நம் முன்னோர்கள்களின் வாழ்க்கை முறையில்தான் எத்தனை சிறப்பம்சங்கள். அவர்கள் வகுத்துள்ள வாழ்க்கை விதிகள் யாவுமே மனிதர்களின் உடல் நலத்தையும் மன நலத்தையும் பெருக்கிப் பாதுகாக்கும் சிறப்புகள் படைத்தவை என்று நன்கு தெரிந்தும் ஏனோ நாம் அதை எல்லாம் விட்டு வெகு தூரம் வந்து விட்டோம்.
வாழையிலையில் சாப்பிடுவது என்பது, தமிழர்களுக்கே உள்ள தனிப்பெருமை. மேலை நாடுகளை விடுங்கள், இந்தியாவில் வடமாநிலங்களில் கூட இந்த பழக்கம் கிடையாது, அவர்களுக்கு இதன் அருமையும் தெரியாது. விருந்துகளில் அல்லது அன்ன தானங்களில் வாழையிலையில் உணவுண்பது தமிழர்கள் தொன்று தொட்டு பழகி வந்த வழக்கம். இந்தியாவிலும் இலங்கையிலும் பொதுவாக உணவளிக்கும் பொழுது வாழையிலையை பயன்படுத்தியே உண்டிருக்கிறார்கள். இப்போதும் நடுத்தர உணவகங்களில் பாத்திரங்களின் மேல் அளவாக வெட்டப்பட்ட வாழை இலையை வைத்து உணவு பரிமாறுவது உண்டு.
தமிழர்கள் மற்ற நேரங்களை விட அதி முக்கியமாக விருந்தோம்பல் உணவினை வாழை இலை கொண்டு தான் பரிமாறுவர். அவ்வாறு பரிமாறும் போது ஒரு சீரான உணவு பரிமாறும் முறையை கடைபிடிக்கின்றனர். அதாவது வாழையிலை எவ்வாறு பந்தியில் வைக்கவேண்டும் என்பதிலிருந்து எவ்வகையான உணவை வாழையிலையில் எங்கு வைக்க வேண்டும் என்பதுவரை அனைத்திற்கும் சில வழிமுறைகளை வைத்துள்ளனர்.
உணவு தயார் செய்யும் முறை:
விருந்தோம்பலின் போது பருப்பு மசியல், சாம்பார், ஏதேனும் ஒரு இனிப்பு, புளிக்குழம்பு, இரசம், மோர், தயிர் என மரக்கறி வகைகளும், தண்ணிக்குழம்பு, கெட்டிக்குழம்பு, எலும்புக்குழம்பு, பொறியல், கூட்டு, அவியல், மசியல், ஈரல் என பிறக்கறி வகைகளும், பாயாசம், பப்படம் (அப்பளம்) எனச் சில வகைகளும் தயார் செய்யப்படும். பிறகு பந்தி விரிப்பதற்கு என சில பாய்கள் அல்லது பிற துணிகளை தயார் செய்யப்படும்.
வாழையிலை தயார் செய்யும் முறை:
பந்தி பரிமாறத் தொடங்கும் முன், வாழையிலை சரிவரி வெட்டி தயார் செய்ய வேண்டும். ஒரு ஆள் உட்காரும் அளவிற்கு நீளமுள்ள ஒரு வாழையிலையை அதன் கிளைத்தண்டில் இருந்து சிறிது இலையையும் சரியாக வெட்ட வேண்டும். ஒரு ஆள் உட்காரும் அளவை விட இலையின் நீளம் நீண்டிருந்தால் அதனை இரு துண்டாக வெட்ட வேண்டும்.
பந்தி விரிக்கும் பாங்கு:
பந்தி விரிக்கும் பொழுது, ஒரு ஆள் சுருட்டிய பந்திப்பாயை விரித்துக் கொண்டே செல்வார். பிறகு அவரைத் தொடர்ந்து ஒருவர் ஒவ்வொரு வாழை இலையாக பந்திப்பாய்க்கு முன் வைத்துக்கொண்டே வருவார். அவ்வாறு இலையை வைக்கும் போது ஒரு ஆள் சரியாக உட்காரும் அளவு இடம் விட்டும், இலையின் பெரியப்பகுதியை உணவு அருந்துபவரின் வலது புறமாக வரும்படியும் இருக்க வேண்டும்.
அடுத்து இன்னொருவர் ஒவ்வொரு இலைக்கும் ஒரு டம்ளர் வைத்துக்கொண்டே வருவார். மற்றொருவர் அட்டம்ளரில் தண்ணீரை நிரப்பிக்கொண்டே வருவார். உணவு உண்டு முடித்த பிறகு நாம் நமது இலையினை மூடி வைத்துவிட வேண்டும். அதுவும் வெளி பக்கமிருந்து நம் பக்கமாக மூடினால் முழு திருப்தி என்றும், உள் பக்கமிருந்து வெளி பக்கமாக மூடினால் அதிருப்தி என்றும் பொருள். ஆதலால் அடுத்த முறை நீங்கள் வாழையிலையை மூடும் போது கொஞ்சம் கவனமாய் செய்யுங்கள்.
உணவு வைக்கும் முறை:
உப்பு
ஊறுகாய்
சட்னிப் பொடி
கோசும்பரி
தேங்காய் சட்னி
பலாப்பழ உண்டி
சித்ரண்ணம்
அப்பளம் (பப்படம்)
கொரிப்பு
இட்லி
சாதம்
பருப்பு
தயிர் வெங்காயம்
இரசம்
பச்சடி
கதிரிக்காய் பக்கோடா
கூட்டு
பொரியல்
அவியல்
கத்ரிக்காய் சாம்பார்
இனிப்பு
வடை
இனிப்பு தேங்காய் சட்னி
கிச்சிடி
காரப்பொரியல்
பாயசம்
தயிர்
மோர்
வாழை இலை உணவின் பலன்கள்:
வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும்.
வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும்.
மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
வாழையிலைச் சூட்டுக்குத் ஒரு பிரத்யேக சுவையும் மணமும் உண்டு.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.
நன்கு பசியைத் தூண்டும்.
வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வாங்கு வாழ்வர்.
No comments:
Post a Comment