விழி வழி நுழைந்தவளே..
உறக்கத்தையும் தாண்டியொரு,
மயக்க நிலையை,
உயிரில் உணர்கிறேன் உன்னால்!!!
உன் நினைவெனும் ரசாயனத்தை,
என் இதயத்தினுள் ஊற்றி,
எனை வைத்து,
என்ன ஆராய்ச்சி செய்கிறாயடி?
அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை ஊருக்கும் உறவுக்கும் எனக்கும் அவனுக்குமான திருமண ஒப்பந்தத்தை 'நிச்சயம்' எனும் வைபவத்தின் மூலம் அறிவிக்க இருக்கின்றனர். அதனை முன்னிட்டு இரு குடும்பத்தினரும் தூரத்தில் வகை உறவினர்களுக்கு அதை அறிவிக்கும் வேலையில் அதி மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர். இன்று காலையில்தான் பெண் பார்க்கும் படலம் நிகழ்ந்திருக்கிறது என்றாலும் இரு வீட்டு ஆட்களும் அடிக்கடி ஏதோ ஒரு விஷயத்திற்காக கலந்து பேசிக் கொண்டே இருந்ததால், இப்போது உரிமை வைத்து ஒட்டி உறவாடும் அளவிற்கு அவர்களின் தொடர்பு வளர்ந்து விட்டது.
என் வீட்டில் என்னைத் தவிர மற்ற அனைவருக்கும் தலைக்கு மேல் வேலை இருக்கிறது. நான் சும்மா இருப்பதனாலேயோ, இல்லை அவனை என் மனதில் சுமந்து கொண்டிருப்பதனாலேயோ நிகழ்வது எதுவும் என் அறிவினில் பதியாமல் கனவுலகத்தில் இருப்பது போல் காற்றில் மிதந்து கொண்டு இருக்கின்றேன்.
அடுப்பங்கரையில் கீர்த்தனாவின் அம்மா சமையல் வேலையில் மும்மரமாய் ஈடுபட்டிருக்க ஹாலில் அவளுடையதம்பி டிவி பார்த்து கொண்டிருந்தான். தன்னுடைய அறைக்குள் ஒன்றுமில்லாத சுவற்றை வெறித்துப் கொண்டு அமர்ந்திருந்த கீர்த்தனாவின் பின்னால் சத்தம் எழுப்பாமல் வந்து நின்ற ராதா, "அங்கு என்ன தெரிகிறது மன்னா?" என்றாள்.
காதின் அருகில் ஒலித்த குரல் கேட்டு பதறி அடித்து திரும்பிய கீர்த்தனா ராதாவின் முகத்தை பார்த்தும், "பிசாசு... பிசாசு மாதிரி திடீர்னு வந்து பயமுறுத்துறடி..." என்று சீறினாள்.
"நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு பேயே.... இவ்வளவு நேரமா ஹால்ல உன் தம்பிகிட்ட வாயடிச்சுட்டு இருந்தேன். ஹால்ல நாங்க அந்த கத்து கத்திட்டு இருக்கோம், நீ என்னமோ செவுடன் காதுல ஊதுன சங்கு மாதிரி எங்கள கவனிக்காம விட்டத்த பாத்து கனவு கண்டுக்கிட்டு இருக்க. அது கெடக்கட்டும் காலையில கோவில்ல ஒரே ரொமான்சாம்மே, பையன பாத்து சாரி.. சாரி... எங்க அண்ணன பார்த்து மேடம் அவ்ளோ ஃப்ளாட்டாகி இருக்கீங்களாக்கும்..."
"சீ...சீ... அப்டியெல்லாம் இல்ல, நாங்க சும்மா கேஷூவலாத்தான் பேசிக்கிட்டோம், சொல்லப்போனா நாங்க எங்கள விட டெஸ்லாவ பத்தித்தான் நெறய பேசினோம்..."
