தினமும் தழுவும் ஆதவனது கரங்களுக்கும் தெரிந்திடாத வகையில், பலவகையான மேடுபள்ளங்களையும் வன செழிப்புகளையும் தன்னகத்தே மறைத்து வைத்திருக்கும் முல்லை நிலத்தின் அடர் கானகப் பகுதி. தாயின் மார்பில் பாலுண்டு திளைத்ததன் விளைவாய் தள்ளாடி நடக்கும் குழந்தையை போல, வயிறு முட்ட செழித்த புல்லைத்தின்ற மகிழ்ச்சியில் மாடுகள் அனைத்தும் ஒன்றோடொன்று இடித்துக்கொண்டு வன பகுதியிலிருந்து வெளியே வந்தது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இப்படி களவு நிகழ்வது வாடிக்கை என்பதால் நம் ராஜ்ஜியத்து மந்தைக்கு கானகத்திற்குள் போகும் வழியும், ஊருக்கு திரும்பும் வழியும் அத்துப்படி. தங்களது ஆய் குல தலைவனின் வழிகாட்டுதல் இன்றியும் அவை சிந்தாமல் சிதறாமல் கூட்டமாக வீடு திரும்புவது அவைகளுக்கு தற்போது வாடிக்கையாகி விட்டது.
அம்மந்தையின் கடைசி வரிசையில் நடந்து வந்த வெண்ணிற புரவியின் மீது, பின்புறமாக தெரியும் கானகத்தை பார்த்தபடி, குதிரையின் தலை மேல் தன் தலையை வைத்து மல்லாந்து படுத்திருந்தான் அனழேந்தி. அவன் தனது முதுகுக்குப் பின்னால் இருக்கும் மாட மாளிகை, ராஜபோக அரண்மனை வாசத்தை விட கண் முன்னால் தெரியும் கானகமே தனக்கு அதிகம் பிடித்திருக்கிறது என்பதை போல அதைவிட்டு அவன் கண்களை அகற்றாமல் படுத்திருந்தான். அது புரிந்ததை போல அவனது புரவியும் அவன் சிந்தனை கலைந்திடாத வகையில் தன் வேகத்தை கையாண்டது.
அடுத்த இரண்டு நாழிகையில் வீரேந்திரபுரி ராஜ்ஜியத்தின் எல்லையை அடைந்து விட்டனர் மந்தையும் மன்னனும். ஊரின் அருகாமைக்கு அறிகுறியாய் ஊரைச் சூழ்ந்துள்ள வயல் வெளிகள் முழுக்க தென்னை, வாழை, பாக்கு, மஞ்சள், மா, பனை, இஞ்சி முதலான பணப்பயிர்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பரந்து விரிந்து விளைந்திருந்தன. கண்ணில் தெரியும் பயிர்கள் எல்லாம், வஞ்சனை இன்றி செழித்து வளர்ந்திருந்தும் இவையெல்லாம் மனிதனால் செதுக்கி வடித்து உருவாக்கப்பட்டவை தானே... அது அந்த கானகத்தின் இயற்கை எழிலுக்கு இணையாவதில்லை என்று அனழேந்தியின் உள்ளத்தில் ஒரு இனம்புரியா குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
குடிமகனாக இருந்திருந்தால் நினைத்த மாத்திரத்தில் இந்த நாட்டைத் துறந்து காட்டில் குடி புகுந்து இருக்கலாம், அவன் ராஜகுமாரனாக போய் விட்டானே... அதிலும் அண்டை நாட்டு அரசர்கள் ஆசை கொள்ளும் அளவிற்கு அபரிமிதமான சக்தியை பெற்றிருப்பதாக புரளியையும் வேறு சுமந்திருக்கின்றானே... விதிவழி செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால் தொடுவான தூரத்தில் தெரியும் வனமகளை இறுதியாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, வீரேந்திர பூரியின் இளவரசனாக உருமாறி தன் புரவியில் நேராக நிமிர்ந்து அமர்ந்தான்.
ராஜ்யத்தின் எல்லைக்குள் ஆநிரைகள் அனைத்தும் நுழைவதை கண்ட கிராம மக்கள், துரித கதியில் தண்பனையினை ஒலிக்கச் செய்தனர். தண்பனை என்பது அரசனது வெற்றிக்குப் பின்னர் ஒலிக்கப் பெறும் தண்ணோசையாகும். அந்தி நேரம் என்பதால் ஆயர்குல பெண்டிர் அனைவரும் ஆற்றங்கரையில் குளித்துவிட்டு வீடு திரும்பி இருந்தனர். அதற்கு அறிகுறியாய் ஆற்றங்கரை ஓரங்களில் எல்லாம் மஞ்சளும், சந்தனமும் அப்பெண்டிர்கள் தொடுத்து விளையாடிய மலர்ச்சரங்களுமாய் கொட்டிக் கிடந்தன. அவர்களின் குடிசை வாசல்கள் எல்லாம் மொழுகி துடைக்கப்பட்டு பூத்தோரணம், அகல்விளக்கு, அரிசி மாவு கோலத்தினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பொதிகை மலை போன்ற உறுதியான அகன்ற தோள்களைக் கொண்ட ஆயர்குல ஆண்கள் அனைவரும் அனழேந்தியை கண்டதும் ஒன்று கூடி நின்று, "வீரேந்திரபுரி முடி இளவரசருக்கு நாவலோ நாவல்... வீரேந்திரபுரி முடி இளவரசருக்கு நாவலோ நாவல்..." எனும் முழக்கத்தை எழுப்ப, மஞ்சள் நிறைந்த முகம் கொண்ட ஆயர் குலப் பெண்டிர், தங்களின் தேக்குமரத்தை போன்ற உறுதியான கைகளால் அவனுக்கு நெல்லும் மலரும் தூவி வாழ்த்தி வரவேற்றனர்.
வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் தலையசைப்பினை மட்டும் பதிலாக தந்துவிட்டு, தன் புரவியை எதிரே தெரியும் அன்ற அரண்மனையை நோக்கி செலுத்தினான் அனழேந்தி. நெடுந்தூரத்திலிருந்து பார்த்தாலே தெரியுமளவு உயர்ந்த நுழை வாயில், அரண்மனையை சுற்றிலும் ஆங்காங்கே இருக்கும் பதுங்கும் புழையறை, அரண்மனையின் மதில் மேலிருந்து அம்பு எய்யும் ஞாயில், அதன் மேல் விண்ணை முட்டியபடி பறக்கும் வீரேந்திர புரியின் கொடி என்று அத்தனையும் அவனுக்காக எதிரில் காத்திருக்க, அவனோ அரண்மனைக்குள் நுழையும் முன் இறுதியாய் ஒருமுறை கானகத்தை திரும்பிப் பார்த்தான். அவன் பார்ப்பதை அரண்மனையின் மேல் மாடத்தில், தனக்கென அமைக்கப்பட்டிருக்கும் தனி அறையில் இருந்து அரசரும் பார்த்தார்.
வீரேந்திர புரியின் அரண்மனை மூன்றடுக்கு மதில்களை உடையது, முதலாவது அடுக்கு பாதுகாப்பு வீரர்கள் நிறைந்த பகுதி.... இரண்டாம் அடுக்கு புலவர்களும் விருந்தினர்களும் வந்து தங்கி இருக்கும் பகுதி... மூன்றாம் அடுக்கு அரண்மனை தாதிகள், அமைச்சர்கள், முக்கிய விருந்தினர்கள் உலவும் பகுதி... அதற்கும் உள்ளாக மன்னரும் மகாராணியும் வசிக்கும் அரண்மனை அமையப் பெற்று இருக்கின்றது. அங்கிருந்துதான் அரசர் வெளி வாயிலில் நிற்கும் அனழேந்தியை பார்த்தார்.
அங்கிருந்து அவன் புரவி புழுதி பறக்க சீறிப்பாய்ந்து மூன்று அடுக்குகளையும் கடந்து வருவதை அவர் பார்த்துக் கொண்டே நின்றிருந்தார். மூன்றடுக்குகளையும் கடந்த அவன் அரண்மனையின் உட்பகுதிக்குள் நுழைந்ததும் சப்த கலைஞர்கள் வந்து மங்கல வாத்தியம் முழங்கிட, அரண்மனை பெண்டிர் மஞ்சள் கலந்த அரிசியையும் பூக்களையும் தூவி வாழ்த்தி வணங்கி அவனை வரவேற்றனர். இவர்களுக்கும் சிறிய தலையசைப்பையே பதிலாக தந்தவன் விருவிருவென்று தன்னுடைய அறைக்கு சென்றான்.
அனழேந்தியின் அறை வாசலில் இருந்த காவலர்கள் அவன் வந்ததும் அருகில் வந்து, "இளவரசே... தாங்கள் இல்லாத நேரத்தில் இளைய இளவரசர் தங்களைக் காண இங்கே வந்தார். ஏதோ முக்கியமான சேதி பற்றி தங்களோடு அவசரமாக அளவளாவ காத்திருப்பதாய் தகவல் தெரிவித்து விட்டு சென்றார்...." என்றனர்.
"ஆகட்டும், நான் பேசிக்கொள்கிறேன்..." என்று அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தான்.
