நிலவை தொலைத்த காரிருள் நிறைந்த வானத்தைப்போல, இருள் வண்ணம் அடர்ந்து கிடந்த ஒரு பெரிய அறையினுள் தூக்கி வீசப்பட்டாள் யாளி. நிலவின் அளவிற்கு பிரகாசமாய் வெளிச்சம் பரப்பாத இரவு நேரத்து தூரத்து விண்மீன்களென சிற்சில இரும்பு விளக்குகள் அறையின் மூலையில் அசையாது நின்று இருக்க, அவ்வறையின் நடு மையத்தில் அகன்ற பெரிய கட்டில் ஒன்று கிடப்பது அவளுக்கு தெரிந்தது. ஆரம்பத்தில் அச்சமாய் இருந்தாலும், அறை முழுவதும் அமைதியாக இருப்பதனால், அதிக நேரத்தை ஆலோசிக்க எடுத்துக் கொள்ளாமல் அதன் அருகில் செல்ல துணிந்தாள் யாளி.
கட்டிலின் தலைமேட்டில் பிடரியை சிலுப்பும் சிங்கத்தின் உருவம் பதிக்கப் பெற்ற அகன்று விரிந்து நின்ற அத்தேக்கு மரக்கட்டிலின் மீது, அன்னப்பறவைகள் கலவி கொள்ளும் பொழுது உதிர்த்த இறகுகளை கொண்டு செய்த மிருதுவான மெத்தை கட்டப்பட்டு இருந்தது. அதன் மேல் வெள்ளை துணி விரிப்பு, அது கஞ்சி போட்டு சலவை செய்ததன் விளைவாக மடிப்பு தெரியும் வகையில் விரிக்கப்பட்டிருந்த நீளமான துணி. அதற்கும் மேல், காயா என்னும் முல்லை நிலத்து மலரின் உருவம் தீட்டப்பெற்ற பட்டுத் துணியிலான விரிப்பு, அதனில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் ஒருவன்.
இரவென்பதால் அவன் தன் காது குழைகளைக் கழற்றி வைத்துவிட்டு வெறுங்காது துளையுடன் இருந்தன, பகல் பொழுது முழுவதும் அவனுடைய மார்பில் தொங்கி ஆடிடும் மணிநாவல் எனும் அணிகலன் ஓரமாய் உறங்கி கொண்டிருந்தது. அது நாவல் பழம் போன்ற வேலைப்பாடுகள் அமைந்த அணிகலன் ஆதலால் அதற்கு மணி நாவல் என்று பெயர் வந்தது. இருளில் அவனின் உருவம் யாளிக்கு சரியாக தெரியாவிட்டாலும் இள வயதினன் என்று மட்டும் நன்றாக தெரிந்தது.
படுக்கையில் படுத்திருப்பவன் மனிதன் தான், பேயும் பூதமும் இனி நம்மை நெருங்கப் போவது இல்லை என்றதும் யாளிக்கு, தன்னுள் புதைந்து கிடந்த தைரியம் தாவி குதித்து வெளியே வந்தது. என்ன இருந்தாலும் நம்மவள் கராத்தே சாம்பியன் இல்லையா, அந்த தைரியத்தில் ஆண் மகனாக இருந்தாலும் அடித்து வீழ்த்திவிடலாம் எனும் அசாத்திய துணிச்சலில் அவனை எழுப்பிட முனைந்தாள். அவளது கை அவனை அடையும் முன்பாக, வேறு ஏதோ ஒன்றினை அவளின் கால் அடைந்து விட்டது.
"அம்மா...." என்று அலறினான் இருசப்பன்.
