நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார்
தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும்.மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு. மாலையில் தம்பம், பிம்பம், கும்பம் ஆகியவற்றில் முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடவேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்வது விசேஷம்.
இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது. இதனால் வீட்டில் உள்ள தீயசக்திகள் அகலும். சுபிட்சம் குடிகொள்ளும்.
ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை அன்னதானம் செய்து, விரதத்தை முடிக்க வேண்டும்.
ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் அருளும் பொருளும் கிடைத்து ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம்.
விரத முறைகள்:
தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருத்தல் வழக்கம். அமாவாசைத் தினத்தில் ஒரு வேளை உணவு உண்பர்.
இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது. ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பையணிந்து, காப்புக்கட்டல்அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.
பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர். இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.
மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.
முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நாடக பாணியில் நடைபெறுவது வழக்கம்.
சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.
கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.
ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம்.
கந்த விரத மகிமை:
முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக *கந்தசஷ்டி* விரதம் அமைகிறது. கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.
கந்தசஷ்டி விரதத்தின் பலன்:
குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்
முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.
No comments:
Post a Comment