அவனுக்கென்று அந்த அறையின் ஒவ்வொரு பகுதியையும் பார்த்து பார்த்து வடிவமைத்து இருந்தார் மகாராணி அருள்விழி தேவியார். அகன்ற பெரிய தேக்கு கட்டில், இலவம் பஞ்சினை விட இதமான அன்னப்பறவையின் இறகினில் தைத்த மெத்தை விரிக்கப்பட்ட படுக்கை, காந்தள் மலரின் வண்ணத்திலான விரிப்பு, இளவளவனது அறையை விட சற்று நீளமான மாடம், அறைக்குள்ளேயே அருவி வகையிலான சிறிய குளம், அவன் ஆசை அறிந்து அளவாய் செய்த நந்தவனம், அணிவதற்கு ஏற்றபடி அத்தனை வகை ஆபரணங்களையும் குவிந்து கிடக்கும் பெட்டக அறை என்று முழு அறையையும் சுற்றி வரவே ஒரு நாழிகை நேரம் பிடிக்கும். இத்தனை இருந்தும் இவனுக்கு ஏனோ இதில் இன்பம் கிட்டாமல், இயற்கை எழில் கொஞ்சும் கானகத்தினுள் இருக்கையில்தான் இதயம் இதமாக இருந்தது.
அறைக்குள் நுழைந்தவன் தன் ஆடை ஆபரணங்களை கழற்றி தூர எறிந்துவிட்டு நேராக உள் அறைக்குள் சென்று, அழகாய் கொட்டும் அந்த சிற்றருவியின் அடியில் போய் அமர்ந்தான். நீரின் குளுமையும் நீரில் மிதக்கும் தாடகங்களின் தீண்டலும் இன்பமாய் இருக்க, நெடு நேரம் கழித்து நினைவு வந்தவனாய் எழுந்து உடைமாற்ற சென்றான். அறைக்குள் அவனுக்கென காத்திருந்த அருள்விழி தேவியார் அவன் வரவை கண்டதும் ஆனந்தமாய் அவனருகில் வந்தார்.
மகாராணி, "மகனே... எத்தனை முறை கூறியிருக்கிறேன், அந்தி சாய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் நெடுநேரம் அமர்ந்து இருக்காதே என்று, அன்னையின் பேச்சை கேட்க மாட்டாயா கண்ணே?..." என்று சொல்லிக்கொண்டே கையில் தயாராக வைத்திருந்த வெள்ளை நிற துணியினால் அவன் தலையினை துவட்டி விட ஆரம்பித்தார்.
"குளிர் நீரில் குளியலாடுகையில் அத்தனை ஆனந்தமாய் இருக்குதம்மா, அதனால்தான் அதற்கு நேரம் காலம் என்ற பாகுபாட்டை என் மனம் அறிவதே இல்லை. அதுசரி, என்னை விட தங்கள் வதனம் என்றுமில்லாத அளவிற்கு இன்று ஆனந்தமாய் தெரிகிறதே, காரணம் என்னவோ?"
"என் மனமும் உன் தேகம் போல குளிர்ந்து போயிருக்கிறதடா... அரசர் ராஜ குலவிருத்தி யாகத்திற்கு முன்பாக உனக்கும் உன் தம்பிக்கும் திருமண ஏற்பாடு செய்ய சொல்லி இருக்கிறார். அதற்காக மணப்பெண்கள் பட்டியல் கூட தயார் செய்து விட்டேன், நீ உன் விருப்பத்தை தெரிவித்தால் உடனே வீரேந்திரபுரியின் எதிர்கால மகாராணியை தேர்ந்தெடுத்து விடலாம். இதுவரையில் அன்னையின் பேச்சை தட்டிக்கழித்த உன்னை, இப்போது அரசாங்கம் நெருக்க தொடங்கிவிட்டது. ஒரு முடி இளவரசனாக அதன் பேச்சை நீ கேட்டுத்தான் ஆக வேண்டும், ஆதலால் இனி என்னிடமிருந்து நீ தப்பிச் செல்ல இயலாது அனலா..."
"......"
"பதில் மொழி கூறு அனலா..."
"என் பதிலைத்தான் எப்போதோ கூறி விட்டேனே அம்மா..."
"உன் வீரத்தின் மேல் உனக்கு சந்தேகம் இருக்கலாம், ஆனால் நான் உன் அன்னையடா... இன்னும் எத்தனை நாளைக்கு போரை காரணம் காட்டி மணமுடிக்க மாட்டேன் என்ற பொய்யினை என்னை நம்ப சொல்கிறாய்?"
"......"
" உனக்கு வேண்டுமானால் இல்லத்தரசி தேவைப்படாமல் இருக்கலாம், ஆனால் உன் முன்னோர்கள் உருவாக்கிய இந்த ராஜ்யத்திற்கு பட்டத்தரசி தேவையடா...."
"அதற்காக தெரிந்தே ஒரே பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்க வேண்டுமா அம்மா? நீங்களே பார்க்கிறீர்கள் இல்லையா? என்னை குறிவைத்து எத்தனை போர்கள் நிகழ்ந்து விட்டன என்று, இன்னும் எத்தனை போர்கள் எதிர்காலத்தில் நிகழ இருக்கின்றனவோ தெரியவில்லை. இந்நிலையில் திருமணம் செய்தால் அது அப்பெண்ணிற்கு நான் இழைக்கும் துரோகமம்மா... இன்று இருப்பது போல் என் ஆயுள் முழுவதும் இருக்குமென்று உறுதி இல்லையே, நாளையே பெரும்படை சேர்ந்து போரிட வந்துவிட்டால் என்னால் ஒரு பெண்ணின் வாழ்வு பாழாகிப் போகுமே..."