அக்கும்மிருட்டில் யாளியின் கண்களுக்கு கட்டிலே பாதிக்கு பாதியாய் தெரிந்ததால், கட்டிலுக்கு கீழே இளவரசனின் காவலுக்கு படுத்திருந்த மெய்க்காப்பாளன் இருசப்பன் முற்றிலுமாய் தெரியாமல் போனான். அவன் கழுத்தில் அவள் மிதிக்க, இருசப்பன் தன் குரல்வளை நெறிந்த அதிர்ச்சியில் குரல் குளறி கத்தி கதறி விட்டான். இதுநேரம் வரை மறந்திருந்த பேயும் பிசாசும் யாளிக்கு நினைவு வர, 'வீல்...' என்று கத்திக் கொண்டு கால் தடுக்கி கட்டிலில் விழுந்தாள். விழுந்தவளின் மேல் பாதி உடல் கட்டில் மீதும், மீதி பாதி உடல் கட்டிலுக்கு வெளியே தரையில் தொங்கியபடியும் இருந்தது.
ஒரே நேரத்தில் இருசப்பனும் யாளியும் அலறும் சத்தம் கேட்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்த இளவரசன் அரக்கப்பறக்க கண் விழித்தான். விழித்தவனது அருகில் தலைவிரி கோலமாய், இருசப்பனின் தலைமேல் ஏறி ஆடும் வெள்ளை நிற உருவம், அச்சு அசல் பேயின் ஜாடையில் இருக்க, அவன் யாளியை பேய் என்று நினைத்து கொண்டு, "என் அருகில் வர நினைக்காதே பேயே...." வென கோபத்தில் கத்தினான்.
இளவரசன் எழுந்துவிட்டது தெரிந்ததும், இருசப்பன் முதல் வேலையாக ஓடிப்போய் இரும்பு விளக்கின் திரியை தூண்டி விட்டு விளக்கின் வெளிச்சத்தை அதிகப்படுத்தினான். அறைக்குள் வெளிச்சம் அதிகமானதும், பழைய காலத்து அரண்மனை போன்ற அலங்காரத்தில் இருந்த அந்த அறையை கதிர்வேலின் வீடு என்றும், தன் அருகில் இருப்பவர்களை கதிரின் நண்பர்கள் என்றும், தப்பு தப்பாக தனக்குத் தானே முடிவு செய்து கொண்டாள்.
'நான் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மறுத்ததால் அந்த கதிர் நான் அசந்த நேரத்தில் ஏதோ ஒருவித மயக்க பொடியை என்மேல் தூவி, தன் நண்பர்களின் உதவியோடு அவனுடைய வீட்டிற்கு என்னை தூக்கி வந்திருக்கிறான்...' என்ற முடிவிற்கே வந்து விட்டாள்.
அவளைப் போலவே அவளருகில் இருந்த இருபது வயது வாலிபனும் அவனது மெய்க்காப்பாளனும், காவலர்களை மீறி தாழிடப்பட்ட தங்களது அறைக்குள் நடுநிசியில் பிரவேசித்த அவளது முகம் பார்த்து பேய் முழி முழித்து கொண்டு இருந்தனர். அதுசரி, அச்சம் வந்தால் ஆறாம் அறிவுதான் வேலை செய்யாதில்லையா, அப்படித்தான் மூடர்களாகி இருந்தனர் அவர்கள் மூவரும்....
எடுத்த எடுப்பிலேயே யாளி கோபமாக, "எனக்கு தெரியும்... உங்க வேலைதான இது? இஷ்டமில்லாத பொண்ண ராத்திரியோட ராத்திரியா வீடு புகுந்து கடத்திட்டு வர்றது உங்களுக்கே நியாயமா தோணுதா? என்ன மாய மந்திரம் பண்ணி என்ன இங்க தூக்கிட்டு வந்தீங்க?" என்றாள்.
இளவரசனின் முகம் முழுவதும் குழப்ப மேகம் சூழ, அவனது அருகில் இருந்த இருசப்பன் ரகசிய குரலில் இளவரசே, "எனக்குத் தெரியாமல் இந்த வேலையெல்லாம் வேறு நீங்கள் பார்க்கிறீர்களா?... எத்தனை நாட்களாக இந்த கள்ளத்தனம் இங்கே நடக்கிறது? இது மட்டும் இரும்பொறை நாட்டு இளவரசிக்கு தெரிந்தால் முதல் பலி நீங்கள்தான், அதன்பிறகு உங்களுக்கு துணை பலி நான்..." என்றான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.