"அடிப்பாவி... தினமும் சுப்ரபாதம் மாதிரி டெஸ்லாபாதம் பாடி எங்களத்தான் பாடா படுத்துறன்னு பாத்தா அவரையும் விட்டு வைக்கலயாடி நீ?..."
"டெஸ்லாவ பத்தி காமெடியா பேசாதன்னு உனக்கு நூறுதடவ சொல்லிட்டேன்டி..."
"இஞ்சார்ரா மேடம்க்கு கோவத்த.... "
"ஹேய் சொல்ல மறந்துட்டேன், அவருக்கும் உன்ன மாதிரியே அஜித்னா ரொம்ப புடிக்குமாம்டி, படம் ரிலீஸ் ஆன முதல்நாளே பாத்திடுவாராம்."
"அண்ணன் தங்கச்சின்னா அப்டித்தான்டி, எல்லா விஷயத்துலயும் ஒண்ணுபோல இருப்போம்."
"ஆமாண்டி, அறிவுலயும் அப்டியே ஒண்ணாத்தான் இருக்கீங்க, சரியான மரமண்டைங்க..."
"உன் பேச்சுல நாத்தனார்ன்ற மரியாதையே இல்ல... எங்க அண்ணன் வரட்டும் சொல்லி வைக்கிறேன் பாரு..."
"உங்க அண்ணனுக்கும் அதே நிலமைதான்டி..."
"எங்க அண்ணன் என்ன புத்திசாலிடி, உன்ன குழப்பி விட்டு நீயே ஐ லவ் யூ மாமோய்னு சொல்ற அளவுக்கு வாயாலேயே வீடு கட்டிடுவாரு..."
கீர்த்தனா, "உனக்கு எப்டிடி இந்த மேட்டர் தெரிஞ்சுச்சு?..." என்று பரபரப்பாய் விழிகளை உருட்டி வினவுவதை கண்டு கைகொட்டி சிரித்த ராதா, "இதுக்குப் பேருதான் கிவ் அன்ட் டேக் பாலிசி செல்லம். டெஸ்லா பத்தின உன் சொற்பொழிவ கேட்ட பிறகும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாருன்னா அவரு சாதாரண புருஷன் இல்ல, மகா புருஷன்டி...."
"ஏய்...."
"ஜோக்ஸ் அப்பார்ட், அண்ணன பாத்து பேசினியா? நெஜமாவே அவர உனக்கு புடிச்சிருக்கா?" என்றாள் பொறுப்பான தோழியாய்.
வெட்கமாய் தலை கவிழ்ந்த கீர்த்தனா, "ம்... நல்லாத்தேன் இருக்காரு உங்க அண்ணன்."
"ஆளு எப்படி? சாஃப்ட்டு கேரக்டரா, இல்ல டெரர் பீசா?"
"சாஃப்ட்டா மட்டுமில்ல, ரொம்ப ஃப்ரெண்ட்லியா பேசினாரு..."
"சூப்பர்டி, அப்போ வேலைக்கு போகனுங்கிற உன் ஆசைய பத்தி எதாவது பேசுனீங்களா?"
"இல்லடி...."
"ஏன்டி? பர்ஸ்ட் மீட்டிங்லயே அது வேணும் இது வேணும்னு கேட்டா உன்ன தப்பா நினைச்சுக்கிட்டு மேரேஜ்க்கு ஒத்துக்காம போயிடுவாரோன்னு பயமா இருந்துச்சா?"
"சீ.. அவரு அப்டிப்பட்ட ஆளு இல்லடி, ஒரு மரத்தோட உணர்வுகளையே அவ்வளவு அழகா புரிஞ்சுகிட்டவருக்கு, என்னோட உணர்வுகள புரிஞ்சுக்கிற அளவுக்கு பக்குவம் இல்லாமலா இருக்கும்? ஆனா அவருக்கு இருக்கிற பக்குவம் அவங்க குடும்பத்து ஆளுங்களுக்கும் இருக்கும்னு சொல்ல முடியாது இல்லையா. அதுவும் இல்லாம எங்க வீட்ல இந்த கல்யாணம் நடந்தே ஆகணுங்கிற முடிவுல இருக்காங்க, அவங்க பேச்ச மீறி நான் எதுவும் பேசக்கூடாதுன்னு முன்னாடியே நூறுதடவ சொல்லித்தான் கோவிலுக்கு கூட்டிட்டு போனாங்க, அதுனால..."
