எனக்கு அவள் மேல் ரொம்பவே பொறாமை. நான் என் கணவனை காதலிப்பதை விட, அவள் அவளுடைய கணவனை அதிகமாக காதலிக்கிறாள். நான் என் கணவனின் அன்பை பெற எந்த புது முயற்சி எடுத்து அதில் வென்றாலும், அவள் அதே விஷயத்தில் அவள் கணவனின் மீது அன்பை காட்டுவதில் ஆயிரம் மடங்கு எனக்கு முன்னால் இருக்கிறாள்.
அன்றொரு நாள் எனக்கு தெரியாமல் அடகுவைத்த நகையை மீட்டு வந்த என் கணவனிடம், “எனக்கு தெரியாமலே நகைய அடகு வச்சு, அதை இன்னிக்கி மீட்டிட்டும் வந்திருக்கீங்களா” என சண்டை போட்டு ஒரு வாரம் வரை அவருடன் பேசாமல் கோபம் வளர்த்தேன். அவளோ அவளுக்கு தெரியாமல் அவள் கணவன் லட்சகணக்கில் கடன் வாங்கி இருப்பது தெரிய வந்ததும், “என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே” என்பதோடு முடித்துக்கொண்டதில் எனக்கு என் காதல் அவளிடம் குட்டு வாங்கிய ஒரு உணர்வு.
எனக்கு முதல் குழந்தை பிறந்த நேரத்தில் பிறந்த வீடு, புகுந்த வீடு என அத்தனை சொந்தமும் உடனிருக்க அவர்கள் அத்தனை பேருக்கும் கேட்டதெல்லாம் வாங்கி தந்து, குழந்தைக்கும் எனக்கும் சேர்த்து பரிசுகள் வாங்கி குவித்தவன் மீது எனக்கு தோன்றிய காதலை விட, அவளின் கரு கலைந்து கணவன் கையை பிடித்தபடி வழிந்த ரத்தத்துளிகளோடு வீடு திரும்பிய நேரம், “ஆட்டோ வேண்டாம்ங்க என்னால வீடு வரைக்கும் நடக்க முடியும்” என அவன் இயலா நிலை புரிந்தவளின் முன்னால் என் காதலெல்லாம் அடியோடு தோற்று போனது.
இரண்டு குழந்தைகளை ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாமல் பதில் கேட்கும் கணவனின் கோபம் குறைக்க காரணம் தேடி ஓடும் வாஷிங் மெசினும், உருளும் கிரைண்டரும் சரி இல்லை என நான் அவற்றிற்கு அளித்த சாபங்கள் ஏராளம். தண்ணீர் பஞ்சத்திலும் தானே செய்யும் வீட்டு வேலைகளிலும் கணவனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் குறை இல்லாமல் பார்த்து கொண்டவளின் காதலை என்னவென்று சொல்வேன் நான்.
முதுநிலை பட்டதாரியாக இருந்தும் குடும்ப வாழ்க்கையின் முதல் வருடம் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் என் தவறுகள் அனேகமிருக்க, அத்தனைக்கும் என் அருகில் நின்று “நான் இருக்கேன்ல, ஏன் பயப்படுற?” என்றவன் மீது எனக்கு இருந்த காதலின் அளவினை விட, பதினைந்து வயது திருமணத்தில் சிடுசிடுக்கும் மாமியாரையும் நோயாளி மாமனாரையும் கண்ணும் கருத்துமாய் கவனித்து விட்டு, அவற்றை கண்டும் காணாமல் இருக்கும் கணவனை கண்ணுக்குள் வைத்து காதலித்த அவளை அதிசயங்களில் ஒன்றாய் சேர்த்துவிட்டேன் நான்.
விரும்பும் போதெல்லாம் வேண்டியதை வாங்கித்தந்து, விடுமுறையின் போதெல்லாம் வெளியூர் அழைத்து சென்று இதுவரையில் நான் கேட்டு மாட்டேன் என சொல்லாதவன் எனக்கு கடவுளுக்கு நிகர் என்றால், தன் வாழ்நாளின் பாதியை கொல்லைப்புற செடிகளுடன் கழித்தவள், ஐம்பது வருடங்களாய் சொல் பேச்சு கேட்காமல் செலவாளியாய் சுற்றும் தன் கணவனுக்கும் அவள் அதே இடத்தினை தந்திருப்பதில் நியாயம் இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை.
இப்பொழுதும் நான் கேட்கிறேன், “ஏன் பாட்டி, என்ன செஞ்சுட்டாருன்னு இந்த தாத்தாவ இப்டி தலைல தூக்கி வச்சு ஆடுறீங்க?” அவள் பதில், “அடி போடி, உனக்கென்னடி தெரியும் அவரு அருமைய பத்தி. என் ராசா அவரு, உங்க தாத்தா மட்டும் இல்லன்னு வச்சுக்கோ என் வண்டி ஒரு நாளுகூட ஓடாது. நான் சாமிட்ட வேண்டுறதெல்லாம் அவருக்கு முன்னாடி என்ன கூப்பிட்ருன்னுதான்”
No comments:
Post a Comment