ஆதவன் கிழக்கு திசையில் தன் வரவினை உலகிற்கு உணர்த்தும் முன்பே, மலைக்காட்டு பறவைக் கூட்டங்கள் வரப்போகும் விடியலை தங்களது கீச்சுக்குரலால் ஆடம்பரமாய் அறிவிக்க தொடங்கிய அதிகாலை நேரம். மண்ணெல்லாம் மரமாகவும், விண்ணெலாம் மழை மேகமாகவும், மலையெல்லாம் பால்வண்ண நீரோடைகளாகவும் பார்க்கும் திசையெல்லாம் வண்ணமயமான ஓவியம் போல புத்தொளி பூண்டு ஜொலித்தது மேற்கு தொடர்ச்சி மலை.
மலையினை ஒட்டினார் போல் பாதையின் இரு மருங்கிலும் பசுமை போர்த்தி இருந்த தார்ச் சாலையில் ஆமையின் வேகத்திற்கு இணையாக நகர்ந்து கொண்டிருந்தது ஒரு அரசு பேருந்து. அது பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் பத்துப் பதினைந்து பேர் கொண்ட சிறுவர் சிறுமியரின் பட்டாளத்தினால் பாதி ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. எஞ்சிய மிச்சசொச்ச இடங்களை காட்டிற்கு சுள்ளி பொறுக்க செல்லும் வெற்றிலை வாய் கிழவிகளும், கூலி வேலைக்கு செல்லும் தலைப்பாகை துண்டு கட்டிய ஆண்களும் நிறைத்திருந்தனர். அதே பேருந்தின் முன் வரிசை இருக்கையில் அந்த ஊர் மக்களுக்கு சற்றும் பொருந்தாத நவநாகரீக ஆடை ஆபரணங்கள், கையில் நவீன மாடல் செல்போன், காதில் வயர்லெஸ் ஹெட் போன் சகிதம் பயணித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி...
அவளது மேனியின் வண்ணம் கண்டு அக்காட்டின் அரிய வகை மலைப்பூக்களுக்கும் பொறாமை வரக்கூடும், அளவாய் இருந்தாலும் அழகாய் காற்றிலாடும் கார்முகில் கூந்தலை ஆர்ப்பரிக்கும் அருவிகள் எட்டிப்பார்த்து ஏங்கித் தவிக்க கூடும், அவளின் குரலின் இனிமையை கேட்டால் குயில்களும் குருவிகளும் தங்களுக்கு வஞ்சனை செய்ததாய் இறைவன் மேல் கோபம் கொள்ளக் கூடும், அட்சய ரேகையும் தீர்க்க ரேகையும் அவளின் உள்ளங்கை ஆயுள் ரேகை கண்ட பிறகு திசை மாறி பாயக் கூடும், இன்னும் சொல்வதென்றால் அவள் மேனியின் வனப்பு கண்டு வனமகளும் மனம் வாடி தொட்டாச்சிணுங்கியாய் ஒரு நொடி முகம் சுருங்க கூடும்.
உருண்டு கொண்டிருந்த பேருந்தின் வேகம் இப்போது இன்னமும் குறைந்ததாய் தோன்ற வெளியே எட்டிப் பார்த்தவள், 'ஓ பஸ் நின்றுச்சு போல...' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே பேருந்துக்குள் தன் பார்வையை சுழற்ற, அவள் முதுகுப்பக்கம் நின்றிருந்த கன்டெக்டர் அவளிடம் காற்றில் ஏதோ படம் வரைந்து காட்டிக் கொண்டிருந்தார்.
"என்ன?" என்றாள்....
அவர் மீண்டும் காற்றில் படம் வரைய தொடங்கவே, தன் காதில் இருந்த வயர்லெஸ் ஹெட்போனை கழட்டி விட்டு, "என்ன சொல்றீங்க?" என்றாள்.
"ஏம்மா... நீ என்ன செவிடா? எத்தன தடவ சொல்றது.. நீ இறங்கவேண்டிய வீராம்புத்தூர் இதுதான்...." என்று கோபம் ஏறிய குரலில் கத்தினார்.
"ஓ... சாரி சாரி, தேங்க்ஸ்ங்க..." என்றவள் தன்னுடைய மூன்று லக்கேஜையும் மேலும் ஒரு இலவச இணைப்பான ஹேண்ட் பேக்கையும் விருவிருவென ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வைக்க முற்பட்டாள்.
