கண்ணே..."
"அழுதுவிடுவேன் அத்தான்...."
"சரி சரி இப்பொழுது செல்கின்றேன், நீ மாலையில் என் அறைக்கு மரப்பாவையை கொடுக்க வரும் பொழுது முன்னேற்பாடாக வந்துவிடடி..."
"இன்னும் ஒரு வார காலத்திற்கு நான் தாங்கள் இருக்கும் திசை பக்கமே தலை வைக்க மாட்டேன். பிடியுங்கள் உங்கள் பாவையை, விரைந்து செல்லுங்கள் இங்கிருந்து..." என்று அவனை விரட்டிட,
"ம்... இனி உன் கண்ணில் இருந்து நீர் வருமா?"
"வராது வராது... தாங்களும் இனி இவ்வழியில் வரவேண்டாம்..."
"உத்தரவு இளவரசி..." என்று சொல்லிக்கொண்டே குரங்கு போல சுவற்றை விரல்களால் பற்றி மேல் மாடத்திற்கு ஏறிவிட்டான். அவன் பாதுகாப்பாக வெளியேறும் வரை அவன் மேலேயே பார்வையை வைத்திருந்தவள், அதன் பிறகு ஓடிப்போய் வாயில் கதவினை திறந்துவிட்டாள்.
மகாராணி, "ஏனடி இத்தனை தாமதம்? ஒரு நொடி உனக்கு என்ன ஆனதோ என்று பதறிப் போய் விட்டேன் தெரியுமா? உனக்கு ஏதேனும் ஆனால் உன் தந்தைக்கு யார் பதில் சொல்வது?..." என்று பேசிக்கொண்டே சென்றவர் அப்பொழுதுதான் அவளுடைய சிவந்த விழிகளை கவனித்தார். உடனே மற்ற தோழிகளையும் காவலர்களையும் அங்கிருந்து போகும்படி உத்தரவு பிறப்பித்து விட்டு சிற்பிகாவுடன் உள்ளறைக்குள் வந்து அமர்ந்தார்.
மகாராணி, "என்ன ஆனதம்மா உனக்கு? இன்னும் இளவளவன் மண விஷயத்தில் மனமிரங்க மறுக்கிறான் என்ற வருத்தமா?"
"அப்படி எல்லாம் இல்லை அரசியே..."
"நான் அரசியாராக வரவில்லை, உன் அத்தையாராக வந்திருக்கிறேன். என்ன மனக்குறை என்று சொல்லம்மா..."
"அத்தை... தாங்கள் இருக்கும் வரையில் எனக்கென்ன மனக்குறை நேர்ந்து விடப் போகின்றது? வீரமும் கோபமும் நிறைந்த அரசரையும் இளவரசர்களையும் ஒரு தோளில் தூக்கிச் சுமக்கின்றீர்கள், மற்றொரு தோளில் அகன்று விரிந்து கிடக்கும் இந்த ராஜ்யத்தின் பணிகளை தூக்கிச் சுமக்கின்றீர்கள். இருந்தும் இதுவரையில் என்மேல் தாங்கள் கொண்ட அக்கறையிலும் பாசத்திலும் குறை வைத்ததில்லையே, இனி மட்டும் குறை வந்து விடப்போகிறதா என்ன?"
"சரிதான், இளவளவனின் முன் கோபத்திற்கேற்ற சரியான துணைதானடி நீ... ஆயிரம் தான் நீ மனக்குறை இல்லை என்று சொன்னாலும், உன் அத்தைக்கு இந்த சிவந்த விழிகளை காணப் பொறுக்கவில்லையம்மா... வரும் ராஜகுல விருத்தி யாகத்தின்போது, நீ கட்டாயம் என் மருமகளாக இளவளவன் அருகில் அமர்ந்திருப்பாய் போதுமா..."
"இருக்கட்டும் அத்தை... எனக்காக நீங்கள் இளவரசர்கள் இருவரையும் மணம் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்."
"அடி போடி பைத்தியமே... நேற்றிரவு எழுநிலை மாடத்தில் உன் தந்தையார் வாய்தவறி சொல்லிய ஒரு வார்த்தைக்காக அவரை வதம் செய்ய துடித்துவிட்டான் உன் அத்தான். அத்தனை காதலை உன்மீது வைத்திருப்பவனை நான் போய் கட்டாய படுத்த வேண்டுமா?"
