This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.
Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Friday, 23 November 2018

திருக்கார்த்திகை

கார்த்திகை நாள்:


தமிழ்நாட்டில் கார்மேகம் சோணை மழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.


விரதம்:


இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம்.


கார்த்திகை நட்சத்திரம்:


கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும். இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.


விளக்கேற்றும் முறை:


அகல் விளக்குகளுக்கு குங்குமப் பொட்டு வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் ஊற்றி, பஞ்சாலோ, திரியாலோ ஆன திரியைப் போட்டு பூஜை செய்து, விளக்கு ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும், ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்னியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் (யாகத்தீயில் தேவர்களுக்காகப் போடப்படும் சாதம்) அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாகத் தீபம் ஏற்ற வேண்டும்.


கிழக்கு --> கஷ்டங்கள் விலகும். 


மேற்கு --> கடன் தொல்லை நீங்கும். 


வடக்கு --> திருமணத்தடை அகலும். 


எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது. 


தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. அன்றைய தினம் நெல் பொரியை நைவேத்தியமாகப் படைத்தால் சிவனருள் கிடைக்கும். 


ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும். 


இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும். 


மூன்று முகம் ஏற்றினால் - புத்திர தோஷம் நீங்கும். 


நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும். 


ஐந்து முகம் ஏற்றினால் - சகல நன்மைகளும் உண்டாகும். 


கார்த்திகை தீப வரலாறு:


படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் இவர்கள் முன் ஜோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும், முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவை வடிவம் கொண்டு சதுர்முகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக்காண திருமால், வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார்.


அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்று ஏற்று கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி காட்சியருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சிவபெருமான், திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார். முழுமுதற்கடவுள் சிவபெருமானே என்ற நோக்கில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.


சொக்கப்பனை:


கார்த்திகை தீப விழாவின் முதன்மையான நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் சிறப்பிப்பார்கள். அதை அக்னியின் வடிவம் என்பார்கள். கார்த்திகை தீப நாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்னுள்ள முற்றத்தில் வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றி 10 அல்லது 15 அடி உயரத்திற்குப் பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள். மாலையில் ஆலயங்களின் உச்சியில் தீபம் ஏற்றியதும், பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாராதனை செய்து, கோவிலுக்கு முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கூம்புகளுக்கு முன்பாக எழுந்தருளச் செய்வார்கள். பின்னர், சுவாமிக்குத் தீபாராதனை செய்து, அந்தச் சுடரால் இந்த சொக்கப்பனைகளைக் கொளுத்துவர். சுடர் வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியும். அந்த ஜோதியை சிவனாகவே எண்ணி வழிபடுவார்கள். இது, அக்னி மய லிங்கமாகும்.


மாவளி:


கார்த்திகைத் தீப நாளில் ‘மாவளி’ சுற்றுதல் என்ற விளையாட்டும் நிகழும். பனம் பூளையை அதாவது, பனம் பூக்கள் மலரும் காம்பு. இதை நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கிவிடுவார்கள்.


பிறகு, அதை நன்கு அரைத்துச் சலித்துத் துணியில் சுருட்டிக் கட்டுவார்கள். அடுத்து, பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்துக் கட்டுவார்கள். பிறகு அதை உறியைப் போல் நீண்ட கயிற்றில் பிணைப்பார்கள்.


இதையடுத்து, துணிப்பந்தில் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர். கயிற்றைப் பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு, எரிநட்சத்திரம் வேகமாகச் சுழன்று ஓடினால் எப்படி இருக்குமோ அப்படியாகக் காட்சி தரும்.


     இந்த தீப திருநாளில் அனைவரும் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்த்திப்போமாக...


Wednesday, 14 November 2018

தீபம் ஏற்ற சிறந்த உலோகம்


    இல்லங்களிலும் இறைவன் சன்னிதானத்திலும் பரிகாரங்களுக்காக தீபம் ஏற்றுவதற்கு என்ன எண்ணெய், என்ன திரி பயன்படுத்த வேண்டும் என்று பலர் சொல்கிறார்கள். அதே போல என்ன உலோகத்தால் ஆன விளக்கு வேண்டும் என்ற விதியும் இருக்கிறது.


