இரவெல்லாம் வான மகள் சிதறிச்சென்ற நீர் துளியின் விளைவால், விடிந்தும் விடியாத மங்கலான அதிகாலை நேரம் மேகங்கள் பனிக்காற்றை படர விட்ட படி சென்னை மக்கள் அனைவரையும் துயில் எழுப்ப முயன்று தோற்றிருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கதிரவனுக்கு அடுத்தபடியாக கணக்கச்சிதமாய் காலையில் எழுந்து விடும் பணியை செய்பவள் நம் நாயகி இசை. போன ஜென்மத்தில் நிச்சயமாக இந்திரன் மகளாக இருந்திருக்க கூடும் என எண்ண வைக்குமளவு பேரழகி. அலைகடலுக்கு போட்டியாக காற்றில் துள்ளும் அவளின் குழலழகில் பலபேர் மீள முடியாமல் விழுந்து மூழ்கி இருப்பார்கள். அவளது தந்த நிற பாதங்களை கட்டி கொண்டு, அங்கே வீழ்ந்து கிடப்பதையே வரம் என நினைக்க கூடிய மானிடர்கள் அநேகம் பேர் இருக்க கூடும். செதுக்கிவைத்த சிற்ப சிலையென தேகம் கொண்டவளின், முக வடிவிற்கு மட்டும் பிரம்மன் தனி நேரம் ஒதுக்கி செய்திருப்பான் போல. கருநிற வான வில்லென வளைந்த புருவங்களிரண்டும் ஒற்றை சிறிய நட்சத்திரத்தை பொட்டென பேர் வைத்து நடுவில் சூடி கொண்டிருக்க, அந்த நீல விழியும், நேர்பட நீண்ட நாசியும், ஆரஞ்ச் நிற அதரங்களும் அவளை கடந்து போக முயலும் எந்த ஆண் மகனையும் சில நிமிடங்கள் நின்று பார்க்க வைத்திருக்கும்.
பூந்தமல்லியில் ஒரு தனியார் பள்ளியில் சொற்ப வருமானத்திற்கு ஆசிரியையாக பணியாற்றுகிறாள். அவள் தங்கி இருப்பது கொஞ்சம் ஒதுக்குபுறத்தில் பதினைந்து வீடுகள் கொண்ட ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு, ஐந்தாம் தளத்தில் இருக்கும் ஒற்றை படுக்கை கொண்ட சிறிய வீட்டில் தன்னந்தனியாக இரண்டு வருடங்களாய் வசித்து வருகிறாள். ஜன்னலின் வழியே குளிர் காற்று மேனியை தீண்டவும் தன் உறக்கம் கலைந்து நீண்ட நெடிய கொட்டாவி விட்டபடி, உடல் முழுவதையும் முறித்துவிட்டு எழுந்தமர்ந்தாள் இசை. காலைக்கடன்களை முடித்த பின் தனக்கான காபியை கலந்து கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து துணி துவைக்கும் கல்லின் மேல் ஏறி அமர்ந்தாள். காபியின் சுவை நாவை தொட்டவுடன், அவள் மூளைக்குள் சித்தார்த்தின் ஞாபகம் வந்து அனுமதி இன்றி அமர்ந்து கொண்டு அவளை அழைக்கழித்தது. சித்தார்த் சராசரி ஆண்களை விட சற்றே அதிக அழகானவன், பழகுவதற்கும் மிகவும் அற்புதமான அன்பான நண்பன். சின்ன பிழை கூட சொல்ல முடியாத அளவுக்கு குணத்தில் சொக்க தங்கம். அவள் பணிபுரியும் அதே பள்ளியில்தான் அவனும் உயர்நிலை ஆசிரியராக இருக்கிறான். அவள் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் அத்தனை பேரும், சித்தார்த்தை மணந்து கொள்ள போகின்ற பெண் மிக அதிர்ஷ்டசாலி என அவள் காதுபடவே பேசுவதை கேட்டிருக்கிறாள்.
'இன்னிக்கி அவன் கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது, எத்தன நாள் தான் நானும் ஓடி ஓடி ஒழியிறது? அவனுக்கும் என்னோட பதில் தெரியாம கஷ்டமா இருக்கும். இன்னிக்கி கண்டிப்பா ஏதாச்சும் ஒரு முடிவு எடுத்தே ஆகனும். என்ன பண்ணலாம்?' காபி கப் காலியான பிறகும் கூட அவளால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. மேற்கொண்டு யோசிக்க யோசிக்க தலைவலி வருவதைப்போல உணர்ந்தவள், தற்சமயம் இந்த நினைவெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பள்ளிக்கு செல்ல தயாராக தொடங்கினாள். குளித்து முடித்து வெளியேறியவள் ஸ்கூல் யூனிபார்ம் சேரியை கட்ட ஆரம்பித்ததும் தான் நினைவுக்கு வந்தது, இன்று மாலை ஆனுவல் டே பங்ஷனுக்கு கட்டிக்கொள்ள நல்ல சேலையே இல்லை என்பது. கையில் நிறைய பணமும் இல்லை, என்ன செய்வது? வேறு வழியில்லை ஆபத்பாண்டவன் ஜானகி மாமியிடம் ஒன்று இரவலாய் கேட்டு வாங்கி கட்டிகொள்வதுதான்.
