" அப்பா நான் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டேன்.. ட்ரைன்க்கு டைம் ஆச்சு.. நான் கிளம்புறேன் பா"
" தியாமா நீ தனியா சமாளிச்சுப்பியா?.. "
" நான் எங்கேப்பா தனியா இருக்க போறேன்.. என் ஸ்கூல் ப்ரெண்ட் கீர்த்தி சென்னையில தானே வீடு எடுத்து தங்கி இருக்கா... அவள் வீட்டை ஷேர் பண்ணிக்கப் போறேன்.."
" இல்லை டா.. இருந்தாலும் கேர்ல்ஸ் ஹாஸ்டல்ல இருந்தா இன்னும் கொஞ்சம் வசதியா இருக்கும்ல.. உனக்கு வேற சமைக்க தெரியாது.. அப்பாவும் சென்னை வரைக்கும் வரேனு சொன்னா வேணாம்னு சொல்ற.."
" பரவாயில்ல அப்பா.. கீர்த்திக்கு தான் சமைக்க தெரியும்ல நாங்க பார்த்துப்போம்.. ட்ரைன் ஏறுனா லாஸ்ட் ஸ்டேஷன் சென்னை.. பத்திரமா போகப் போறேன்... அதுக்கு எதுக்கு நீங்களும் அலைச்சல் படணும்...அட ஆமாம் அப்பா நீங்க என்னோட சம்பளம் க்ரெடிட் ஆகுறதுக்கு உங்க அக்கவுண்ட் கொடுத்ததுனாலே நீங்க தான் எனக்கு இனி செலவுக்கு பணம் தரணும்.. நான் அவசரத்துக்கு கீர்த்தி கிட்டே இருந்து கூட வாங்கிப்பேன்.. ரூம் ரெண்ட் அப்புறம் கொஞ்சம் செலவுக்கு மட்டும் மாசா மாசம் என் அக்கவுண்ட்ல போட்டுடுங்கப்பா"
" சரி டா கண்ணா.. ஒன்னாந்தேதி உன் அக்கவுண்ட்ல ரெண்ட்க்கும் உன் செலவுக்கும் பணம் இருக்கும்.. ஆமாம் ரெண்ட் எவ்வளவுனு சொன்ன. '"
" 10,000 அப்பா"
" என்னங்க அவ்வளவு அதிகமா இருக்கு.. அவள் ஏதாவது பொய் சொல்றாளா?.. தன் செலவுக்கு வேணும்னு?"
" அம்மா போதும் நிறுத்துறீயா.. நீ தான் என் சம்பளத்தை அப்பா அக்கவுண்ட்க்கு போட சொன்னேனு எனக்கு தெரியும்.. அங்கே சென்னையிலே தீப்பெட்டி வீட்டுக்கே 5000 கேட்பாங்க.. கீர்த்தி தங்கி இருக்கிறது கொஞ்சம் பெரிய வீடு.. அதுக்கு ரெண்ட்டும் அதிகமா தான் இருக்கும்.. எனக்கும் செலவு இருக்கும்ல.. மொத்தமா 20,000 எனக்கு அனுப்பிடுங்க.."
" ஹே என்ன டி உன் சம்பளம் 45,000 அதுல 20,000 உனக்கே கொடுக்கணும்னு சொல்ற.. அப்போ உனக்கு போட வேண்டிய நகை நட்டுக்கு என்ன பண்றதாம்?"
" அம்மா அப்படி நகை நட்டு போட்டா தான் என்னை அந்த மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிப்பானா எனக்கு அந்த கல்யாணமே வேணாம்.. ப்ளீஸ் மா இப்படி கல்யாணம்ன்ற பேருல ஒரு பொண்ணோட கனவுகளை பறிக்காதீங்க.. அவளோட சுயத்தை இழந்து அவன் புருஷனுக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும்னு பண்ணி கடைசியிலே அவளுக்கு என்ன பிடிக்கும்னே அவள் மறந்து போயிடுறா.. இதுனாலேயே எனக்கு அந்த கல்யாண கான்செப்டே பிடிக்கல.. "
" தியா என்னது அம்மா கிட்டே இப்படியா பேசுறது.. தப்பு மா"
" இல்லை அப்பா நீங்களே சொல்லுங்க.. நான் உங்கள் கிட்டே என்னைக்காவது இப்படி பேசி இருக்கனா.. நீங்க என்னோட உணர்வை மதிக்கிறீங்க.. ஆனால் இவங்க என் உணர்வை மதிக்கலனா கூட பரவாயில்லை.. ஒரு மனுஷியா கூட என்னை மதிக்க மாட்டேங்குறாங்க.. எனக்கு கோபம் வராத?"
