தெய்வத்தை தேடி சென்றேன்
தாயிடம் கண்டு நின்றேன்
தாயை இழந்த போதோ
தனிமை துயர் கொண்டேன்
தெய்வம் தந்த வரமென
நீ கிடைத்த நேரத்தில்
என் தாயெனவே உன்னை கண்டேன்
மகளே நீ வாழியவே
நள்ளிரவு நேரம் எதிர் பாராது கொட்டி தீர்க்கும் மழையால் ஊரே மயான அமைதியில் இருந்தது. மழையின் தாக்கத்தால் பாஸ்கர் காய்ச்சலில் அழுது தீர்த்தான். அவனை சமாதான படுத்தி உறங்க வைத்து விட்டு குழந்தை பிறக்க இன்னமும் கொஞ்ச நாட்கள் ஆகுமென மருத்துவர்கள் சொன்னதால், நெருக்கமான உறவில் நேர்ந்த ஒரு துக்க நிகழ்வுக்காக வெளியூர் சென்றிந்த தனது கணவனும் அவர் தம்பியும் ஒழுங்காய் ஊர் திரும்ப வேண்டியது குறித்த கவலையோடு உறங்க சென்றார் பார்வதி.
மழை பெய்வதும் மகவு பிறப்பதும் மகேசன் செயல் என்பது ஆன்றோர் வாக்கு அதற்கேற்ப்ப நடுநிசி நேரத்தில் பிரசவ வலி கண்டு துடிதுடித்தாள் மாலதி.
செய்வதறியாது பார்வதி திகைத்தது ஒரு சில கணங்களே... பின்னர் இயல்பான தைரியத்துடன் வீட்டு வேலை ஆட்களின் உதவியுடன் மாலதியை மருத்துவ மனையில் அனுமதித்து விட்டார். பாஸ்கரையும் தன்னுடன் வைத்து கொண்டார்.
கணவருக்கும் மைத்துனர்க்கும் தகவல் சொல்லிவிட்டு அவர்களின் வருகைக்காகவும், மாலதிக்கு சுகப்பிரசவம் நடக்க வேண்டியும் இறைவனை பிரார்த்தித்தபடி மருத்துவமனை வராண்டாவிலேயே இருந்தார் அந்த மாதரசி.
பொழுது விடியும் வேளை பூக்குவியலென பிறப்பெடுத்தாள் லக்ஷ்மி... செய்தி கேட்டு பதறி அலையகுலைய ஓடி வந்த ஈஸ்வரனுக்கும் நாரயணனுக்கும் மகள் பிறந்த செய்தி மகிழ்ச்சியை தந்தது.
மனைவி அபாய கட்டத்தை தாண்டும் வரை உயிரை விழியில் தேக்கி மருத்துவ மனையிலேயே காத்திருந்தார் நாரயணன்.
ஈஸ்வரனுக்கோ தங்கள் மகளின் உருவில் தங்களை பெற்ற அன்னையை கண்ட மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை!
அபாயக்கட்டம் தாண்டி கண் விழித்த மாலதி கண்டது, கலைந்த தலையுடன் கவலைதோய்ந்த முகத்துடனும் கண்களில் தவிப்போடும் கண்ணீரோடும் இருந்த கணவனைதாங்க...
அக்கணம் தன்மீது கணவர்கொண்ட காதலை அறிந்த மாலதிக்கு உலகையே வென்ற பெருமிதம் ஏற்ப்பட்டது. தன் குழந்தையை பார்க்கவேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை... ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்த அந்த மோன நிலையை கலைத்தது சிசுவின் அழுகுரல். ஆம்! அங்கே வந்த செவிலித்தாயின் கைகளில் பசிக்கு அழுது கொண்டிருந்தாள் லக்ஷ்மி.
No comments:
Post a Comment