"ஆனால் முடி இளவரசருக்கு திருமண பந்தத்திலேயே விருப்பம் இல்லாமல் இருக்கிறதே அத்தை..."
"அவனை நினைத்தால் தானடி எனக்கு அடிவயிறு பற்றி எரிகின்றது. எத்தனை தூரம் எடுத்து சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிப்பவனை, இம்முறை உங்கள் திருமணத்தை காரணம் காட்டி ஒரு வழி செய்துவிட போகின்றேன். அதிசயத்திலும் அதிசயமாக இளவளவனும் என் பக்கம் சேர்ந்திருக்கிறான், ஆதலால் இவ் வாய்ப்பை நான் நழுவ விடுவதாயில்லை."
"பெரிய அத்தான் மாடுகளை மீட்டுக்கொண்டு எப்போது அரண்மனைக்கு திரும்பி வருவார் அத்தை?"
"தெரியவில்லையம்மா... ஆனால் அவன் வந்த உடனே அரசர் ராஜகுல விருத்தி யாகம் விஷயமாக அவனை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இம்முறை அனைத்தும் என் எண்ணப்படியே நல்ல முறையில் நடக்கும் என்று என்மனம் நம்புகிறது. நீயும் உன் மனக்குறை தவிர்த்து கோவிலுக்கு செல்ல விரைந்து தயாராகிடு சிற்பிகா..."
"ஆகட்டும் அத்தை...."
அறைக்குத் திரும்பிய இளவளவன், "இருசப்பா... நான் மரப்பாவையாக்கிய பெண்ணை, உன் தேசத்து இளவரசியிடம் இருந்து எடுத்து வந்து விட்டேன். விரைந்து வாயிற் கதவினை தாளிடடா இவளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்..." என்று கடகடவென உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே துரிதமாக செயல்பட்டான்.
மரப்பாவையை கட்டிலின் மீது வைத்துவிட்டு கிழக்கு திசை பார்த்து நின்று, கால்களிரண்டையும் சேர்த்து வைத்து, மார்புக்கு நேரே கைநீட்டி மந்திர உச்சாடனங்களை உச்சரிக்க அவன் உடல் அக்கினி பிளம்பானது. அடுத்த நொடியே அதை மரப்பாவையில் செலுத்த, மரப்பாவை உயிர் கொண்டு எழுந்தது, ஆனால் பாவையின் உருவத்திலேயே....
உள்ளங்கையளவு பொம்மை உயிரோடு எழுந்து, "டேய்.... என்ன என்னங்கடா செஞ்சீங்க? ஏன்டா என்ன இப்டி குட்டியா மாத்துனீங்க?" என்று கோபமாக கத்த, இளவளவனும் இருசப்பனும் செய்வதறியாது விழிபிதுங்கி நின்றிருந்தனர்.
இருசப்பன், "இளவரசே... பதற்றமின்றி மீண்டும் ஒரு முறை முயற்சித்து பாருங்களேன்...." என்றான்.
"ம்... செய்கிறேன்..." என்றவன் மீண்டும் தன் மாந்திரீக பலத்தை முழுதாக திரட்டி யாழி மீது செலுத்தினான், ஆனால் பாவை உருவத்தை விட்டு யாளி மாறவே இல்லை.
இருசப்பன், "இளவரசே நாம் வேண்டுமானால் இவளை மீண்டும் உயிரில்லா பாவையாக மாற்றிவிட்டு, அதன்பிறகு பெண்ணாக மாற்றி பாக்கலாமா?"
"நல்ல யோசனை கொடுத்தாய் இருப்பா..." என்றுவிட்டு மீண்டும் முயற்சித்தான் இளவளவன். ஆனால் அதற்கான பலன் தான் கிடைக்கவில்லை... அவள் உயிருள்ள பாவையாகவும் உயிரில்லா பாவையாகவுமே திரும்பத் திரும்ப மாறினாளே தவிர, பாவை உருவத்திலிருந்து பெண்ணாக மாறவில்லை.