"அதைத்தானடா நானும் கூறுகிறேன், இன்று போல் நிச்சயமாக நாளை இராது. இன்று போர் தொடுப்பவர்கள் அத்தனை பேரும் ஒரு கட்டத்தில் அலுத்துப்போய் வேறு வேலை பார்க்க சென்று விடுவார்கள். ஆனால் நீ அப்போது தனிமரமாய் நிற்பாயே?"
"இன்னொருவரது வாழ்வை பட்டமரம் ஆக்குவதை விட தனி மரமாய் நிற்பது சால சிறந்தது அம்மா..."
"போதும் நிறுத்து அனலா..." என்று அருள்விழி தேவியார் ஆக்ரோஷமாக உச்சரிக்கையில், அறையின் வாயில் கதவு அருகே அரசரின் மெய்க்காப்பாளன் வந்து நின்றான்.
அரசரின் மெய்க்காப்பாளன், "இளவரசே... அரசர் உங்களை உடனடியாக தன்னுடைய நந்தவனத்திற்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார்..." என்றான் பவ்யமாக.
அனழேந்தி வேண்டா வெறுப்பாக, "வருகிறேன்... நீ முன் செல்..." என்றான்.
"ஆகட்டும் இளவரசே..."
மகாராணி, "என் பேச்சை நீ கேட்கவில்லை இல்லையா? இப்பொழுது உன் தந்தையே இதைப் பற்றி பேசப் போகின்றார், என்னோடு விதண்டாவாதம் செய்ததைப் போல அவரிடம் செய்யாதே கண்ணே..."
"முயல்கிறேன் அம்மா..." என்றவன் அத்தியாவசிய ஆபரணங்களை மட்டும் அணிந்து, தன் வாளையும் வேலையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறிய பொழுது அந்தப் பக்கமாக வந்த இருசப்பன், "ஐயனே தாங்கள் அரசரை சந்திக்கும் முன்பாக இளைய இளவரசர் உங்களை சந்திக்க நினைக்கின்றார்..." என்றான்.
அடுத்த கணமே இளவளவன் அறைப்பக்கமாக விருவிருவென்று நடக்கத் தொடங்கினான் அனழேந்தி. மங்கள நாண் ஓசையால் தமையனது வரவினை முன்பே அறிந்திருந்த இளவளவன் தன் அண்ணனது வரவை எதிர் பார்த்து அங்கே வழிமேல் விழி வைத்து காத்திருந்தான். வேலும் வாளும் அசைந்தாட வீரத் திருமகனான அனழேந்தி, நெஞ்சை நிமிர்த்தி இளம் சிங்கமென நடந்து செல்லும் அழகை காண்பதற்கென்றே, அந்த அரண்மனை ஆட்கள் அனைவரும் நடைபாதையில் கூடி நிற்பதுண்டு. இப்போதும் அப்படித்தான் அங்கே நூற்றுக்கணக்கான கண்கள் பூவை மொய்க்கும் வண்டென அவன் தேகம் மொய்த்திட, அது தெரிந்தே இயன்ற அளவிற்கு வேகமாக சென்றான் அவன்.
இளவளவனின் அறை வாசலில் நின்றிருந்த மெய்க்காப்பாளர்கள் அனழேந்தியை கண்டதும், "வருக... வருக... வீரேந்திர புரியின் முடி இளவரசருக்கு இளைய இளவரசனது மெய்க்காப்பாளர்களின் வணக்கங்கள்..." என்று சொல்லிக் கொண்டே கதவை திறந்து விட்டனர்.
அறையினுள் ஒதுக்குப்புற மாடத்தில் ஒய்யாரமாய் வீற்றிருந்த இளவளவன் தன் தமையன் வந்ததை கண்டதும் எழுந்து நின்று, "வாருங்கள் அண்ணா..." என்றான் மரியாதையோடு.
"இருக்கட்டும் வளவா... என்னோடு ஏதோ முக்கியமாக கலந்துரையாட வேண்டும் என்று காத்திருந்தாயாமே என்ன அது?" என்றபடி அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர, இருசப்பன் இருவருக்கும் அருந்துவதற்காக நீர் குவளையை நடுவில் கொண்டு வந்து வைத்தான்.
"அண்ணா ராஜ குலவிருத்தி யாகம் நெருங்கி வருவது தாங்கள் அறிந்ததே அதற்காக தந்தை என்னுடைய திருமணத்தை நிகழ்த்த ஏற்பாடு செய்கின்றார். எனக்கு மூத்தவரான தாங்கள் இருக்கையில் நான் திருமணம் செய்வது அரசாட்சிக்கு உகந்ததல்ல. ஆதலால் நம் இருவரின் திருமணத்தையும் ஒன்றாய் நிகழ்த்தலாம் என்று...."