" சரிடா விடு.. அம்மாவாலே இந்த generation gap ஆ சமாளிக்க முடியல.. அவங்களுக்கும் கஷ்டமா இருக்காதா அவங்க பழக்கப்பட்ட ஒன்னுல இருந்து மாறுறது.."
" அதே தான் பா நானும் சொல்றேன்.. எனக்கும் கஷ்டமா இருக்காதா எனக்கு பழக்கப்பட்ட ஒன்னுல இருந்து மாறுறதற்கு.. இவங்க சொல்றாங்கனு வீட்டுல ஒரு மாதிரி நடிச்சுக்கிட்டு வெளியிலே ஒரு மாதிரி நடிக்கிறது எல்லாம் என்னாலே முடியாது பா.. நான் இப்படி தான்"
" பார்த்தீங்களா எல்லாம் படிச்ச திமிரு.. அதான் எதிர்த்து பேசத் தோணுது.."
" அம்மா வேணாம்.. " என இவளும் சண்டைக்குத் தயாராக இந்த இரண்டு தலைமுறையில் எந்த தலைமுறையை சமாளிப்பது என தலையை சொறிந்துக் கொண்டார் விநாயகம்...
" தியா ட்ரைன்க்கு டைம் ஆச்சு.. அப்புறமா பேசிக்கலாம்.. இப்போ கிளம்பு டா" என அவர் அம்பை சரியாக எய்ய அதன் இலக்கில் நன்றாக மோதியது...
" ஆமாம்பா ஆமாம்.. இந்த அம்மா பண்ண டென்ஷன்ல நான் அதைக் கூட மறந்துட்டேன்.. போகும் போது கூட சிரிச்சாப்பல வழி அனுப்பி வைக்கிறாங்களானு பாரேன். நான் இல்லைனா நல்லா நிம்மதியா இருப்ப இல்லை மா.. என்னைக் கொஞ்சம் கூட மிஸ் பண்ண மாட்டே இல்லை" என சொல்லிக் கொண்டு இருந்தவள் சட்டென அன்னையை கட்டிக் கொண்டாள்..
" நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் மாமியாரே" என சொல்லி அவள் கண்ணீர் வடிக்க அன்னையின் கண்ணீரும் சேர்ந்து கொண்டது.. இந்த எலியும் பூனையும் எப்படி பிரிந்து இருக்கப் போகிறதோ என நினைத்து அந்த தந்தையும் கண் கலங்கினார்..
இப்படி எல்லாரையும் பாச மழையில் நனைத்த தன்னுடைய கண் மேகத்தை இமை மூடித் திறந்து கண்ணீரை கட்டுப்படுத்தியவள் அவர்களிடம் இருந்து விடைப் பெற்றுக் கொண்டு மாலை ஐந்து மணிக்கு சென்னையை நோக்கி செல்லும் ரயிலில் ஏறினாள் , தன் கனவுகளை சுமந்தபடி...
இங்கோ அவள் தாய் கணவனின் மார்பில் சாய்ந்துக் கொண்டு " என்னங்க இவள் பேசுறதைப் பார்த்தா பயமா இருக்கு.. எங்கே யாரையாவது கல்யாணத்தைப் பண்ணி கூட்டிட்டு வந்துடுவாளோனு" என புலம்ப அவர் தன் மனைவியின் உச்சியை கோதியபடி " மல்லிகா உனக்கு இன்னுமா டி புரியல. நம்ம பொண்ணு நெருப்புனு... அவள் கிட்டே ஒரு பையனும் நெருங்க முடியாது.. நீயே சொல்லு அவள் ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்தனாவது பையனா இருக்கானா?,, இவள் பேசுற feminism பார்த்து யாரும் அவள் கிட்டே கூட நெருங்க மாட்டாங்க.. இவளை சமாளிக்கிற அளவுக்கு இன்னும் எந்த பையனும் பொறக்கல" என அவர் அங்கே பேசிக் கொண்டு இருந்த நொடி இங்கே அவளுக்கான நாயகன் அதாவது இந்த கதையின் ஹீரோ ஒரு பெண்ணை கழுவி கழுவி ஊத்திக் கொண்டு இருந்தான்..
