ஒரு குழந்தையை பூரண நலத்தோடு பெற்றெடுப்பது தாயின் கடமை என்றாலும், குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் வளர்ப்பில் தந்தையின் பங்கே மிக முக்கியமாகின்றது. அதிலும் பெண் குழந்தை பிறந்தால் தாயை விட தந்தைக்கு தான் பொறுப்புகள் கூடுகின்றன. அவள் தன் வாழ்க்கையை துணிச்சலோடு எதிர் கொள்ள அவரே நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்கின்றார்.
நீலகண்டனும் தன் மகளுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அளிக்க விரும்பியே கதிரை தன் மகளின் மணாளனாக தேர்ந்தெடுத்தார். 'யாளி மட்டும் "சரி..." என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டாலெனில், இனி இந்த ஜென்மம் முழுக்க அவளைப் பற்றி கவலைப்படவே தேவையில்லை, கதிர் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்' என்று நினைத்திருந்தார். ஆதலாலேயே யாளியிடம் திருமணத்தைப் பற்றி யோசிக்க சொல்லி நெடுநேரம் கதிரின் குண நலன்களை விவரித்துக் கொண்டிருந்தார்...
அவள், 'ம்...' எனும் சொல்லை உச்சரிக்கும் முன், அதை தடை செய்யும் விதமாக, அகழ்வாய்வு குழியிலிருந்து ஒருவன், "சார்... சார்... இங்க வந்து பாருங்களேன்..." என்று உயிரே போகும் படி கத்தினான்.
நீலகண்டனும் அவரோடு இன்னும் சில அதிகாரிகளும் விரைந்து சென்று அப்பள்ளத்தினுள் எட்டிப் பார்த்தனர். ஒரு சிதைந்த வடிவிலான எலும்புக்கூடு பாதி புதைந்த நிலையில் இருந்தது. அதைக் கண்ட மாத்திரத்திலேயே கூலியாட்களை வெளியேற்ற சொல்லிவிட்டு, அனைத்து தொல்லியல் அதிகாரிகளும் ஆளுக்கொரு பிரஷ்ஷுடன் பள்ளத்தில் இறங்கி கொஞ்சம் கொஞ்சமாக அதன் உருவத்தை மண்ணிலிருந்து வெளியேற்ற ஆரம்பித்தனர். அந்த எலும்புக்கூடு அணிந்திருந்த ஆபரணங்களும் அதன் அருகில் கிடந்த போர்வாளும் அவன் ராஜ பரம்பரையை சேர்ந்தவன் என்பதை சொல்லாமல் சொல்லியது.
எலும்புக்கூட்டை பாதுகாப்பாக வெளியேற்றியதும் தொல்லியல் துறையினர் அனைவரும் மகிழ்ச்சி மிகுதியால் ஒருவரையொருவர் கட்டியணைத்து, "வீ காட் ஹிம்... வெல்டன் ப்ரெண்ட்ஸ்..." என்று தங்களைத் தாங்களே பாராட்டி கொண்டனர்.
அவர்களின் மகிழ்ச்சியை குலைக்கும் விதமாக நீலகண்டன், "வெயிட், இது அனழேந்தி ராஜாவோட எலும்புக்கூடு இல்ல...." என்றார்.
மற்றொரு ஆபீசர், "என்ன மிஸ்டர் நீலகண்டன்? அனழேந்தியோட நகையும் வாளும் மத்த எல்லாத்தையும் விட தனித்தன்மையானது, அது எப்பேர்ப்பட்டதுனு சொன்னதே நீங்க தான... நீங்க சொன்ன அடையாளம் எல்லாம் இந்த வாளுக்கும் நகைக்கும் கிட்டத்தட்ட பொருந்தி போகுது பாருங்க. அதுவுமில்லாம இந்த எலும்புக்கூட பார்த்த உடனே தெரியுது, இவன் ஒரு ராஜ பரம்பரை ஆளுன்னு..." என்று ஆளாளுக்கு ஒரு கருத்தை முன்வைத்தனர்.
நீலகண்டன், "இவனும் ஒரு ராஜாவா இருந்திருக்கலாம், ஆனா நிச்சயமா அனழேந்தியா இருந்திருக்க முடியாது. ஏன்னா இவன் முதுகுத்தண்டு ரெண்டா உடைஞ்சு இருக்கு பாருங்க, இப்டி அடிக்கிறது அனழேந்தியோட ஸ்டைல். நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா இத லேப் டெஸ்ட்டுக்கு அனுப்புங்க, ரிசல்ட் வந்ததும் வயசு விதயாசத்த வச்சு ஏதாவது தெரிஞ்சுக்க முடியுதான்னு பாக்கலாம்" என்றார்.