"வேண்டாம் வளவா எனக்கு திருமணத்தில் உடன்பாடில்லை..."
"எதற்காக வேண்டாம் என்று மறுக்கிறீர்கள் அண்ணா?..."
"எந்நேரமும் போர் மூளும் என்ற நிலையில் எதற்காக திருமணம் செய்ய வேண்டும் இளவளவா?"
"தாங்கள் போருக்காக திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்தக் காரணத்தை நம்பும் அளவிற்கு நான் பித்தன் அல்ல அண்ணா... எனக்கு என்னவோ தாங்கள் எனக்காகவே இத்திருமணத்தை மறுக்கிறீர்கள் என்று தோன்றுகின்றது."
"இல்லை வளவா... எனக்காக."
"அப்படி என்றால்?"
"நான் திருமணத்தை மறுப்பதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. அது காலப்போக்கில் உனக்கும் புரியும் நீ என்னை பற்றி கவலை கொள்ளாமல் உன் திருமண வேலைகளை நிகழ்த்த ஏற்பாடு செய்வாயாக...."
"தமையன் தனியாக இருக்கையில் தனி ஒரு வாழ்வை அமைக்கும் எண்ணம் எனக்கு இல்லை அண்ணா..."
அவனுடைய கூற்றினால் அகம் மகிழ்ந்து குறுநகை பூத்த அனழேந்தி, "தம்பி... கடந்த ஏழு ஆண்டுகளாக நான் காத்திருந்த தருணமடா இது. இந்த வாய்ப்பை நழுவ விட்டால் எனக்கு இனி வாய்ப்பே கிடையாது. என்னைப் பற்றிய கவலை உனக்கு வேண்டாம், எனக்கு விருப்பமான வாழ்வை நான் அமைத்துக் கொள்வேன். அதுதான் என் இன்பமும் கூட, என் மனதை புரிந்துகொள்ளடா..."
ஒரு நீண்ட பெருமூச்சு விட்ட இளவளவன், "ஆகட்டும் அண்ணா... தங்களின் ஆணைப்படியே நடந்து கொள்கின்றேன்" என்றான்.
அறையை விட்டு வெளியேற எத்தனித்த அனழேந்தி ஒரு நிமிடம் நிதானித்து, "தம்பி... என்னிடம் நீ ஏதேனும் உண்மையை மறைக்கின்றாயா?" என்றான்.
துரித கதியில், "இல்லையே..." என்றான்.
அனழேந்தி தூரத்தில் நின்றிருந்த இருசப்பனை தங்கள் அருகில் அழைத்து, "உன் இளவரசரின் மேல் ஆணையிட்டு கேட்கின்றேன், இங்கே என்ன நிகழ்ந்தது இருசப்பா?" என்றான்.
தமையன்மார்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த இருசப்பன் இறுதியில், "இளவரசர் பெண்ணொருத்தியை வேற்று சாம்ராஜ்யத்தில் இருந்து வரவழைத்து, பாவையாக மாற்றி விட்டார். எங்களால் அவளை மீண்டும் பெண்ணாக மாற்ற இயலவில்லை ஐயனே... நேற்றிலிருந்து அப்பெண் பாவை உருவத்தில் இங்கே இருக்கின்றாள்" என்றான்.
"வளவா மாந்திரீகத்தை பயன்படுத்தாதே என்று உனக்கு எத்தனை முறை கூறியிருக்கின்றேன்? இதற்கு முன் நிகழ்ந்த துஷ்ட சம்பவங்கள் அத்தனையும் எடுத்துக் கூறியும் நீ ஏன் இவ்வாறு செய்தாய்?... முதலில் எங்கிருந்து அப்பெண்ணை வரவழைத்தாய் என்று கூறு..." என்றும் சினம் பொங்க ஆர்ப்பரித்தான்.
"அவளை நான் வரவைக்கவில்லை அண்ணா..."
"உண்மையாகவா?..."
"ஆம்... நள்ளிரவில் தாழிட்ட அறைக்குள் அவள் தானாகவே தோன்றினாள்."
"எனில் அப்பெண் நம் எதிரி நாட்டு உளவாளியாக இருக்கக்கூடும்..."
"இல்லை அண்ணா... அப்பெண் மிகவும் வினோதமாக இருக்கின்றாள். அவள் உடல் மொழி, பேசும் மொழி அத்தனையும் நமக்கு பழக்கமில்லாத வகையில் இருக்கின்றது..."
"என்ன சொல்கிறாய்?..."
