This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Monday 22 October 2018

திறமை மிகுந்தவர் யார்?

விக்ரமாதித்யன் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சவத்தை எடுத்து அதை தன் தோளில் சுமந்து கொண்டு சென்றான். வழியில் அந்த சவத்திலிருந்து வேதாளம் அவனுடன் பேசத் தொடங்கியது:


அரசே! இப்போது நான் உனக்கு ஒரு கதை சொல்லப்போகிறேன். கேள்! தர்மபுரம் என்ற ஊரை தலைநகராகக் கொண்டு தர்மத்வஜன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுடைய பிரதேசத்தில் கோவிந்தன் என்ற மஹா பண்டிதன் வசித்து வந்தான். வேதம் சாஸ்திரம் இரண்டிலும் மஹா நிபுணன். அவனுக்கு ஹரிதத்தன், ஸோமதத்தன், யஜனதத்தன், ப்ரம்மதத்தன் என்று நான்கு குமாரர்கள் உண்டு. அவர்கள் அனைவரும் வேத சாஸ்திரங்களை நன்கு கற்று சிறந்த பண்டிதர்களாக விளங்கினர். சற்றும் எதிர்பாராதவிதமாக கோவிந்தனின் மூத்தகுமாரன் ஹரிதத்தன் இறந்து விட்டான். அந்த துக்கத்தைத் தாள முடியாமல் கோவிந்தன் தன்னுடைய உயிரை விட தீர்மானித்து விட்டான். இந்த செய்தி தர்மத்வஜன் அரசனின் ராஜகுரு விஷ்ணு சர்மாவை எட்டியது.


உடனே ராஜகுரு கோவிந்தனின் வீட்டிற்கு வந்து உபதேசங்களை கூறலானார். “சோகம் துக்கம் எல்லோருக்கும் பொது. வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் இன்னலை அநுபவிக்கின்றனர். நூறு வயது வாழ்ந்தாலும் அதன் பாதி தூக்கத்தில் போய்விடுகிறது. எஞ்சிய பாதியில் பால்யம், முதுமை போக நோய், உழைப்பு ஒருவனை ஆட்கொள்ளும் போது சந்தோஷம் எவ்வாறு கிட்டும்? அர்ஜுனன் மகாவீரனாக இருந்த போதிலும் அபிமன்யுவை பறி கொடுத்தான். மாமன்னர்கள் தோன்றி மறைந்து விட்டனர். காலையில் பொழுது புலர்ந்து நேரம் கடக்க மதியம் வந்து விடுகிறது. அதுவும் மறைந்து போய் இரவு வந்து விடுகிறது. தாய் தந்தை மனைவி, புத்திரன் அனைத்தும் தாற்காலிக உறவு. இந்த உலகம் மந்திரவாதியின் தந்திரத்திற்குக் கட்டுப்பட்டதோ போல் இயங்குகிறது.”


அவருடைய உபதேசத்தைக்கேட்ட கோவிந்தன் சிந்திக்கலானார். பிறகு அவர் ஒரு முடிவுக்கு வந்தார். மன சாந்தி, குடும்ப க்ஷேமம் இரண்டையும் உத்தேசித்து ஒரு யக்ஞம் செய்ய வேண்டும் என்று உத்தேசித்தார். அதில் ஹவிஸ் பாகத்தில் ஒரு ஆமை தேவைப்பட்டது. அதைக் கொண்டு வருமாறு தன்னுடைய மூன்று புத்திரர்களிடம் கூறினார். அவர்கள் மூவரும் சேர்ந்து மீனவர்கள் குடியிருப்புக்குச் சென்றனர். அங்கு மீனவன் ஒருவன் அவர்களுக்குத் தேவையான ஆமையை கடலிலிருந்து பிடித்துத் தருவதாகக் கூறினான். அவன் கேட்டுக் கொண்டபடி அவர்கள் அவனுக்கு நூறு வெள்ளிக் காசு கொடுப்பதாக சம்மதித்தார்கள். நான்கு பேரும் கடற்கரை நோக்கிச் சென்றார்கள். மீனவன் கடலுக்குள் சென்று வலை விரித்துத் தேடியதில் ஒரு ஆமை கிடைத்தது. அவன் கடற்கரைக்கு தன் படகில் ஆமையுடன் திரும்பினான். அந்த மூன்று சகோதரர்களிடமிருந்து நூறு வெள்ளிக்காசைப் பெற்றுக் கொண்டு, “நீங்கள் ஆமையை எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினான்.


அவர்களில் மூத்தவனான ஸோமதத்தன், ப்ரம்மதத்தனிடம் “சகோதரா! இந்த ஆமையை தலைகீழாகப் பிடித்து வீடு வரை கொண்டு வா! என்று கூறினான்.


அதற்கு அவன் “நான் இந்த ஆமையை தொட மாட்டேன். என் விரல்களில் துர்நாற்றம் வந்தடையும். அதைப் போக்காமல் என்னால் சாப்பிட முடியாது. ஆஹார விஷயத்தில் நான் ஒரு சிறு தோஷத்தையும் தாங்க மாட்டேன். உங்களுக்கு தெரியுமல்லவா” என்றான்.


