This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday 31 October 2018

அதிசயமான விஷயங்கள்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில்ஏறி, அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! உன்னுடைய கடும் முயற்சிகளைப் பார்த்தால் ஏதோ ஒரு சாதாரண விஷயத்திற்காக நீ இத்தனை பாடுபடுகிறாய் என்று தோன்றவில்லை.


உன்னதமான ஒரு லட்சியத்தை இலக்காகக் கொண்டுள்ளாய் என்று தோன்றுகிறது. ஆனால் சிலர் அற்ப விஷயங்களுக்காகத் தங்கள் சக்தியை வீணாக்குகின்றனர். அத்தகைய ரவிவர்மன் என்ற மன்னனுடைய கதையைக் கூறுகிறேன், கேள்!” என்று கதை சொல்லலாயிற்று.


ரவிவர்மன் விதர்ப ராஜ்யத்தை ஆண்டு வந்த மன்னன்! வினோத மான, அதிசயமான விஷயங்களில் அவனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆட்சிப் பொறுப்பை மந்திரி களிடமும், அதிகாரிகளிடமும் ஒப்படைத்து விட்டு, தன் நேரத்தைப் புதிய விஷயங்களைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டி வந்தான். அவ்வப்போது மந்திரிகளை அழைத்து ராஜ்யத்தைப் பற்றி விசாரிப்பதுண்டு. அவர்கள் ராஜ்ய நிர்வாகம் சீராக நடப்பதாகவும், குடிமக்கள் மகிழ்ச்சிஉடனிருப்பதாகவும் கூறுவதைக் கேட்டு விட்டு திருப்தி அடைந்து வந்தான்.


ஒரு சமயம் மகாபாரதத்தில் மயன் நிர்மாணித்த அற்புதமான மாளிகையைப் பற்றி கதை கேட்ட போது, மன்னனுக்கு தன் ராஜ்யத்தில் நடக்கும் வினோதமான விஷயங்களைப் பற்றி அறிய அவா உண்டாயிற்று. உடனே தனது முதன் மந்திரியை அழைத்து அடுத்த பௌர்ணமியன்று சபையைக் கூட்ட வேண்டுமென்றும், அன்று நாட்டின் பல வினோதமான விஷயங்களைப் பற்றிக் கூறுபவர்களுக்குப் பரிசு அளிக்கப் போவதாகவும் அறிவித்தான்.


அவ்வாறே பௌர்ணமிதினத்தன்று சபையில் பெருங்கூட்டம் கூடியது. மன்னர் தன் ஆசனத்தில் அமர்ந்தவுடன், முதலில் கோபி என்ற விவசாயி முன் வந்தான். மன்னை வணங்கிவிட்டு, அவன் தான் கொண்டு வந்த பெட்டியைக் காட்டினான். பின்னர், “மகாராஜா! சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் நான் என் வயலை உழுதுக் கொண்டிருக்கையில், எனக்கு இது கிடைத்தது.


அதைத் திறந்து பார்த்ததில் உள்ளே ஒரு கருங்கல் இருந்தது. பெட்டியைத் திறந்தவுடன், திடீரென பகல் பொழுது மறைந்து இருள் சூழ்ந்தது. பெட்டியை மூடியவுடன், மீண்டும் இருள் நீங்கிப் பகலாகியது. பெட்டிக்குள்ளிருந்த கல்லில்தான் ஏதோ மாயசக்தி உள்ளது என்று எனக்குத் தோன்றியது. இது பகலை இரவாக்கிவிடும் தன்மைஉடையது!” என்று சொல்லிவிட்டுப் பெட்டியை மன்னரிடம் தந்தான். உடனே ரவிவர்மன் பெட்டியைத் திறந்துப் பார்க்க, திடீரென பகல் இரவாகியது. பெட்டியை மூடியவுடன், இருள் மறைந்து விட்டது “ஆகா! இந்தக் கருங்கல் ஒரு நம்ப முடியாத உண்மை” என்று பாராட்டி விட்டு கோபிக்கு ஆயிரம் பொற்காசுகள் தந்தார்.


