மில்க் தாத்தா மால்ஸ் பாட்டி எங்கே இருக்கீங்க ? என் சவுண்ட் விட்டபடியே துள்ளிக்கொண்டு வந்தாள் சௌமியா ஏய் என்னதிது மரியாதை இல்லாம மில்க்தாத்தா நு கூப்பிடற ? என அவள் அம்மா சகுந்தலா மிரட்ட ஏன் தாத்தா மட்டும் என்னை சேமியானு கூப்பிடலாம் நான் அவரை மில்க் தாத்தா நு கூப்பிட கூடாதோ? என எதிர் கேள்வி போட
அதுக்கென்ன நீ கூப்பிடாம யார் கூப்பிட போறா பேத்தி பொண்ணு என கொஞ்சியபடியே வந்தார் பாலுதாத்தா வாம்மா சகுந்தலா உக்காரு என்னம்மா விஷயம் ? என கேட்டு கொண்டே வந்தது மாலு பாட்டி
ஒண்ணுமில்லமா நாளைக்கு வாக்காளர் அடையாள அட்டைக்கு முகவரி மாற்றத்துக்காக படிவம்7குடுக்க சொல்லி இருக்காங்க இறந்துட்ட என் மாமியார் பேர நீக்கவும் அதே படிவம் குடுக்க சொல்லறாங்க ஒண்ணும் புரியல தாத்தா அதான் உங்க கிட்ட கேட்டுட்டு போலாம் நு வந்தேன்
அதுக்கென்னடியம்மா சொல்லி குடுத்தா போச்சு
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் - 6 ஐ பயன்படுத்த வேண்டும். படிவம் - 6 உடன், ஒரு வண்ணப் புகைப்படம் அல்லது கறுப்பு வெள்ளை புகைப்படம் இணைக்க வேண்டும்.
பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம்
வேறு தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல், மரணம் அல்லது நீக்க வேண்டிய பெயர் ஏதேனும் இருந்தால் இதற்காக, படிவம்-7 ஐ பயன்படுத்தி தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.
பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம்
உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில் (எபிக்) அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது (எ.கா. - பெயரில், வயதில் அல்லது தகப்பனார் பெயரில் தவறு ஏற்படுதல்) தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள் விண்ணப்பிக்க முடியும். தவறான பதிவின் திருத்தத்திற்கு படிவம்-8 ஐ பயன்படுத்துங்கள். அடையாளச் சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பதிவின் இடமாற்றத்திற்கான விண்ணப்பம் வேறு வாக்காளப் பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்காக படிவம்-8 ஐ பயன்படுத்த வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை பெற தேவையான ஆவணங்கள்
வாக்காளர் அடையாள அட்டை பெற அடையாளச் சான்று, பிறப்புச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகியவை அவசியம்.
முகவரி அடையாளச் சான்றாக விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோரின் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்க வேண்டும். வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர்,தொலைபேசி, மின்சாரம், எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும்.
பிறப்புச் சான்றாக மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் சான்றிதழ் ஆகியன ஏற்றுக்கொள்ளப்படும்.
அடையாளச் சான்றாக புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐ.டி. கார்டு ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும்.
ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
வாக்காளர் அடையாள அட்டைக்கு எங்கே / எப்படி விண்ணப்பிப்பது?
மாநகராட்சிப் பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், ஆணையர் அலுவலகம், மண்டல அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம்.
மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் (வாக்காளர் பதிவு அலுவலர்), வட்டாட்சியர் அலுவலகம் (துணை வாக்காளர் பதிவு அலுவலர்) ஆகிய இடங்களில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம்.
உங்களுக்கு அருகிலுள்ள மையத்தை அல்லது தாலுகா அலுவலகத்தில் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரத்தை http://elections.tn.gov.in/EPICCENTREADDRESS1.pdf இத்தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
http://eci-citizenservices.nic.in/default.aspx இந்த இணையதள முகவரிக்குச் சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கவும். உங்களுடைய கைபேசிக்கு, 'verification code' என்ற குறுஞ்செய்தி வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கைப் படிவம் வரும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைக் கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய செல்பேசிக்கு confirmation செய்தி வரும். பின்னர், 'online application' என்பதை கிளிக் செய்து விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
http://www.elections.tn.gov.in/eregistration/ இத்தளத்திலும் உங்களுக்குத் தேவையான விண்ணப்பத்தைத் தேர்வு செய்து விவரங்களைக் கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ததும் உங்களுக்கு பத்து இலக்க எண் தரப்படும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
உங்கள் விண்ணப்பத்தின் நிலையை http://elections.tn.gov.in/apptrack/ இத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
http://www.elections.tn.gov.in/contacts/ இத்தளத்திற்குச் சென்று உங்கள் பகுதி அதிகாரியின் தொடர்புஎண்ணைத் தெரிந்துகொள்ளலாம்.
ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் http://www.elections.tn.gov.in/eroll/ இத்தளத்திற்குச் சென்று தமது விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு www.elections.tn.gov.in/ இத்தளத்திற்குச் செல்லவும்.
இவ்வளோதாண்டியம்மா இது போக முகாம் நடத்தும் போதும் விண்ணப்பிக்கலாம்
ஓ அதுனால தான் ஒரே மாதிரி படிவம் குடுத்தாங்களா என சகுந்தலா சொல்ல பாலு தாத்தாவின் விஷய ஞானத்தை கண்டு வாய்பிளந்து நின்றார் மாலு பாட்டி
மால்ஸ் என்னாச்சுடி ஒரு ஈ உன் வாய்க்குள்ளே டூர் போயிட்டு வருது பார் என பாலுதாத்தா கலாய்க்க இப்போதான் உங்களை பத்தி நல்லதா நினைச்சேன் அதுக்குள்ளே என்ன சீண்டலேனா உங்களுக்கு பொழுதே போகாதே இதத்தான் ஐயோ பாவம் நா ஆறுமாசம் பாவம் கையோட வந்துடும் நு சொல்றது என பாட்டி நொடிக்க சூப்பர் பாட்டி உங்களை மாதிரி பழமொழி சொல்ல யாராலயும் முடியாது என சேமியா பாராட்ட தேவையா உனக்கு இது தேவையா என வடி வேலு ஸ்டைலில் தாத்தா தன்னை நொந்து கொண்டார்
No comments:
Post a Comment