எதிர்பாராத முத்தம்
- பாரதிதாசன் கவிதை
பகலவன் உதிப்ப தன்முன்
பண்டாரம் பூக்கொ ணர்ந்தான்.
புகலுவான் அவனி டத்தில்
பொன்முடி: "ஐயா, நீவிர்
சகலர்க்கும் வீடு வீடாய்ப்
பூக்கட்டித் தருகின் றீர்கள்
மகரவீ தியிலே உள்ள
மறைநாய்கன் வீடும் உண்டோ?
மறைநாய்கன் பெற்ற பெண்ணாள்,
மயில்போலும் சாயல் கொண்டாள்.
நிறைமதி முகத்தாள்; கண்கள்
நீலம்போல் பூத்தி ருக்கும்;
பிறைபோன்ற நெற்றி வாய்ந்தாள்;
பேச்செல்லாம் அமுதாய்ச் சாய்ப்பாள்;
அறையுமவ் வணங்கை நீவிர்
அறிவீரா? அறிவீ ராயின்
சேதியொன் றுரைப்பேன்; யார்க்கும்
தெரியாமல் அதனை அந்தக்
கோதைபால் நீவிர் சென்று
கூறிட ஒப்பு வீரா?
காதைஎன் முகத்தில் சாய்ப்பீர்!
கையினில் வராகன் பத்துப்
போதுமா?" என்று மெல்லப்
பொன்முடி புலம்பிக் கேட்டான்.
"உன்மாமன் மறைநாய் கன்தான்
அவன்மகள் ஒருத்தி உண்டு;
தென்னம் பாலை பிளந்து
சிந்திடும் சிரிப்புக் காரி!
இன்னும்கேள் அடையா ளத்தை;
இடைவஞ்சிக் கொடிபோல் அச்சம்
நன்றாகத் தெரியும்! நானும்
பூஅளிப் பதும்உண்" டென்றான்.
"அப்பாவும் மாம னாரும்
பூனையும் எலியும் ஆவார்;
அப்பெண்ணும் நானும் மெய்யாய்
ஆவியும் உடலும் ஆனோம்!
செப்பேந்தி அவள் துறைக்குச்
செல்லுங்கால் சென்று காண
ஒப்பினேன்! கடைக்குப் போக
உத்திர விட்டார் தந்தை.
இமைநோக என்னை நோக்கி
இருப்பாள்கண் திருப்ப மாட்டாள்;
சுமைக்குடம் தூக்கி அந்தச்
சுடர்க்கொடி காத்தி ருந்தால்
'நமக்கென்ன என்றி ருத்தல்
ஞாயமா?' நீவிர் சென்றே
அமைவில்என் அசந்தர்ப் பத்தை
அவளிடம் நன்றாய்ச் சொல்லி
சந்திக்க வேறு நேரம்
தயவுசெய் துரைக்கக் கேட்டு
வந்திட்டால் போதும் என்னைக்
கடையிலே வந்து பாரும்.
சிந்தையில் தெரிவாள்; கையால்
தீண்டுங்கால் உருவம் மாறி
அந்தரம் மறைவாள்; கூவி
அழும்போதும் அதையே செய்வாள்.
வையத்தில் ஆண்டு நூறு
வாழநான் எண்ணி னாலும்
தையலை இராத்தி ரிக்குள்
சந்திக்க வில்லை யானால்,
மெய்யெங்கே? உயிர்தா னெங்கே?
வெடுக்கென்று பிரிந்து போகும்.
`உய்யவா? ஒழிய வா?'என்
றுசாவியே வருவீர்" என்றான்.
பண்டாரம் ஒப்பிச் சென்றான்.
பொன்முடி பரிவாய்ப் பின்னும்
கண்டபூங் கோதை யென்னும்
கவிதையே நினைப்பாய், அன்னாள்
தண்டைக்கால் நடை நினைத்துத்
தான்அது போல் நடந்தும்,
ஒண்டொடி சிரிப்பை எண்ணி
உதடுபூத் தும்கி டப்பான்.
வலியஅங் கணைத்த தெண்ணி
மகிழ்வான்! அப்போது கீழ்ப்பால்
ஒலிகடல் நீலப் பெட்டி
உடைத்தெழுந் தது கதிர்தான்!
பலபல என விடிந்த
படியினால் வழக்க மாகப்
புலம்நோக்கிப் பசுக்கள் போகப்
பொன்முடி கடைக்குப் போனான்.
No comments:
Post a Comment