மற்ற அனைவரும், "கையில கிடைச்சத லாபகரமா யூஸ் பண்ணிக்காம, எப்போ பாரு நீதி நேரமைன்னு உளறிக்கிட்டு இருக்காரு. இவருக்கு வேற வேலையே இல்லை..." என்று முணுமுணுத்தபடி கலைந்து தங்கள் இடத்திற்கு செல்ல ஆரம்பித்தனர்.
அங்கு நடந்ததை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த யாளி தன் அப்பாவின் அருகில் வந்து, "ஏம்ப்பா? அது எவன் எலும்புக்கூடா இருந்தா நமக்கென்ன? அந்த ராஜாவோடதுன்னு காட்டுற மாதிரி நிறைய ஆதாரம் கிடைச்சிருக்குல்ல... பேசாம இதுதான் அனழேந்தின்னு கவர்மெண்ட் கிட்ட ஒப்படைச்சுட்டு குரூப்பா போய் மெடல் வாங்குவீங்களா, அதை விட்டுட்டு பல வருஷமா கூடவே வேலை பாக்குற ப்ரெண்ட்ஸ தேவையில்லாம பகைச்சுக்கிறீங்களே..." என்றாள். நீலகண்டனின் ஆசை மகளே தங்களுக்கு ஆதரவாக பேசுவதை கண்டதும் ஏனைய அதிகாரிகளும் சிறிது நம்பிக்கையோடு அவள் அப்பாவின் முகத்தை பார்த்திருந்தனர்.
அவரோ சற்றும் இறுக்கம் குறையாமல் முகத்தை வைத்துக் கொண்டு, "அனழேந்தி அந்த காலத்தில ஈடு இணையில்லாத வீரனா வாழ்ந்தவன் தெரியுமா? ஒரு சாதாரண மனுஷன அவனுக்கு நிகராக ஒருக்காலும் என்னால வைக்க முடியாது..."
"இருக்கட்டுமே, இப்ப அவனும் செத்து சுண்ணாம்பாகி இதே மாதிரி ஒரு எலும்புக் கூடாத்தான வேற இடத்துல கிடைக்க போறான்..."
"வெறும் எலும்புதான்... ஆனா டைனோசர் எலும்புக்கும், நாய் எலும்புக்கும் நாம குடுக்குற மரியாதையில வித்யாசம் இருக்குல்ல..."
கதிர், "சார் சாப்பிடற நேரத்துல ஏன் நாய ஞாபகம் படுத்துறீங்க?" என்றான்.
அப்பாவும் மகளும் ஒருசேர திரும்பி பார்க்க அங்கே கதிர்வேலும், அவனுக்கு பின்னால் பெரிய சைஸ் ஐந்தடுக்கு டிபன் கேரியருமாக அவன் வீட்டு பணியாட்கள் நான்கு பேரும் வந்திருந்தனர். அந்த நான்கு பேரில் ஒருவராக, யாளி காலையில் பறக்கும் முத்தத்தை பறக்கவிட்ட முத்தையா தாத்தாவும் நின்றிருந்தார். உணவை பார்த்ததும் மற்ற அதிகாரிகள் சென்று கைகழுவிவிட்டு வந்து வழக்கமான இடத்தில் அமர தொடங்கினர்.
முத்தைய்யா தாத்தா, "டார்லிங்கு... நீயும் இங்கினதான் இருக்கியா?" என்றார் வாயெல்லாம் பல்லாக.
யாளி, "அட... வாங்க டார்லிங் வாங்க... இவருதான் எங்கப்பா... அப்பா இன்னிக்கில இருந்து நானும் இந்த தாத்தாவும் லவ்வர்ஸ் ஆயிட்டோம்... உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க நாங்க நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கிறோம்..."
நீலகண்டன், "அவரு பொண்டாட்டிய பத்தி தெரிஞ்சா நீ இப்படிப் பேச மாட்ட, ஒத்த மனுஷியா ஒரு அரண்மனை வேலை மொத்தத்தையும் செய்வாங்க, அதேமாதிரி ஒரு வாயிலயே ஊர்ல இருக்குற அத்தன பேருக்கும் பதில் பேச்சு பேசிட்டு வந்திடுவாங்க. அவ்வளவு பெரிய வாயாடி அந்த அம்மா..."
முத்தையா தாத்தா, "அவ கிடக்குறா வாயாடிக்கழுத. நீ சரின்னு சொல்லு புள்ள, அந்தக் கிழவிய டைவோர்சு பண்ணிபுட்டு உன்ன நான் ராசாத்தி கணக்கா வச்சிக்கிடுதேன்..."
"எங்க அப்பாவுக்கு ஓகேனா எனக்கும் ஓகே டார்லிங்..."