"ஷ்..... சற்று அமைதியாய் இரடா... நானே குழம்பிப்போய் கிடக்கின்றேன்..." என்றான் இளவரசன்.
யாளி, "அங்க என்ன குசுகுசுன்னு பேச்சு வேண்டிகிடக்கு, உங்க ரெண்டு பேருக்கும்?" என்றதும் இருவரும் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு அட்டென்ஷன் பொசிஷனில் விரைப்பாக மாறி விட்டனர்.
"பயப்படாதீங்க, இதுல உங்க தப்பு ஒன்னும் இல்லை. என்னதான் நான் பெரிய கராத்தே சாம்பியனா இருந்தாலும், யாருகிட்டயும் தேவையில்லாம என் வீரத்த காட்ட மாட்டேன். அந்த கதிர்வேல் மேலதான் என் முழு கோபமும் இருக்கு, உங்க ரெண்டு பேரையும் நான் ஒண்ணும் செய்யமாட்டேன், தைரியமா இருங்க... ஆனா நீங்க நண்பனுக்காக எதை செய்யலாம் எதை செய்யக்கூடாதுன்னு யோசிச்சு செய்ய வேணாம்? எங்க அப்பா சென்ட்ரல் கவர்ன்மெண்ட் எம்ப்ளாயி, இதெல்லாம் வெளியில தெரிஞ்சு நாளைக்கு போலீஸ் கேஸ் ஆக்கிட்டாருன்னா, அவன் தன்னோட பண பலத்தை பயன்படுத்தி வெளியில வந்திடுவான். ஆனா நீங்க ரெண்டு பேரும் என்ன ஆவீங்கன்னு யோசிச்சு பாத்தீங்களா?... அவனுக்காக ஆயுசு முழுக்க திகார்ல களி தின்னுட்டு கிடக்க போறீங்களா? இனிமே அவன்கூட சேர்ந்தீங்க, பாவ புண்ணியம் பாக்காம ஏறி மிதிச்சுட்டு போய்க்கிட்டே இருப்பேன்...." என்று தன் எதிரில் நிற்பவன் யார் என்று தெரியாமல், தாராள மனதோடு அவர்களுக்கு மன்னிப்பையும் அறிவுரைகளையும் வாரி வழங்கிக் கொண்டிருந்தாள்.
அவளது நடை உடை பாவனை மூன்றுமே முற்றிலும் வித்தியாசமாக இருப்பதை கண்ட இளவரசன், "முழு மதியினை போல் ஒளிரும் பெண்ணே நீ யார்? நீ பேசும் மொழி பாதிக்குப் பாதி தமிழும் வேறு மொழிகளும் கலந்து முற்றிலும் புதிதாய் இருக்கின்றதே, எந்த சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்தவள் நீ?" என்றான் தண்மையாக.
"நானா.... சோழர் பரம்பரையில் ஒரு கராத்தே சேம்பியன்... கேள்விப்பட்டதில்ல?"
இருசப்பன், "இளவரசே... அவள் ஏதோ சோழர் பரம்பரை, செம்பியன் என்று சொன்னதை போல் உள்ளதே?! ஒருவேளை இந்தப் பெண் செம்பியன் மாதேவிக்கு தூரத்துவகை உறவினராய் இருப்பாளோ? இருந்திருந்து அவர்களின் வீட்டுப் பெண்ணையா நீங்கள் கடத்தி வர வேண்டும்? ஐயகோ... சோழன் மண்ணை தொட்டாலே கொன்று விடுவான், பெண்ணை தொட்டால் என்ன செய்வானோ?"
இளவரசன், "எனக்கு சோழர்களை நினைத்துக்கூட பயமில்லையடா, என் உடன்பிறப்பை நினைத்தால்தான்...." என்று மென்று முழுங்குகையில் வெளியே நமரியின் சத்தம் ஓங்கி ஒலித்தது. நமரி என்பது சங்ககாலத்தில் சுக துக்க நிகழ்வுகளுக்கு, ஒலிக்கப் பெறும் ஒரு ஊதல் வகை வாத்தியம், அதன் ஓசை யானையின் பிளிறலை ஒத்து இருக்கும். பொதுவாக ஆநிரைகள் களவு கொள்ளப்படும் நேரத்தில் மன்னர் கிளம்புவதை குறிக்க மட்டுமே நமது அரண்மனையில் நமரி ஒலிக்கப் பெறும்.
