This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Sunday, 21 October 2018

12. பெற்றோர் பெருந்துயர்

எதிர்பாராத முத்தம்


- பாரதிதாசன் கவிதை


விளக்குவைத்து நாழிகைஒன் றாயிற்று மீசை 

வளைத்துமே லேற்றிஅந்த மானநாய்கன் வந்தான். 


"அன்னம்"என்று கூவினான் அன்னோன் மனைவிதனை 

"என்ன"என்று கேட்டே எதிரில்வந்து நின்றிருந்தாள். 


"பையன் வெறிபிடித்த பாங்காய் இருக்கின்றான்! 

செய்வதின்ன தென்று தெரியவில்லை. பெட்டியண்டை 


உட்கார்ந்தால் உட்கார்ந்த வண்ணமாம். ஓலைதனைத் 

தொட்டுக் கணக்கெழுதித் தோதாய் விலைபேசி 


வாரம் இரண்டா யினவாம் இதுஎன்ன 

கோரம்!" எனக்கூறிக் குந்தினான் பீடத்தில்! 


அச்சமயம் பொன்னன் அருகில்வந்து நின்றுமே 

அச்ச மயமாக "ஐயா" எனக்கூவிப் 


பொன்முடியான் பூங்கோதை வீட்டுக்குப் போனதையும், 

புன்னை மரத்தடியில் கட்டிப் புடைத்ததையும், 


சொல்லி முடித்திட்டான். அன்னம் துடித்தழுதாள். 

"நல்லதுநீ போபொன்னா" என்று நவின்றுபின் 


மான நாய்கன்தான் மனத்துயரம் தாங்காமல் 

"தான தருமங்கள் நான்செய்து பெற்றபிள்ளை 


ஏன்என் றதட்டாமல் இதுவரைக் கும்சிறந்த 

வானமுதம் போல வளர்த்த அருமைமகன் 


வெள்ளை உடுத்தி வௌியிலொரு வன்சென்றால் 

கொள்ளிக்கண் பாய்ச்சும் கொடிய உலகத்தில் 


வீட்டில் அரசநலம் வேண்டுமட்டும் கொள்ளப்பா 

நாட்டில் நடக்கையிலே நட்ட தலையோடு 


செல்லப்பா என்று சிறக்க வளர்த்தபிள்ளை 

கொல்லைப் புறத்தில் கொடுமைபல பட்டானா!" 


என்று பலவாறு சொல்லி இருக்கையிலே, 

நின்றெரியும் செந்தீயில் நெய்க்குடமும் சாய்ந்ததுபோல் 


பண்டாரம் வந்து பழிப்பதுபோல் பல்லிளிக்கக் 

கண்டஅந் நாய்கன் கடிந்த மொழியாக 


"நில்லாதே போ!"என்றான். "என்னால் நிகழ்ந்ததில்லை. 

சொல்லென்று தங்கள்பிள்ளை சொன்னபடி போய்ச்சொன்னேன். 


பூங்கோதை ஓலைதந்து போய்க்கொடு என்றாள்; அதனை 

வாங்கிவந்து பிள்ளை வசம்சேர்த்தேன். வேறென்ன?" 


என்றுரைத்தான் பண்டாரம். கேட்டான் இதைநாய்கன். 

"சென்றதற்குக் கூலிஎன்ன சேர்ந்த துனக்"கென்றான். 


"பத்து வராகன் பணம்கொடுத்த தாகவும் 

முத்துச் சரத்தைஅவள் மூடித்தந் தாள்எனவும் 


எந்த மடையன் இயம்பினான் உங்களிடம்? 

அந்தப் பயலை அழையுங்கள் என்னிடத்தில்! 


தாடிஒன்று கேட்டான். எனக்கென்ன? தந்ததுண்டு. 

மூடிமுக் காடிட்டு மூஞ்சியிலே தாடிஒட்டி 


நான்போதல் போல நடந்தான் அவளிடத்தில். 

மான்வந்தாற் போல்வந்து வாய்முத்தம் தந்துவிட்டுப் 


போய்விட்டாள் வீட்டுக்குள் பூங்கோதை; மெய்க்காதல் 

ஆய்விட்டாள் பொன்முடிமேல்! அப்பட்டம், பொய்யல்ல!" 


என்று பண்டாரம் இயம்பவே நாய்கனவன் 

"நன்று தெரிந்துகொண்டேன். நான்சொல்வ தைக்கேட்பாய் 


என்னைநீ கண்டதாய் என்மகன்பால் சொல்லாதே; 

அன்னவனை நானோ அயலூருக் குப்போகச் 


சொல்ல நினைக்கின்றேன்; அன்னவன்பால் சொல்லாதே 

செல்லுவாய்" என்றுரைத்தான். பண்டாரம் சென்றுவிட்டான். 


பண்டாரம் போனவுடன் நாய்கன் பதைபதைத்துப் 

பெண்டாட்டி தன்னைப் பெரிதும் துயரமுடன் 


"அன்னம் இதைக்கேள்! அவனை வடதேசம் 

சென்றுமுத்து விற்றுவரச் செப்ப நினைக்கின்றேன். 


நாளைக்கு முத்து வணிகர்கள் நாற்பதுபேர் 

தோளில் சுமந்தும் பொதிமாடு தூக்கவைத்தும் 


முத்துவிற்கப் போகின்றார். நம்பொன் முடியையும் 

ஒத்தனுப்பி விட்டால் குறைகள் ஒழிந்துவிடும்; 


கொஞ்சநாள் சென்றால் மறப்பான் குளறுபடி 

நெஞ்சில் அவள்மயக்கம் நீங்கும்!" எனச்சொன்னான். 


அன்னம் துயரில் அழுந்திக் கரையேறிச் 

சொன்னது நன்றென்றாள் துணிந்து. 


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.