"அம்புட்டுத்தான... ஐயா உங்களுக்கு புடிச்ச மீன் குழம்பு இன்னிக்கி. உங்க பொண்ண எனக்கு கட்டி குடுக்கேன்னு சொல்லுங்க, அம்புட்டு குழம்பையும் உங்க தட்டுலேயே கவுத்திபுடுதேன்."
யாளி கதிரை சீண்டுவதெற்கென்றே இந்த நாடகத்தை நடத்துவது புரிந்த நீலகண்டன், "ஹா... ஹா... சரி சரி கட்டிக்கோங்க..." என்று வாய்விட்டு சிரித்தார். ஆனால் கதிரோ, இங்கே தான் ஒருவன் இருப்பதையே மறந்து, யாளி வார்த்தைக்கு வார்த்தை முத்தையாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவதை கடுகடுவென்று பார்த்து கொண்டிருந்தான்.
"சாதிச்சுபுட்டோம்ல... டார்லிங்கு உங்க அப்பாரு ஒத்துக்கிட்டாரு..."
"அப்புறமென்ன நாளைக்கே மண்டபம் பாருங்க டார்லிங்..."
"அதுக்கென்ன, எங்க ஐயாரு வூடே பத்து மண்டவத்துக்கு சமானம். நீ முதல்ல வயிராற சாப்புடு புள்ள, நேத்து சாமமெல்லாம் உறங்காம அலைஞ்சு திரிஞ்சு வந்திருப்பீக, அலைச்சல்ல வசுறு காஞ்சு கெடக்காது? சாப்புட்ட பொறவு வூட்டுக்கு போயி மத்தத பேசுவோம்..."
"உங்க வீட்டுக்கா?"
"எனக்கேது வூடு, எங்க ஐயாரு வூட்லத்தேன் நான் சின்ன புள்ளையில இருந்து வேல பாத்துகிட்டு கெடக்குதேன். உங்க அப்பாரும் மத்த ஆபீசரும் கூட அங்கினத்தேன் தங்கி இருக்காக...." என்றதும்தான் யாளிக்கு தானும் இனி அங்கே தங்க வேண்டுமென்ற உண்மை சுளெரென்று உரைத்தது.
தன்னால் அவள் முகம் வாடிவிட்டதை உணர்ந்த கதிர் பேச்சை மாற்றும் விதமாக, "அங்கிள் நாங்க வரும்போது ஏதோ ராஜாவ பத்தி சொல்லிட்டு இருந்தீங்கள்ல, அது என்னன்னு கொஞ்சம் டீடெய்லா சொல்லுங்களேன். சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் எல்லாரும் கதை கேப்போம்" என்றான்.
"அனழேந்தி சுமார் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி நம்ம தமிழ்நாட்டுல வாழ்ந்த ஒரு ராஜா. இயல்பரசன்ங்கிற மகாராஜாவோட மூத்த பையந்தான் இவன். பொதுவாவே அவன் வேல்கம்பு வச்சுத்தான் சண்டை போடுவான், ஒருவேளை தன்னோட வாள வெளியில எடுத்துட்டான்னா வெறியாகிட்டான்னு அர்த்தம், வாள்ல ரத்தம் பாக்காம திருப்பி வைக்கவே மாட்டான்."
"என்னப்பா இது சின்னப்புள்ள தனமா இருக்கு? ராஜான்னு இருந்தா நாலு சண்டை போடுறது தான், கத்தியில ரத்தம் பாக்குறதுதான், இவன் மட்டும் என்ன அப்டி ஸ்பெஷல்?"
"ஸ்பெஷல் இருக்கும்மா... அனழேந்தி தன்னோட பதினஞ்சு வயசில ஒரு மிகப்பெரிய போருக்கு போய் ஜெயிச்சுட்டு வந்ததாலதான் அவனுக்கு இளவரசனா முடி சூட்டினாங்களாம்."
"அடபோங்கப்பா, இந்த கதைய நான் பாகுபலி பார்ட் ஒன்னுலேயே பார்த்துட்டேன்..."
"ஆனா அந்த போர்ல சினிமாவையே மிஞ்சுறமாதிரி சம்பவம் நடந்திருக்குமா..."
அவளோடு சேர்ந்து மற்ற அனைவரும் உண்ண மறந்து, வாயை பிளந்து கொண்டு நீலகண்டனை பார்த்திருந்தனர்.
"இயல்பரசன் மகாராஜா தன்னோட பாதி சேனையத்தான் அனழேந்திக்கு குடுத்திருக்காரு, அதுவுமே தளபதி இல்லாம... ஒரு பதினஞ்சு வயசு பையன் தளபதி இல்லாமலேயே தன்னோட முதல் போர, முழு சேனையோட இருக்குற முப்பது வயசு மகாராஜாவுக்கு எதிரா நடத்தி ஜெயிச்சுட்டும் வந்திருக்கான். அது கிட்டத்தட்ட ஒரு சின்ன கன்னு குட்டி, கொம்பு இருக்குற காளை மாட்டுக்கூட சண்டை போட்டு ஜெயிக்கிறதுக்கு சமம். அப்ப அவனோட திறமை எப்பேர்பட்டதா இருந்திருக்கும்?"
