வயதில்
ஆடக் கற்றவன்,
பலர்
ஆடி முடிந்தபின்னும்
ஆடிக் கொண்டிருக்கிறான்!
மைதானங்களின்
புழுதியில்,
மையல் கொண்டிருந்தன
அவன் கால்கள்!
சீறி வரும்
பந்துகளை
சிதறடிப்பதில் இருந்தது
அவன் காதல்!
அக்னி வெயிலில்
ஆண்டுதோறும்
காய்ந்துகொண்டு இருந்தது
அவன் தேகம்!
பழம் தின்று கொட்டை போட்ட
ராஜாங்கங்களுக்கு மத்தியில்,
ஆரம்பமானது
அவன் அரங்கேற்றம்!
பாலகன் என்று
பரிகசித்த பலராலும்
பார்த்துக்கொண்டு
நிற்கத்தான் முடிந்தது!
சிங்கங்களே மண்ணைக் கவ்வும்
போர்க்களத்தில்,
சிறுவனாய் நின்று
சாதிக்க ஆரம்பித்தான்!
உயரத்தை கேலி
செய்தோர் மத்தியில்,
உயரத்தை
உயர்த்திக் கொண்டே சென்றான்!
புகழும் பரிசும்
தேடி வந்தன!
சாதனைகளும் சரித்திரங்களும்
கூடிக்கொண்டே சென்றன!
ஆனால்
இதற்காகவா,
இந்த சாதனைகளுக்காகவா,
எல்லோரும் நேசிக்கின்றனர் அவரை?
இல்லை.
துவண்டு கிடக்கும்
கோடான கோடி நெஞ்சங்களில்,
நம்பிக்கை என்னும்
நல்விதையை நட்டதால்....!
தோற்றுவிடுவோம் என்று
தடுமாறும் வேளையில்,
தோல்வி வரும் வரை
எதிர்த்து போராடியதால்.....!
தனியொரு மனிதனால்
என்ன செய்ய முடியும்
என்ற கேள்விக்கு
தனியாய் நின்று பதில் சொன்னதால்....!
எதிரே நின்று போட்டியிடுபவனை
எதிரியாய்ப் பார்க்கும் உலகில்,
பிற நாட்டினரின்
பாராட்டைப் பெற்றது,
அவரின் சாதனைகளால் அல்ல....!
சளைக்காத முயற்சியாலும்,
அயராத உழைப்பாலும்.....!
இன்றும் நாங்கள்
இவருக்கு தலைவணங்குவது
எங்களுக்காக
போராடுவதால் அல்ல.....!
எங்களுக்குள் நம்பிக்கையை
விதைத்தத்தால்......!
-செல்லா
No comments:
Post a Comment