" ஹே நான் என்ன கேட்டேன்.. நீ எல்லாம் பைக் ஓட்டுவியானு தானே கேட்டேன்.. அதுக்கு நல்லா வாய் கிழிய பேசுனல.. ஏன் பொம்பளைங்கனா குறைஞ்சவங்களா? நாங்க வண்டி ஓட்டுனா என்ன தப்புனு... காலையிலே மட்டும் நல்லா புரட்சியா பேச தெரிஞ்சது இல்லை.. .. அப்புறம் எதுக்கு எட்டு எல்லாம் போட்டு காமிச்சு லைசென்ஸ் வாங்க லைன்ல நிக்கும் போது பொண்ணுங்களாம் வந்து முதல்லே வாங்குங்கனு சொன்னவுடனேயே ஈஈஈனு பல்லை இளிச்சுக்கிட்டு போன.. நான் பொண்ணு ஆம்பளைக்கு எந்த விதத்திலேயும் குறைஞ்சவ இல்லை.. என்னாலே லைன்ல நின்னு வாங்க முடியும்னு சொல்ல வேண்டியது தானே... எதுக்கு இப்படி சொசைட்டி கிட்டே இருந்து எக்ஸ்ட்ரா கேர் எதிர்பார்க்குறீங்க.. நீ காலையிலே ஹீரோயின் மாதிரி டயலாக் பேசும் போது ஆனு ஆச்சர்யமா பார்த்தேன்... ஆனால் ஈவினிங் பண்ணதை பார்க்கும் போது கோபத்தோட சேர்த்து சிரிப்பும் தான் வருது .. . feminism னா என்னனு தெரிஞ்சுட்டு அப்புறமா அதைப் பத்தி பேசணும் சரியா... நான் உனக்கு சில ஃபெமினசம் பத்தின புக்ஸ் சென்ட் பண்றேன் அதைப் பார்த்து கத்துக்கிட்டு கொஞ்சம் நோட்ஸ் எடுத்துக்கோ அப்புறம் feminism பத்தி பேசலாம்... பாய்.. " என நன்றாக ஒரு பெண்ணை காய்ச்சி எடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்.... ( லைனில் பெண்களும் நிற்க வேண்டும் என்ற இந்த சின்ன நிகழ்வு மட்டும் யூட் டியூப்பில் நான் பார்த்த வீடியோடிவில் இருந்து எழுதியது... இந்த கருத்து நன்றாக இருந்ததால் உங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன்... ஆதலால் இந்த ஒரு நிகழ்வு மட்டும் என் எண்ணத்தில் உதித்தது அல்ல.. பார்த்ததில் பிடித்து இருந்ததால் எழுதியது... கதையின் மீதி நிகழ்வுகளில் எல்லாம் என் கற்பனையில் உதித்த எழுத்துக்கள் மட்டுமே இருக்கும்... இந்த ஒரு நிகழ்வு மட்டும் அதற்கு விதி விலக்கு )
பெண்ணியத்தின் அர்த்தமே
பெண்மைக்குரிய இயல்புகளை
உடையவள் என்பதாகும்..
ஆனால் அதை அர்த்தம் அற்றது
போலாக்க நான் ஆணிற்க்கு
எந்த விதத்திலும் குறைந்தவள்
இல்லை என கங்கணம் கட்டிக்
கொண்டு அலைபவர்களுக்கு
புரிவதில்லை, நாம் பெண்ணாக
பிறந்ததே பெண்ணாக
இருக்க தான் என்று. ஆணை போல்
நாமும் ஒரு பாலினம் என்பதைப்
புரியாமல் நம் பாலினத்தை ஆண்
பாலினத்தோடு கலக்க நினைப்பவர்களுக்கு தெரிவதில்லை
பெண் என்து பாலின சொல்லே
தவிர அவமானச் சொல் இல்லையென..