கதிர், "இது எப்டி சாத்தியமாகும் அங்கிள்? எனக்கென்னமோ அவனோட வாள் மேல சந்தேகமா இருக்கு..."
"எக்ஸாக்ட்லி, அப்போ வாழ்ந்த மத்த ராஜாக்களுக்கும் அவனோட வாள் மேலதான் சந்தேகம் வந்துச்சு. அந்த வாள் யாரு கையில இருக்கோ, அவங்களுக்கு எல்லா போர்லயும் வெற்றி கிடைக்கும்னு ஒரு புரளி பரவ ஆரம்பிச்சது... அதுக்காகவே அவன் தன்னோட வாள அவ்வளவு சீக்கிரமா வெளியில எடுக்க மாட்டான், முடிஞ்சவரைக்கும் தன் வேல் கம்பை வச்சுத்தான் சண்டை போடுவான். ஆனாலும் அவனோட வாளுக்கு இருந்த மவுசு அவனோட இருபத்தி ரெண்டு வரைக்கும் அதிகமாவே இருந்துச்சு, அதுக்கப்புறம் அவனையும் அந்த வாளையும் யாருமே பாக்கல. இந்த ஏழு வருஷத்துல மட்டும் ஆறு போர்ல அனழேந்தி ஜெயிச்சிருக்கானாம்...."
"ஏம்ப்பா? நானும் பேசாம அந்த வாள எடுத்து ரெண்டு சுத்து சுத்தி பார்க்கட்டுமா? எக்ஸ்ட்ரா பவர் இருந்தா நான் சூப்பர்வுமன் ஆகிடுவேன்..."
"ஹா... ஹா..." என்று நீலகண்டனோடு அங்கே இருந்த மற்ற ஆபீஸர்களும் யாளியை பார்த்து சிரிக்க, 'ஸ்டோரி கேக்குற ஆர்வத்துல குறுக்க இருந்த கம்பிய மறந்துட்டேனே...' என்று தன் தலையில் தானே குட்டிக்கொண்டாள்.
நீலகண்டனின் நண்பர், "அதுசரி நீலகண்டா, அந்த வாள்ல சக்தி இருக்குதுன்னா அத யாரு செஞ்சாங்கன்னு பாத்து மத்த ராஜாக்களும் அங்க போய் ஆளுக்கொன்னா வாங்கிட்டு வந்து இருக்கலாம்ல..."
"அதுதான்யா யாருக்குமே தெரியல... அந்த அனழேந்தி பதினஞ்சு வயசுக்கு முன்னால எங்க இருந்தான், இருபத்தி ரெண்டு வயசுக்கு அப்புறம் எங்க போனான்? அவனுக்கு எப்போ யார் வாள் செஞ்சி குடுத்தாங்கன்னு எந்த குறிப்புமே கிடைக்கல..."
யாளி, "அப்போ உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் எங்கிருந்து தெரிஞ்சதுப்பா?"
"கொஞ்ச நாள் முன்னாடி மதுரை பக்கமா நடந்த அகழ்வாராய்ச்சில கிடைச்ச சில செப்பு தகடுகள் மூலமா இந்த ஊர பத்தியும் அனழேந்திய பத்தியும் எங்களுக்கு முதல் முதலா தகவல் தெரிஞ்சது, அதவச்சுத்தான் நாங்க இங்க வந்ததே... அந்த தகடுகள் எல்லாத்தையும் எழுதினது அனழேந்தியோட தம்பி இளவளவன் அவன்தான்அப்போதைக்கு ராஜாவா இருந்திருக்கான்னு தகட்டு மேல இருந்த ராஜ முத்திரை சொல்லுது. அந்த தகட்டுல இருந்த ஒவ்வொரு வார்த்தையிலயும் தன்னோட அண்ணன ரொம்பவே புகழ்ந்து மரியாதையோட எழுதி இருக்கான் இளவளவன், அவ்வளவு பாசம் அண்ணன் மேல இருந்திருக்கும்போல... ஆனா இதுல நாம கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா அவன் ஏன் ஒரே ஒரு தகடு மட்டும் எழுதி வச்சிட்டு போயிருக்கான்? அதுக்கு முன்னாடியோ பின்னாடியோ ஏன் அனழேந்தியோட பேர அவன் எங்கேயும் மென்ஷன் பண்ணலன்னுதான்?"
யாளி, "வேறெதுக்கு, உங்கள மண்ட காயவிடுறதுக்குத்தான்... பேசுறத நிறுத்திட்டு சாப்பிடுப்பா, நாங்கள்லாம் சாப்பிட்டு முடிச்சு கைகழுவிட்டே வந்துட்டோம்."