இருசப்பன், "இளவரசே... நமரியின் ஓசை கேட்கிறது... அப்படியென்றால் உங்களின் தமையனார்...." என்று மகிழ்ச்சியாக ஆரம்பிக்க, இளவளவன் ஆர்வத்தோடு ஓடிப்போய் மாடத்தின் வழியே வெளியே எட்டிப்பார்த்தான். அங்கு அனழேந்தி தன் வெள்ளை நிற புரவியினில் வேல் கம்பினை ஏந்தியபடி, புயல் வேகத்தில் புழுதி பறக்க பயணித்துக் கொண்டிருந்தான். அந்நாட்டின் ஆநிரைகளை ஒருவன் தொட்டானென்றால் அது அனழேந்தியையே தொட்டதற்கு சமானம், தொட்டவனை அவ்வளவு எளிதில் விட்டு விட மாட்டான் நம் முடி இளவரசன்....
இருசப்பனும் இளவளவனும் ஒருசேர, "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விட்டது.... தப்பித்தோம், இனி இரு தினங்களுக்கு நமக்கு எந்தவித கலக்கமும் இல்லை..." என்று சொல்லி கட்டியணைத்து அகமகிழ்ந்து கொண்டனர். அவர்களின் பின்னால் மாடத்தை எட்டிப்பார்க்க வந்து நின்ற யாளி, அகன்று விரிந்து பரந்து கிடக்கும் அரண்மனையின் தோற்றத்தை கண்டு மிரண்டு போனாள்.
"இது என்ன இடம்?...." என்றபடி அவர்கள் புறம் திரும்பியவள், இளவரசனது இடையை தழுவிக்கிடந்த பட்டாடையின் பகட்டை பார்த்து அதிர்ந்து போய், இன்னும் பெரிதாக விழிகளை விரித்து, "ஆமா நீங்க ரெண்டு பேரும் யாரு?" என்றாள்.
"இளவளவன் என்பது என் நாமம் அம்மா, வீரேந்திரபுரி எனும் இந்நாட்டின் இளவரசன் யான்."
"ங்ஙான்........ டேய் என்ன புடிங்கடா, எனக்கு லைட்டா மயக்கம் வர்ற மாதிரி இருக்கு..." என்று சொல்லிக்கொண்டே மெதுமெதுவாய் சுழன்று விழப்போனவளை இருவரும் வேகமாக தாங்கிப் பிடித்தனர்.
இருசப்பன், "தாயே!... தாயே!... தயைகூர்ந்து எழுந்திரியுங்கள். தங்களின் உறவினனான சோழ மாமன்னன், எங்களுக்கு தமயன் முறையில் இருப்பவன். ஒரு சிறிய பிழைக்காக அவனுக்கும் எங்களுக்கும் பகைமை பாராட்டி விடாதீர்கள்... நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று சொன்னால், தங்களுக்கு எந்த சேதாரமும் இன்றி உங்கள் இடத்திற்கே உங்களை கொண்டு போய் விட்டுவிடுகிறோம்... தாயே!..."
இளவளவன், "அடேய் இருசப்பா, சற்று அமைதியாய் இருமப்பா... அவள் மயங்கி அரை நாழிகை ஆகிவிட்டது."
"இப்போது நாம் என்ன செய்வது இளவரசே...."
"மயக்கம் தெளியும் வரையில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லையடா..."
"மயங்கியதுதான் மயங்கினாள், தன் இருப்பிடத்தை சொல்லிய பிறகு மயங்கி இருக்கக் கூடாதா? மயக்கத்திலேயே அவளை அவளுடைய இருப்பிடத்திற்கு நாம் ரகசியமாய் அனுப்பி இருக்கலாமே... அது இருக்கட்டும் இளவரசரே, அதெப்படி இந்தப் பெண்ணை தங்கள் மந்திர சக்தியால் இங்கு வரவழைத்தார்கள்?"
