This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Thursday, 29 November 2018

சிலம்பம்


   சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாக இதன் பெயர் காரணம் சொல்ல படுகிறது. 


    "சிலம்பம்" என்ற சொல் "சிலம்பல்" என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. 


   எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயரும் உண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்" என்ற பெயரும் வழக்கில் உள்ளது.


    இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பலகூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்பு கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. 



சிலம்ப வரலாறு


மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்து கொள்ள இந்த கலையை பயன்படுத்தினர்.


தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும். 


    முற்காலத்தில் இக்கலையை 'சத்திரியர்கள்' பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டு போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது.


    சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள் போன்றவை நம் நாடு மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்ற பின் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட காலத்தில் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.


ஆயுதப் பிரிவுகள்


சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர்.


ஆய்வுச்சான்று


     சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வு சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க்கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்க பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்க பட்டுள்ளன. 


    பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்தியபோர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழகத்தில் இருந்து எகிப்துக்கு கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்ப கலையும் பரவியதாக கருதப்படுகிறது.


இலக்கியத்தில் சிலம்பு


     சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார்.


சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. 


திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே" என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. 


திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.


கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி" என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 


இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலை சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.


நாட்டுப்புறப் பாடல்களில் ஒன்றான கட்டபொம்மன் கதைப்பாடலில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை விரட்ட சிலம்பத்தைப் பயன்படுத்தினான் என்பதை என்ற கும்மிப் பாடல் மூலம் அறியலாம்.



சிலம்பின் உட்கூறுகள்


மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலானவை சிலம்பக்கலையின் முக்கியக் கூறுகளாகும். ஒருவர் சிலம்பக்கலையைக் கற்றுக் கொள்ள வேண்டுமாயின், அடிப்படையில் துவங்கி படிப்படியாகக் இவற்றைக் கற்பதன் மூலம் சிலம்பக்கலையின் பல்வேறு உட்கூறுகளைத் தம்முள் அடையலாம்.


சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற  மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறுவாரைக் கம்பு என்பது நன்கு வளைந்து கொடுக்கக்கூடியது. சிலம்பத்திற்கான தடி, நிலத்தில் இருந்து ஓர் ஆளின் நெற்றிப் புருவம் வரையான உயரம் உடையதாக இருக்க வேண்டும்.



சிலம்பாட்ட வகைகள்


துடுக்காண்டம்


குறவஞ்சி


மறக்காணம்


அலங்காரச் சிலம்பம்


போர்ச் சிலம்பம்


பனையேறி மல்லு


நாகதாளி


நாகசீறல்


கள்ளன்கம்பு



சுற்று முறைகள்


சிலம்பாட்டத்தில் 72-க்கும் மேற்பட்ட வகைகளில் சுற்றும் முறைகள் உள்ளன. சுருள் கத்தி, தீப்பந்தம், அடிவருசு, தொடுபுள்ளி, பிச்சுவாப் பிடிவரிசை, கோடாலிக் கேடயம், வேல்கம்பு, சுருள், வாரல், முன்வெட்டு, பின்வெட்டு, இடையறுப்பு, மேலறுப்பு, மலார், பின்னுருட்டு, முன்னுருட்டு போன்றன சில சுற்று முறைகளாகும்.


ஒற்றைச் சிலம்புத்தடி கொண்டு இரு கைகளில் பிடித்துச் சுழன்றாடுவது,


இரண்டு ககைகளிலும் இரண்டு சிலம்பத்தடி கொண்டு ஆடுவது


என இரு முறைகளும் இதில் உண்டு.


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.