"ஹி.. ஹி.. இதோ சாப்பிடுறேன்மா... அம்மாடி, நான் வேலைய முடிச்சிட்டு கிளம்பி வர ராத்திரியாகிடும். நீ அதுவரைக்கும் இங்க இருக்க வேணாம், வீட்டுக்குப் போயி குளிச்சுட்டு ரெஸ்ட் எடுக்குறியாம்மா?"
அவள் யோசிப்பதை பார்த்ததும் கதிர், "உங்களுக்கு என்ன பார்த்து பயமா இருந்தா நீங்க வர வேண்டாம், ஈவ்னிங் வரைக்கும் இங்கேயே உங்க அப்பா கைய புடிச்சுக்கிட்டு 'டாடி.. டாடி... ஓ மை டாடி...'ன்னு பாட்டு பாடிட்டு உக்காந்திருக்கலாம்..." என்றான் எடக்காக.
"பயமா? யாருக்கு எனக்கா? என்னால யாருக்கும் எதுவும் ஆகக்கூடாதேன்ற நல்லெண்ணத்துல கொஞ்சம் தயங்கினேன். இனிமே நான் பாரபட்சம் பாக்கப் போறதில்ல, சீக்கிரமா வாங்க.. உங்க வீட்டுக்கு போலாம்..." என்று திமிராக போய் காரில் அமர்ந்து கொண்டாள்.
கதிர், "அங்கிள்... இருந்தாலும் உங்க பொண்ணுக்கு இவ்வளவு கொழுப்பு இருக்க கூடாது."
"உங்களுக்கு தெரியாது தம்பி, அவ அம்மா இறக்கும் போது அவளுக்கு பதினாலு வயசு, அப்போ நான் வேலை விஷயமா ராஜஸ்தான்ல இருந்தேன். பொம்பள புள்ளைய அங்கெல்லாம் கூட்டிட்டு போனா பாதுகாப்பா இருக்காதுன்னு லோக்கல்ல இருந்த என் தங்கச்சி வீட்டில தங்க வச்சேன். ஆனா என் பொண்ண அவங்க அடைக்கலமா வந்த சின்ன பொண்ணுன்னு பாக்கல, சம்பளம் இல்லாத வேலைக்காரியா பாத்தாங்க. அதை என்கிட்ட சொல்ல கூடாதுன்னு அவள மிரட்டியும் வெச்சிருக்காங்க. திடீர்னு ஒரு நாள் அவ படிக்கிற ஸ்கூல்ல இருந்து எனக்கு போன் வந்தது, யாளியோட கிளாஸ் டீச்சர் வாணி அவசரமா என்ன ராஜஸ்தானிலிருந்து வரச் சொன்னாங்க. வந்து பார்த்தா என் பொண்ணு பாதியா இளச்சு போயிருந்தா, அதுக்கப்புறம்தான் எனக்கு எல்லா விஷயமும் தெரிய வந்துச்சு. அந்த ஸ்கூல் ஹாஸ்டல் வார்டனும் அவங்கதான், அவங்களோட உதவியாள அன்னிக்கு ராத்திரியே அவளை அந்த ஸ்கூல் ஹாஸ்டல்ல சேர்த்து விட்டு விட்டேன். அன்னையிலிருந்து யாளிய பாத்துக்குற பொறுப்பை அவங்க எடுத்துக்கிட்டாங்க. சொல்லப்போனா என்ன விட அவங்க அவள நல்லா புரிஞ்சு வச்சிருந்தாங்க. அவ அம்மாவை இழந்த அதிர்ச்சியிலும் அத்தையோட கொடுமையாலயும் தைரியமில்லாத கோழையா மாறிட்டானு அவங்களே அவள கராத்தே கிளாஸ்ல சேர்த்து விட்டாங்க. யாளி தன்னோட தனிமையையும் பயத்தையும் தைரியம்ங்கிற போர்வையால மூட ஆரம்பிச்சா, நாளாக நாளாக அதுவே அவ குணமா மாற ஆரம்பிச்சிடுச்சு. தனக்கு நெருக்கமானவங்கள தவிர வேற யாருகிட்டயும் அவ இறங்கி போக மாட்டா. அவ ஸ்கூல் படிப்பு முடிச்சிட்டு காலேஜ் போகும்போது வாணி டீச்சரும் அவளுக்காக அதே காலேஜ்ல வார்டன்னா வேலை வாங்கிட்டு போய்ட்டாங்க. சொந்தக்காரங்கன்னு நம்பி யாளிய அங்க விட்டது அவளுக்கு எவ்வளவு பெரிய ஆபத்தா போயிடுச்சு, அதே தப்ப மறுபடியும் செய்யக் கூடாதுன்னு நினைச்சேன். அவளுக்கு அந்தஸ்துல உங்கள மாதிரி ஒரு பெரிய இடத்துல இருக்குற குடும்பம் கிடைச்சா, மத்தவங்கள எதிர்பாக்காம கடைசி வரைக்கும் ஏதாவது ஒரு வகையில பாதுகாப்பா இருப்பாளேன்னு தோணுச்சு. அதான் தம்பி நீங்க அவள விரும்புறீங்கன்னு ஆரம்பத்துலயே தெரிஞ்சும் நான் உங்க நடவடிக்கைய வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். அவளுக்கு உங்க குணத்தை புரியிற வரைக்கும், அவ குணம் மாறாது, ப்ளீஸ் நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க?"
