Click here to get all parts |
ஷ் அப்பா என்ன வெயில் கொளுத்துடா சாமி தாங்க முடியல என்றபடியே வந்த தன் பால்ய நண்பன் சங்கரலிங்கத்தை வாயெல்லாம் பல்லாக வரவேற்றார் பாலுதாத்தா பேச்சுக்குரல் கேட்டு வந்த மாலுபாட்டியும் வாங்கோ என உள்ளார்ந்த சந்தோஷத்துடன் அழைக்க என்னம்மா எப்படி இருக்கே என நலம் விசாரித்தார் சங்கரலிங்கம்
நல்லா இருக்கேன் அண்ணா உங்க வீட்டுல மன்னி பசங்க எல்லாரும் சௌக்கியமா ? என நலம் விசாரித்தார் கூடவே அண்ணா இப்போதான் உங்களை நினைச்சேன் மன்னி சொல்லிகொடுத்த மோருக்கு போடற பொடி அரைச்சேன் சாயங்காலம் வெயில் தாழ எடுத்துண்டு வரணும்னு இருந்தேன் கொஞ்சமிருங்கோ இதோ உடனே எடுத்துண்டு வரேன் என சொல்ல
இருக்கட்டும்மா நான் இப்படியே வெளில போயிட்டு வெளி வேலையெல்லாம் முடிச்சுட்டு ராத்திரி தான் வீட்டுக்கு வருவேன் நீயே அவளை சாயங்காலம் ஆத்துல போய் பார்த்து கொடுத்துடு உன்னை பார்த்தும் ரொம்பநாளா உன்னை பாக்கணுமினு நச்சிண்டு இருக்கா முழங்கால்வலி இல்லனா அவளே இன்னேரம் வந்திருப்பா என பதில் சொன்னார்
அதுக்கென்ன அண்ணா கட்டாயமா செய்யறேன் -மாலு பாட்டி
சரி சரி உள்ள போய் வந்தவனுக்கு குடிக்க எதாவது எடுத்துண்டு வாடி மசமச நு நிக்காதே என பாலுதாத்தா தன் பால்ய நண்பன் முன் கெத்து காட்டி அன்றைய இன்னிங்சை துவக்கி வைக்க
முறைத்து கொண்டே உள்ளே போன மாலு பாட்டியோ மணக்கமணக்க பொடி போட்ட மோருடன் வந்தார் மோரின் வாசனையிலும் பொடியின் சுவையிலும் மயங்கிய பாலுதாத்தா இன்னமும் ஒரு சொம்பு கொண்டுவா கிழவி என வாய் விட தன் பால்ய நண்பன் முன் கிழவி என அழைத்ததால் கடும் கோபம் கொண்ட மாலுபாட்டி நாகரீகம் கருதி கோபத்தை காட்டாது உள்ளே சென்றார்
மாலு பாட்டி உள்ளே போனபிறகு சங்கரலிங்கத்தை நோக்கி பாச பறவையை பறக்கவிட்ட பாலுதாத்தா சொல்லு சங்கு என்ன விஷயம் ? விஷயம் எதுவுமில்லாம இந்த பொட்டபொடைக்கிற வெயிலில என்ன தேடி வரமாட்டியே என கேட்க
ஒண்ணுமில்லடா பாலு என் பேத்தி படிக்கிற ஸ்கூலுல கோடையை வெல்வோம் ற தலைப்புல ஒவ்வொரு தாத்தாவும் கட்டுரை எழுதி தரணும்னு சொல்லி இருக்காங்க அதுவும் இப்பொதான் தகவல் வந்தது இன்னும் 1 மணி நேரத்துல நீங்க ரெடி பண்ணுங்க தாத்தானுட்டு அவ விளையாட போயிட்டா பையனும் மருமகளும் அவங்கவங்க வேலையில பிசி
நீதான் கட்டுரை எழுதறதுல எக்ஸ்பர்ட் ஆச்சே அதான் உங்கிட்ட உதவி கேக்கலாமுனு வந்தேன் என சொல்லி முடிப்பறக்குள் அதை கேட்டுக்கொண்டு வந்த மாலு பாட்டி அடக்கமாட்டாமல் சிரித்து விட சிரிப்பின் அர்த்தம் புரியாமல் இருவரும் முழிக்க ஒன்றும் இல்லை அண்ணா நீங்க பேசினத கேக்குறப்ப எனக்கு சிரிப்ப அடக்க முடியல அண்ணா என சொல்ல..