பிறகு மூத்தவன் யக்ஞதத்தனிடம், அந்த ஆமையை எடுத்து வருமாறு கட்டளையிட்டான். அதற்கு அவன் மறுத்துவிட்டு “மீன் போன்று மழமழப்பான இந்தப் ப்ராணியைத் தொட மாட்டேன். பட்டுபோன்று மென்மையான பெண்களிடம் ஒரு சிறு தோஷத்தைக் கூட நான் சகிக்க மாட்டேன். இதை நான் எடுத்துச் செல்ல இயலாது” என்று கூறிவிட்டான்.


கடைசியாக மூத்தவன் ஸோமதத்தன், “நானும் இந்த ஆமையைத் தூக்கிக் கொண்டு செல்ல மாட்டேன். என்னுடைய படுக்கையில் எந்த இடத்திலோ ஒரு சிறு தோஷம் இருந்தாலும் எனக்கு தூக்கம் வராது” என்று கூறினான்.


இவ்வாறு மூவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் தகராறு செய்தனர்.


தீர்வு காண அரசனிடம் சென்று முறையிட்டனர். அரசன் அவர்களை தனித்தனியாக விசாரிதத்தனர். அவர், “இவர்கள் ஒவ்வொரும் தங்களுக்கென்று ஒரு திறமை இருப்பதாக கூறுகிறார்கள். அதை பரிசோதித்துப் பார்க்க வேண்டும்” என்றார். அரசனுக்கென்று ப்ரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உயர்ந்த உணவை இலையில் பரிமாறி அதை உண்ணுமாறு ப்ரம்மதத்தனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ப்ரம்மதத்தன் ஆஹாரத்தைப் பிசிந்து ஒரு கவளத்தை எடுத்து வாயில் போடுமுன் ஏதோ துர்நாற்றம் வீசுவது போல் அவனுக்கு ஒரு அவஸ்தை ஏற்பட்டது. அந்த சாதத்தை எடுத்து முகர்நதுவிட்டு முகத்தைச் சுளித்தவாறு சாப்பிடாமல் எழுந்து வந்து விட்டான்.


அரசன் மிக்க மர்யாதையுடன், “தாங்கள் திருப்தியாக ஆஹாரம் சாப்பிட்டீர்களா? என்று அவனிடம் விசாரித்தார்.


அதற்கு அவன், “அரசே! அரிசி சாதம் துர்கந்தம் வீசியது. நான் சாப்பிடாமல் எழுந்துது வந்து விட்டேன்” என்றான்.


அரசன் வியப்புடன் “எத்தகைய துர்நாற்றம்? என்று கேட்டார்.


அவன், “அநேகமாக நெல் விளைந்த பூமி சுடுகாடு சமீபம் இருந்திருக்கும். சுடுகாட்டுப் புகைபட்டு வளர்ந்த இந்த நெல்லில் அந்த துர்கந்தம் நன்றாக கலந்திருக்கிறது.


அரசன் உத்திரவின் பேரில் நெல் எங்கிருந்து வரவழைக்கப்பட்டது பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன. அரசாங்கத்திற்கு சொந்தமான வயல்வெளி நகர்புறத்திற்கு வெளியே இருந்தது. அதன் அருகில் சுடுகாடு இருந்ததும் தெரிய வந்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் அரசன் மிகவும் ஆச்சர்யப்பட்டார்.


அவர் ப்ராமணரே! நீங்கள் கூறியது உண்மை தான். நீங்கள் ஆஹாரத்தில் சிறு தோஷத்தையும் ஏற்றுக் கொள்ளாதவர் என்பது உறுதியாகிறது” என்றார்.


அடுத்ததாக யக்ஞதத்தனை பரிக்ஷைப் பண்ணி பார்க்க தீர்மானித்தார். அரசவையில் நன்றாக நடனமாடுபவளும், சிறந்த அழகியுமான ஸ்வர்ணலேகாவை வரவழைத்தார். அவளிடம் அரசன் “இன்று இரவு ஒரு ப்ராமணோத்தமர் உன் வீட்டிற்கு வருவார். அவரை நீ நன்கு உபசரிக்க வேண்டும். முன்னதாக நீ நன்றாக அலங்காரம் செய்து கொண்டு உயர்ந்த ரக வாசனை திரவியங்கள் பூசிக் கொண்டு எந்த குறைக்கும் இடம் தராமல் அந்த விருந்தினரை மகிழ்விக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார். அவள் சம்மதித்தாள். அரசனின் கட்டளை பேரில் அன்றிரவு யக்ஞதத்தன் ஸ்வர்ணலேகா வீட்டிற்கு சென்றான். ஸ்வர்ணலேகா தன்னை நன்றாக அலங்கரித்து, உயர்ந்த ரக வாசனை திரவியங்களைப் பூசிக் கொண்டு அந்த பிராமணனை வரவேற்று தாம்பூலம் கொடுத்து உபசரித்தாள். இருவரும் ஒரு மஞ்சத்தில் அமர்ந்தனர். அவள் யக்ஞதத்தனை தன் வசப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அவனை நெருங்கி ஆலிங்கனம் செய்தாள். அவன் அவள் முகத்தில் முத்தமிட முயன்றபோது ஆட்டின் துர்கந்தம் வீச முகத்தை சுளித்தவாறு தன்னை விலக்கிக் கொண்டான். அவள் பிடியிலிருந்து மெள்ள தன்னை விடுவித்துக் கொண்டான். அவன் வேறு புறமாக திரும்பி படுத்துறங்கி விட்டான். இவையனைத்தையும் அங்கு ஒளிந்து கொண்டிருந்த அரசனால் நியமிக்கப்பட்ட ஒற்றர்கள் கவனித்து மறுநாள் அரசனிடம் நடந்தவற்றைக் கூறினார்கள்.