"ஒரு பொண்ணோட குணத்துக்கு பின்னால இவ்வளவு ஆழமான காரணம் இருக்கும்னு எனக்கு இது வரைக்கும் தெரியாது அங்கிள். இஃப் யூ டோன்ட் மைண்ட், நான் உங்க பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்ணலாமா?"
"ஒத்துக்குவாளான்னு தெரியல, இருந்தாலும் ட்ரை பண்ணி பாருங்க, நானும் உங்க பேர ரெகமண்ட் பண்ணி இருக்கேன்..."
"தேங்க்ஸ் அங்கிள்..." என்றவன் தனக்காக தன் காரில் காத்திருப்பவள் தேடிச் சென்றான். அங்கிருந்து கிளம்பி வீடு வந்து சேரும் வரையில் அவள் கதிருடன் எதுவும் பேசவில்லை. தேவையில்லாமல் அவனுக்கு காதல் ஆசையை உருவாக்கி விட வேண்டாம் என்று ஒதுங்கியே இருந்தாள். பத்து நிமிட பயணத்திற்கு ஒரு பிரம்மாண்டமான வீடு அவள் கண்ணில் பட்டது.
"இதுதான் உங்க வீடா? எங்க ஹாஸ்டல விட பெருசா இருக்கு..."
"இது எங்களோட பண்ணை வீடு, நாங்க குடும்பத்தோட தங்கி இருக்கிற அரண்மனை மல்லியனூர்ல இருக்கு. அது இதவிட ரெண்டு மடங்கு பெருசு..."
"ப்பா.... உங்கள் வீட்டுல யாரையாவது அவசரமா கூப்பிடனும்னா, மைக் போட்டு தான் கூப்பிடனுமோ?"
"ஹா... ஹா... கிட்டத்தட்ட..."
"சரி நான் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்க போறேன், உங்களுக்கு என் பின்னால சுத்துற விட வேற ஏதாவது முக்கியமான வேலை இருந்தா போய் பாருங்களேன்."
"இன்டேரக்ட்டா வெளியில போடான்ற"
"சே.. சே... உங்க வீட்டில உங்கள வெளியில போன்னு சொல்ல முடியுமா?"
"நான் ஒண்ணு கேட்டா தப்பா நெனச்சுக்க மாட்டியே?"
"மாட்டேன், கேளுங்க..."
"என்ன பத்தி எதுவுமே தெரியாம ஏன் என்ன உன் மனசுல சேக்க மாட்டேன்னு வீம்பா ஒதுக்கி வைக்கிற?"
"கரெக்ட், எனக்கு உங்கள பத்தி எதுவும் தெரியாது, ஆனா எங்க அப்பாவை பத்தி எனக்கு தெரியும். அவருக்கு நேர்மை, நியாயம், சுயகௌரவம் இதெல்லாம் ரொம்ப முக்கியம். உங்களால் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவர் எனக்காக இதெல்லாம் இழக்க வேண்டி இருக்கும்."
"அவரு ஏன் அத இழக்கனும்?"
"ஏன்னா நீங்க ரொம்ப பெரிய பணக்காரங்க..."
"ம்ச்ச்... அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு புரியல..."
"ஸீ கல்யாணம்ங்கிறது இரண்டு மனசு இணையிற சம்பிரதாயம் மட்டும் கிடையாது, இரண்டு குடும்பம் இணையிர சம்பவம். அந்தஸ்துல முதல் படியில இருக்கிற நானும், மூனாவது ஃப்ளோர்ல இருக்குற நீங்களும் செட் ஆக மாட்டோம். நம்ம ரெண்டு பேரோட மனசு ஒத்துப்போனாலும் சொந்த பந்தங்களால ஏதாவது ஒரு பிரச்சனை நம்ம வாழ்நாள் முழுக்க விடாது கருப்பு மாதிரி விரட்டி வந்துகிட்டே இருக்கும். நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் வர்ற ஒவ்வொரு விஷேஷத்திலும், எங்க அப்பா உங்க குடும்பத்து ஆளுங்க அளவுக்கு செய்முறை செய்ய முடியாம கூனி குறுகி நிப்பாரு. எல்லாத்தையும் விட எனக்கு எங்க அப்பாவை கடைசி வரைக்கும் என் கூடவே வச்சுக்கணும்னு ஆசை, அது உங்கள கல்யாணம் பண்ணினா நடக்காது. நீங்க ஒத்துக்கிட்டாலும் எங்க அப்பா அதுக்கு ஒத்துக்கவே மாட்டாரு..."