"ஆம் அண்ணா... அவளின் கார் கூந்தல் நீளமில்லை, அதை அவள் அள்ளி முடியவுமில்லை, நெற்றியில் குங்குமம் இல்லை, கண்ணில் மை இல்லை, கழுத்தில் ஆரமில்லை, கைகளில் வளை இல்லை, காலில் தண்டையும் இல்லை. ஆடையில் பருத்தி இல்லை, அவள் தோள்களில் வலுவில்லை, இடையானது வட்டமாய் இல்லை, கால்கள் தட்டையாக இல்லை, பேச்சில் தண்மை இல்லை, பெண் அவளுக்கு ஆண்கள் முன்பு அச்சம் மடம் நாணமெதுவும் தோன்றவில்லை... ஆக மொத்தத்தில் அவள் நமக்கு பரிச்சயமான தேசத்தில் பிறந்தவளே இல்லை."
"அப்படியா?"
"ஆம்... ஆதலால்தான் அவளை கண்டதும் பாதாளச் சிறையில் தள்ளாமல், என் அறையிலேயே பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்."
"இப்போது எங்கே அந்த பாவை?..." என்றதும் இளவளவன் தன்னுடைய அறைக்குள் ஒளித்து வைத்திருந்த பொம்மையை எடுத்து வந்து தன் தமையனிடம் தந்தான்.
"உன்னால் மீண்டும் பாவையை பெண்ணாக்க முடியவில்லையா?"
"பலமுறை முயன்று விட்டேன், உயிர் வருகிறதே தவிர உருவம் வரவில்லை அண்ணா... உயிர் கொடுத்த பொழுது அவள் தனக்கு அநியாயம் நிகழ்ந்து விட்டதாக கூறி அரற்றினாள். அரசுக்கு எதிராக அரண்மனை முன்பு போராட்டம் செய்யப் போவதாய் பிதற்றினாள். ஆதலால் நம் ராஜ்ஜியம் ரகசியம் வெளியேறக்கூடாது என்று அவளை உயிர் இல்லா பாவை உருவிலேயே மாற்றி வைத்திருக்கின்றேன்."
"மீண்டும் ஒருமுறை அவளுக்கு உயிர் கொடுக்க முயற்சி செய்...."
இளவளவன் வழக்கம் போல தன் மாந்திரீக பலத்தை உபயோகித்து யாளிக்கு உயிர் கொடுத்தான். அவள் எழுந்தது தான் தாமதம்....
மரப்பாவை உருவத்தில் இருந்த யாளி, "யூ... ப்ளடி சீட்.... எவ்ளோ தைரியம்டா உங்களுக்கு... என்ன பாத்தா ஷாப்பிங் மால்ல இருக்கிற க்ரேன் க்ளவ் மெஷின் மாதிரி தெரியுதா? வர்றவன் போறவன் எல்லாம் விளையாடிக்கிட்டு இருக்கீங்க... இதப்பார், இப்பவே என்ன பழையபடி மாத்தி என்னோட வீட்டுக்கு அனுப்புறீங்க... இல்ல என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுடா..." என கன்னா பின்னாவென கத்தத் தொடங்கினாள்.
அனழேந்தி கோபமாக, "பெண்ணே... அவன் இவன் என்று ஏக வசனம் பேசாதே. அடுத்த வார்த்தையில் நீ இளவரசனுக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை என்றால் உன் தலை உடலோடு ஒட்டி இராது...."
"வாடா... வா... நீ என் தலையை வெட்டுற வரைக்கும் என் கை என்ன புளியங்கா பறிச்சிக்கிட்டு இருக்குமா? தப்பு உங்க சைடுல இருக்குனு மனசுல வச்சிக்கிட்டு பேசுங்க இளவரசரே... சிவனேனு வீட்டுல இருந்தவள மேஜிக் பண்ணி கடத்திட்டு வந்தது நீங்க ரெண்டு பேரும்தான். சரி கூட்டிட்டு வந்ததுதான் வந்தீங்க, அதே மாதிரி திருப்பி அனுப்பி வைக்கனுன்ற அக்கறை இருக்கா? அதுசரி... அவ்வளவு திறமை இருந்திருந்தா இன்னேரம் என்ன அனுப்பி இருப்பீங்களே..." என்றதும் அனழேந்தியின் வாள் மின்னல் வேகத்தில் வந்து மரப்பாவை வயிற்றை குத்திக்கொண்டு நின்றது.
நீருக்குள் ஒளியும் முதலை, குகையில் பதுங்கும் புலி, சிங்கம், கரடி, முட்டித் தள்ளும் கொம்புகளையுடைய காட்டாட்டுக் கடா, எதிர்த்துப் போரிடும் ஆண்யானை போன்றவற்றை விரட்டி தாக்கி அழிக்கும் வெஞ்சினம் கொண்ட அவனுக்கு முன்னால் முதன்முறையாக பெண்ணொருத்தி குரல் உயர்த்துவதை கண்டு, "இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசினாய் என்றால், இப்படியே உன்னை கொன்று விடுவேன்..." என்று தன் சிவந்த விழிகளால் அவளை முறைத்துக் கொண்டு நின்றான்.