ஜானகி மாமி அந்த அப்பார்ட்மென்ட் ஓனர் மனைவி. முதன் முதலில் இசை வீடு தேடி வந்த நேரம், அவள் மேல் பரிதாபப்பட்டு வீடு தர மறுத்து விட்டார். காரணம் அந்த வீட்டில் அதற்கு முன்னால் தங்கி இருந்த வடநாட்டு வாலிபன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். பேய் பயத்தில் யாருமே குடி வராமல் பத்து மாதங்களாய் பூட்டி கிடந்த அறையில், இருபது வயது கன்னிப்பெண்ணை விட ஜானகிக்கு மனம் ஒப்பவே இல்லை. அவர் எவ்வளவு சொல்லியும் கேளாமல், வாடகை குறைவாக இருப்பதையே தன் கருத்தில் கொண்டு இசை அந்த வீட்டில் குடியேற நினைத்தாள். அந்த வாலிபன் விட்டு போன பொருட்கள் அந்த அறையில் இருந்தது அவளுக்கு இன்னும் செலவை குறைக்க, இந்த வீட்டை கண்டிப்பாக பிடித்துவிடவே அவள் மனம் துடித்தது. இறுதியில் ஜானகியும் அரை மனதாக ஒத்து கொண்டார், இருந்தும் ஆரம்ப காலத்தில் தினமும் காலை வந்து ஒரு முறை இசையை பார்த்து விட்டு செல்வதை ஜானகி வழக்கமாக வைத்திருந்தார். இதோ இரண்டு ஆண்டுகளான பிறகும் சின்ன சத்தமும் இன்றி குடியிருக்கிறாள்.
மணி எட்டை நெருங்கிட ஆனுவல் டேக்கு தேவையான சில பொருட்களை ஹேன்ட் பேகில் திணித்து விட்டு, தன்வீட்டு கதவை இழுத்து பூட்டி தாழிட்டவள், பர்ஸ்ட் ப்ளோருக்கு சென்று ஜானகி மாமியின் வீட்டு கதவை தட்டினாள்.
இசை, "குட் மார்னிங் மாமி"
ஜானகி, "என்னடிம்மா, சன்டே அதுவுமா வேலைக்கு கிளம்பிட்டு இருக்க?"
"இன்னிக்கி ஈவ்னிங் ஸ்கூல் ஆனுவல் டே மாமி, காலைல ரிகர்சல் இருக்கு. அதான்"
"ஓ... ராத்திரியில பங்ஷன் முடியிரதுக்கு எவ்ளோ நேரம் ஆகுமாம்? அந்த நேரத்தில அங்க இருந்து நீ தனியா வராத, போன் பண்ணு பிக்கப்க்கு மாமாவ வர சொல்றேன்."
"சரிங்க மாமி, அப்டியே இன்னோரு உதவி..."
"தயங்காம கேளுடிம்மா"
"எனக்கு பங்கஷன்க்கு கட்டிக்க ஒரு சேரி தர்றீங்களா? மதியம் வந்து வாங்கிக்கிறேன்."
"ஒண்ணு என்னடி? ஒம்பது எடுத்து வைக்கிறேன். வந்து புடிச்சத கட்டிக்கோ. ஊரு கெட்டு கிடக்கு, பாத்து போயிட்டுவா"
சேரி பிரச்சினை ஓவர் என மனம் நிறைய, வீட்டை விட்டு வெளியேறினாள். ரிகர்சல் நேரம் முழுவதும் ஐந்து வயது குழந்தைகள் ஆடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் அவளை பாடாய் படுத்தி எடுக்க, ஓய்ந்து போய் அமர்ந்த நேரம் சித்தார்த் காபி கப்போடு வந்து நின்றான்.
"தேங்க்யூ சித், ரொம்ப டயர்டா இருந்துச்சு. கரெக்ட் டைம்ல காபி தந்திருக்கீங்க"
"இன்னிக்கி உன்கூட கொஞ்சம் பேசனும். வழக்கம்போல எஸ்கேப் ஆகிடாம மதியம் ஒருமணிக்கி ஸ்கூல் பின்னாடி இருக்குற மரத்தடியில கொஞ்சம் வெய்ட் பண்ணு."