"அதுக்காக நீங்க கல்யாணமே பண்ணாம இருக்க போறீங்களா?"
"நிச்சயமா இல்ல, எங்க குடும்பத்துக்கு செட்டாக மாதிரி குவாலிட்டி இருக்குற ஒருத்தன கட்டிக்குவேன்."
"அப்டி என்ன குவாலிட்டி வேணும் உங்களுக்கு?"
"அம்மாவோ இல்ல அப்பாவோ மட்டும் இருக்குறவனா வேணும், என்ன விட கொஞ்சம் ஜாஸ்தியா படிச்சு இருக்கணும். கல்யாணம் முடிஞ்சதும் குறைஞ்சது ரெண்டு வருஷத்துக்கு என்ன வேலைக்கு போக அனுமதிக்கனும். ரெண்டு புள்ள பெத்ததும் அவங்கள பாத்துக்குற மாதிரி, என்னோட அப்பாவயும் அவனோட பேரண்டையும் ஒரே வீட்லயே வச்சுக்க ஒத்துக்கனும். முக்கியமா எங்க அப்பா மரியாதை குடுக்க வேண்டிய உயரத்தில இல்லாம அவருக்கு ஒரு நண்பன் மாதிரி பழகனும்...."
அவள் கூரிய விழிகள் குறை சொல்வதை போல தன் மேல் பதிவதை உணர்ந்த கதிர், "நான் கிளம்புறேன்ங்க..." என்று அவ்விடம் விட்டு நகர்ந்திட, எந்த தொல்லையும் இல்லாமல் மதியம்வரை தூங்கி எழுந்தாள்.
மதியத்திற்கு மேல் தொல்லியல் பொருட்களையும் எலும்புக் கூட்டையும் கொண்டு வந்து வைக்கும் சாக்கில் கதிர் பண்ணை வீட்டிற்கு வந்தான். ஆனால் யாளியோ முத்தைய்யா தாத்தா ராமாயி பாட்டியுடன் ஊரை சுற்றி பார்க்க கிளம்பிவிட்டதாய் ஏனைய பணியாட்கள் தெரிவித்தனர். இரவு உணவிற்கு பிறகு நீலகண்டன் இன்றைய ஆய்வில் கிடைத்த பொருட்களில் அனழேந்தியை பற்றி துப்பு துலக்கி கொண்டிருக்க, யாளியோ அவரின் அருகில் அமர்ந்து தன் ஹாஸ்டல் வாழ்க்கையின் வீர தீர பராக்கிரம சாகசங்களை பற்றி விளக்கி கொண்டிருந்தாள். மற்ற அதிகாரிகள் அனைவரும் ஆளுக்கு ஒரு வேலையாய் தங்களுக்கு ஒதுக்கிய அறையில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்நேரத்தில் கதிர் அங்கே வருவதை கண்ட நீலகண்டன், "என்ன இந்நேரத்துல இங்க வந்திருக்கீங்க கதிர்?" என்றார்.
"சும்மா இன்னிக்கி ஒரு நாள் மட்டும் இங்க உங்களோட தங்கலாம்னு வந்தேன் அங்கிள்... உங்களுக்கு ஒன்னும் சிரமம் இல்லையே?"
யாளி, "சிரமமா? நீங்க எங்களோட தங்குறது எங்களுக்கு எவ்ளோ பெரிய பெருமை... இல்லப்பா..." என்றாள் நக்கலாக.
அப்போது அங்கே வந்த நீலகண்டனின் நண்பர் ஒருவர் வேலை சம்பந்தமாக ஏதோ சந்தேகம் கேட்டு நீலகண்டனை தன் அறைக்கு அழைத்தார். கதிருக்கும் யாளிக்கும் தனிமை தந்து அவர் அங்கிருந்து செல்ல, "யாளி, நான் உன்ன பார்த்ததுமே விரும்ப ஆரம்பிச்சுட்டேன். உனக்காக என் சொத்து சுகம் எல்லாத்தையும் விட்டுட்டு வந்தா என்ன நீ கன்சிடர் பண்ணுவியா?..." என மீண்டும் முருங்கை மரம் ஏற ஆரம்பித்தான்.
"உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது? சரி, உங்க போன குடுங்க."
"எதுக்கு...." என்று கேள்வி கேட்டுக்கொண்டே தன்னுடைய செல்லை எடுத்து நீட்டினான்.