காலை ஐந்து மணிக்கு ரயில் சென்னையை வந்து சேர அதனுடன் இவளும் வந்து சேர்ந்தாள்.. அந்த அதிகாலையிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்த அந்த ரயில் நிலையத்தை பிரமிப்புடன் பார்த்தபடி இறங்கி நடந்து வந்தாள் தியா...
அடையார் செல்லும் அந்த கூட்ட நெரிசல் மிக்க பேருந்தில் ஏறியவளுக்கு சிறிது நேரத்திலேயே அமர இருக்கை கிடைத்துவிட்டது.. ஒவ்வொரு திருப்பத்திற்கும் பஸ் வடத்துருவம் போய் தென் துருவம் வந்தது...
அது தான் சாக்கு என சில ஆண்கள் உரசவும் செய்தார்கள்.. இதை எல்லாம் உட்கார்ந்து கொண்டு கவனித்த தியா தான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் எழுந்துக் கொள்ள முற்பட்டாள்.. அப்போது ஒருவன் வேண்டுமென்றே இவளை உரசினான்.. அவ்வளவு தான் பத்ரகாளியாக மாறிய தியா " ஹவ் டேர் யூ.. எப்படி என் மேலே கை வைப்ப " என்று கோபமாகக் கத்தினாள்...
அதைக் கேட்டு சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் கூடிவிட முதலில் அவனை அடிப்பதற்காக ஒரு நெடிய மனிதன் கையைத் தூக்கினான் அதைப் பார்த்து மற்றவர்களும் அவனை அடிக்க தயாரானார்கள்.... அவர்களின் முன்பு வேண்டாம் என சொல்லி கை நீட்டி தடுத்தாள் தியா...
" நீங்க யாரும் அடிக்க வேணாம்.. என் கிட்டேயே கை இருக்கு... நான் பார்த்துக்குறேன்... எந்த பொண்ணு மேலே உரசணும்னு நினைச்சானோ அந்த பொண்ணோட கையே அவன் மூஞ்சுல உரசட்டும்.. " என்றவள் அவனைப் புரட்டிப் போட்டு எடுத்தாள்..
சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அவளை ஆவென்றுப் பார்க்க தியா நேராக பக்கத்தில் இருந்த இன்னொரு பெண்ணிடம் வந்தாள்..
"என் கிட்டே கை இருக்கு.. உன் கிட்டேயும் கை இருக்கும்னு நினைக்கிறேன்.. உன் மேலே கை வைச்சவனைப் பார்த்து பயந்து இன்னும் சும்மா அமைதியா இருக்க போறீயா.. இல்லை புரட்டி எடுக்க போறீயா " என அவளைப் பார்த்து கேட்க அது வரை குனிந்து இருந்த அவளது தலை நிமிர்ந்து பக்கத்தில் இருந்த ஒருவனைப் போட்டு அடித்தாள் அந்த பெண்.. அவள் அடித்தது யாரை என்று கேட்கிறீர்களா அநியாயத்தை கண்டு முதலில் பொங்கி எழுந்தானே அந்த நெடிய மனிதனை தான்..
அந்த பெண்ணின் கண்ணத்தை தட்டி " தட்ஸ் மை கேர்ள்.. நமக்கு ஏதாவது அநியாயம் நடந்தா நம்ம தான் தட்டி கேட்கணும்.. யாரையும் எதிர்பார்க்கக்கூடாது.. ஓகே" என்றவள் பையை எடுத்துக் கொண்டு நடக்க பேருந்தில் இருந்த மொத்த கூட்டமே விலகி அவளுக்கு வழிவிட்டது..
கோபமாகப் பேருந்தில் இருந்து இறங்கியவள் பக்கத்தில் இருந்த பூங்காவைக் கண்டவுடன் அதுவரை இருத்த கோபம் மறைந்து முகத்தில் ஒரு புன்னகை அரும்ப சிரித்தபடி அந்த பூங்காவைக் கடந்து சென்றாள்...
பெண்ணின் பலவீனம்
உடல் மட்டுமே
ஆணின் பலம் சமூகம்
அவன் பக்கம் இருப்பதே...
No comments:
Post a Comment