பேருந்தில் இருந்த முத்தைய்யா தாத்தா, "ஏம்மா, ஒத்த பொம்பள புள்ள எத்தன பைய தூக்கிட்டு வந்திருக்க?" என்று பின் வரிசையில் இருந்து குரல் கொடுத்தார்.
அவரின் அங்காளி பங்காளி முறை உள்ள மற்றொரு தாத்தா, "ஏன் முத்தைய்யா, நீதான் அந்த புள்ள கூடவே பொட்டி தூக்க போறது..." என்று வம்பிழுக்க,
முத்தைய்யா தாத்தா, "போயிருவேன், அப்புறம் அந்த ராமாயி கெழவி (முத்தைய்யாவின் மனைவி) ஒண்டிக்கட்டையா ஆயிருவாளேன்னு பாக்குறேன்...." என்றார்.
முன்வரிசையில் வெற்றிலை உதப்பிக் கொண்டிருந்த கிழவிகளில் ஒருவர், "ஏன் மச்சான்? இந்த வயசுலயும் இன்னொரு கல்யாணத்துக்கு ரெடியாத்தேன் இருக்கீரு போல..."
"பின்ன, நீதேன் இந்த அத்தானுக்கு ரெண்டாந்தாரமா வாக்கப்பட மாட்டேன்னுட்ட, அப்புறம் எதுக்கு வாய வளக்குற? அந்த புள்ள என்ன கட்டிக்கிட ஒத்துக்கிடுச்சுன்னா இந்த ஊரையே அவ பேர்ல எழுதி வச்சுர மாட்டேன்."
"ஆமா... நீ எப்ப எழுதி வப்பன்னு காடும் கரையும் அங்கென காத்து கெடக்கு பாரு. புதுசா ஒரு பொம்பளய பாத்துட கூடாதே, ஒடனே மல்லியனூர்க்கார ஆம்பளைங்க பூரா வாய பொளந்துக்கிட்டு வந்திடுவீங்க, இந்தா கன்டக்டரு நீயும் அவகளோட சேந்துட்டியா? கொமரிய பாத்துகிட்டே எம்புட்டு நேரம் பஸ்ஸ இங்குன நிறுத்தி வச்சிருக்க போற? காலா காலத்துல வண்டியை கிளப்புய்யா. கெழவிகன்னா மட்டும் வெண்ணித் தண்ணிய கால்ல ஊத்துனாப்புல நேரமாச்சு, கவர்ன்மெண்ட்டுக்கு நஷ்டம் ஆவுதுன்னு சொல்லி அந்த குதி குதிப்ப, பொம்பள புள்ளைகன்னா கவர்ன்மெண்டுக்கு லாப கணக்கு வந்துடுமோ?"
கன்டெக்டர், "ஏம்மா, நான் என்ன அந்த பொண்ணுக்கு டாட்டா காட்டுறதுக்கா பஸ்ஸ நிறுத்தி வச்சிருக்கேன். நீதான் பாக்குறேல்ல, அந்த பொண்ணு மூணு பொட்டியையும் எடுத்துட்டு இறங்க வேணாம்?..."
அது நேரம் வரையில் அமைதியாக அத்தனை பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டே தரையில் இறங்கியவள், பேருந்து புறப்படும் முன்பாக சற்றே எம்பி உள்ளிருந்த முத்தையா தாத்தாவிற்கு மட்டும், "லவ் யூ தாத்தா... பாய்... சீ யூ..." என்றுவிட்டு ஒரு பறக்கும் முத்தத்தை தூக்கி எறிந்தாள்.
அடுத்த நொடியே பேருந்தில் இருந்த அத்தனை பேரும் கலகலவென்று சிரிக்கும் சத்தம் வெளியில் வரை கேட்டது. இனி அவர்கள் இறங்கும் இடம் வரும் வரைக்கும் கள்ளம் கபடம் இல்லாத இந்த பேச்சும் சிரிப்பும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் என்ற சந்தோஷத்தோடு வீராம்புத்தூரில் தனது முதல் காலடியை பதித்தாள் அவள்.
பாதையின் இரு மருங்கிலும் வயல் வெளிகளே அதிகமாய் இருக்க, தெரியாத ஊரில் பாதை மாறி போய் விட கூடாதே என்ற திடீர் பயம் அவள் விழிகளை சூழ்ந்தது. தான் போகும் திசையை ஒருமுறை சரிபார்த்துவிட நினைத்தவள், உடனே நமது அண்ணன் கூகுள் மேப்பில் உதவியை நாடினாள். தமிழ்நாட்டு மேப்பிலேயே தேடி கண்டுபிடிக்க வேண்டிய சிறிய ஊர் என்பதால் டவர் கிடைக்காமல் முதல் எண்ணாகிய ஜியோ தகராறு செய்ய, இப்படிப்பட்ட சூழ்நிலைகளை சமாளிப்பதற்கென்றே கைவசம் வைத்திருந்த இரண்டாம் எண்ணாகிய ஏர்டெல்லுக்கு தாவினாள். நல்ல வேளையாக அதில் ஓரளவு டவர் கிடைத்திட, தன் தந்தைக்கு அதன் மூலம் அழைப்பு விடுத்தாள்.