'அம்மா' என்று பெயர் பதிந்திருந்த எண்ணிற்கு அழைத்தவள், "ஹலோ கதிர்வேலோட அம்மாவா?"
"ஆமா... நீங்க யாரு..."
"ஆன்ட்டி நான் உங்க பையனோட லவ்வர், அவரு என்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறதாவும், அதுக்காக தன்னோட சொத்து சுகம் எல்லாத்தையும் விட்டுட்டு வந்துடுறேன்னும் சொல்றாரு. உங்களுக்கு இதுல சம்மதமான்னு கேக்குறதுக்குத்தான் நான் உங்களுக்கு கால் போட்டேன்."
"என்னது....." என்றவர் அதிர்ச்சியில் அடுத்த வார்த்தை பேச மறந்து நிற்க,
யாளி, "உங்க முடிவ உங்க பையன் உங்க வீட்டுக்கு வந்ததும் அவருக்கு புரியிற மாதிரி சொல்லுங்க. நான் போன வச்சிடுறேன், பாய் ஆன்ட்டி..." என்று காலை கட் செய்துவிட்டு கதிர் புறம் திரும்ப, அவன் தன் தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
'ஏன்டி இப்டி செஞ்ச?' என்று அவளை கோபமாக பார்க்க அவளோ கூலாக, "இது ஜஸ்ட் சாம்ப்பிள் பா... என்னப்பத்தி நீங்க புரிஞ்சுக்கிறதுக்கும், நாளைக்கு நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பிரச்சனை வந்தா நீங்க எப்படி அத சமாளிக்கிறீங்கன்னு நான் தெரிஞ்சுக்குறதுக்கும் ஒரு ட்ரையல் ஷோ. நான் இந்த ஊர விட்டுப் போறதுக்குள்ள உங்க அம்மாவ நீங்க கன்வின்ஸ் பண்ணிட்டீங்கன்னா, அதுக்கப்புறம் நிச்சயமா நான் உங்கள கன்சிடர் பண்றேன் மிஸ்டர் ஜமீன்தார்... " என்று மிடுக்காக நடந்தபடி தன் அறைக்கு சென்றாள்.
சென்றவள் சும்மா செல்லவில்லை, காலையில் அப்பா அவ்வளவு புகழ்ந்த அனழேந்தியின் வாளையும் லவட்டிக்கொண்டு சென்று விட்டாள். காதல் தோல்வியில் இருந்த கதிரும் அவள் கையில் வாளை எடுத்திருப்பதை அப்போதைக்கு கவனிக்க மறந்து போனான். ஒதுக்குப்புறமான தன் அறைக்கு சென்றவள் ஐந்து கிலோ கனத்தில் இருந்த அப்பெரிய வாளினை முன்னும் பின்னும் தடவி பார்த்து கொண்டே இருந்தாள். ஏற்கனவே அவளின் அப்பாவினாலும் அவருடைய நண்பர்களாலும் ஐந்தாறு முறை தூசி தட்டப்பட்டதால் வாள் ஓரளவு சுத்தமாகி இருக்க, அதன் கைப்பிடியில் இருந்த வைர வைடூரிய கற்களின் மேல் தன் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி பார்த்துக் கொண்டிருந்தாள். இறுதியாக மரகத கல்லின் மீது விரலை வைத்து அழுத்த அது ஒரு பொத்தானைப்போல் அமிழ்ந்து எழுந்தது.
'இது என்ன பட்டன் மாதிரியே இருக்கு' என்று மீண்டும் ஒருமுறை தன் ஆள்காட்டி விரலால் பலமாக அழுத்த முன்பை விட அது நன்றாக அமிழ்ந்தது. அடுத்த நொடி அவள் முன்பு ஒரு கரிய நிற புகை வளையம் உருவாக, அது பொத்தானை அழுத்தியதால் வாளிலிருந்து வெளியேறிய தூசிப் புகை என்று நினைத்துக்கொண்டு மெதுவாக தன் இடது கையால் அப்புகையை தொட்டு பார்த்தாள்.
தொட்டவிரல் அவ்வளையத்தோடு ஒட்டிக்கொள்வதை போல தோன்ற தன் விரலை வெளியே எடுக்க முயன்றாள், அது அவளை விடவில்ல... புதைமணல் போல சிறிது சிறிதாக தன் கை உள்ளே இழுக்கப்படுவது புரிந்ததும் பதறிப்போய், "அப்பா... அப்பா... இங்க வாங்கப்பா..." என்று கத்தியவள், பயத்தில் வலது கையிலிருந்த வாளை கீழே போட்டதும் அக்கருந்துளை நொடிப்பொழுதில் அவளை முழுதாக தன்னுள் இழுத்து கொண்டது.
No comments:
Post a Comment