லஷ்மி கடாட்சம் வேண்டுமானால் வெள்ளி விளக்கிலும், 


ஆரோக்யம் ஏற்பட வெண்கல விளக்கிலும், 


தேவதைகளின் வசியம் ஏற்பட பஞ்சலோக விளக்கிலும், 


சனிதோஷம் விலக இரும்பு விளக்கிலும் தீபம் ஏற்ற வேண்டும். 


இவை அனைத்தையும் விடவும் மிகவும் சிறந்தது சகல தோஷங்களையும், சகல பீடைகளையும் போக்க கூடியது மண் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதாகும்.

Monday, 12 November 2018

விநாயகரின் துணைவிகள்

இந்து புராணத்தில் யானை முகத்தினைக் கொண்ட விநாயக கடவுளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு விசேஷ இடமும் அளிக்கப்பட்டுள்ளது.விநாயகரின் பிறப்பு மற்றும் வீரத்தை குறிக்கும் கதைகள் பலவற்றை நாம் அறிவோம். அவரின்மணமான தகுநிலை பற்றி புராண கதைகளில் விவரிக்கப்பட்டுள்ளது. 


தென் இந்தியாவில் விநாயகர் ஒரு பிரம்மச்சாரி, அதாவது திருமணமாகாத கடவுளாக பார்க்கப்படுகிறார். ஆனால் அவரின் மணமான தகுநிலை பற்றியும், அவரின் துணைவிகளை பற்றியும் பல நம்பிக்கைகள் இருக்க தான் செய்கிறது. இரட்டை சகோதரிகளான ரித்தி மற்றும் சித்தியை அவர் மணமுடித்துள்ளார் என நம்பப்படுகிறது.


விநாயகர் மற்றும் அவரின் மணமான தகுநிலை பற்றிய புராணங்களை பார்க்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில்பல விதமான நம்பிக்கைகள் நிலவி வருகிறது. புத்தி (அறிவு), சித்தி (ஆன்மீக சக்தி)மற்றும் ரித்தி (வளமை) ஆகியோரை விநாயகர் மணந்துள்ளார் என பல பக்தர்கள் நம்பி வருகின்றனர். இன்னும் சில இடங்களிலோ சரஸ்வதி தேவியின் கணவராக விநாயகர் அறியப்படுகிறார். விநாயகரை பற்றியும், அவரின் மணமான தகுநிலை பற்றியும் இந்த வட்டார வேறுபாடுகள் உள்ளதால் பலவித குழப்பங்கள் நிலவுகிறது. 


சிவபுராணத்தில் விநாயகரின் திருமணம் விவரிக்கப்பட்டுள்ளது. விநாயகரும், அவருடைய தம்பியுமான கந்தனும் பிரஜாபதியின் புதல்விகளான சித்தி மற்றும் புத்தியை மணக்க போட்டி போட்டுள்ளனர். தன் சாதூரியத்தால் இந்த சண்டையில் ஜெயித்த விநாயகர், அந்த இரட்டை சகோதிரிகளை தனக்கு மணம் முடித்து வைக்க தன் பெற்றோரான பரமசிவன் பார்வதியிடம் கோரிக்கை விடுத்தார். விநாயகருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது: சித்திக்கு பிறந்த ஷேமா மற்றும் புத்திக்கு பிறந்த லாபா. 


அஷ்ட சித்தியுடனான விநாயகரின் உறவும் நன்கு அறியப்பட்டதே. யோகா மூலமாக அடையப்படும் 8 ஆன்மீக ஆற்றல்களே இந்த அஷ்டசித்தியாகும். விநாயகரை சுற்றியுள்ள எட்டு பெண்கள் தான் இந்த 8 ஆன்மீக சக்திகளை குறிக்கிறார்கள். 


