This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday, 10 October 2018

நவராத்திரி விரதம்

புராண காலத்தில் மகிஷாசுரன் என்கிற அரக்கன் பூலோகம் மட்டுமல்லாது தேவலோகத்தையும் கைப்பற்றி பல அராஜகங்களை செய்து வந்தான். அவனது அக்கிரமங்களை பொறுக்க முடியாத தேவர்கள் சக்தியாகிய அன்னை பார்வதியிடம் முறையிட்டனர். இதையடுத்து துர்க்கை அம்மன் வடிவெடுத்த பார்வதி தேவி மகிஷாசுரனுடன் 9 நாட்கள் போரிட்டு, அவனை துர்க்கை வதம் புரிந்ததை நவராத்திரி விழாவாக அனைவரும் கொண்டாடுகின்றனர். தீமைகளை எப்போதும் இறைசக்தி வெல்லும் என்பதை குறிக்கும் விழாவாக நவராத்திரி விழா இருக்கிறது.தெய்வீக தன்மை வாய்ந்த இந்த ஒன்பது தினங்களாகிய நவராத்திரி விழாவின் மகிமை குறித்தும், அப்போது அனுஷ்டிக்க வேண்டிய “நவராத்திரி விரதம்” குறித்து இங்கு விரிவாக அறிந்து கொள்ளலாம்.


நவராத்திரி எனப்படும் இந்த ஒன்பது தினங்களும் புனித தினங்களாகும். இந்த 9 நாட்களும் பெண் தெய்வங்களுக்கு விரதமிருந்து வழிபடுவதை நவராத்திரி விரதம் என அழைக்கின்றனர். இராமாயணத்தில் “ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியும்”, “மகாபாரதத்தில்” பஞ்ச பாண்டவர்களும் இந்த நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து தங்களின் எதிரிகளை வென்று, தாங்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்றனர். இந்த விரதத்தை நாம் மேற்கொள்வதால் நமது கர்ம வினைகள் நீங்கும், பொருளாதார கஷ்டங்கள், கடன் பிரச்சனைகள், உடல்நல பாதிப்புகள், குழந்தை பேறில்லாமை, திருமண தாமதம் போன்ற அனைத்தும் எல்லாமாக இருக்கும் அன்னையின் அருளால் நிச்சயம் நீங்கும்.


நவராத்திரி ஆரம்பிக்கும் முதல் தினம் தொடங்கி 9 நாட்களும் காலை 9 மணிக்குள்ளாக குளித்து விட வேண்டும். பூஜையறையில் சென்று “சரஸ்வதி, லட்சுமி” போன்ற பெண் தெய்வங்களின் படத்திற்கு பூக்களை சமர்ப்பித்து, கற்கண்டு பழம் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து அப்பெண் தெய்வங்களுக்குரிய மந்திரங்களை கூறிவனங்க வேண்டும் உடலில் எந்த விதமான நோய், நொடி பாதிப்பும் இல்லாதவர்கள் இந்த 9 நாட்களும் திட உணவுகளை தவிர்த்து, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றோடு பழ சாறுகளை மட்டும் அருந்தி விரதம் இருக்க வேண்டும். இந்த விரத முறை கடுமையாக இருப்பதாக கருதுபவர்கள் ஒரு வேளை திட உணவையாவது தவிர்த்து பருப்புகள், நீராகாரம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.


இந்த 9 நாள் விரத காலத்திலும் முடி, நகங்கள் வெட்டுவது போன்றவை கூடாது. பிறர் வீடுகளில் தங்க கூடாது. வீட்டை முடிந்த வரை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மது, புகைபிடித்தல், புலால் உணவுகளை அறவே நீக்க வேண்டும். மனதை எல்லாவித கவலைகள், வருத்தங்கள் போன்றவற்றிலிருந்து விலக்கி சக்தி தேவியை மட்டுமே தியானிக்க வேண்டும். இந்த 9 நாள் காலத்திலும் ஏழை பெண்களுக்கு உங்களால் முடிந்த தான தர்மங்களை செய்வது இந்த விரதத்தின் பலனை மேலும் அதிகரிக்கும். இறுதி நாளான 9 ஆம் தினம் 3 கன்னிகைகளுக்கு அன்னதானம் அளித்து, ரவிக்கை துண்டு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, சீப்பு போன்ற சீர்வரிசை அளிக்க வேண்டும். இந்த தானம் உங்கள் குடும்பத்திற்கு அல்லது பரம்பரைக்கு பெண் சாபம் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அதை போக்கும். மிகுந்த பலனளிக்கும் இந்த நவராத்திரி விரதத்தை குழந்தைகள், நோயாளிகள், முதியோர்கள் தவிர்த்து ஆண் – பெண் பேதமின்றி அனைவரும் மேற்கொள்ளலாம்.


நவராத்திரி விரத பலன்கள்:


நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக கூறப்படுகிறது. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச்  சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று கூறப்படுகிறது.


நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகலசெல்வங்களையும் பெறலாம். விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி  விடும்.


வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும் என்று கூறப்படுகிறது.


நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும். நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால்  அம்பாள் மனமகிழ்ந்து வருவார் என்பது ஐதீகம்.


நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும். கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.