என்னாஆச்சுமா என்ன கூத்தடிச்சான் இவன் என ஆர்வமாக கேட்க என்னங்க சொல்லிடவா என தாத்தாவிடம் அனுமதிகேட்டார் பாட்டி நீ ஒண்ணும் சொல்லவேண்டாம் நானே சொல்லறேன் என சொல்லி விட்டு அது ஒண்ணுமில்ல டா சங்கு ஒருநாள் நானும் இவளும் சண்டை போடும்போது அவங்க அம்மா வீட்டுல சீதனமா குடுத்த தவலை உடைஞ்சு போச்சு ஒடனே இவளும் இவங்க அம்மாவுக்கு லட்டர் போடச் சொன்னா அதுல தவலை உடைஞ்சு போச்சு அதுனால உன் மாப்பிள்ளை கோவமா இருக்கார்னு எழுத சொன்னா நான் அதை எழுதும் போது உன் மாப்பிள்ளை கோவத்தினால என் தலை உடைஞ்சு போச்சுனு எழுதிட்டேன் அப்போ நானும் இவளும் வேலைக்காக இந்த ஊருக்கு தனிகுடித்தனமா வந்த புதுசு வேறயா இந்த லட்டரை பாத்த உடனே இவங்கம்மா எங்கவீட்டுல பஞ்சாயத்த வைக்க எங்க ரெண்டுபேர் குடும்பமும் சொந்த பந்ததோட படை திரண்டு வந்துட்டாங்க என்ன ஏதுனு பாக்க வந்தவங்க விஷயம் தெரிஞ்ச உடனே என்னை கேவலமா பார்த்த பார்வையில என் மானமே போச்சுடா என சொல்ல அது மட்டுமா பண்ணினார் துவரம் பருப்புனு மளிகை கடை லிஸ்டில எழுத சொன்னா துரம் பருப்பு நு எழுதினார் அண்ணா என நக்கலடிக்க இது எப்போமா என சங்கரலிங்கம் கேட்க இப்போ சமீபமாதான் இது நடந்தது என பாட்டி சொல்ல அவளோதான் பாலு தாத்தா பொங்கி எழுந்துவிட்டார்
என்னடி ஆளு கிடைச்சா நக்கலா பண்ணுறே இப்போ பார் இந்த பாலுவோட திறமைய ஒரு மணி நேரத்தில நீங்க நினைச்சத விட அருமையா ஒரு கட்டுரையோட வந்து நிக்கல என் பேர மாத்திக்கறேன் என சவால் விட்டுவிட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டார் மிக சரியாக ஒருமணி நேரத்துக்கு பின் பாலு தாத்தா எழுதிவந்த கட்டுரைய கீழே குடுத்திருக்கேன் படிச்சு பாத்துட்டு கமண்ட்பாக்ஸ் ல உங்க கருத்த சொல்லுங்க
கோடையை வெல்வோம்!
வீட்டிலிருந்தால்கூட வெயிலின் வெம்மை வெறுப்பைத் தருகிறது. நிஜத்தில் வெயில் வெறுக்கக் கூடியதில்லை. அது வாரி வழங்கும் நன்மைகள் ஏராளம்.
மழையைப் போல வெயிலும் இயற்கையின் கொடையே. அதை புரிந்து கொள்ளாமல் நாம்தான் குடைக்குள்ளேயே குடிகொண்டிருக்கிறோம். உச்சி வெயில் உடம்புக்கு ஆகாதுதான். ஆனாலும் உச்சி வெயிலாலும் நல்ல பலன் உண்டு.
