ஹாய் ப்ரெண்ட்ஸ் நான் சவிதா,
கல்லூரி காலத்தில் எனக்கும் என் தோழிகளுக்கும் தோனிய தவிர வேற ஒண்ணும் தெரியாது. ஒரு துண்டு செய்தி என்றாலும் அதுதான் எங்களுக்கு அன்றைய முக்கிய விவாதப்பொருள். எங்க சென்னையில மேட்ச் நடந்தால் அன்று எங்களுக்கு கிட்டத்தட்ட திருவிழாதான். ஏன் எதற்கு என்ற காரணமின்றி தோனி மேல் அப்படி ஒரு கிரேஸ் எங்களுக்கு.
ஒரு நபருக்கு இத்தனை அடை மொழிகள் சாத்தியம் என்றால் அது நம்ம தோனிக்கு மட்டுமே பொருந்தும். தல தோனி, மிஸ்டர் கூல், கேப்டன் கூல், மஹி, கிங் மேக்கர், எங்க தல தோனி, ஃபெஸ்ட் ஃபினிஷர், என கிரிக்கெட் ரசிகர்களால் ஏகப்பட்ட செல்லப்பெயர்கள்.
ஒரு பேட்ஸ்மேனாகவும் சரி, விக்கெட் கீப்பராகவும் சரி, கேப்டனாகவும் சரி தோனி சாதித்த அளவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு, அவனுக்கு நிகர் அவனே இல்லையா.... ஐசிசி தரவரிசையில் பல மாதங்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும், பல ஆண்டுகள் தொடர்ந்து டாப் டென் இடத்துக்குள்ளும் இருந்தவர் எங்க தல தோனி.
உலகிலேயே நல்ல கேப்டன் என உச்சிமுகர, தோனியைவிட பொருத்தமானவரை அடையாளம் காட்டுவது ரொம்ப கஷ்டம்ங்க. பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு இந்தியாவின் ஒரு மூலையில் ரயில்வே டிக்கெட் கலெக்டராக வேலைபார்த்த ஒரு நபர், அடுத்த பத்து ஆண்டுகளில் எப்படி உலகமே பார்த்து வியக்கும் விஸ்வரூபம் எடுத்தார் என்பதை இன்னமும் இந்த உலகம் ஆச்சர்யத்தோடுத்தான் பார்க்கிறது.
சச்சின் அவுட்டானதுமே டிவி-யை ஆஃப் பண்ணிட்டு எழுந்து போனவர்களை, ஆடாமல் அசராமல் கடைசி ஓவரின் கடைசிப் பந்து வரை அமரவைத்தவர் தோனி என்பதை யாராலும் மறுக்க முடியாது. தன் அணிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்கும் கடைசி ஓவர் வரை வெற்றி கனி மீதி நம்பிக்கை வைக்கும் வித்தையை கற்று தந்தவர் அவர்.
தோனி நினைத்திருந்தால் அவர் பேட்டிங்கில் பல சாதனைகளைச் செய்திருக்க முடியும். ஆரம்பகட்டங்களில் மூன்றாவது மற்றும் நான்காவது நிலைகளில் அவர் களமிறங்கிய போட்டிகளின் புள்ளிவிவரங்களைக் கணக்கெடுத்துப் பார்த்தால் நிச்சயம் பிரமித்து போவீர்கள். ஆனால், தனிப்பட்ட சாதனைகளை எப்போதுமே தோனி கணக்கில் எடுத்து கொண்டதில்லை. அவருக்கு அணியின் வெற்றி என்பதே பிரதானம்.
தோனி பொதுவாக யாரிடமும் அதிகம் பேச மாட்டார். ஆனால், எந்த வீரரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று தொடர்களிலும் விளையாடிய ஒரே வீரர் தோனி மட்டும்தான்.
தன் மனைவியின் பெயரால் சாக் ஷி அறக்கட்டளையை உருவாக்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறார். அவரது தற்போதைய டிரன்டிங் மனைவியின் காலில் ஷூ லேஸ் கட்டுவது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தோனிக்கு முதல் முறையல்ல. தனது மகள் ஸிவா உடன் சாப்பிடுவது, நடனம் ஆடுவது, பணிவிடைகள் செய்வது என ஏராளமான வீடியோக்கள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி உள்ளது.
எப்போதுமே அணியில் தன் இருப்பிடத்தைத் தக்கவைக்க ஏதாவதொரு வேலையை சிறப்பாகச் செய்துவிடுவார். பேட்டிங்கில் சோடைபோனால் கேப்டன்சி, கேப்டன்சியில் சோடைபோனால் பினிஷர், பினிஷிங்கில் தளர்ந்த சமயங்களில் விக்கெட் கீப்பிங் என வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி கொள்கிறார். அவர் கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகும்கூட தோனியின் இடத்தை நிரப்ப கூடியவர்களை இன்னமும் பிசிசிஐ-யால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நான் அவரது புகழை பாடுவதில் தவறேதும் இல்லை....
வாய்ப்புக்கு நன்றி...
இப்படிக்கு,
சவிதா
No comments:
Post a Comment