அவன் எதைப்பற்றி பேசப்போகிறான் என்று ஏற்கனவே தெரிந்ததால், தற்சமயம் அவனை தவிர்த்து தப்பிக்க தலையாட்டி வைத்தாள். அதன்பின் வாண்டுத்தனம் செய்யும் குழந்தைகளுடனான பயிற்சியில் நேரம் ரெக்கை கட்டி பறக்க, நேரம் மதியம் ஒரு மணியை நெருங்கி இருந்தது. குழந்தைகளை அவர்களின் பெற்றோருடன் அனுப்பி விட்டு, சித்தார்த் குறிப்பிட்ட மரத்தடியில் இருந்த ஸ்டோன் பென்ச்சில் வந்து அமர்ந்தாள். அந்த மரம் சினிமா படங்களில் வருவதைப்போல தலையெல்லாம் பூக்களை சூடி, ஒற்றை கிளை மட்டும் கைக்கெட்டும் தூரத்தில் அந்த பென்ச்சுக்கு அருகே வாகாக வளர்ந்திருந்தது.
'பாவம் சித்தார்த், என்ன பத்தி எதுவுமே தெரியாம மனசுல ஆசைய வளத்துகிட்டு இருக்கானே. அவன்கிட்ட போய் என்னன்னு சொல்ல முடியும்? சிம்ப்பிளா இஷ்டமில்லன்னு சொன்னா புரிஞ்சுக்குவானா? இல்ல முழு உண்மையும் சொல்லி அவன விலகி போக சொல்லலாமா? முழுசா தெரிஞ்சுகிட்டா அதுக்கு பிறகு அவன் சும்மா இருக்க மாட்டானே, எதாச்சும் பிரச்சனை வந்தா என்ன பண்றது?' அவள் கண்மூடி தன் பிறை நெற்றியை விரலால் தேய்த்து யோசனையில் மூழ்கி இருந்த நேரம் சித்தார்த் வந்து நின்றான்.
"என்ன இசை யோசனை பலம்மா இருக்கு?"
அவனுக்கு பதில் சொல்ல முடியாமல் முயன்று வரவழைத்த சின்ன சிரிப்பை பதிலாய் தந்தாள்.
"நான் உனக்காக ஒரு கிப்ட் கொண்டு வந்திருக்கேன்." என கையிலிருந்த ஒரு கவரை அவளிடம் நீட்டினான். இசை திறந்து பார்த்தாள், அதில் அழகான பூ வேலைப்பாடுகளுடன் கூடிய இள நீல நிற புடவை. நிச்சயமாக இசையின் நிறத்திற்கு சரியாக பொருந்தும்.
"புடிச்சிருக்கா?" இரு பொருள்பட கேட்டான்.
"ரொம்பவே அழகா இருக்கு சித். ஆனா இத கட்டிக்கிட எனக்குதான் கொடுத்து வைக்கல"
தன்னை மறுக்க அவளிடம் காரணம் இல்லை என்றே நினைத்து வந்தவன், இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்க வில்லை. கொஞ்சம் சமாளித்து கொண்டு, "நான் ஒண்ணும் அவ்ளோ பெரிய ஆள் இல்லம்மா, நீ பாக்குற அதே வேலையத்தான் நானும் பாக்குறேன். உன்னவிட கொஞ்சம் சம்பளம் ஜாஸ்தி அவ்ளோதான"
"நான் பணத்தை பத்தி சொல்ல வரல சித், உன்ன ப்ரண்டா பாத்தா நல்லா இருக்கு, ஆனா ஹஸ்பெண்ட்னா... எனக்கு எப்டி சொல்றதுனு தெரியல. நான் ரொம்பவே அடிபட்டு வந்திருக்கேன், எனக்கு கல்யாணம் எல்லாம் செட் ஆகாது. இத்தன நாளுக்கு பிறகும் என்னால பழசெல்லாம் மறக்க முடில. இனிமேலும் என்னால முடியாதுன்னு தான் தோணுது. அந்த கண்ணு, இப்ப நினைச்சாலும் என்ன ரொம்பவே பயமுறுத்துது சித்." சொல்லும் போதே அவள் உடல் லேசாக சிலிர்த்ததை அவனால் உணர முடிந்தது.
"நான்.. நான்.. போறேன்" என்று அவள் அங்கிருந்து நகர முயன்றாள்.