"அதுனால... கனவ விட கணவனே முக்கியம்னு முடிவுக்கு வந்துட்ட, அப்டித்தான?"
"அதான்டி எனக்கும் புரியாத புதிரா இருக்கு. வருஷ கணக்கா எனக்குள்ள இருந்த ஆசைய விட, இவன் எப்டி என் மனசுக்குள்ள இவ்ளோ ஆழமா பதிஞ்சான்?"
"கண்டதும் காதலோ..."
"காதலும் இல்ல கன்றாவியும் இல்ல..."
"அப்புறம் இதுக்கு பேரு என்னவாம்?"
"இதுக்கு பேரு என்னன்னு எனக்கே தெரியலடி... நான் அவனுக்கு ஷேக் ஹேண்ட் குடுக்கும்போது அந்த ஒரு நிமிஷம் எப்டி இருந்துச்சு தெரியுமா? பழைய படத்துல எல்லாம் ஒரு செகண்ட் உலகமே நின்னு போயிடுற மாதிரி காட்டுவாங்களே அப்டி இருந்துச்சு... திடீர்னு என்ன சுத்தி இருக்குற உலகம் கண்ணு கூசுற அளவுக்கு ரொம்ப வெளிச்சமாயிட்ட மாதிரி இருந்துச்சு... அவன தவிர மத்ததெல்லாம் ரொம்ப தூரத்துல இருக்குற மாதிரி தோணுச்சு... உலகத்தோட மொத்த சத்தமும் அடங்கிப்போய் எனக்கு என்னோட ஹார்ட் பீட் சத்தம் மட்டும் டங்கு டங்குனு கேட்டுச்சு..."
"ம்... அப்புறம்..."
"ஏய்... என்னடி நக்கலா?"
"பின்ன என்னடி? நேத்து முழுக்க கல்யாணம் பண்ண மாட்டேன்னு என்கிட்ட சண்ட படத்த ஓட்டிட்டு, இன்னிக்கி எங்க அண்ணன பாத்ததும் லவ் மூவி ஓட்ட ஆரம்பிச்சுட்ட பாத்தியா? ஒரு குழந்தை புள்ளைன்னு கூட பாக்காம என்ன இப்டி மாத்தி மாத்தி பேசி வதைக்கிறியேடி ராட்சஷி... உன்கிட்ட மாட்டிக்கிட்டு எங்க அண்ணன் என்ன பாடு படப்போறாரோ???"
"ஏது ராட்சஷியா?"
"பின்ன தேவதைன்னு சொல்றதுக்கு நான் என்ன எங்க அண்ணனா?"
"வந்தேன்னா உன்ன கொன்னுடுவேன்டி...." என்று கீர்த்தனா அவளை விரட்ட,
அவளுக்கு பயந்து நேராக கிச்சனுக்கு ஓடிய ராதா, கீர்த்தனாவின் அம்மாவிடம், "ஆன்ட்டி... ஆன்ட்டி... உங்க பொண்ண பாருங்க... ஏன்டி விட்டத்த பாத்துட்டு உக்காந்துருக்க, ஏதாவது காத்து கருப்பு அடிச்சிடுச்சான்னு கேட்டதுக்கு என்ன கொல்ல வர்றா... ஆன்ட்டி..." என்று கத்தினாள்.
