எதிர்பாராத முத்தம்
- பாரதிதாசன் கவிதை
நீலம் கரைத்த நிறைகுடத்தின் உட்புறம்போல்
ஞாலம் கறுப்பாக்கும் நள்ளிருளில் - சோலைஉதிர்
பூவென்ன மக்கள் துயில்கிடக்கும் போதில்இரு
சீவன்கள் மட்டும் திறந்தவிழி - ஆவலினால்
மூடா திருந்தனவாம். முன்னறையில் பொன்முடியான்
ஆடா தெழுந்தான் அவள்நினைப்பால் - ஓடைக்குள்
காலால் வழிதடவும் கஷ்டம்போல், தன்உணர்வால்
ஏலா இருளில் வழிதடவி - மேல்ஏகி
வீட்டுத் தெருக்கதவை மெல்லத் திறந்திருண்ட
காட்டில்இரு கண்ணில்லான் போதல்போல் - பேட்டை
அகன்றுபோய் அன்னவளின் வீட்டினது தோட்டம்
புகும்வாசல் என்று புகுந்தான் - புகும்தருணம்
வீணையிலோர் தந்தி மெதுவாய் அதிர்ந்ததுபோல்
ஆணழகன் என்றெண்ணி "அத்தான்" என்றாள் நங்கை!
ஓங்கார மாய்த்தடவி அன்பின் உயர்பொருளைத்
தாங்கா மகிச்சியுடன் தான்பிடித்துப் - பூங்கொடியை
மாரோ டணைத்து மணற்கிழங்காய்க் கன்னத்தில்
வேரோடு முத்தம் பறித்தான்!அந் - நேரத்தில்
பின்வந்து சேர்த்துப் பிடித்தான் மறைநாய்கன்
பொன்முடியை மங்கை புலன்துடிக்க - அன்பில்லா
ஆட்கள் சிலர்வந்தார். புன்னை அடிமரத்தில்
போட்டிறுக்கக் கட்டினார் பொன்முடியை - நீட்டு
மிலாரெடுத்து வீசும் மறைநாய்கன் காலில்
நிலாமுகத்தை ஒற்றி நிமிர்ந்து - கலாபமயில்
"அப்பா அடிக்காதீர்" என்றழுதாள். அவ்வமுதம்
ஒப்பாளைத் தள்ளி உதைக்கலுற்றான். - அப்போது
வந்துநின்ற தாயான வஞ்சி வடிவென்பாள்
சுந்தரியைத் தூக்கிப் புறம்போனாள் - சுந்தரியோ
அன்னையின் கைவிலக்கி ஆணழகிடம் சேர்ந்தே
"என்னை அடியுங்கள்" என்றுரைத்துச் - சின்னவிழி
முத்தாரம் பாய்ச்ச உதட்டின் முனைநடுங்க
வித்தார லோகம் விலவிலக்க - அத்தானின்
பொன்னுடம்பில் தன்னுடம்பைப் போர்த்த படியிருந்தாள்.
பின்னுமவன் கோபம் பெரிதாகி - அன்னார்
இருவரையும் இன்னற் படுத்திப் பிரித்தே
ஒருவனைக் கட்டவிழ்த் தோட்டித் - திருவனைய
செல்விதனை வீட்டிற் செலுத்தி மறைநாய்கன்
இல்லத்துட் சென்றான். இவன்செயலை - வல்லிருளும்
கண்டு சிரித்ததுபோல் காலை அரும்பிற்று.
"வண்டு விழிநீர் வடித்தாளே! - அண்டையில்என்
துன்பந் தடுக்கத் துடித்தாளே! ஐயகோ!
இன்ப உடலில்அடி யேற்றாளே! - அன்புள்ள
காதலிக் கின்னும்என்ன கஷ்டம் விளைப்பாரோ?
மாது புவிவெறுத்து மாய்வாளோ - தீதெல்லாம்
என்னால் விளைந்ததனால் என்னைப் பழிப்பாளோ?"
என்றுதன் துன்பத்தை எண்ணாமல் - அன்னாள்
நலமொன்றே பொன்முடியான் நாடி நடந்தான்
உலராத காயங்க ளோடு.
No comments:
Post a Comment