அன்றய காலையின் துவக்கமே கலக்கத்துடன் தான் விடிந்தது சந்தனாவுக்கு. ஆம் அன்று சுமித்ரா தேவி கம்பனியின் பொறுப்புகளை முறையாக சந்தோஷிடம் ஒப்படைக்க போகும் நாள். கடந்த ஒரு மாதமாக சந்தோஷின் தொல்லைகள் தொடர்ந்தாலும் எதோ ஒரு விதத்தில் அவனுக்கு அவளுடைய விருப்பமின்மையை சந்தனா உணர்த்திக் கொண்டிருந்தாள்.
மெல்ல ஷியாமிடம் தன் நிலையை பற்றி அவன் சொல்ல அவனோ உடனடியாக பக்குவமாக அதை சுமித்ராவிடம் சொல்லிவிட்டான். தொடர்ந்து சுமித்ராவின் நடவடிக்கையால் சந்தோஷுக்கு சரத் மீது சந்தனாவின் காதல் தெரிய வந்தது.
ஆனால் எதிலும் வெற்றியை தன் வசம் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் சந்தோஷுக்கோ சந்தனாவின் மறுப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் சுமித்ராவின் கண்டிப்பும் ஷியாமின் பாதுகாவலும் சந்தனாவை நெருங்க முடியாமல் சந்தோஷை எட்டவே நிறுத்தின.
சரத்திடம் பேசியது போல் ஷியாமிடம் எடுத்தெரிந்து பேசினால் தொழில் என்னவாகுமோ என்ற பயமும் இருந்தது. ஷியாமின் ஆளுமை அந்த அளவுக்கு இருந்தது. ஒரே பார்வையில் சந்தோஷை எட்ட நிறுத்தினான் ஷியாம். ஆனாலும் தோல்வியை ஒப்புகொள்ளமுடியாத சந்தோஷ் சந்தனாவை அடைய திட்டம் தீட்டினான்.
அதன் முதல் படியாக ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தினை தொடர்பு கொண்டு அவர்களின் குடும்ப விவரத்தை அறிய முயன்றான். அவனுக்கு கிடைத்த விபரங்களை கொண்டு மிக சாதுரியமாக திட்டம் தீட்டினான். அதன் படி பொது இடங்களில் சந்தனாவின் தந்தையை பழகிக்கொண்டு அவருடன் வீட்டுக்கு வந்து தேனீர் அருந்தும் அளவுக்கு நட்பு வளர்த்தான்.
மிக முன்னெச்சரிகையாக தன் பெயரை அவர்களிடம் சக்ரவர்த்தி என கூறி விட்டான், ஆம் அவனின் முழு பெயர் சந்தோஷ் சக்ரவர்த்தி ஆயிற்றே. அடுத்து அவன் அவரை வீட்டுக்கு அழைக்கும் நேரங்களில் சந்தனா அங்கே இல்லாதது போல அமைத்து கொண்டான்.
அடுத்த கட்டமாக சக்தி சந்தனாவின் தோழி மட்டுமல்லாது ஷியாமின் மனைவியும் என்பதை அறிந்து கொண்டு தனது பாட்டிக்கு காம்பேனியனாக இருக்கும் சக்தியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்த அவன் அவளின் புத்தி சாதுர்யமும் பொறுமையும் கண்டு வியந்தான்.
ஷியாமிடமும் சந்தனாவிடமும் அவளுக்கு இருக்கும் ஆளுமை தனக்கு சாதகமாக பயன்படுமானால் சந்தனாவை அடையும் அவனின் திட்டம் சுலபமாக முடிந்து விடுமென கணக்கிட்டு தன் பாட்டியுடன் அவள் இருக்கும் சமயங்களை பயன் படுத்தி சக்திக்கா சக்திக்கா என அழைத்து பேசலானான்.
புதிராக பார்த்தவளை, "என்னக்கா நான் உங்களை அக்கானு கூப்பிட கூடாதா? ஏன் வயசான பீலிங் வருதோ?" என கலாய்க்க அதன் பின் அந்த அழைப்பில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாக பட்டது சக்திக்கு. அதற்கெல்லாம் அசைவாளா அவள்?
"அதுக்கென்ன தம்பி அக்கானு கூப்பிட்டதுல ஒரு கஷ்டமும் இல்ல. அது பின்னால இருக்குறத நினைச்சா..." என இழுவையாய் இழுக்க...
அவள் போட்ட தூண்டிலில் வகையாய் மாட்டியது அந்த திமிங்கலம் "இது என்னடா கொடுமையா இருக்குது அக்கானு கூப்டறதுல என்ன இருக்கபோவுது ?" என வாய் விட்டான்.
"எவ்வளவோ இருக்கலாம் தம்பி திடீர்னு அக்கானு சொன்னியே எனக்கு வருஷம் தப்பாம சீர் செய்னு கேக்கலாம். உன்னால முடியுமோ என்னவோ?" என சக்தி பதிலடி கொடுக்க
கோபத்துடன் தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்த அவன், "நான் உங்களை வெறும் வாய்வார்த்தைகு அக்கானு கூப்பிடல நிஜம்மாவேதான் அக்கானு கூப்பிடறேன். எனக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்ல. உங்க பொறுமையும் நிதானமும் புத்திசாலிதனமும் பாட்டிய நீங்க சொந்த பேத்திய போல பாத்துக்குற விதமும் பிடிச்சு போச்சு. எப்போ உங்களை பாட்டியோட பேத்தியா பாக்க ஆரம்பிச்சேனோ அப்பதான் அவங்களுக்கு பேத்தினா எனக்கு அக்காவாச்சேனு நினைச்சேன். அதுனாலதான் அக்கானு கூப்பிட்டேன் இதுக்கு பின்னால எதாவது இருந்தாலும் அது அக்காவோட வாழ்க்கைய பாதிக்கும்னு வரும் போது ஒரு தம்பியா அதை தடுக்க நடவடிக்கை எடுப்பேன். அப்புறம் என்ன சொன்னீங்க சீரா நான் தி கிரேட் சந்திரசேகரோட பேரன் சொன்ன சொல் தவற மாட்டேன். என் கல்யாணத்துல என் பொண்டாட்டிக்கு பின் தாலி முடியற உரிமை உங்களுக்குதான்..." என சொல்ல
"வெறும் வாய் வார்த்தை சொல்றது எல்லாருக்கும் ஈசி தம்பி என அவனை மேலும் சீண்டினாள்" சக்தி.
அவளின் முகம் பார்த்து எதையோ தெரிந்து கொள்ள விரும்பிய அவன்பின் எதையோ யோசித்தவனாய் என் கூட வாங்க அக்கா என அவளை அழைத்து சென்று நிறுத்திய இடம் அந்த வீட்டு பூஜை அறை. அங்கு இருந்தத தன் தாத்தா வின் படத்துக்குமுன் அவளை நிறுத்திய அவன், "அக்கா என் தாத்தாவின் மேல ஆணையிட்டு சொல்றேன். உங்களுக்கு பிடிச்ச ஒருத்திதான் இந்த வீட்டு மருமகளா வரமுடியும். உங்களுக்கு விருப்பமில்லாமல் எனக்கு கல்யாணம் நடக்காது" என சத்தியம் செய்து கொடுத்தான்.
ஐயோ பாவம் அவன் இந்த சத்தியம் கொண்டு அவனை சக்தி எதிர்காலத்தில் மடக்கும் விதம் அறியும் போது என்னவாக போகிறானோ? அதை கேட்ட சக்தி அவனுள்ளும் இருக்கும் மனிதனை அடையாளம் கண்டு கொண்டாள். வேறு எதுவும் பேசாது அங்கிருந்து கிளம்பிய அவள் முதலில் அழைத்தது ஷியாமைத்தான்.
"மாம்ஸ் எங்க இருக்கீங்க? உடனே உன்னை பாக்கணும் பாத்தே ஆகணும். என்ன ஆனாலும் சரி இன்னும் எண்ணி அரைமணி நேரத்துல நீ வீட்டுல இருக்கணும் டா" என சொல்ல மிகவும் உணர்ச்சி வசபட்ட சமயங்களில் தான் சக்தி அவனை ஒருமையில் அழைப்பாள் என்பதை நன்கு உணர்ந்திருந்த ஷியாம் அவள் சொன்ன நேரம் முடியும் முன்னரே சக்தியின் முன் நின்றான்.
தன் படுக்கையறையின் பால்கனியில் முழு நிலாவிற்க்கு போட்டியாக கண்களில் வழியும் நீருடன் முகத்தில் குழப்பத்துடனும் நின்றவளை தன் தோள்களின் மீது சாய்த்து தலையை தடவி ஆறுதலைத் தந்தான் அவன்.
அவனின் வலிய கரங்களின் அணைப்பும் தலைவருடலில் தந்த ஆறுதலும் அழுகையை குறைத்து விசும்ப செய்தன. சக்தியை அதுவும் அடங்கி மெல்ல அவள் பேச துவங்க விசும்பியபடியே பேச துவங்கிய அவ்விதழ்களுக்கும் கண்ணீரை கட்டுபாடின்றி சொறியும் கண்களுக்கும் அவன் இதழ்களாலேயே ஆறுதல் தந்தான்.
இந்த மோன நிலை எவ்வளவு நேரம் நீடித்ததோ நாசூக்காக கதவை தட்டும் ஒலி கேட்டு இருவரும் விலகினர்.
"போ போய் பாத்ரூம்ல முகத்தை கழுவிகிட்டு வா. நான் யாருனு பாக்குறேன்..." என சொல்லி விட்டு வாயில் கதவை திறந்த ஷியாம் அங்கு நின்றிருந்த ஸ்ரீதரையும் அவர் பின்னே கவலையுடன் நின்றிருந்த சந்தனாவையும் கண்டு யோசனையாய் பார்த்தது.
"ஒண்ணுமில்லப்பா சக்தி அழுதுகிட்டு வந்தத பாத்துட்டு நாந்தான் சந்தனாவ போன் பண்ணி வர சொன்னேன். நீ வந்தது தெரியாதுப்பா..." என சொன்னார்.
"இட்ஸ் ஒகேப்பா..." என சொன்ன ஷியாம் மேலும் நிலைமையை இலகுவாக்கும் பொருட்டு, "என்னமா சைரன் எப்பவும் சவுண்ட் விட்டுகிட்டே வருவ இன்னைக்கு என்னடான மகா அமைதியா இருக்க? உலகம் தாங்காதே..." என வம்பிழுக்க, அவன் சைரன் என கூப்பிட்டாலே எகிறும் சந்தனா "ஒண்ணுமில்ல..." என முணுமுணுக்க அவளின் அந்த பதிலில் யோசனையாய் அவள் முகம் பார்த்தான் ஷியாம்.
"ஹேய் என்னம்மா ஆச்சு ? ஏன் இப்படி ஆயிட்டே ?" என மேலும் வற்புறுத்தினான்.
"ஒண்ணுமில்லானா விடேன்" என சந்தனா பதிலுக்கு குரல்தூக்க,
"ஈஸி ஈஸி மா ஏன் டென்சன் ஆகற ? சரி கிளம்பு நீயும் எங்களோட பீச்சுக்கு கிளம்பு" என சொன்னான்.
"இல்லப்பா..." என சந்தனா மறுத்து பேச துவங்க,
அதற்க்குள் பாத்ரூமில் இருந்து வெளிப்பட்ட சக்தி, "ஷியாம் சந்தனா நம்ம கூட வரா அப்படியே சரத்தையும் கிளம்ப சொல்லுங்க. முக்கியமான விஷயத்தை பத்தி பேசணும். மாமா நாங்க வர எவ்வளவு நேரம் ஆகுமினு தெரியாது. நீங்களும் அத்தையும் எங்களுக்காக காத்திருக்காம சாப்பிட்டுட்டு தூங்குங்க. ஷியாம் மசமசனு நிக்காம தயவு செஞ்சு சீக்கிரம் நீங்களும் சரத்தும் கிளம்புங்க. மறக்காம உங்க க்ரெடிட் கார்ட எடுத்துக்கங்க. நான் போய் இவளை நம்ம கூட அழைச்சிட்டு போறத பத்தி சீதாம்மாகிட்டயும் குமாரப்பாகிட்டயும் பர்மிஷன் வாங்கிகிட்டு வந்திடறேன்" என மளமளவென சொல்லிவிட்டு சந்தனாவின் கைகளை பற்றிக்கொண்டு கிளம்பி விட்டாள்.
அவளின் வேகம் ஷியாமுக்கு எதையோ உணர்த்த எதோ முக்கிய முடிவு எடுக்க போகிறாள் என கண்டு கொண்ட அவன் அவள் கூறி சென்றவற்றை அச்சு பிசகாது செயல்படுத்த துவங்கினான்.
அவள் எடுக்கும் முக்கிய முடிவு என்ன?
அது அவர்கள் வாழ்வை பாதிக்குமா ?
சரத் சந்தனா சேர முடியுமா?
சந்தோஷின் நிலை என்ன?
போக போக தெரியும்
No comments:
Post a Comment