ஓடியாடி உழைத்த களைப்புக்கு ஓய்வெடுக்கலாம் என்று கீழே சாய்ந்தால், படுக்கையிலும் பாடாய்ப்படுத்தும் கொசுக்கள், வறுத்தெடுக்கும் இந்த வெயிலால் கொஞ்சம் மட்டுப்பட்டிருப்பதை நீங்கள் உணர முடியும். ஆம், என்ன செய்தும் தடுக்க முடியாத கொசுக்கடியை முற்றிலும் தடுத்துவிடுகிறது கொளுத்தும் வெயில். கொசுக்களின் குஞ்சுகள் திறந்த வெளி நீர் நிலையில் பெருகாமல் தடுக்கிறது வெயில். கொசுக்கள் மட்டுமல்ல கொட்டும் கழிவுகளில் வளரும் கிருமிகள், காடுகளில் இறந்த உயிர்களின் உடல்களில் வளரும் நுண்ணுயிர்கள், நீர்நிலைகளில் வளர்ச்சி கண்ட கேடுயிர்கள் போன்றவற்றையும் வெயில் கட்டுப்படுத்துகிறது.
பகல் பத்து மணிக்கு முந்திய வெயிலும், மாலை இளங்கதிரவனும் மக்களுக்கு நன்மையே செய்கிறது. மதிய வெயில் கூட நாம் வெளியில் உலவாமல் வீட்டிற்குள் ஒன்றாய் கூட ஒத்தாசை செய்கிறது. அந்த நேரத்திலாவது அனைவரும் ஒன்று கூடி முகம் மலர பேசி உறவை வளர்க்க வாய்ப்பு தருகிறது. சொக்கட்டான், பாம்புக்கட்டம், பல்லாங்குழி, கேரம் எல்லாம் வெயிலில் உறவு வளர்க்கும் விளையாட்டுகளாகும்.
காலை கதிரொளி பச்சிளங் குழந்தைக்கு மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ‘வைட்டமின்-டி’யை வாரி வழங்குகிறது. இந்த வகை வைட்டமின், உணவுப் பொருட்களின் வழியே அரிதாகத்தான் கிடைக்கிறது. அதை 10 நிமிட வெயிலே உடலுக்குப் போதுமான அளவுக்குத் தந்துவிடுகிறது.
‘வைட்டமின்-டி’தான், உடல் கால்சியத்தை கிரகிக்க துணை புரிகிறது. கால்சியம் கிடைத்தால்தான் எலும்பு பலம் பெறும். மனநிலையை சீராக்கும் செரடோனின் திரவமும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ரசாயனப் பொருளும் உடலில் வெயில் படுவதாலேயே சுரக்கின்றன. வெயிலால் உரம் பெற்ற தேகம் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும். அதனால்தான் மருத்துவர்கள் மாலை வெயிலில் நடைபயணம் செய்யச் சொல்கிறார்கள். மூளை முடக்கம் அடைந்தவர்களைக்கூட வெயிலில் பயணம் செய்ய வைப்பது ஒரு சிகிச்சை முறையே.
கொளுத்தும் கோடை வெயில்கூட நமது உடலின் வேலைப் பளுவை வெகுவாகக் குறைக்கிறது. நமது சிறுநீரகம், இடைவிடாமல் உடலில் உள்ள கழிவுகளை சிறுகச் சிறுக வடிகட்டி வெளியேற்றுகிறது ஆனால் கொளுத்தும் வெயிலோ, சிறுநீரகத்துக்கு சற்று ஓய்வு தருவதுடன் அதிகமான உடல் கழிவுகளை வியர்வையாக வெளியேற்றிவிடுகிறது. இப்படி வெளியேற்றும் கழிவில் உடல் உப்புச்சத்தை கொஞ்சம் இழந்துவிடுவதால்தான் நமக்கு தாகம் எடுக்கிறது. அதற்கும் இயற்கையே கொடையாக நுங்கு, பதநீர், இளநீர், தர்பூசணி, எலுமிச்சை போன்றவற்றை தந்துள்ளது. இவற்றைப் பருகினால் கோடை வெயில் உடலை வறுத்தாது. வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் உச்சந்தலையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொண்டால் சூடு உடலில் தாவாது. தொப்பி, குடையைவிட இது சூடு தணிக்கும்.