ஹாலில் டிவி பார்த்து கொண்டிருந்த அவளின் தம்பியும், "ஆமா ராதாக்கா... இவ ஒரு நாள்ல இருபத்து நாலு மணி நேரமும் மியூசிக் சேனலே பாத்துட்டு இருப்பா, கொஞ்ச நேரம் சேனல் மாத்துனாலும் போதும், வீட்ல எந்த மூலையில இருந்தாலும் ஓடி வந்து என்னோட சேனல வைடான்னு எங்கூட சண்ட போட ஆரம்பிச்சிடுவா, இன்னிக்கி என்னடான்னா எங்க அக்கா இருக்குற இடமே தெரியலக்கா. அவளுக்கு என்னமோ ஆயிடுச்சு..." என்றான் தன் பங்கிற்கு.
அவர்கள் இருவரோடு அம்மாவும் சேர்ந்து கொண்டு கேலியாய் சிரிக்க, வெட்கமும் அவமானமுமாய் தரையை நங்கென மிதித்துவிட்டு, "போங்க நான் என் ரூமுக்கு போறேன்...." என்று ஓடி ஒளிந்து கொண்டாள் கீர்த்தனா...
'என்னால் அவனை நினைக்காமல் இருக்க முடியவில்லையே, அவனுக்கு எப்படித் தான் என்னை நினையாமல் இருக்க முடிகின்றதோ எனக்கு தெரியவில்லை!!!... நானே முயன்று வேறு வேலைகளில் என் கவனத்தை திருப்ப முனைந்தாலும், வீட்டில் பேசப்படும் பேச்சுகளால் முன் அனுமதி இன்றி அவனது முகமே மீண்டும் என் கண்களுக்குள் வந்து ஒட்டிக் கொள்கின்றது. மற்றவர்களின் கண்களுக்குப் புலப்படாத ஏதோ ஒரு இனம்புரியா ஆட்கொல்லி நோய் என்னுள் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக என்னை வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. இதற்குப் பெயர்தான் காதலா?' என கீர்த்தனா நிகழ்காலத்தை நினைத்து குழம்பிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மணி தங்களுடைய எதிர்காலத்தை தங்களுக்கு வசதியாய் வகுக்க தொடங்கிவிட்டான்.
எங்கேயோ அவசரமாக கிளம்புவதைப் போல விறுவிறுவென்று சமையல் அறைக்குள் நுழைந்த மணி, "அண்ணி... என்ன அண்ணி நீங்க தனியா சமையல் பண்ணிட்டு இருக்கீங்க? உங்களுக்கு கூடமாட ஒத்தாச செய்யாம எங்க அம்மா எங்க போச்சு? பக்கத்து வீட்டு கிழவிங்க கூட அரட்டை அடிக்க போயிடுச்சா? ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா திருச்சியிலிருந்து மதுரைக்கு வர்றீங்க, அப்டி வர்ற உங்கள கவனிக்காம என்ன அரட்டை வேண்டி கிடக்குது உங்க மாமியாருக்கு?" என்றான்.
குழம்பினை கூட்டி வைத்துக் கொண்டிருந்த அவனின் அண்ணி, "கொழுந்தநாரே... நான் உங்க வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்து ஏழு வருஷம் ஆகுது, இத்தனை நாள்ல இன்னிக்கி தான் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியுதா கொழுந்தனாரே? ஆனா சும்மா சொல்லக்கூடாது, நீங்க பிரம்மாதமா காத்துல கயிறு திரிக்கிறீங்களே..." என்றார்.
"சே.. சே... நான் எப்பவும் உண்மையத்தான் சொல்வேன் அண்ணி, இந்த குடும்பத்தோட அஸ்திவாரமே நீங்க தான் தெரியுமா? ஊருக்குள்ள எத்தனை மருமகளுங்க இருக்காங்க, யாராவது உங்க அளவுக்கு பொறுமையா பொறுப்பா குடும்பம் நடத்திட்டு இருக்காங்களா? அப்பேர்பட்ட உங்கள எங்க அம்மா சரியா கவனிக்கிறதே இல்லன்னு நினைக்கும் போதுதான் எனக்கு கண்ணு கலங்குது..." என்றான் அவனுடைய அக்மார்க் அப்பாவி முக தோரணையில்.
