This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 28 September 2018

காதல் பாட்டு

- பாரதியார் கவிதைகள்

காலைப் பொழுதினிலே
கண்விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர்வானை
நோக்கி நின்றோம் விண்ணகத்தே.

கீழ்த்திசையில் ஞாயிறுதான்
கேடில் சுடர்விடுத்தான்;
பார்த்த வெளியெல்லாம்
பகலொளியாய் மின்னிற்றே.

தென்னை மரத்தின்
கிளையிடையே தென்றல்போய்
மன்னப் பருந்தினுக்கு
மாலையிட்டுச் சென்றதுவே.

தென்னை மரக்கிளைமேற்
சிந்தனையோ டோர்காகம்
வன்னமுற வீற்றிருந்து வானை
முத்த மிட்டதுவே.

தென்னைப் பசுங்கீற்றைக்
கொத்திச் சிறுகாக்கை
மின்னுகின்ற தென்கடலை
நோக்கி விழித்ததுவே.

வன்னச் சுடர்மிகுந்த
வானகத்தே தென்றிசையில்
கன்னங் கருங்காகக்
கூட்டம்வரக் கண்டதங்கே.

கூட்டத்தைக் கண்டஃது
கும்பிட்டே தன்னருகோர்
பாட்டுக் குருவிதனைப்
பார்த்து நகைத்ததுவே.

சின்னக் குருவி
சிரிப்புடனே வந்தாங்கு
கன்னங் கருங்காக்கை
கண்ணெதிரே யோர்கிளைமேல்

வீற்றிருந்தே, “கிக் கிக்கீ:
காக்காய், நீ விண்ணிடையே
போற்றியெதை நோக்குகிறாய்?
கூட்டமங்குப் போவதென்ன?”

என்றவுடனேகாக்கை, --
“என்தோழா, நீகேளாய்,
மன்றுதனைக் கண்டே
மனமகிழ்ந்து போற்றுகிறேன்”

என்றுசொல்லிக் காக்கை
இருக்கையிலே ஆங்கணோர்
மின்றிதிகழும் பச்சைக்
கிளிவந்து வீற்றிருந்தே: --

“நட்புக் குருவியே,
ஞாயிற்றிள வெயிலில்
கட்புலனுக் கெல்லாம்
களியாகத் தோன்றுகையில்,

நும்மை மகிழ்ச்சியுடன்
நோக்கியிங்கு வந்திட்டேன்;
அம்மவோ! காகப்
பெருங்கூட்ட மஃதென்னே?”

என்று வினவக் குருவிதான்
இஃதுரைக்கும்: --
“நன்றுநீ கேட்டாய்,
பசுங்கிளியே, நானுமிங்கு

மற்றதனை யோர்ந்திடவே
காக்கையிடம் வந்திட்டேன்.
கற்றறிந்த காக்காய்,
கழறுகநீ” என்றதுவே.

அப்போது காக்கை: --
“அருமையுள்ள தோழர்களே,
செப்புவேன் கேளீர்;
சிலநாளாக் காக்கையுள்ளே

நேர்ந்த புதுமைகளை
நீர்கேட் டறியீரோ?
சார்ந்துநின்ற கூட்டமங்கு
சாலையின்மேற் கண்டீரே?

மற்றந்தக் கூட்டத்து
மன்னவனைக் காணீரே?
கற்றிந்த ஞானி
கடவுளையே நேராவான்;

ஏழுநாள் முன்னே
இறைமகுடந் தான்புனைந்தான்.
வாழியவன் எங்கள்
வருத்தமெலாம் போக்கிவிட்டான்

சோற்றுக்குப் பஞ்சமில்லை;
போரில்லை; துன்பமில்லை.
போற்றற் குரியான்
புதுமன்னன், காணீரோ?”

என்றுரைத்துக் காக்கை
யிருக்கையிலே அன்னமொன்று
தென்றிசையி னின்று
சிரிப்புடனே வந்ததங்கே.

அன்னமந்தத் தென்னை
யருகினிலோர் மாடமிசை
வன்னமுற வீற்றிருந்து: --
“வாழ்க, துணைவரே!

காலை யிளவெயிலிற்
காண்பதெல்லா இன்பமன்றோ?
சாலநுமைக் கண்டு
களித்தேன் சருவிநீர்

ஏதுரைகள் பேசி
யிருக்கின்றீர்?” என்றிடவே,
போதமுள்ள காக்கை
புகன்றதந்தச் செய்தியெல்லாம்.

அன்னமிது கேட்டு
மகிழ்ந்துரைக்கும்: -- “ஆங்காணும்!
மன்னர் அறம்புரிந்தால்,
வையமெல்லாம் மாண்புபெறும்.

ஒற்றுமையால் மேன்மையுண்டாம்;
ஒன்றையொன்று துன்பிழைத்தல்
குற்றமென்று கண்டால்,
குறைவுண்டோ வாழ்வினுக்கே?”

என்றுசொல்லி அன்னம்
பறந்தாங்கே ஏகிற்றால்.
மன்று கலைத்து
மறைந்தனவப் புட்களெல்லாம்.

காலைப் பொழுதினிலே
கண்டிருந்தோம் நாங்களிதை;
ஞால மறிந்திடவே
நாங்களிதைப் பாட்டிசைத்தோம்.

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.