"நான் அவளை வரவழைக்கவே இல்லையடா... அவள் எப்படி இங்கே வந்தாள் என்பது எனக்கே புரியாத புதிராய் இருக்கிறது."
"விளையாடுகிறீர்களா இளவரசே? தங்களைத் தவிர மந்திர உச்சாடனம் தெரிந்தவர் நம் ராஜ்யத்தில் எவரும் கிடையாது. அப்படி இருக்கையில் அவள் ராஜ்ஜியம் விட்டு ராஜ்யத்திற்கு அர்த்தராத்திரியில், அதுவும் உங்கள் அறைக்கு தானாக வந்திருப்பாளா?"
"அதுதானடா உண்மை..."
"நம்புவதற்கில்லை...."
"நம்ப வைக்க நாழிகையில்லை... மூன்றாம் ஜாமம் களியும் முன்பாக இவளை இங்கிருந்து நாம் அப்புறப்படுத்த வேண்டும். நாளை இரவில் சாவகாசமாக அவள் இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கலாம்."
"தாங்கள் இவளை வரவழைக்கும் பொழுதே திருப்பி அனுப்புவதற்கும் சேர்த்து திட்டம் போட்டு முடித்துவிட்டீர்கள் போலவே...."
"திரும்ப திரும்ப சொல்வதனால் பொய் உண்மையாகாது இருசப்பா...."
"ஆனால் நான் உண்மையைத் தானே கூறினேன் இளவரசே...."
"அடேய்... உன்னை..." என்று இளவளவன் இருசப்பனை விரட்ட தொடங்குகையில் அந்த அறையின் கதவு, டமடமவென தட்டப்பட்டது.
இருசப்பன், "இளவரசே வந்திருப்பது யார் என்று தெரியவில்லையே..."
"தமையனார் அரண்மனையை விட்டு வெளியேறியாகி விட்டது இல்லையா, இனி யாராய் இருந்தாலும் எனக்கு கவலையில்லை, துணிந்து சென்று தாழ் திறவடா..."
"உத்தரவு இளவரசே..." என்றவன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போய் தாழ் திறந்து பார்க்க, அங்கே புன்னகையுடன் நின்றிருந்தவள் இரும்பொறை தேசத்து இளவரசி சிற்பிகா.
திறந்த வேகத்திலேயே கதவை மூடியவன், "இளவரசே... வாள் போய் கத்தி வந்திருக்கிறது..." என்றான்.
"என்னடா பிதற்றுகிறாய்?"
"நான் பிதற்றுகிறேனா? தங்களின் எதிர்கால பிராட்டியார் தங்களை புரட்டி எடுப்பதற்கு வந்திருக்கிறார்...." என்று சொல்லி முடிக்கையில் சிற்பிகா, "இருசப்பா.... ஏன் கதவை தாழிட்டாய்?" என கதவை தட்ட ஆரம்பித்து விட்டாள்.
"ஐயகோ.... இனி என் செய்வேன்.... என் படுக்கையில் இன்னொரு பெண் துயில்வதை கண்டால், என்னவள் என்னை துவம்சம் செய்து விடுவாளே!!! செய்யாத தவறுக்கு இன்னும் எத்தனை பேர் எனைத்தேடி வரிசைகட்டி வர போகின்றனரோ? மனமறிந்து எந்த குற்றமும் புரியவில்லையே, எனை ஏன் இத்தனை தூரம் வதைக்கிறான் அந்த ஆண்டவன்?" என்றபடி குறுக்கும் மறுக்குமாக ஐந்து முறை நடந்தவன் இறுதி முடிவாக, "வேறு வழியில்லை இருசப்பா..." என்று யாளியின் முன்பு வந்து நேராக நிமிர்ந்து நின்றான்.