அடுத்து, ரத்னாகரன் என்ற வியாபாரி முன் வந்தான். மன்னனை வணங்கிய பிறகு அவன், “மகாராஜா! ஒருநாள் இரவில் என் வீட்டுத் தோட்டத்தில் நான் உலவிக் கொண்டிருந்தபோது வானில் ஓர் அதிசயக் காட்சியைக் கண்டேன். சிறகுகள் கொண்ட ஒரு குதிரை வானில் பறக்க, அதன்மீது ஒரு கந்தர்வ தம்பதி அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர்.


அப்போது, அந்தப் பெண்ணின் கூந்தலிலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. அடுத்தகணம், என் தோட்டம் முழுவதும் அந்தப் பூவிலிருந்து வீசிய நறுமணத்தினால் நிறைந்தது. உடனே அதையெடுத்து நான் பூசையறையில் வைத்தேன். என்ன அதிசயம் தெரியுமா? அந்தப் பூ இன்று வரை வாடவில்லை” என்று மன்னனிடம் ஒரு தந்தப் பேழையை நீட்டினான்.


அதை ரவிவர்மன் ஆர்வத்துடன் திறந்துப் பார்க்க, அதனுள் ஒரு பூ இருந்தது. அதிலிருந்து வீசிய நறுமணம் சபைமுழுவதும் சூழ்ந்தது. “இது நிச்சயம் கந்தர்வலோக மலர்தான்! இதுவும் ஒரு நம்ப முடியாத உண்மை!” என்று புகழ்ந்த மன்னன், ரத்னாகரனுக்கு ஒரு முத்துமாலையைப் பரிசாக அளித்தான்.


அடுத்து கோபால் சர்மா என்ற பண்டிதர் முன் வந்து, “மகாராஜா! என்னிடம் ஓர் அபூர்வ நாணயம் உள்ளது. அதைத் தொட்டால் பழைய விஷயங்கள் அனைத்தும் நினைவிற்கு வரும்!” என்று அந்த நாணயத்தை மன்னனிடம் தந்தார். அதைத் தொட்டவுடன் பழைய சம்பவங்கள் அனைத்தும் மன்னனுக்கு ஞாபகம் வர, உடனே ஒரு தங்க மாலையை சர்மாவிற்குப் பரிசுஅளித்தான்.


அதற்குப் பிறகு, கம்பீரமான தோற்றம் கொண்ட ஓர் இளைஞன் முன் வந்தான். அவன் மன்னனை நோக்கி, “மகாராஜா! என் பெயர் சிவதாஸ்! நான் பிரதான வாயில் வழியே தர்பாரில் நுழையவில்லை. பின் எந்த வாயில் வழியாக வந்தேன் தெரியுமா?” என்று மன்னரையே கேள்வி கேட்டான். “எந்த வாயில் வழியாக?” என்று ரவிவர்மன் ஆவலுடன் கேட்டான்.


“நான் லஞ்ச வாயில் வழியாக வந்தேன்!” என்று அவன் கூறியதும் மன்னன் திடுக்கிட்டான். “லஞ்ச வாயிலா? அது என்ன?” என்று மன்னன் கேட்டான். “மகாராஜா! வினோதமான பொருட்களைத் தங்களிடம் காட்டி வெகுமதி பெற வந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் தங்களுடைய தர்பாரின் பிரதான வாயில் காவலர்கள் பத்து பொற்காசுகள் லஞ்சம் வாங்கிஇருக்கிறார்கள். நானும் அவ்வாறு லஞ்சம் கொடுத்த பிறகுதான் தர்பாரில் நுழைய அனுமதி கிடைத்தது. அப்படியிருக்கத் தங்கள் தர்பாரின் நுழைவு வாயிலை லஞ்ச வாயில் என்று அழைப்பதில் என்ன தவறு?” என்று பயமின்றி பேசினான் அந்த இளைஞன்.