யாளியோ தன் முன்னால் நீளமாக நிற்கும் வாளினை பார்த்து, "இதுதான்... இதேதான்... இந்த வாளாலதான் நான் இங்க வந்தேன்... இதக்குடு, நான் மறுபடியும் அந்த கிரீன் பட்டன ப்ரஸ் பண்ணி பாக்குறேன்..." என்றாள்.
அவள் வார்த்தைகளால் ஒரு கணம் விழி சுருங்கி ஆச்சரியத்தில் அதிர்ந்துபோய் நின்ற அனழேந்தி அடுத்த கணமே சுதாரித்து, "என் வாளைத் தொடும் வேலை வைத்துக் கொள்ளாதே பெண்ணே..." என விருட்டென தன் வாளை உறைக்குள் வைத்தான்.
இளவளவன், "உன் உயிரும் உடலும் எங்கள் கையில் இருக்கிறது என்று தெரிந்த பிறகும், உனக்கு எங்களைக் கண்டு அச்சம் வரவில்லையா?"
"எனக்கு பயமா?... நீங்கதான் என்ன பாத்து பயப்படனும்..."
"ஏன்...."
"ஏன்னா நான் நீங்க நினைக்கிற மாதிரி வேற ஊர்ல இருந்து வரல, வேற காலத்தில இருந்து வந்திருக்கேன். நான் இங்க இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் உங்களுக்கும் உங்க ராஜ ரகசியத்துக்கும் பெரிய ஆபத்து, அதனால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என்ன என்னோட அப்பாகிட்ட திருப்பி அனுப்பிடுங்க...."
குழப்பத்தோடு ஒருமுறை பெருமூச்சு விட்ட அனழேந்தி, "பெண்ணே... நான் உன்னை உன் தந்தையினடத்திற்கு திருப்பி அனுப்புகிறேன்..."
"அப்டின்னா உனக்கும் மந்திரம் தெரியுமா?"
"இல்லை தெரியாது..."
"ம்க்கும்... மந்திரம் தெரிஞ்ச உன் தம்பியே இப்ப வரைக்கும் ஒரு ஆணியும் கழட்டல, மேஜிக் பவர் இல்லாத நீ என்ன செய்ய முடியும்?..."
"என்னுடைய வாள்தான் உன் பிரச்சனைக்கு காரணம் இல்லையா? ஆதலால் உன் குறைகளை நிவர்த்தி செய்வது என்னுடைய பொறுப்பு. உன்னை எங்கு அழைத்துச் சென்றால் உன் நிலை சரியாகுமோ அங்கு அழைத்து செல்கின்றேன், அதுவரையில் மட்டும் நீ மரப்பாவையாக உருமாறி இரு. வேறு எவருக்கும் எங்களின் ரகசியம் தெரிந்தால் அது எங்கள் ராஜ்யத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகிவிடும். என்னை நம்பி இதற்கு உடன்படு பெண்ணே..."
சிலகணங்கள் யோசித்த யாளி, "சரி... உனக்கு ஒன் வீக் டைம் தர்றேன்."
"ஒன் வீக்கம் என்றால் என்ன?"
"ஷ்ஷப்பா... நான் ஒரு வாரம் தரேன்னு சொன்னேன். அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒரு முடிவு சொல்லிடணும், இந்த அக்ரீமெண்ட்க்கு ஒத்துக்கிறியா?"
"அக்காரிமண் என்றால்?..."
"ஒப்பந்தம்..... ஒப்பந்தம்... ஒத்துக்கிறியா?"
"ஆகட்டும் மடந்தையே..."
"மடந்தையா?... யாரது?..."
"நீதான்"
"ரைட்டுவுடு..."
"அப்படியென்றால்?...."
"டேய் உட்ருங்கடா யப்பா..."
அப்போது அறைக்கு வெளியே இருந்த இளவளவனின் மெய்க்காப்பாளர்கள், "வீரேந்திர புரியின் அரசர் வருகிறார், வீரேந்திர புரியின் அரசர் வருகிறார்..." என்று கோஷத்தை எழுப்பினார்கள். அந்த சத்தம் கேட்டதுமே இளவளவன் விரைந்து யாளியை மரப்பாவை ஆக்கினான்.
மதங்கொண்ட யானை செங்காந்தள் மலர்களை நெருப்பு துண்டங்கள் என்று நினைத்து துதிக்கை உயர்த்தி பிளிரி நசுக்குமாம். அதுபோல தன் பாதங்களை தரையில் தடம் பதியும் அளவுக்கு அழுந்த பதித்து கோபமாக நடந்து வந்தார் வீரேந்திர புரியின் அரசர் இயல்பரசன்.
இளவளவனின் அறைக்குள் நுழைந்ததும் அனழேந்தியை பார்த்து, " அழைப்பு விடுத்தது அரசர் என்று தெரிந்த பிறகும் வருவதற்கு தங்களுக்கு நேரமில்லையா முடி இளவரசே? இல்லை அரசனே தங்களைத் தேடி வந்து காண வேண்டும் எனும் அளவிற்கு இறுமாப்பா?" என தீப்பொறியாய் தெறித்து வந்து விழுந்தன அவரது வார்த்தைகள்.