"உங்களுக்கு என்ன வேணும்னு நேரடியா கேளுங்க கொழுந்தனாரே, அதை விட்டுட்டு நல்லா இருக்கிற மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏன் சண்டை மூட்டிவிட பாக்குறீங்க? நாளைக்கு உங்க பொண்டாட்டியும் இதே சமைய கட்டுக்குத்தான் வரப்போறா, அதையும் கொஞ்சம் ஞாபகத்துல வெச்சுக்கோங்க..."
மணி, "ப்பா... அண்ணி எவ்ளோ புத்திசாலி நீங்க... உங்கள கல்யாணம் பண்ணிக்க எங்க அண்ணன் போன ஜென்மத்தில ஒத்த காலுல ஊசி மேல நின்னு தவம் பண்ணி இருக்கான் போல...." எனும் பிரம்மாண்ட புகழ்ச்சியில் உச்சி குளிர்ந்து போன அவனின் அண்ணி,
"முடியல தம்பி, இதுக்கு மேல ஐஸ் வச்சிங்கன்னா, நான் சமைய கட்டிலயே உறஞ்சு போயிட போறேன். கடைக்குப் போன அத்தை திரும்பி வர்ற நேரமாயிடுச்சு, அவங்க வர்றதுக்குள்ள நான் இந்த வேலைய முடிச்சு வைக்கணும். உங்களுக்கு என்ன வேணும்னு சீக்கிரமா சொல்லுங்களேன்..."
"அண்ணி... அண்ணி... ப்ளீஸ் அண்ணி எனக்கு கீர்த்தனாவோட போன் நம்பர் வேணும். நான் கேட்டா அவங்க ஃபேமிலி ஆளுங்க தப்பா நினைச்சுக்குவாங்க, அதனால எனக்காக நீங்க கேட்டு வாங்கி தர்றீங்களா? ப்ளீஸ் அண்ணி முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க..."
"ஐயயோ... இன்னிக்கி காலையில தான் பொண்ணு பாத்துட்டு வந்திருக்கோம், இன்னிக்கே பொண்ணோட போன் நம்பர் கேட்டா எப்டி தம்பி?"
"அண்ணி ப்ளீஸ் அண்ணி... நான் நைட்டு பஸ்க்கு கிளம்புறதுக்குள்ள எனக்கு எப்படியாவது நம்பர் வாங்கி குடுங்க அண்ணி...." என விடாப்பிடியாக கெஞ்சினான்.
"அதெல்லாம் முடியாது தம்பி. நிச்சயம் பண்ற வரைக்கும் இந்த வேலையே வேணாம் தம்பி. சமையல் வேலை முடிய போகுது, காலா காலத்துல சாப்பிட்டுட்டு நல்ல புள்ளையா பஸ்ஸ புடிச்சு மெட்ராசுக்கு கிளம்புற வழியை பாருங்க..."
"அண்ணி..." என்று இழுக்க,
"இந்த பேச்சை இதோடு விட்டுட்டு போய் ரெடி பண்றீங்களா, இல்ல உங்க அண்ணன கூப்பிடவா?" என்றார் ஸ்ட்ரிக்ட்டாக.
உலகின் மொத்த பாரமும் தன் தலைமேல் வைக்கப்பட்டது போல தலையை தொங்கப்போட்டுக் கொண்டு சமையற்கட்டினை விட்டு வெளியேறினான் மணி. அவன் வெளியேறிய இரண்டு நிமிடத்தில், ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த ஷாலினி, "அம்மா... அம்மா..." என்று கத்தி அழுதாள்.
அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பை அப்படியே விட்டு விட்டு வேகமாய் வந்து, "என்னடி? என்ன ஆச்சு?" என்றார் அவளின் அம்மா.
ஷாலினி, "அம்மா... சித்தப்பா என்னோட பலூன உடைச்சிட்டு, ஓடி போயிட்டாங்க...." என்று தேம்பித் தேம்பி அழுதாள்.