கிழக்கு திசை பார்த்து நின்றவன் கால்கள் இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக சேர்த்து வைத்து, உடலை தொன்னூறு டிகிரி கோணத்தில் நேராக நிமிர்த்து நிறுத்தி, இரு கைகளையும் நெஞ்சுக்கு நேராக நீட்டி விரல்களை கூப்பி, மளமளவென மந்திரச் சொற்களை உச்சரிக்க ஆரம்பித்தான். நொடிக்கு நொடி அவன் உடலில் செஞ்சூரியனின் மையத்து அக்கினிப் பிழம்பு போல, செந்தணல் வண்ணம் கூடிக் கொண்டே வர, அதை மொத்தமாய் தன் கரங்களுக்கு இடையில் குவித்தான். வினாடிக்கும் குறைவான கண்ணிமை நேரத்தில் விரைந்து அவள் மீது செலுத்தினான். அந்த நொடியே மயக்கத்தில் இருந்த யாளி கையளவு மரப்பாச்சி பொம்மையானாள்.
ஆயிரம் முறை இளவளவன் மந்திர தந்திரங்களை உபயோகிப்பதை பார்த்திருந்தும், ஒவ்வொரு முறையும் இருசப்பனது இதயம் நின்று துடிக்கும். அதன் காரணம் என்னவென அரச குலத்து அண்ணன் தம்பிகள் இருவரும் அவனும் மட்டுமே அறிவர். யாளி மரப்பாவையானதும் அவளை தலையணைக்கு கீழே மறைத்துவிட்டு, 'ஆகட்டும்...' என்று இளவளவன் கையசைக்க, குறிப்புணர்ந்து கதவை திறந்தான் இருசப்பன்.
வேகமாக உள்நுழைந்த இரும்பொறை நாட்டு இளவரசி சிற்பிகா, "எனைக்கண்ட பிறகும் கதவை உள் பக்கமாய் தாழிட்டுக்கொண்டு என்ன செய்தாய் இருசப்பா?" என்றாள்.
இருசப்பன், "அது ஒன்றுமில்லை அம்மயாரே, நாங்கள் இருவரும் உறக்கம் வராததால் ஒரு விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தோம்... தங்களைக் கண்டதும் அறையை சுத்தப்படுத்தலாம் என்று நினைத்து கதவை தாழிட்டு விட்டேன். தவறாய் இருந்தால் அடியேனை மன்னித்து விடுங்கள் அம்மையே..." என்றான் இறந்த காலத்தின் பதற்றம் குறையாமலேயே.
"அறையை சுத்தப்படுத்த வேண்டிய அளவிற்கு என்ன விளையாட்டோ?"
இதற்கு மேல் விட்டால் அவன் உளறி விடுவான் என்று நினைத்த இளவளவன், "பெரிதாய் ஒன்றும் இல்லை சிற்பிகா, ஆடுபுலி ஆட்டம் ஆடினோம்..." என்றான்.
"அப்படியா யார் வென்றது அத்தான்? ஆடா புலியா? நீங்களதில் புலியா ஆடா அத்தான்....." என்றபடி துள்ளி குதித்து ஓடி வந்தாள் சிற்பிகா.
இருசப்பன், "ஆடுதான்... வசம்மாக இரு பெண் புலிகளிடையே மாட்டிக் கொண்டிருக்கிறதே..."
"என்ன சொல்கிறான் இந்த இருசப்பன் இரண்டு புலிகளா? அது எப்படி ஆட்டத்தில் சாத்தியம் அத்தான்?"
"அவன் வயிற்று வலியால் சித்தம் குழம்பி, ஆட்டத்தின் விதிமுறைகளையே மறந்து உளறுகிறானடி..."
"முதலில் உறக்கம் வராததால் விளையாடுவதாய் சொன்னீர்கள், இப்பொழுது அவனுக்கு வயிற்றுவலி என்கிறீர்களே?"
"அது.... ஆங்... வயிற்று வலி வந்ததால் உறக்கம் வரவில்ல. அதுசரி, ஆடுபுலி ஆட்டத்தின் காரணம் கேட்கத்தான் இங்கே வந்தாயா சிற்பிகா?"