சந்தோஷி மாதாவிற்கு தந்தையாகும் விநாயகரை சிலர் குறிப்பிடுகின்றனர். மேற்கு வங்காளத்தில் வாழை மரத்துடன் விநாயகரை சம்பந்தப்படுத்துகின்றனர். துர்கை பூஜையின் முதல் நாளன்று, சிவப்பு நிற பார்டர்கொண்ட வெள்ளை நிற சேலையை வாழைமரத்தில் சுற்றி, அதன் இலைகளின் மீது குங்குமம் தெளிக்கப்படும். 'காலா பௌ' என அழைக்கப்படும் இந்த மரத்தை வணங்கிய பிறகு அதனை விநாயகரின் வலது பக்கம் வைப்பார்கள். இந்த காலா பௌவை விநாயகரின் மனைவியாக பல வங்காள மக்கள் கருதுகின்றனர்.


ரித்தி மற்றும் சித்தி என இரண்டு பேர்களுடன் விநாயகர் சம்பந்த படுத்த பட்டிருந்தாலும், அவரை கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரியாக பல பக்தர்கள் கருதுவதால், அந்த பெண்களுடனான அவரின் உறவு முறை தெளிவற்று உள்ளது. 


இந்த ஜோடிக்கு புராண சான்று எதுவும் இல்லை; ஆனால் சிவபுராணத்தில் புத்தி மற்றும் சித்தி பற்றியும். மத்ஸ்ய புராணாவில் ரித்தி மற்றும் புத்தி பற்றியும் குறிப்பிட பட்டுள்ளது. இந்து மதத்தில், விநாயகரை அவருடைய துணைவியான ரித்தி மற்றும் சித்தியுடன் சேர்ந்து தான் வணங்குகின்றனர்.

Friday, 9 November 2018

கந்த சஷ்டி விரதம்

நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார் 


தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும்.மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு. மாலையில் தம்பம், பிம்பம், கும்பம் ஆகியவற்றில் முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடவேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்வது விசேஷம்.


இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது. இதனால் வீட்டில் உள்ள தீயசக்திகள் அகலும். சுபிட்சம் குடிகொள்ளும்.


ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை அன்னதானம் செய்து, விரதத்தை முடிக்க வேண்டும்.


ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் அருளும் பொருளும் கிடைத்து ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம். 


விரத முறைகள்:

தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருத்தல் வழக்கம். அமாவாசைத் தினத்தில் ஒரு வேளை உணவு உண்பர்.

இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது. ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.


தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பையணிந்து, காப்புக்கட்டல்அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.


பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர். இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.

முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நாடக பாணியில் நடைபெறுவது வழக்கம்.

சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.

கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.

ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம்.


கந்த விரத மகிமை:


முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக *கந்தசஷ்டி* விரதம் அமைகிறது. கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.


கந்தசஷ்டி விரதத்தின் பலன்:


குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்


முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.


வரலட்சுமி விரதம்

முன்பு ஒரு காலத்தில் சவுராஷ்டிர தேசத்தில் பத்ரஷ்ரவா என்றொரு அரசன் இருந்தான். அவன் மிகவும் நல்ல முறையில் ஆட்சி நடத்தி வந்தான். அவனது மனைவி கசந்திரிகா அவளும் கணவனுக்கேற்ற மனைவியாக எல்லா வகையிலும் விளங்கினாள். எந்நேரமும் நல்ல சொற்களையே பேசி வேலைக்காரர்களை நல்ல முறையில் நடத்தி வந்தாள். அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு சியாமா என்று பெயரிட்டு அருமை பெருமையாக வளர்த்து வந்தார்கள்.


தினமும் லட்சுமி பூஜை செய்யாமல் கசந்திரிகா உணவருந்த மாட்டாள். கணவனுக்கு மிகவும் உதவியாகவும், வயதான மாமனார், மாமியாரை போற்றிப் பாதுகாப்பதில் மிகவும் அக்கறை உள்ளவளாகவும் இருந்தாள் அந்த மாதரசி. இதனால் மனம் மகிழ்ந்த லட்சுமிதேவி அவளுக்கு அருள் புரிய எண்ணினாள். ஓர் ஆடி வெள்ளிக்கிழமை நாளில் மிகவும் வயதான சுமங்கலி போல கசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தாள்.