வெயில் நம்மை வாட்டி வதைப்பதைப் போலவே பறவைகள், விலங்குகள் போன்றவற்றையும் பாதிக்கும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். பறவைகளுக்கு வீட்டின் கூரை மீது தண்ணீர் வைக்கலாம். விலங்குகளுக்கு வீட்டின் அருகில் நீர் அருந்த வழி செய்யலாம். பாதசாரிகளுக்கு பயண வழியில் தாகம் தணிக்கும் நீர்ப்பந்தல் அமைப்பது மனிதநேயமாகும்.
வெயிலை வெறுப்பதைவிட பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம். போதுமான மழையும், வாழத் தேவையான வெயிலும் கொண்ட அருமையான வாழிடம் கிடைக்க பெற்ற நாம் மழை நீரை சேமிக்க மறந்ததைப் போலவே வெயிலையும் பயன்படுத்திக் கொள்ளப் பழகவில்லை.
உலக நாடுகள் பலவும் வெயிலை பெருவளமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. நீர் மின்சாரம், காற்று மின்சாரம் போன்றவற்றில் மாதக்கணக்கில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, ஒருநாள் வெயிலிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வெயில் நேரடியாக விழாத நேரத்திலும் சூரிய கதிர்வீச்சை கிரகிக்கும் சோலார் சக்தி கருவிகளை அவர்கள் வடிவமைப்பதுடன், முழுமையான சூரிய ஆற்றலையும் மின்னாற்றலாக மாற்றிப் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சியை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.
இந்திய அளவில் சூரியசக்தி ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்வதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி மின்நிலையம் தமிழகத்தில் நிறுவப்பட்டு வருகிறது என்பதும் பெருமையே. ஆனாலும் நம் தேவையெல்லாம் தீர்க்கும் அளவுக்கு நாம் சூரிய ஆற்றலை பயன்படுத்தவில்லை என்பதும் உண்மையே. சூரிய சக்தி மின்திட்டத்தை வீட்டில் செயல் படுத்த அரசு மானியம் வழங்குகிறது. அதிக மின்கட்டணம் செலுத்துவதாக எண்ணுபவர்கள். ஓராண்டு மின்கட்டண செலவில் சூரியசக்தி திட்டத்தை செயல்படுத்திவிடலாம். பின்னர் மின்கட்டணம் என்ற பேச்சுக்கே இடமிருக் காது. மின்விற்பனையாளர் என்ற கவுரவம் உங்களுக்கு கிடைக்கலாம்.
இதற்கு அதிகம் செலவு ஆகும் என நினைப்பவர்கள் சூரியசக்தி அடுப்பு, சூரியசக்தி வாட்டர் ஹீட்டர் போன்ற சின்னச்சின்ன சாதனங்களை வாங்கிப் பயன்படுத்தலாம். இதனால் கியாஸ் செலவு மிச்சப்படும். தமிழகத்தில் மழைபெய்யும் சிறிது காலம் தவிர பெரும்பாலான மாதங்களுக்கு சூரியசக்தி குறைவின்றி கிடைக்கிறது என்பதை கவனத்தில் கொண்டால் நாம் இந்த மாற்றத்தை செயல்படுத்தலாம்.