"இல்லை அரசே வேறொரு முக்கியமான தகவலை கொண்டு வந்திருக்கிறேன்..." என்றவள் இருசப்பன் புறம் திரும்பி, "இருசப்பா இன்னும் எத்தனை நேரத்திற்கு இங்கேயே நின்று எங்கள் முகத்தை வேடிக்கை பார்ப்பதாய் உத்தேசம்...." என்றதும்,
அவன், 'நான் தப்பித்துவிட்டேன் இளவரசே...' என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு அறைக்கு வெளியே போய் அமர்ந்தான்.
"அவனை வெளியேற்றியாயிற்று, இப்பொழுது சொல்லடி இரும்பொறை தேசத்து இளவரசியே... மூன்றாம் சாமம் என்றும் பாராமல் என்னைத் தேடி வருமளவிற்கு, என்னாசை வகுளம் மலருக்கு என்ன ஆனதடி பெண்ணே?"
அவன் வார்த்தைகளில் மதிமயங்கியவள், "காலம்.. ஞாலம்.. எல்லாம் மறக்கும் அளவிற்கு, கால்களை துறந்து மகிழ்ச்சியில் விண்ணைத்தாண்டி பறந்து கொண்டிருக்கின்றேன் மன்னவா..." என்றபடி ஒரு சுற்று சுற்றி மெத்தையின் மேல் விழுந்தாள்.
"என்னவென்று சொன்னால் நானும் என் இதய ராணியுடன் பறந்து வருவேன் இல்லையா?" என சொல்லிக்கொண்டே அவனும் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
"இதழ் தித்திக்கும் அத்தகவலை சொன்னால் தாங்கள் எனக்கு என்ன பரிசு தருவீர்கள்?"
"எதை வேண்டுமானாலும் என் நாயகியின் பாதங்களில் சமர்ப்பிக்க காத்திருக்கிறேன் இளவரசி......" என்றவனது கண்களில் காதல் கொஞ்சி விளையாடியதை கண்டதும், சிற்பிகாவின் மஞ்சள் வண்ண முகம் செந்நிறமாய் நிறம் மாற, தன்னவனுக்கு அதைக் காட்ட மறுத்து தலையணை பக்கமாய் சரிந்து படுத்தாள். அப்போது தலையணைக்கு அடியில் இருந்த மரப்பாவை அவளுக்கு தெரிந்தது.
"என்ன அத்தான் இது? இங்கே மரப்பாச்சி பொம்மை கிடக்கின்றது?"
இளவளவன் திணறலோடு, "அது... அது... வந்து..." என்று பதில் மொழி சொல்ல முடியாமல் அஞ்சி நடுங்குவதை கண்ட சிற்பிகா,
"ஓகோ.. சற்று முன்பு நீங்களும் இருசப்பனும் ஆடிய ஆடுபுலி ஆட்டம் இதுதானா? இன்னும் எத்தனை பாவைகளை அறை முழுவதும் ஒளித்து வைத்திருக்கிறீர்கள் அரசே? மன்னிக்கவும் மழலைகளே...." என்று எழுந்து ஒவ்வொரு இடமாக தேட தொடங்க,
"இல்லை... அப்படி எதுவும் இல்லையடி... இந்த பாவையை முதலில் திருப்பிக்கொடு...."
"ஆ... ஆ.... ஆ... அவ்வளவு எளிதில் உங்களின் ஆசை மரப்பாவையை நான் திருப்பி கொடுத்து விடுவேனா? நமது மணநாள் வரும் வரையில் இது என்னுடன் இருக்கட்டும். மணம் முடித்த பிறகு நானும் உங்களின் ஆசை மரப்பாவையும் உங்களின் கைப்பாவையாக இங்கேயே வந்து விடுகிறோம்."
"அதற்கு பல நாட்கள் ஆகாதோடி தங்கமே... நான் என் கைகளாலேயே நாளை உனக்கு தங்கத்தில் பாவை செய்து தருகிறேன் இப்போது இதை தந்துவிடேனடி..."