சித்தார்த் அவள் கை பிடித்து நிறுத்தி, "நீ என்ன சொல்றன்னு எனக்கு முழுசா புரியல. ஆனா நான் உனக்கு ஹஸ்பெண்ட்டா மட்டும் இருக்க விரும்பல, வாழ்நாள் முழுக்க ஒரு நண்பனாத்தான் இருக்க நினைக்கிறேன். நீ சம்மதிச்சா உன்னோட காயத்துக்கும் நான் மருந்தா இருக்க முயற்சி பண்றேனே, ப்ளீஸ்" என்று சேரியை அவள் கையில் திணித்து விட்டு சென்றான்.
என்னை விட்டு விலகி செல்லும் மனநிலையை அவன் தாண்டிவிட்டான் என்று இசைக்கு நன்றாக புரிந்தது, இப்படியான ஒரு உறவுடன் சில காலமாவது வாழ ஆசை கொண்டு மனம் அவளிடமே மண்டியிட்டு கெஞ்சியது. மாலைவரை நிலை கொள்ளாமல் தவித்தவள், இறுதியில் முடிவாய் அவன் தந்த சேலையை எடுத்து அணிந்து கொண்டு பங்ஷனுக்கு சென்றாள். அவளை கண்டதுமே சித்தார்த் மகிழ்ச்சி கட்டற்று கரை கடந்திட, அவளை நெருங்கி வந்து, "தேங்க்ஸ்" என்றான்.
"நீங்க கொடுத்த சேரிய, நான் பிரன்ட்லி கிப்ட்டா வாங்கிக்கிட்டேன். பட் கல்யாண விஷயத்துல எனக்கு மனச மாத்திக்க கொஞ்சம் டைம் வேணும் சித். ஒரு புது வாழ்க்கைக்கு என்னை நானே முதல்ல தயார் பண்ணிக்கிறேன், அதுக்கு பிறகு நாம நம்ம பியூச்சர் லைப் பத்தி பேசி ஒரு முடிவுக்கு வரலாம்."
"ஷ்யூர். டேக் யுவர் ஓன் டைம்" என்று புன்னகைத்து விட்டு நகர்ந்தான். அதன்பின் அவன் எங்கிருந்தாலும் என்ன செய்து கொண்டிருந்தாலும், அடிக்கடி அவன் பார்வை மட்டும் அவள் மீது விழுந்து கொண்டே தான் இருந்தது.
மாலை ஆனுவல் டே செலபிரேஷன் வெகு ஜோராய் ஆரம்பிக்க, சீப் கெஸ்ட்டாக பள்ளியின் நிறுவனர் முகில் கிருஷ்ணாவும், அவர் மகன் யாதவ் கிருஷ்ணாவும் வந்திருந்தனர். மேடையில் அவர்களை வரவேற்று வாழ்த்தி ஏதோ சில சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்க, இசை மேடைக்கு வலதுபுறம் இருந்த ஒரு சிறிய சாமியானா குடிலுக்குள் குழந்தைகளின் ஒப்பனையில் தன் முழு கவனத்தையும் பதித்திருந்தாள். சின்ன சின்ன ஹேர்பின்களால் குழந்தைகளுக்கு வலிக்காமல் சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்தவளை, அவளின் தோழி ஸ்ருதி தட்டி எழுப்பினாள்.
ஸ்ருதி, "இசை மறக்காம வீட்டுக்கு போனதும் சுத்தி போடுடி, இன்னிக்கி ஊரு கண்ணெல்லாம் உம்மேலதான் விழுது"
இசை "தேவதை மாதிரி பக்கத்தில நீ இருக்கும்போது, என்ன யாருடி பாக்க போறா?"
"ஆஹா... எனக்கு நீ நல்லாவே ஐஸ் வக்கிறடி, ஆனா நான் சொன்னது ஒண்ணும் பொய் இல்ல. அங்க பாரு வந்திருக்கிற ஆடியன்ஸ்ல இருந்து நம்ம சீப் கெஸ்ட்டோட பையன் வரைக்கும் எல்லாருமே உன்ன முழுங்குற மாதிரியே பாத்திட்டு இருக்காங்க"
"என்னையா?" என்றவள் அவனை திரும்பி பார்த்த, அடுத்த நொடியே
மயங்கி விழ அந்த இடமே சிறுவர்களின் கூச்சலால் களேபரபட்டது.
மயங்கி விழ அந்த இடமே சிறுவர்களின் கூச்சலால் களேபரபட்டது.
சித்தார்த் ஓடி வந்து அவளை மடியில் ஏந்தி தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிவிக்க, கண் விழித்தவள் மீண்டும் அந்த ஆள் தன் அருகிலே நிற்பதை பார்த்துவிட்டு மயங்கி சரிந்தாள்.
No comments:
Post a Comment