"அப்பா... நான் வந்துட்டேன். பஸ் ஸ்டாப்புல நிக்கிறேன், ரூட்டு சரியா தெரியல நீங்க வந்து பிக்கப் பண்ணிக்கோங்க."
"அம்மாடி சாரிம்மா... அப்பா காலையிலேயே எக்ஸ்கவேஷன் ஸ்பாட்டுக்கு வந்துட்டேன். என்னால இப்ப வெளியில வர முடியாதும்மா. நீ பயப்படாத, இந்த ஊருக்கு ஒரே ஒரு பாதைதான் இருக்கு. நானும் பஸ் ஸ்டாப்ல இருந்து ஒரு இருபது நிமிஷ தூரத்தில தான் இருக்கேன், என் செல்லம்ல, நீயே நடந்து வந்திடுறியா?"
அவளோ பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு "ப்பா... நான் படிப்ப முடிச்சு ஹாஸ்டல வெகேட் பண்ணிட்டு வந்து இருக்கேன். மூணு பெரிய லக்கேஜ் நிறைய திங்ஸ் இருக்கு, என்னால இதையெல்லாம் தூக்கிட்டு நிக்கவே முடியலப்பா, கை வலிக்குது. தயவு செஞ்சு வாங்கப்பா, நீங்க பெத்த பொண்ணு நடுரோட்ல நிக்கிறேன்ப்பா...." என்று சென்டிமென்டாக பேசி அட்டாக் செய்தாள்.
"சாரிம்மா... என்னால வர முடியாது."
"நீலகண்டா.... வந்தேன்னா உன்ன கொன்னுடுவேன், பெத்த பொண்ண விட மண்ண தோண்டுறது உனக்கு முக்கியமா போச்சா..."
"அவசரப்படாம நான் சொல்றத முழுசா கேளும்மா... நான் பஸ் ஸ்டாப்புக்கு வேற ஆள் அனுப்புறேன், நீ ஜாக்கிரதையா அவங்க கூட வந்திடு..."
இப்போது, "ம்...." என்று சந்தோஷமாக தலையாட்டினாள்.
ஆள் என்றால் குழி தோண்டும் வேலைக்கு வந்தவர்களிலிருந்து ஏதாவது ஒரு பணியாள் வருவான், என்று எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு எதிரில் பளபளக்கும் கறுப்பு நிற டாடா சுமோ ஒன்று வந்து நின்றது.
'இது நமக்கு வந்ததுதானா? இல்ல நமக்கே வழி தெரியாம முழிக்கும் போது, நம்மளயும் நம்பி நம்மட்ட வழி கேக்க வந்து நிக்கிற நல்லவனா?' என்று சந்தேகத்தோடே அந்த காரினை நெருங்கினாள்.
அந்த காரிலிருந்து அளவான முடி, லேசான முறுக்கு மீசை, அயர்ன் செய்யப்பட்ட சட்டை, கருப்புநிற பேண்ட், அதற்கு மேட்சாக காலில் கருப்பு நிற ஷூ என்று டிப்டாப்பாக ஒருவன் இறங்கி வந்து, "ஹாய்... என் பேர் கதிர்வேல்" என்றான்.
"வச்சுக்கோங்க... அதுக்கென்ன?"
"இல்ல உங்க அப்பா உங்களை கூட்டிட்டு வர சொன்னாரு, என் பேர சொல்லி இருப்பாருன்னு நினச்சு ஒரு இன்பர்மேஷனுக்காக என் பேர சொல்லிட்டேன். அதுக்காக ஏங்க மூஞ்சிய இப்படி உர்ருன்னு வச்சிருக்கீங்க?"
"முதல்ல எங்க அப்பா பேர சொல்லி இன்ட்ரடியூஸ் பண்ணிக்காம உங்க பேர சொன்னா, நான் எப்டி நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கிறது?"
"தப்புதாங்க... சரி உங்க பேரு என்ன?"
"யாளி...."
"யாழினி???"