"இல்லை அரசே நமது மணநாள் நம்மை நெருங்குவதற்கு நெடுநாட்கள் ஆகாது..."
"அப்படி என்றால்?"
"சற்று முன்பு இரும்பொறை தேசத்து அரசன் இங்கே வந்திருக்கிறார், அவரும் அவருடைய தமக்கையும் தத்தமது செல்வங்களுக்கு மணநாள் குறிப்பது குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டனர்."
இளவளவனின் உடல் இறுக பார்வையை கூறாக்கி, "என்ன உளறுகிறாய் சிற்பிகா?..." என்றான்.
"நான் ஒன்றும் உளரவில்லை அரசே! என் தந்தையார் இப்பொழுதுதான் இங்கே வந்து சேர்ந்தார், வந்ததும் வராததுமாக தங்களின் அன்னையார் அவரை அழைத்து மணநாள் நிச்சயிப்பது குறித்து விவாதித்துக் கொண்டு இருக்கின்றார்."
"எங்கே?....." என்றான், இதுவரை அவள் வாழ்நாளில் காணாத அளவு கடுங் கோபத்தோடு.
"எழுநிலை மாடத்தின் (ஏழடுக்கு மாளிகையின்) மூன்றாம் பிரிவான அரசரின் ஓய்வு அறைக்கு அருகில் இருக்கும் அந்தப்புரத்தினில்...."
அடுத்த நொடியே அத்திசையில் விரைந்து செல்ல தொடங்கிவிட்டான் இளவளவன். நேரத்தை குறிப்பதற்காக ஒலிக்கப் பெறும் பெரிய மணியின் ஒலி, வேறு சிலருக்கு அபாயமணியாக ஒலிமாறி 'டங்... டங்...' என அரண்மனை முழுவதும் கேட்கும்படி ஒலித்தது. மாடத்தின் கற்சுவர்களில் ஆங்காங்கே சொருகி வைக்கப்பட்டிருந்த தீப்பந்தங்களின் மங்கிய வெளிச்சத்தில் அக்கினி பிழம்பான கண்கள் தனியாக ஒளிரும்படி அவன் நடந்து வருவது, இருளில் நடந்துவரும் சிங்கத்தின் நடையினை ஒத்திருந்தது. அவனுடைய காலடிச் சத்தம், தன் எதிரில் எவர் இருந்தாலும் முட்டி தூக்கி எறிந்து விடுமளவு சினம் மிகுந்த காட்டு மாட்டின் பாதக் குளம்பு ஓசையினை அப்பாதையில் நின்றிருந்த காவலர்களுக்கு நினைவுபடுத்தியது.
உரமேறிய உடல் கொண்ட இளவயது ஆண் மக்கள் நான்கு பேர் சேர்ந்து தள்ளி திறக்க வேண்டிய எழுநிலை மாடத்தின் வாயிற் கதவினை ஒற்றைக் கையால் ஓங்கி அடித்தான் இளவளவன். மதங்கொண்ட யானை இடம் மாட்டிக்கொண்ட தென்னங்குருத்தாய், அவனுக்கு அஞ்சிய அக்கதவு விலகி ஓடி வழிவிட்டது. அன்னையின் மெய்க்காப்பாளர்களை விருவிருவென கடந்து வந்து அந்தப்புர வாயிலில் நின்றான்.
இளவளவனை கண்டதும் மகிழ்ச்சி மிகுதியால், "அடடே... வாருங்கள் எனதருமை மருமகனே...." என்றபடி எழுந்து வந்து உறவு கொண்டாட நினைத்த இரும்பொறை தேசத்து அரசனை ஒற்றை பார்வையில் தூர நிறுத்தியவன்,
"அன்னையே.... எனக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை என்றறிந்த பின்னும், யாரைக்கேட்டு இவருடன் இணைந்து சம்பந்தம் பேச முடிவு செய்தீர்கள்?..... " என்று அம்மாளிகையே அதிரும்படியாக கர்ஜித்தான் இளவளவன்.
No comments:
Post a Comment