வெயில் வருத்துகிறது என்றால் அது நாம் செய்த வினையின் எதிர்விளைவுதான் என்பதையும் மறக்காமல் ஒப்புக் கொள்ள வேண்டும். காடுகளை அழித்து கம்பெனிகளாக்கிக் கொள்கிறோம். விவசாய நிலங்களை அழித்து வீடுகளாக்கிக் கொள்கிறோம். மரத்தையும் காசாக்க நினைக்கிறோம். மரம் இருந்த இடத்தில் கூடுதலாக இரண்டு அறைகள் எடுத்துவிட்டால் வாடகை கிடைக்கும் என ஆசைப்படுகிறோம். இவற்றின் விளைவாக வெயிலை அறுவடை செய்கிறோம்.
ஆனால் நாம் வசிக்கும் வீடான பூமியின் கூரையாக இருக்கும் ஓசோனில் ஓட்டை விழ காரணமாகிவிட்டோம் என்பதை மறக்கிறோம். வெயிலின் வெம்மை தெரியாமல் இருக்க மரங்கள் நிறைந்த மலைப்பிரதேசத்திற்கு உல்லாச சுற்றுலா சென்றால் மட்டும்போதாது. நாமிருக்கும் இடத்திலும் இயற்கை குளுமையைத் தரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று மனதில் சபதம் எடுக்க வேண்டும். நீங்கள் இன்று எடுக்கும் சபதம்தான் நாளை நமது சந்ததிகளை இன்னும் கொடூரமான கோடையிலிருந்து காப்பாற்றும் என்பதை நினைவு கொள்வோம். மரம் நட்டு பராமரிப்போம்.
அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்டத் தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி?
வியர்க்குரு
மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். கோடையில் வளிமண்டல வெப்பநிலை சர்வசாதாரணமாக 40லிருந்து 45 டிகிரியைத் தொடுகிறது. அப்போது உடலைக் குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும்.
இதனால், வியர்க்குரு வரும். வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. வியர்க்குருவில் காலமின் லோஷனைப் பூசினால் அரிப்பு குறையும்.
வேனல் கட்டி
தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ள, அந்த இடம் வீங்கிப் புண்ணாகிவிடும். இதுதான் வேனல் கட்டி. இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சுக் களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.
பூஞ்சை தொற்று
உடலில், ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும். படையைக் குணப்படுத்தும் களிம்பு அல்லது பவுடரைத் தடவிவர இது குணமாகும். உள்ளாடைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் பூஞ்சை படை வருவது தடுக்கப்படும்.
நீர்க்கடுப்பு
கோடையில் சிறுநீர்க் கடுப்பு அதிகத் தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கியக் காரணம். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால், சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர்ப் பாதையில் படிகங்களாகப் படிந்துவிடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. நிறையத் தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.
தொற்றுநோய்கள்
வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய்க்கிருமிகள் அபரிமிதமாகப் பெருகும். இந்த உணவுகளை உண்பதால் பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும். ஆகையால், வெயில் காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்திவிடுவது நல்லது. உணவு மீது ஈக்கள் மொய்க்காமல் மூடிப் பாதுகாக்க வேண்டியதும் முக்கியம். தண்ணீரைக் கொதிக்கக் காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.
வெப்பத் தளர்ச்சி
வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, உடலின் வெப்பம் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும்; களைப்பு உண்டாகும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது.
வெப்பமயக்கம்
நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்கிறவர்கள் மற்றும் சாலையில் நடந்து செல்கிறவர்கள், திடீரென மயக்கம் அடைவதைப் பார்த்திருப்பீர்கள். இது ‘வெப்ப மயக்க'த்தின் விளைவு. இதற்குக் காரணம், வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள ரத்தக்குழாய்கள் மிக அதிகமாக விரிவடைந்து, இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழி வகுக்கிறது; இதனால், இதயத்துக்கு ரத்தம் வருவது குறைந்து, ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது; மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதில்லை; இவற்றின் விளைவாக மயக்கம் வருகிறது.