இருசப்பன், "இளவரசே, நாம் வேண்டுமானால் இவளது உருவத்தை வேறு ஒரு உருவமாக முதலில் மாற்றி...." என்று முடிக்கும் முன்பாக,
யாளி, "டேய்... என்ன பாத்தா டெஸ்ட் ரேட் மாதிரி தெரியுதாடா உங்களுக்கு? அவன் என்னடான்னா ஐடியா கொடுக்குறேன்ற பேர்ல ஏதேதோ சொல்றான், நீ என்னடான்னா உன் இஷ்டத்துக்கு மாத்தி மாத்தி மந்திரம் போட்டுக்கிட்டே இருக்க... அதான் உனக்கு மேஜிக் சரியா வரலன்னு தெரியுதுல, பேசாம உங்க அப்பா அம்மாட்ட கூட்டிட்டி போய் அவங்கள ட்ரை பண்ணி பார்க்க சொல்லுடா...." என்று அதிகாரமாய் உத்தரவிட்டாள்.
இளவளவன், "நீ பேசுவது சரியாக புரியவில்லை, தயை கூர்ந்து பிறமொழி கலப்படமின்றி தமிழில் மட்டும் பேசுகிறாயா?"
"அட மஞ்ச மாய்க்கான்.... உங்க அப்பா அம்மாக்கு உன்னவிட நிறைய மந்திரம் தெரிஞ்சிருக்கும்ல. அவங்க கிட்ட என்ன கூட்டிட்டு போகலாமேன்னு கேக்குறேன்..."
"அது முடியாது பெண்ணே..."
"ஏன்?"
"ஏனெனில் என்னைத் தவிர வேறு யாருக்கும் இங்கு மாந்திரீக பலம் கிடையாது. எனக்கு மந்திர உச்சாடனம் தெரியும் என்ற உண்மையும் தெரியாது, ஆதலால் இதை நானே தான் சரி செய்ய வேண்டும்..."
"என்ன நக்கலா? உனக்கு பவர் இருக்குதுன்னா உன்னோட பேரன்ட்ஸ்க்கும் பவர் இருக்கணும்ல... இல்ல உனக்கு எங்க இருந்து இந்த பவர் வந்துச்சுனாவது அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கணும்ல... அது எப்படி அவங்களுக்கே தெரியாம உனக்கு மேஜிக் பவர் கிடைச்சிருக்கும்?"
"மீண்டும் பேச்சில் பிறமொழி சொற்களை கலந்துவிட்டாய்..."
"ஷப்பா... மத்தவங்க யாருக்கும் தெரியாம உனக்கு எப்படி இந்த மந்திர சக்தி வந்ததுன்னு கேக்குறேன்..."
"அது ராஜ ரகசியம் பெண்ணே, உனக்கு சொல்ல முடியாது..."
"அப்படியா இளவரசே... அழகான அம்சமான பொண்ணா இருந்த என்ன பொம்மையாக்கிட்டு, நீங்க உங்களோட ராஜ ரகசியத்த யாருக்கும் தெரியாம காப்பாத்த போறீங்களாக்கும்? உங்க ரெண்டு பேர் குடுமியும் இப்ப என் கையில... நான் யார்னு தெரியுமா? எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா? போன வருஷத்துல மட்டும் அரசாங்கத்துக்கு எதிரா எத்தனை போராட்டத்தில கலந்து இருக்கேன்னு தெரியுமா? எங்க காலேஜ்லயே பெரிய புரட்சி பொண்ணுனு பேர் வாங்கினவடா நானு.... என்னையே நீங்க பொம்மையா மாத்திட்டீங்கள்ல. இருங்க... இருங்க... நாளைக்கே அரண்மனை முன்னாடி போராட்டத்த ஆரம்பிச்சு கோஷம் போட்டு, உங்க ராஜ ரகசியத்த இந்த ஊரெல்லாம் பரப்பிவிட்டு, உன் பேர நார்நாறா கிழிக்கல என் பேரு யாளி இல்லடா..."
"சற்று பொறுமையாய் இரு பெண்ணே, உன் அத்தனை சங்கடங்களுக்கும் கூடிய விரைவில் நானே ஒரு உபாயம் கண்டுபிடிக்கின்றேன்..."