"நோ... இட்ஸ் ஜஸ்ட் யாளி" என்றவள் கோபமாக, 'எல்லாம் எங்கப்பாவ சொல்லணும், அவரோட தமிழ் புலமையை காட்டுறதுக்கு நான் தான் கிடைச்சேனா? ஒவ்வொருத்தருக்கும் என் பேர ரெண்டு தடவை சொல்லி புரிய வைக்க முன்னாடி பாதி ஜீவன் கரைஞ்சிடுது..." என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள்.
"ஆர் யூ ஓகே..." என்றான் கதிர் பவ்யமாக.
"ஓகே இல்லன்னா என்ன பண்ண போறீங்க?"
"சரிங்க... ஓகேனாலும் ஓகே இல்லனாலும் பரவாயில்ல, இந்த பேச்ச இதோட விட்ருவோம், வந்து வண்டியில ஏறுங்க..."
'பரவாயில்ல... நம்ம மிரட்டுனா பய பம்முறானே, இந்த அளவு மரியாதை தர்றான்னா அப்பாக்கிட்ட புதுசா சேர்ந்த ஜூனியர் ஆபீஸரா இருப்பான் போல, ஆனா அப்பாவுக்கே கவர்மெண்ட்டு காரு கொடுக்கலையே இவனுக்கு எப்படி கொடுத்தாங்க? அப்பாவவிட பெரிய ஆபீசரா இருப்பானோ?...'
அவள் காரில் ஏறாமல் ஏதோ சிந்தனை வயப்பட்டிருப்பதை பார்த்த கதிர், "கார்ல ஏறுங்க மேடம்..." என்று இரண்டாவது முறையாக சொல்லிவிட்டு கார் கதவினை திறந்தும் வைத்தான்.
"நீங்க முதல்ல கார யூ டர்ன் போட்டுக்கோங்க, அதுக்கப்புறமா நான் உட்கார்றேன்."
"ஏங்க? என்ன பாத்தா உங்களை கடத்திட்டு போற பூச்சாண்டி மாதிரி இருக்கா? இல்ல கட்டப்பஞ்சாயத்து பண்ற ரவுடி மாதிரி இருக்குதா? இவ்வளவு பயப்படுறீங்க?"
"சே... சே... என்ன கடத்துனா உங்க நிலமைதான் கவலைக்கிடமாகும், நான் சாதாரண ஆள் இல்ல, பெரிய கராத்தே சேம்ப்பியன். கார் யூ டர்ன் போடும்போது உள்ள உக்காந்திருந்தா எனக்கு லைட்டா தலைசுத்துற மாதிரி இருக்கும், அதனாலதான் ஏற யோசிச்சேன்."
கதிர் சிறு புன்னகையோடு, "அப்போ என்ன பாத்து பயமில்ல..." என்றான்.
"பயமா சுத்தமா இல்ல..."
"நான் எப்படி பயமுறுத்தினாலும் நீங்க பயப்பட மாட்டீங்களா?..." என்றவன் விழிகள் எதையோ சொல்ல துடிப்பதை அவள் உணர்ந்து கொண்டாள்.
"கார திருப்பிட்டு வரிங்களா இல்ல நான் நடந்து போகட்டுமா?" என்றாள் சற்றே இறுக்கமான குரலில்.
அவள் பார்வையாலேயே தன்னை தூர நிறுத்துவது புரிய, கதிர் அதற்குமேல் பேசாமல் வண்டியைத் திருப்ப ஆரம்பித்தான். அப்போதிலிருந்து யாளியின் அப்பா இருக்கும் இடத்திற்கு வந்து சேரும் வரையில் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இறங்கிய பிறகும் நன்றி என்றொரு வார்த்தை உதிர்க்காமல், திமிராக நடந்து செல்பவளை கதிர் புன்னகையோடு புருவம் உயர்த்தி பார்த்துக் கொண்டிருந்தான்.
பார்க்கும் இடங்கள் எல்லாம் பச்சை புல் படர்ந்திருக்க, அவற்றின் நட்ட நடுவே ஒரு குறிப்பிட்ட ஏக்கர் பரப்பளவு நிலம் மட்டும் அகழ்வாராய்ச்சிக்காக பள்ளமாய் தோண்டப்பட்டு கிடந்தது. அதன் தென்மேற்கு மூலையில் கோவில் எதுவும் இன்றி ஒரு கறுத்த கல்மண்டபம் மட்டும் தனியாக நின்றிருந்தது. அகழ்வாராய்ச்சி குழுவினர் அதையே தங்களுக்கான அறையாக தேர்ந்தெடுத்து, நேற்று இரவில் இருந்து அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களை எல்லாம் தூசி தட்டி கொண்டிருந்தனர்.