வெப்பமயக்கத்துக்கு முதலுதவி
மயக்கம் ஏற்பட்டவரை குளிர்ச்சியான இடத்துக்குக் கொண்டு செல்லுங்கள். மின்விசிறிக்குக் கீழே படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும் படும்படி செய்யுங்கள். தலைக்குத் தலையணை வேண்டாம். பாதங்களை உயரமாகத் தூக்கிவைக்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடல் முழுவதும் ஒற்றியெடுத்துத் துடைக்கவும். இது மட்டும் போதாது. அவருக்குக் குளூக்கோஸ் மற்றும் சலைன் செலுத்த வேண்டியதும் முக்கியம். உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
தண்ணீர்! தண்ணீர்!
சென்னை போன்ற நகரங்களில் காற்றின் ஈரப்பதம் (Humidity) மிக அதிகமாக உள்ளது. உடலில் ஏற்படும் வியர்வைச் சுரப்பு உடனடியாக ஆவியாகாது. எனவே, உடலின் வெப்பம் குறையாமல் இருக்கும். அதே நேரத்தில், வியர்வை சுரப்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அளவில்லாமல் வெளியேறி, அதிக நீரிழப்பு ஏற்படுகிறது.
இதனால், உடல் தளர்ச்சி அடைகிறது; களைப்பு உண்டாகிறது. இந்த நிலைமையைத் தவிர்க்க, மணிக்கொரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தால்கூட, தாகம் எடுக்கவில்லை என்றாலும், கோடைக் காலத்தில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.
குளிர் பானங்கள் வேண்டாம்!
வெயில் காலத்தில் காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள். வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்கள் மற்றும் குளிர் பானங்களைக் குடிக்க வேண்டாம். காரணம், குளிர் பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தக் குழாய்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது.
இதற்குப் பதிலாக, இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பத்தை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், உடலில் நீரிழிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைகின்றன. எலுமிச்சைப் பழச் சாற்றில் சமையல் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற உதவும்.
பழங்களை அதிகப்படுத்துங்கள்
தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடுங்கள். இவற்றில் பொட்டாசியம் தாது அதிகமுள்ளது. கோடை வெப்பத்தால் பொட்டாசியம் வியர்வையுடன் வெளியேறிவிடும். இதனால் உடல் களைப்படைந்து, தசைகள் இழுத்துக்கொள்ளும். அப்போது, இப்பழங்களில் உள்ள பொட்டாசியம் அந்த இழப்பை ஈடுகட்டும். கோடையில் வெப்பத் தளர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கப் பழங்களைச் சாப்பிடுவதுதான் சிறந்த வழி.
எண்ணெய் தவிர்!
கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட, கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்ற சிற்றுண்டிகள் தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால், இவற்றையும் தவிர்ப்பதே நல்லது. அதேபோல், சூடான, காரமான, மசாலா கலந்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
சிறந்த கோடை உணவுகள்
இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர்சாதம், கம்பங்கூழ், அகத்திக்கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளிக் கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவுகள்.
மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்ப்பூசணி சூப், தக்காளி சூப், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். கேப்பைக் கூழில் தயிர் விட்டுச் சாப்பிட்டால், உடலின் வெப்பம் உடனே தணியும். காரணம், கேப்பைக் கூழுக்கும், தயிருக்கும் உடலின் வெப்பத்தை உறிஞ்சக்கூடிய தன்மையுண்டு.
ஆடையில் கவனம்
உடைகளைப் பொறுத்தவரை கோடைக்கு உகந்தது பருத்தி ஆடைகளே. அவற்றில்கூட இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம். கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்கள் வெப்பத்தைக் கிரகிக்கும். ஆகவே, இத்தன்மையுள்ள ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் செயற்கை இழைகளால் ஆன ஆடைகளையும் தவிர்க்க வேண்டும். வெந்நிற ஆடைகள் கோடைக்கு உகந்தவை. சூரிய ஒளி ஒவ்வாமை உள்ளவர்கள் ‘சன் ஸ்கிரீன்' களிம்பை முகத்திலும் கைகால்களிலும் பூசிக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment