கார்த்திகை நாள்:
தமிழ்நாட்டில் கார்மேகம் சோணை மழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.
விரதம்:
இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம்.
கார்த்திகை நட்சத்திரம்:
கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும். இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.
விளக்கேற்றும் முறை:
அகல் விளக்குகளுக்கு குங்குமப் பொட்டு வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் ஊற்றி, பஞ்சாலோ, திரியாலோ ஆன திரியைப் போட்டு பூஜை செய்து, விளக்கு ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும், ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்னியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் (யாகத்தீயில் தேவர்களுக்காகப் போடப்படும் சாதம்) அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாகத் தீபம் ஏற்ற வேண்டும்.
கிழக்கு --> கஷ்டங்கள் விலகும்.
மேற்கு --> கடன் தொல்லை நீங்கும்.
வடக்கு --> திருமணத்தடை அகலும்.
எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.
தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. அன்றைய தினம் நெல் பொரியை நைவேத்தியமாகப் படைத்தால் சிவனருள் கிடைக்கும்.
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்.
மூன்று முகம் ஏற்றினால் - புத்திர தோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்.
ஐந்து முகம் ஏற்றினால் - சகல நன்மைகளும் உண்டாகும்.
கார்த்திகை தீப வரலாறு:
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் இவர்கள் முன் ஜோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும், முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவை வடிவம் கொண்டு சதுர்முகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக்காண திருமால், வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார்.
அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்று ஏற்று கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி காட்சியருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சிவபெருமான், திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார். முழுமுதற்கடவுள் சிவபெருமானே என்ற நோக்கில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
சொக்கப்பனை:
கார்த்திகை தீப விழாவின் முதன்மையான நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் சிறப்பிப்பார்கள். அதை அக்னியின் வடிவம் என்பார்கள். கார்த்திகை தீப நாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்னுள்ள முற்றத்தில் வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றி 10 அல்லது 15 அடி உயரத்திற்குப் பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள். மாலையில் ஆலயங்களின் உச்சியில் தீபம் ஏற்றியதும், பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாராதனை செய்து, கோவிலுக்கு முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கூம்புகளுக்கு முன்பாக எழுந்தருளச் செய்வார்கள். பின்னர், சுவாமிக்குத் தீபாராதனை செய்து, அந்தச் சுடரால் இந்த சொக்கப்பனைகளைக் கொளுத்துவர். சுடர் வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியும். அந்த ஜோதியை சிவனாகவே எண்ணி வழிபடுவார்கள். இது, அக்னி மய லிங்கமாகும்.
மாவளி:
கார்த்திகைத் தீப நாளில் ‘மாவளி’ சுற்றுதல் என்ற விளையாட்டும் நிகழும். பனம் பூளையை அதாவது, பனம் பூக்கள் மலரும் காம்பு. இதை நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கிவிடுவார்கள்.
பிறகு, அதை நன்கு அரைத்துச் சலித்துத் துணியில் சுருட்டிக் கட்டுவார்கள். அடுத்து, பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்துக் கட்டுவார்கள். பிறகு அதை உறியைப் போல் நீண்ட கயிற்றில் பிணைப்பார்கள்.
இதையடுத்து, துணிப்பந்தில் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர். கயிற்றைப் பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு, எரிநட்சத்திரம் வேகமாகச் சுழன்று ஓடினால் எப்படி இருக்குமோ அப்படியாகக் காட்சி தரும்.
இந்த தீப திருநாளில் அனைவரும் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்த்திப்போமாக...
No comments:
Post a Comment