அக்குழுவின் தலைவரான நீலகண்டன் தன் கையில் எதையோ வைத்து தூசு தட்டிக் கொண்டிருக்க, "அப்பா..." என்றபடி அவரை பின்னால் இருந்து இறுக்கி அணைத்தாள் யாளி...
"அம்மாடி... வந்துட்டியா? என்னம்மா துரும்பா இளைச்சிருக்க? வாணிம்மா இந்த வருஷம் உன்ன சரியா கவனிக்கலையா?"
"வாணியம்மாவ பத்தி நீங்க பேசாதீங்க, வார்டனா இருந்தாலும் என் மேல எவ்வளவு அக்கறையா இருக்காங்க தெரியுமா? நீங்களும்தான் இருக்கீங்களே... வருஷத்துக்கு ஒரு தடவ வர்ற பொண்ண ரொம்ப நல்லா வரவேற்குறீங்க. என்ன பிக்கப் பண்ண ஒரு மலைக்குரங்க அனுப்புனீங்களே அது யாரு உங்க ஜூனியரா? பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பாக்குற மாதிரி, வர்ற வழியெல்லாம் என் மூஞ்சியவே வெறிக்க வெறிக்க பார்த்துக்கிட்டு வர்றான்."
"ஷ்... சத்தமா பேசாதம்மா..."
அவள் ரகசிய குரலில், "ஏம்ப்பா? அவன் உங்களை விட பெரிய ஆபீஸரா?" என்றாள்.
"இல்லம்மா... அவரு இந்த ஊரோட பெரும்புள்ளி."
"பெரும் புள்ளினா, அவன் என்ன பெரிய ஜமீன்தாரா?"
"ஆமாம்மா ஜமீன்தாரேதான்... சுத்து பட்டியில பாதி இடத்துக்கு சொந்தக்காரரு, அம்மா அப்பாவுக்கு ஒரே புள்ள, பேருக்குக் கூட எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல பையன், நாங்க இங்க வந்ததுல இருந்து எங்களுக்கு வேண்டிய வசதி எல்லாம் அவரு தான் செஞ்சு கொடுக்கிறாரு, உன்னோட போட்டோவ ஒரு தடவை என்னோட லேப்டாப்பில பார்த்ததிலிருந்து என்கிட்ட கொஞ்சம் எக்ஸ்ட்ரா அக்கறையோட நடத்துகிறாரு. இப்ப கூட உன்ன பிக்கப் பண்றதுக்கு நான் அவருகிட்ட கார் அனுப்ப சொன்னேன். அவரு, 'கார் கூட நானும் போகலாமா'ன்னு எவ்வளவு டீசன்ட்டா பர்மிஷன் கேட்டார் தெரியுமா?"
"ஏம்ப்பா, நீங்க இங்க மண்ண பார்க்க வந்தீங்களா, மாப்பிள்ளை பார்க்க வந்தீங்களா?"
"பார்த்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறேன்..."
"பாத்தீங்களா, நீங்களே உங்கள இம்சை அரசன்னு ஒத்துக்கிட்டீங்க..."
"ஹா... ஹா... எம்பொண்ணு ஜமீன்தாரிணி ஆனா எனக்கு அது சந்தோஷம் தானம்மா..."
"இது சரியில்ல நீலகண்டா... உங்க ஹையர் அபிஷியல் கிட்ட பேசி உன்ன வேற ஊர் ப்ராஜெக்ட்டுக்கு மாத்த சொல்லனும் போலயே..."
"எனக்கு அந்தப் பையன ரொம்ப புடிச்சிருக்கு, இந்த அப்பாவுக்காக நீயும் ஒரு தடவை அவரு கூட பேசி பாரேன்ம்மா, உனக்கும் அவர பிடிக்கும்... உனக்கு விருப்பமில்லைனா வேண்டாம். அப்பாக்காக 'யோசிச்சு பாக்குறேன்...'னு ஒரு வார்த்தை சொல்லும்மா..." என்றார்.
அவள் யோசனையாய் தலை கவிழ்ந்து 'ம்...' எனும் சொல்லை உச்சரிக்கும் முன், அதை தடை செய்யும் விதமாக, அகழ்வாய்வு குழியிலிருந்து ஒருவன், "சார்... சார்... இங்க வந்து பாருங்களேன்..." என்று உயிரே போகும் படி கத்தினான்.
No comments:
Post a Comment