“என்ன?” என்று துள்ளிக்குதித்த மன்னன் “என் காவலர்கள் லஞ்சம் வாங்குகின்றனரா? என்னால் நம்ப முடியவில்லை!” என்று அதிர்ச்சி யுடன் கூறினான். “மகாராஜா! உங்களால் நம்ப முடியவில்லை என்றா சொன்னீர்கள்? ஆம்! அது நம்ப முடியாத உண்மை தான்! நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ள அதிகாரிகள் அனைவரும் பொதுப்பணத்தையும், குடிமக்களிடமிருந்து வரி என்ற பெயரிலும், லஞ்சமாகவும் பணத்தைக் கொள்ளையடிக்கின்ற னர். ஆனால் இவை எதுவுமே உங்களுக்குத் தெரியாது. அந்த நம்ப முடியாத உண்மையை எடுத்துரைப் பதற்காகத்தான் நான் இங்கு வந்தேனே தவிர, உங்களிடம் பரிசு பெறுவதற்காக அல்ல!” என்று இளஞ்சிங்கம் போல் கர்ஜித்தான்.


பல நாள்களாகத் தெரியாத ஓர் உண்மையைத் தெரிந்து கொண்ட அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கு ரவிவர்மனுக்கு சில நிமிடங்கள் ஆயின. மந்திரிகள், அதிகாரிகள் அனைவரும் தலை குனிந்தனர். தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்த ரவிவர்மன் இளைஞன் சிவதாசை அணுகி, “இப்போது நீ கூறிய விஷயம்தான் மிகவும் நம்பமுடியாத அதிசயமான உண்மை!” என்று கூறி தன் கழுத்திலிருந்த வைரமாலையை அவனுக்கு அணிவித்தான். அதைத்தொடர்ந்து, “உன்னை என் பிரதம ஆலோசகராக நியமிக்கிறேன்!” என்றும் அறிவித்தான். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா!


ரவிவர்மனின் இந்த செயலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? மிகவும் அதிசயமான விஷயங்களைச் சான்றுடன் காட்டுபவர்களுக்கு பரிசு அளிப்பதாக அறிவித்தான். கோபி கொண்டு வந்த கருங்கல் ஓர் அதிசயமான பொருள்! ரத்னாகரன் கொண்டு வந்த கந்தர்வலோகப் பூ மகா அதிசயமான பொருள்! சர்மாவின் நாணயமும் அப்படியே! அவை அனைத்தையும் சாதாரணமாகக் கருதிவிட்டு, சிவதாஸ் கூறிய நம்ப முடியாத உண்மைக்காக அவனுக்கு வைரமாலை கொடுத்தது மட்டுமன்றி, அவனைப் பிரதம ஆலோசகராகவும் நியமித்தான். சிவதாஸ் கூறியதில் அப்படியென்ன அதிசயம் இருக்கிறது? என் சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்துஇருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!” என்றது.


அதற்கு விக்கிரமன், “முதல் மூவரும் காட்டியது அதிசயமான பொருள்கள் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் சிவதாஸ் தெரிவித்த உண்மை அதுவரை அறியாமையில் மூழ்கியிருந்த மன்னனின் கண்களைத் திறந்தது. ஆகவே, அதற்கு மதிப்பு மிகவும் அதிகம்! முதலில் வந்த மூவர் காட்டிய அதிசயப் பொருள்களால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த விதப் பயனுமில்லை.


ஆனால் சிவதாஸ் தெரிவித்த நம்ப முடியாத உண்மை மகத்துவ பூர்வமானது. நாட்டில் மன்னனுக்குத் தெரியாமல் நடைபெறும் அநீதியை அவனுக்கு உணர்த்த தைரியமாக முன் வந்தான். தான் செய்யத் தவறிய விஷயத்தை தக்க சமயத்தில் எடுத்துரைத்து, அதை மன்னனால் நம்ப முடியாத உண்மை என்று காட்டிய சிவதாஸ் மீது மன்னன் பெருமதிப்புக் கொண்டு அவனுக்கு உயர்ந்த பரிசும், பதவியும் வழங்கினான்” என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த உடலிலிருந்த வேதாளம் உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.