"என்னது? பலூனை உடைச்சிட்டு ஓடிட்டானா? இருக்கட்டும் விடுடி, நாம புது சித்தி நம்ம வீட்டுக்கு வந்ததும் அவங்கட்ட சொல்லி சித்தப்பாவ அடி வெளுத்து விட்ரலாம். இதே மாதிரி புது பலூன் அப்பா நாளைக்கி வாங்கி தருவாரு. நீ அழுகாம போய் டிவியைப் போட்டு சோட்டா பீம் பாரு..." என்று அப்போதைக்கு குழந்தையை சமாதானப் படுத்தி வைத்தார்.
நேரம் இரவு பத்தினை நெருங்கிக் கொண்டிருக்க, மணிகண்டன் சென்னைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். பஸ் ஸ்டாண்ட் வரை உடன் சென்று வழியனுப்பும் விதமாக அவனது அண்ணன் அப்பாவின் டிவிஎஸ் 50 யுடன் வாசலில் தயாராகக் காத்திருந்தான். மணியின் அம்மா கல்லூரி பேக்கினை போன்றிருந்த அவனுடைய சிறிய லக்கேஜ் பேக்கில், துணிமணிகளோடு இதர சில தின்பண்டங்களையும், மசாலா பொடிகளையும் திணித்து அமுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.
மளமளவென்று தயாராகி வந்த மணி தன் அம்மா அப்பாவிடம், "கிளம்புறேன்ம்மா... கிளம்புறேன்ப்பா..." என ஒரு முறை அவசர ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான்.
அம்மா, "தம்பி அண்ணிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு கிளம்புயா என்றார்..."
"நான் உங்க மருமக கூட டூ ம்மா..."
அம்மா, "என்னது டூ வா? ஏன்டா?...."
"நீங்க வீட்டுல இல்லாத நேரத்துல அவங்க உங்கள திட்டிகிட்டே இருக்காங்க தெரியுமாம்மா... எங்க அம்மாவுக்கு மரியாதை கொடுக்காதவங்க யாராயிருந்தாலும் நானும் மரியாத குடுக்க மாட்டேன்..."
அண்ணி, "அட அண்டப்புளுகா... ஆகாசப்புளுகா... அத்தை அவன் ஏன் என் மேல கோவமா இருக்கான்னு நான் சொல்றேன்...." என்று தன் மாமியாரின் முன்னால் வந்து நிற்க,
மணி ஓடி வந்து தன் அம்மாவை தன் பக்கம் திருப்பி, "வேணாம்மா... அண்ணி பேச்சை நம்பாதீங்க. அவங்க உங்கள நல்லா ஏமாத்துறாங்க. நீங்க பெத்த புள்ள நானு... நான் சொல்றத மட்டும் நம்புங்கம்மா..."
அம்மா, "போடா டேய்... எனக்கு உன்ன பத்தியும் தெரியும் அவள பத்தியும் தெரியும்... நீ ஏதாவது கோக்குமாக்கு தனம் பண்ணிட்டு அவ பேருல குறை சொல்றியா?"
"போம்மா... நல்ல மக்கு மாமியாரா இருக்க நீ... இப்படியே இருந்தா இந்த மருமக மட்டும் இல்ல, இனிமே வரப்போற மருமகளும் சேர்ந்து உன் தலையில மொளகா அரைக்க போறா...." என்று சொல்லிக் கொண்டு இருக்கையில் வாசல் பக்கம் இருந்து மணியின் அண்ணன், "டேய், அரட்டையடிச்சுட்டு இருக்காம சீக்கிரமா வாடா..." என்று அதட்டலாக குரல் கொடுத்தான்.