அரசனின் கட்டளையின் பேரில் யக்ஞதத்தன் அரண்மனைக்குச் சென்றான். அரசன் அவனிடம், “ப்ராமணோத்தமரே! நேற்றிரவு நல்லபடியாக கழிந்ததா? என்று கேட்டார்.


அவன், “மகிழ்ச்சி ஏதுமில்லை. அவள் வாய் ஆட்டின் துர்நாற்றம் வீசியது, என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை”


அரசன் வியப்புற்றான். அவர் கட்டளையிட ஸ்வர்ணலேகாவின் தந்தை அங்கு உடனே வந்து சேர்ந்தார். அரசன் அவரிடம், “உன் பெண்ணைப் பற்றி இப்படி ஒரு குறை கேள்விப்பட்டேன். அது உண்மைதானா? என்று கேட்டார்.


அதற்கு ஸ்வர்ணலேகாவின் தந்தை. “அது ஒரு சோகக்கதை, இவள் என்னுடைய சகோதரிக்குப் பிறந்தவள். இவள் பிறந்த ஒரு சில நாட்களில் என்னுடைய சகோதரி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாள். அப்போது வேறு வழியில்லாமல் இவளுக்கு ஆட்டுப்பால் கொடுத்து வளர்த்தேன்” என்றான்.


அரசன் “இப்போது புரிகிறது! நீங்கள் போகலாம்” என்று கூறிவிட்டு யக்ஞதத்தனைப் பார்த்து, “ப்ரமாணோத்தமரே! நீங்கள் உண்மையைத்தான் கூறி இருக்கிறீர்கள். உண்மையிலேயே நீங்கள் பெண்களிடையே தார தன்மையை தீர்மானிப்பதில் வல்லுநர் தான்” என்று பாராட்டி அவரை வழி அனுப்பினார்.


பிறகு அரசன் மூத்த சகோதரன் ஸோமதத்தனை பரிக்ஷை செய்து பார்ப்பதற்காக ஒரு உயர் ரக மெத்தைப் படுக்கைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அன்றிரவு ஸோமதத்தன் அரசனின் கட்டளையின் பேரில் தனியாக தயாரிக்கப்பட்ட மெத்தையில் படுத்துறங்க வேண்டும். ஸோமதத்தன் அரசனின் கட்டளையின் பேரில் அதில் படுத்தான். ஆனால் அவனால் மெய் மறந்து தூங்க முடியவில்லை.


மறுநாள் அரசன் அவனை விசாரிக்க, அவன், “அரசே! நேற்றிரவு சிறிது நேரம் கூட அயர்ந்து தூங்க முடியவில்லை. நான் படுத்திருந்த மெத்தை சரியாக இல்லை. ஒன்றன் மேல் ஒன்று அடுக்காக இது தைக்கப்பட்டிருக்கிறது. இதன் ஏழாவது அடுக்கில் பஞ்சுகளின் இடையே ஆட்டு ரோமம் சிக்கியிருக்கிறது என்று யூகிக்கிறேன். அது எனக்கு மிகவும் வலியை உண்டு பண்ணியதால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை” என்றான்.


அரசன் வியப்புற்றான். அவர் கட்டளையிட ஸோமதத்தன் படுத்திருந்த மெத்தை பிரிக்கப்பட்டது. ஏழாவது அடுக்கு அகற்றப்பட்டு அதை சோதித்துப் பார்த்ததில் அதில் ஆட்டு ரோமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விஷயம் உறுதி செய்யப்பட்ட பிறகு அரசன் ஸோமதத்தனிடம் “நீங்கள் கூறியது உண்மைதான்! படுக்கையின் மென்மையை உணர்வதில் தாங்கள் திறமைசாலிதான்” என்று பாராட்டி தெரிவித்தார்.


இவ்வாறு கதையை கூறிவிட்டு வேதாளம் விக்ரமாதித்யனை கேள்வி கேட்டது, “அரசே! இப்போது கூறும்! இந்த மூவரில் திறமை மிகுந்தவர் யார்? என்றது. அதற்கு அரசன், “சந்தேகமில்லாமல் படுக்கையில் தோஷத்தை உணர்ந்த மூத்த சகோதரன் ஸோமதத்தன் என்பவன் தான்! இவ்வாறு அரசன் பதிலளித்ததும் அவன் மௌனம் கலையவே வேதாளம் அருகிலிருந்த மரத்தில் மீண்டும் ஏறிவிட்டது.


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.