இளவளவன், " தமையன் மீது தவறு இல்லை அரசே, நான் தான் தங்களை சந்திக்கும் முன்பாக இங்கு வரும்படி அழைப்பு விடுத்தேன்."
"எனில் என்னைவிட அதிகாரம் உனக்கு அதிகம் இல்லையா?"
"அப்படி இல்லை... முடிவெடுக்க வேண்டிய விஷயம் திருமணம் என்பதால் முன்கூட்டியே அண்ணனின் மனதை அறிய விரும்பி..."
"போதும் நிறுத்து வளவா... அவன் செய்த அவமரியாதைக்கு நீ விளக்கம் தருகிறாயா?"
அங்கே மூச்சிரைக்க ஓடிவந்த அருள்விழி தேவியார் தம் மக்களின் முன்பு வந்து நின்று, "ஏன் அரசே இத்தனை கோபம் தங்களுக்கு? அனழேந்தி என்ன வேண்டுமென்றே உங்களை அவமதித்தானா? இல்லை தங்களின் விருப்பத்தை மீறி செயல்பட போகின்றானா?"
"தேவையில்லாமல் நீ இடையில் வராதே மகாராணி... இது மன்னனுக்கும் முடி இளவரசனுக்குமான வாதம்."
அனழேந்தி, "நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் அம்மா. நான் அரசருடைய வாதத்தை கேட்டு விட்டு வருகின்றேன்."
"என் வினா ஒன்றே... திருமணத்திற்கு நீ ஒத்துக் கொள்கிறாயா இல்லையா?"
"இல்லை என்றால்?..."
"இல்லை எனில், ராஜ உத்தரவை மீறிய குற்றத்திற்காக இப்பொழுதே உன் பொறுப்புகளை துறந்து முடி இளவரசன் என்னும் பதவியை விட்டு விலகலாம்."
அருள்விழி, "அரசே...."
இளவளவன், "இது நியாயமில்லை தந்தையே, மதிப்பில்லாத ஒரு விஷயத்திற்காக மதிப்பிட முடியாத ஒன்றை இழக்க நினைக்கின்றீர்கள்."
அரசர், "எது சரி எது தவறு என்று எனக்குத் தெரியும் வளவா... அடுத்த முகூர்த்தத்திலேயே இளைய இளவரசன் இளவளவனுக்கும், இரும்பொறை தேசத்து இளவரசி சிற்பிகாவிற்கும் திருமண தேதியும், அதற்கு அடுத்த முகூர்த்தத்தில் இளவளவனுக்கு முடி இளவரசனாக முடிசூட்டுவதாகவும் அறிவிக்கின்றேன்."
அனழேந்தி, "மகிழ்ச்சி... நான் இந்த நொடியே உங்கள் ராஜ்யத்தை விட்டு வெளியேறுகிறேன்..." என்றவன் அங்கிருந்து நகர்கையில்,
இளவளவன், "அண்ணா... தாங்கள் இங்கு இல்லை என்றால் அடுத்து நிகழ இருக்கும் போர்களை எல்லாம் நான் எவ்விதம் எதிர்கொள்வேன்? நீங்கள் மனம் முடிக்க வேண்டாம் ஆனால் என்னுடைய தமையனாக, இந்த ராஜ்ஜியத்தின் தளபதியாக இங்கேயே இருக்கலாம் இல்லையா?"
"வேண்டாம் வளவா... தளபதி பதவி இரும்பொறை தேசத்து அரசனிடமே இருக்கட்டும். அடுத்து நிகழும் போர்களில் பங்கேற்க எனக்கு வீரேந்திர புரியின் படை வீரன் என்ற அங்கீகாரம் மட்டுமே போதும்."
அருள்விழி, "நில் அனலா... உன் அன்னையை உன்னிடம் மன்றாட வைக்காதே. திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டு அமைதியாக உன் அறைக்கு செல்ல டா..."
"இயலாது அன்னையே..."
அருள்விழி விம்மலோடு, "ஆம்.. சரிதான்.. நான் உன்னை ஈன்றெடுத்த அன்னை இல்லையே... என் பேச்சை நீ கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தது என் பிழை தான்..."
"மன்னியுங்கள் அம்மா... உங்களை நான் என்னை பெற்றவளுக்கு இணையாக நினைத்த காரணத்தினாலேயே, இத்தனை வருடங்கள் இங்கே விருப்பம் இல்லாமல் நடைப்பிணமாக தங்கி இருந்தேன். இதற்கு மேல் என்னால் முடியாதம்மா நான் செல்கின்றேன்...." என்றவன் முன்னே நடக்க அவன் பின்னால் கர்வப் புன்னகையோடு அரசர் அருள்விழியை பார்த்துக்கொண்டே கடந்து சென்றார்.
No comments:
Post a Comment