அப்போதுதான் பகல் உணவு உண்டு முடித்து தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தாள் கசந்திரிகா. அந்த சுமங்கலியை வரவேற்று உரிய முறையில் உபசரித்தாள். வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞ்சள் முதலிய மங்கலப் பொருட்களைக் கொடுத்தாள். “தாயே, தாங்கள் யார்? என்னை நாடி வர என்ன காரணம்“ என்று கேட்டாள்.


அதற்கு லட்சுமி தேவி, “அதை அப்புறம் சொல்கிறேன். என் கேள்விக்கு நீ முதலில் பதில் சொல். நீ வணங்கும் லட்சுமி தேவியின் அவதார தினமான இன்று அதிதிக்கு உணவிடாமல் நீ இப்படி வயிறார சாப்பிட்டு தாம்பூலம் தரித்துக் கொண்டிருக்கிறாயே இது நியாயமா?” என்று கேட்டாள்.


ஒருபோதும் கோபமே வராத கசந்திரிகாவுக்கு அன்று மிகவும் ஆத்திரம் வந்து விட்டது. “நீ யாரோ ஒரு பிச்சைக்காரக் கிழவி, எனக்கு புத்தி சொல்வதா?” என்று கேட்டு அன்னையைக் கன்னத்தில் அடித்து விட்டாள். லட்சுமி தேவியும் ஒன்றும் சொல்லாமல் கண்கள் சிவக்க அந்த அரண்மனையை விட்டு வெளியேறத் தொடங்கினாள். அப்போது சியாமா அங்கு வந்து அந்த சுமங்கலியைப் பார்த்து, “தாங்கள் யாரம்மா? ஏன் கண்கள் சிவந்திருக்கின்றன? உங்களை யாராவது ஏதாவது சொன்னார்களா? என்று பரிவோடு வினவினாள்.


இதனால் உள்ளம் குளிர்ந்த திருமகள், “சியாமா, உன் அன்னைக்கு எப்படி லட்சுமிதேவியை முறைப்படி பூஜிப்பது என்பதை சொல்லிக் கொடுக்க வந்தேன். அனால் அவள் என் கன்னத்தில் அடித்து அவமானப்படுத்தி அனுப்பி விட்டாள்” என்றாள். உடனே “தாயே அந்தப் பூஜையை எனக்குக் கற்றுக் கொடுங்கள். நான் முறைப்படி செய்கிறேன்” என்று சியாமா கூற, அவ்வாறே அன்னையும் பூஜை முறைகளை அருளிச் செய்தாள்.


அன்று முதல் சியாமா ஒவ்வொரு வருடமும் அந்த பூஜையை மிகச் சிறப்பாகச் செய்து வந்தாள். லட்சுமிதேவி அரண்மனையை விட்டு நீங்கியதால் பத்ரஷ்ரவா அரசனின் செல்வங்கள் குறைய ஆரம்பித்தன. எல்லாச் செல்வமும் தன்னை விட்டுப் போகும்முன் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்றான். சியாமா வருடந்தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்த பலனால் அவளுக்கு அவளை போற்றிப் பாதுகாக்கும் கணவனாக மாலாதரன் என்ற மன்னன் வாய்த்தான். சியாமா கணவன் வீடு சென்றாள்.


ஒரு நிலையில் பத்ரஷ்ரவாவின் எதிரிகள் அவனையும், அவனது மனைவியையும் நாட்டை விட்டுத் துரத்தி விட்டு சிம்மாசத்தைப் பிடித்துக் கொண்டனர். ஒரு பிடி சோற்றுக்குக் கூட வழியின்றி காட்டில் அலைந்தனர் இருவரும். தன் பெற்றோரின் நிலை சியாமாவை மிகுந்த வருத்தத்துக்குள்ளாக்கியது. அவர்களை தன் நாட்டுக்கு அழைத்து உணவிட்டுக் காத்து வந்தாள். ஒரு முறை அவள் ஒரு குடம் நிறைய பொற்காசுகளைப் போட்டு தனது தாயிடம் கொடுத்து இதை வைத்துப் பிழைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினாள். கசந்திரிகா தெட்டதும் அந்தப் பானையில் இருந்த தங்கக் காசுகள் எல்லாம் கரித் துண்டுகளாக மாறி விட்டன.