மணி தன் லக்கேஜை எடுத்து முதுகில் மாட்டியபடி வெளியேற, அவன் பின்னாடியே வந்த அவனின் அம்மா அக்கறையாய், "மணி... உனக்கு கல்யாணம் ஆகப்போகுது, அதுனால இன்னும் சின்னப்புள்ள மாதிரி பார்க்கு பீச்சுனு அங்கிட்டும் இங்கிட்டும் ஊர சுத்திட்டு இருக்காம வீடு ஆபீசுன்னு இருக்க பழகுய்யா... ராத்திரி பொழுது அடைஞ்ச பிறகு அவன் கூப்ட்டான் இவன் கூப்ட்டானுட்டு ஃப்ரண்ட்ஸ் கூட சினிமாவுக்கு போகாதய்யா... தெரியாதவங்க யாருகிட்டயும் எந்த வம்பும் தும்பும் வச்சுக்காத, தெரிஞ்சவங்களா இருந்தாலுமே யாரையும் நம்பி எப்பவும் பணமோ ஜாமீனோ குடுக்காதய்யா..." என்று சொல்லி முடிக்கையில் மணி டிவிஎஸ்ஸில் ஏறி இருந்தான்.
அப்பா, "அடியே... அவன் முதன்முதலா சென்னைக்கு வேலை தேடிப் போகும்போது ஆரம்பிச்ச பாட்டு இது. இதே பல்லவியை இன்னும் எத்தனை வருஷத்துக்கு பாடிக்கிட்டே இருப்ப?... அவன் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துற அளவுக்கு பெரிய மனுஷன் ஆகிட்டாண்டி, தொண தொணன்னு பேசிட்டு இருக்காம அவன பஸ்ஸ பிடிக்க விடு. விட்டுப்போன மிச்ச சொச்சத்தெல்லாம் நாளைக்கு காலையில அவன் போன் பண்ணும் போது சொல்லிக்க... டேய் மணி, பாத்து பத்திரம்டா... இறங்கினதும் மறக்காம போன் பண்ணு..." என்றார்.
மணியின் அண்ணன், "ஏம்ப்பா எப்ப பாத்தாலும் அம்மாவ குத்தம் சொல்லிக்கிட்டே இருக்கீங்க? இவனுக்கு ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரலயே, அதுனாலதான் அம்மா திரும்ப திரும்ப நல்லது கெட்டது எடுத்து சொல்றாங்க..."
"அவரு புத்தியில உரைக்கிற மாதிரி நல்லா சொல்லுடா..." என்று அம்மாவும் தன் மூத்த மகனோடு ஒத்து ஊதினார்.
மணி, "டேய் அண்ணா... நிமிஷத்துல அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவுல நாரதர் வேலை பார்த்து விட்டுட்டடா..." என்றான் சிரித்துக்கொண்டே.
"வாய மூடுடா குரங்கு..." என்று சொல்லிக்கொண்டே அவன் அண்ணன் வண்டியை கிளப்பி விட அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பொதுவாய் டாட்டா காட்டிவிட்டு அம்மாவின் பின்னால் நின்று இருந்த அண்ணியை ஒரு முறை வாயால் வக்கனைத்து வைத்துவிட்டு டாட்டா சொன்னான் மணி.
இருவரும் பேருந்து நிலையத்திற்கும் வந்ததும் தம்பிக்கு தேவையான தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட் என்று சகலத்தையும் பார்த்து பார்த்து வாங்கி கொடுத்துவிட்டு மணி ஏறவேண்டிய பேருந்து நிற்கும் இடத்திற்கு அழைத்து வந்தான் அவனின் அண்ணன். பேருந்து புறப்படுவதற்கான நேரம் இன்னும் ஆகவில்லை ஆதலால், மணி இருக்கை எண் சரிபார்த்து லக்கேஜ் பேக்கை கொண்டு போய் வைத்துவிட்டு பேருந்திற்கு வெளியே அண்ணனுடன் பொது விஷயங்கள் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தான்.
மணி, "நான் ஊருக்கு போயிட்டு போன் பண்றேண்ணா... நீ எப்போ திருச்சி கிளம்புற?"
