சிறுகதை
தென்கச்சி சுவாமிநாதன் சொன்ன கதை!
கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில், பக்திப் பழமாக உட்கார்ந் திருப்பார் ஒருவர். அவர், 'எனக்கு ஆசையே இல்லை.
பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை!' என்றபடியே இருப்பார்.
ஒருநாள்! கோயிலுக்கு வந்த சந்நியாசியிடமும் இதையே சொல்லிப் புலம்பினார் அந்த ஆசாமி.
இதைக் கேட்டதும், ''நீ சரின்னு சொன்னா இப்பவே உன்னை அழைச்சிக்கிட்டுப் போயிடுறேன். என்ன சொல்றே?'' - கேட்டார் சந்நியாசி.
''நானும் இதைத்தான் நினைச்சேன். ஆனா, வீட்ல விவரம் தெரியாத வயசுல புள்ளைங்க இருக்கறப்ப, எப்படி விட்டுட்டுப் போறதுன்னுதான் ஒரு யோசனை.
அவங்களுக்கு கல்யாணம் காட்சின்னு ஆயிட்டா... அப்புறம் நிம்மதியா கிளம்பிடலாம்!'' என்றார் ஆசாமி.
சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் சந்நியாசி.
ஆண்டுகள் ஓடின!
ஒருநாள்... கோயிலுக்கு வந்தார் சந்நியாசி! அதே சந்நியாசி; அதே பெட்டிக்கடை; அதே ஆசாமி!
''எனக்கு ஆசையே இல்லை.
பந்தங்களிலிருந்து விடுபட விரும்பறேன். ஆனா, இன்னும் அதற்கான வேளை வரலை'' - அதே புலம்பல்.
சந்நியாசி மெள்ள புன்னகைத்தபடி, ''சரி... இப்பவாவது புறப்படேன்!'' என்றார்.
''பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். பேரப் பிள்ளைங்களையும் கண்ணாலே பார்த்துட்டா.
என் கவலையெல்லாம் தீர்ந்துடும்!'' என்று விவரித்தார் நம்ம ஆள்!
சில ஆண்டுகளுக்குப் பிறகு, சந்நியாசி வந்தார்.
''எனக்கு ஆசையே இல்லை...''-
வழக்கம்போல் கேட்டது குரல்!
''இப்போதாவது வருகிறாயா?''- இது சந்நியாசி.
''கோர்ட்ல கேஸ் இருக்கு. வழக்கு முடிஞ்சிட்டா வந்துடலாம்''- பதிலுரைத்தார் ஆசாமி. வழக்கமான புன்னகையுடன் கிளம்பினார் சந்நியாசி.
ஆண்டுகள் பல கழிந்தன. மீண்டும் வந்தார் சந்நியாசி. ஆனால், அந்த ஆசாமியைக் காணோம். கடையில் இருந்தவரிடம் நம்மவர் குறித்து விசாரித்தார் சந்நியாசி.
கடையில் இருந்தவர், ''சாமி... எங்க அப்பாதான் அவரு. 'எல்லா பந்தங்களையும் விட்டுட்டு உங்ககூட வந்துடணும்னு சொல்லிகிட்டே இருந்தாரு, போன வருஷம் ஒருநாள்...
நெஞ்சு வலின்னவரு, பொட்டுனு போயிட்டாரு. அப்பா இந்நேரம் உயிரோட இருந்திருந்தா, நிச்சயம் உங்க கூட வந்துருப்பாரு சாமீ...''- கவலையுடன் சொன்னார் நம்மவரின் மகன்.
இதைக் கேட்ட சந்நியாசி, ''உங்க அப்பன் எங்கேயும் போயிடலே. இங்கதான் இருக்கான். அதோ... அங்கே பார்... அதென்ன?''
''அது நாய்... இங்கேதான் சுத்திக்கிட்டிருக்கு!''
''அதான் உங்க அப்பன். இப்ப பாரு'' என்றவர், கையைத் தட்டினார்.
அந்த நாய் வாலாட்டியபடியே ஓடி வந்தது. நாயின் தலையைத் தட்டினார்.
உடனே அது, ''எனக்கு ஆசையே இல்லே...'' என பேசத் துவங்கியது.
''அடேய்... என்னோட வந்துடறியா?'' - சந்நியாசி கேட்டார்.
''சாமி! ஏராளமா சொத்து சேத்து வச்சுட்டேன். பிள்ளைங்க அதை சரியா காப்பாத்துவாங்கன்னு தோணலீங்க.
கடையை சரியா பூட்டாமே போயிட றாங்க. அதுதான் நாயா பிறந்து காவல் காத்துக்கிட்டு கிடக்கிறேன்!''- இப்படி நாய் சொன்னதும், 'கடகட'வெனச் சிரித்தார் சந்நியாசி.
இந்த கதை நமக்கும் பொருந்துமோ?
No comments:
Post a Comment