"யாரு நீ?... பொம்மைய பொண்ணா மாத்துற மேஜிக்கையே உனக்கு சரியா செய்ய தெரியலையே நீ எப்படி என்ன திருப்பி அனுப்புவ? உங்க ரெண்டு பேரையும் நான் இனிமே நம்ப மாட்டேன். எங்க போனா எனக்கு நியாயம் கிடைக்குமோ அங்க போறேன், போங்கடா..." என்றவள் கட்டிலிலிருந்து தாவி இறங்கி கட்டிலுக்குக் கீழே சுண்டெலி போல ஓட முற்பட, இருவரும் பயந்தடித்து அவளை பிடிக்க பாய்ந்தனர். அளவில் சிறியதாய் இருந்தாலும், அவளுக்கு ஓடும் வேகம் நன்றாகவே இருந்ததால் இருவர் கைகளிலும் அகப்படாமல் கட்டில், மேஜை, அலமாரி என்று அனைத்தின் அடியிலும் போக்குக் காட்டியபடி ஓடினாள். அலமாரியின் எதிர்ப்புறத்தில் ஒரு பனையோலை கூடையோடு ஒளிந்திருந்த இருசப்பன், அவள் இளவளவனிடம் தப்பித்து வருவதை கண்டதும் கூடையை எடுத்து கவிழ்த்தி பிடித்திட யாளி வசமாக அதனுள் மாட்டிக்கொண்டாள்...
இருசப்பன், "விரைந்து இவளை மீண்டும் உயிரில்லா மரப்பாவையாகவே மாற்றிவிடுங்கள் இளவரசே..."
"அது பாவம் இருசப்பா..."
"பாவ புண்ணியங்கள் பற்றி இனி யோசனை செய்வதில் எந்த பலனும் இல்லை இளவரசே, துணிந்து இறங்குங்கள். தங்களுக்கு இருக்கும் சக்தி வெளியுலகத்திற்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று தங்களின் தமையனார் ஏற்கனவே நமக்கு தெளிவாய் கூறியிருக்கிறார் அல்லவா?. தெரிந்தே அந்த ஆபத்தில் நாம் கால் வைக்க வேண்டுமா? தங்களுக்கும் தங்கள் தமையனுக்குமான திருமண ஏற்பாடு அரண்மனையில் விறுவிறுப்பாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அதுவும் போக பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாம் செய்யும் ராஜகுல யாகமும் நெருங்கி வந்துவிட்டது. இந்த சமயத்தில் இவ்விஷயம் வெளியில் தெரிந்தால் அது நம் ராஜ்யத்திற்கே ஆபத்து இல்லையா? தற்சமயம் இந்த பெண்ணை உயிரில்லா மரப்பாவையாக மாற்றி விடுவோம், பிறகு நடப்பதை நாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் இளவரசே! எதையும் யோசிக்காமல் என் பேச்சை கேளுங்கள்...."
யாளி, "வேணாம்... அப்டி செய்யாதீங்கடா, ப்ளீஸ்... நான் எங்க அப்பாட்ட திரும்பி போகணும், அவரு இந்நேரம் என்ன காணும்னு எங்கெல்லாம் தேடிட்டு இருக்காரோ, தயவு செஞ்சு என்ன வெளியில விடுங்க..." என்று கூடைக்குள் இருந்து கத்தினாள்.
அவள் குரலில் இருந்த ஏதோ ஒன்று இளவளவனின் மனதை உலுக்க, அவன் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான்.
இளவரசனின் மனம் மாறுவதை உணர்ந்த இருசப்பன், "யோசிக்காதீர்கள் அரசே! இந்தப் பெண்ணை வெளியில் விட்டால் நமது ராஜ ரகசியமும் வெளியில் தெரிந்து விடும். அது உங்கள் மூதாதையர் அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்திற்கு எவ்வளவு பெரிய நாசத்தினை உண்டாக்கும் என்று உங்களுக்கே தெரியும்..."
இளவளவன், "என்னை மன்னித்து விடு பெண்ணே, இப்போதைக்கு இதை தவிர வேறு வழி எனக்குத் தோன்றவில்லை. என் உயிரை கொடுத்தாவது விரைவில் உன்னை பழையபடி பெண்ணாகிடுவேன், அதுவரையில் நீ இதை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்..." என்றவன் தன் மாந்திரீக பலத்தை ஒன்று திரட்ட தொடங்கிவிட்டான்.
அடுத்த நொடியே யாளி மீண்டும் உயிரில்லா மரப்பாவையானாள்... அந்த பாவையான பேதையின் மனக்குறை தீர்க்கும் மன்னவன் மருத மரக்கிளையில் அமர்ந்து, மகிழ்ச்சியாய் மண்ணில் மேயும் மாடுகளை, மனநிறைவோடு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
No comments:
Post a Comment