"எனக்கு இந்த மாசத்துக்குரிய லீவ் அப்டியே இருக்கு, அதுனால நான் நாளைக்கு ஒருநாள் இங்கேயே இருந்துட்டு, நாள மறுநாள் அதிகாலை நேரம் கிளம்பலாம்னு இருக்கேன்டா..."
"அண்ணிகிட்ட கொஞ்சம் வம்பு இழுத்து வச்சிருக்கேன், என்னால உன்ன கோபமா திட்டுனாங்கன்னா வாங்கிக்கோ...."
"உங்க ரெண்டு பேத்துக்கும் இதென்ன புதுசா? எப்ப ஊருக்கு வந்தாலும் அவகிட்ட எதாவது வாய வளத்துவிட்டுட்டு நீ மட்டும் தப்பிச்சு ஓடிர்ற, அவ என்னடான்னா உனக்கும் சேத்து என்ன திட்டி தீக்குறா..."
"ஹி... ஹி...."
"சிரிக்கிரியா... இன்னும் எத்தன நாளைக்கி? உனக்கும் நாளைக்கி இதே மாதிரி வண்டி வண்டியா வந்து விழும்போது என் கஷ்டம் தெரியும்..."
அப்போது பேருந்து புறப்பட தயாராவதை கண்டதும், "சரி கிளம்புறேன் அணணா..." என்றுவிட்டு கடகடவென ஓட முற்பட்டவனை, "மணி, கொஞ்சம் பொறுடா..." எனும் குரல் தடுத்து நிறுத்தியது.
"என்னண்ணா?"
"உங்க அண்ணி சொன்னா, நீ கீர்த்தனாவோட போன் நம்பர் கேட்டியாம்மே..."
"ஐயயோ.... அது சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்."
"அந்த பொண்ணு போன் நம்பர உன்னோட வாட்ஸப் நம்பருக்கு அனுப்பி வைக்கிறேன், பார்த்து பக்குவமா பேசிக்க."
மணி மகிழ்ச்சியாக, "தேங்க்ஸ் அண்ணா..." என்றான்.
"இன்னிக்கி காலையில அந்தப் பொண்ணு முகத்த பாக்கும்போது ஏதோ வேண்டா வெறுப்பா வந்திருந்த மாதிரி தோணுச்சு, அதனாலதான் நீங்க ரெண்டு பேரும் பேசி பழகினா நல்லதாச்சேன்னு நெனச்சு நம்பர் கொடுக்கிறேன். உங்க அண்ணி சொன்னா நீ கேட்டதும் நம்பர் குடுக்கலன்னு பாப்பாவோட பலூனை நீ உடச்சிட்டியாமே?"
"இல்லண்ணா... சும்மா தொட்டு பார்த்தேன், பலூன் வெடிச்சு போயிடுச்சு..."
"இப்படி விளையாட்டுத்தனமா இருக்கிறவன், நாளைக்கி பேச்சு வாக்குல எக்குத்தப்பா ஏதாவது வார்த்தையை விட்டுட்டா எல்லாமே தப்பா போயிடும் அப்படின்னு உங்க அண்ணியே உன்னை நம்ப மாட்டேங்கிறாடா, அவங்க வீட்டு ஆளுங்க வேற ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாம்... ஆர்வக்கோளாறுல ஏதாவது வம்பு பண்ணி தேர இழுத்து தெருவுல விட்டுடாதடா, என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா?..."
"புரியுதுண்ணா... நான் பார்த்து ஒழுங்கா பேசிக்கிறேன், நீங்க கவலைப்படாதீங்க..." என்றுவிட்டு வாட்ஸ் அப்பில் வந்திருந்த அவள் என்னை தன் மொபைலில் பதிவு செய்து கொண்டான்.
பின்னாளில் வரப் போகும் விபரீதம் தெரிந்திருந்தால் இன்று மணியின் அண்ணன் அவனுக்கு இந்த உதவியை செய்திருக்க மாட்டான், என்ன செய்வது நடக்க வேண்டியது நடந்துதானே தீரும்...
No comments:
Post a Comment