இதைக் கண்ட சியாமாவுக்கு அப்போது தான் தன் தாய் அந்த சுமங்கலியை அவமானப்படுத்தி அனுப்பிய நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. வந்தது சாதாரண மானிடப் பெண்ணில்லை. அந்த மகாலட்சுமியே தான் என்று உணர்ந்து அதை தன் தாயிடம் கூறினாள். தன் தவறை உணர்ந்த கசந்திரிகாவும் வரலட்சுமி பூஜை முறையை தனக்குக் கற்பிக்குமாறு கேட்டுக் கொண்டாள்.


அந்த தருணம் முதல் கசந்திரிகாவும் அந்த பூஜையை முறைப்படி செய்து வந்தாள். அதன் பலனாக அவள் கணவன் தைரிய லட்சுமியின் அருள் பெற்று, வீரத்துடன் படை வீரர்களை சேர்த்துக் கொண்டு சென்று எதிரி மன்னனை வீழ்த்தி மீண்டும் முடி சூடினான். இழந்த செல்வங்கள் வைபவங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றாள் கசந்திரிகா.


இந்தக் கதையை வரலட்சுமி விரதம் இருக்கும் தினத்தன்று வயதான சுமங்கலியின் வாயால் சொல்லிக் கேட்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.


வரலட்சுமி பூஜைக்கான மற்றொரு கதை:


வரலட்சுமி பூஜையால் பலன் பெற்ற மற்றொரு பெண் சாருமதி. அவள் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, மணந்த ஒரு பெண்மணி. ஆனால் அவள் தன் கணவனிடமும், குழந்தைகளிடமும் காட்டிய ஈடுபாடு காரணமாக மனமிரங்கிய மகாலட்சுமி அவள் கனவில் வந்து வரலட்சுமி விரதத்தைப் பற்றி எடுத்துக் கூறினாள். மறுநாள் எழுந்த சாருமதி தன் கனவைப் பற்றிக் கூற அதைக் கேள்விப்பட்ட பலரும் அந்தப் பூஜையை செய்தனர். அதனால் நன்மக்கட் பேறுடன் என்றும் சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெற்றனர்.


மானிடப் பெண்களுக்கு மட்டுமல்ல, தேவகுலப் பெண்களும் இந்த பூஜை செய்து பயனடைந்து உள்ளனர். சித்திரநேமி என்றொரு தேவகுலப் பெண் இருந்தாள். அவள் நடுநிலை தவறாதவள் என்று பெயரெடுத்தவள். அதனால் தேவர்களிடையே எழும் சில சச்சரவுகளுக்கு அவளே நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவாள். 


ஒருமுறை அவள் நடுநிலை தவறி தீர்ப்பு சொல்லி விட்டாள். அதனால் அவளுக்கு தொழு நோய் பீடிக்கும்படி சாபம் கொடுத்தாள் அன்னை உமையவள். தன்னை மன்னிக்கும்படி வேண்டி கேட்டுக் கொள்ள, மனமிரங்கிய தேவி கங்கை நதிக்கரையில் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்தால் அவளுக்கு உள்ள நோய் நீங்கும் என்று சொன்னாள்.


சித்திரநேமியும் அவ்வாறே கங்கைக் கரை வந்து வரலட்சுமி பூஜையைச் செய்ய அவளது நோய் நீங்கி நல்லுருவம் பெற்றாள். அவள் “என்னைப் போல புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சிந்து, காவிரி, தாமிபரணி முதலிய நதிகளில் நீராடி இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு பலன் பல மடங்கு கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டாள். லட்சுமியும் அவ்வாறே செய்வதாக கூறினாள். அதனால் இந்த பூஜையை நதிகளில் நீராடிய பின் செய்வது மிகவும் சிறப்பு என்பது ஐதீகம்.


வரலட்சுமி விரதம் பற்றிய புராணக்கதை:


சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடத்துக்கொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள்.


சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதி காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். உடனே சித்திரநேமி பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள். புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். 


இன்றைய நாளில் பெண்கள் புண்ணியநதிகளில் தீர்த்தமாடினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். 


எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.