This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Monday, 29 October 2018

கால் முளைத்த மீன்கள்

பரமார்த்த குரு கதைகள்:

கடலுக்குச் சென்று மீன் பிடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டிக்கு ஏற்பட்டது. தன் விருப்பத்தைக் குருவிடம் தெரிவித்தான்.


அதைக் கேட்ட மடையன், “குருவே! பகலில் போனால், பெரிய பெரிய அலைகள் நம்மைச் சாகடித்து விடும். அதனால் ராத்திரியில் தான் போக வேண்டும்” என்றான்.


“ஆமாம் குருவே! அப்போது தான் கடல் தூங்கிக் கொண்டு இருக்கும்!” என்றான், மண்டு


“ஒரே இருட்டாக இருக்குமே? என்ன செய்வது?” எனக் கேட்டான் மூடன்


“என் கையில் தான் கொள்ளிக்கட்டை இருக்கிறதே!” என்றான், முட்டாள்.


கடல் என்றதுமே பரமார்த்தருக்குப் பயமாக இருந்தது. இருந்தாலும், சீடர்கள் தன்னைக் கோழை என்று நினைத்து விடக்கூடாது என்பதால் சம்மதம் தெரிவித்தார்.


சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆளுக்கு ஒரு தூண்டில் தயார் செய்தனர்.


இரவு வந்தது. குருவும் சீடர்களும் கொள்ளிக்கட்டை வெளிச்சத்தில் மீன் பிடிக்கப் புறப்பட்டார்கள்.


கடற்கரை ஓரத்தில் படகு ஒன்று இருந்தது. அதில் பரமார்த்தரும், அவரது ஐந்து சீடர்களும் ஏறிக் கொண்டனர். மட்டியும், மடையனும் கண்டபடி துடுப்புப் போட்டனர்.


மூடன் தூண்டிலைப் போட்டான். அவன் போட்ட தூண்டிலில் தவளை ஒன்று மாட்டியது.


அதைக் கண்ட சீடர்கள், “இதென்ன? விசித்திரமாக இருக்கிறதே!” என்று கேட்டனர்.


அது தவளை என்பதை மறந்த பரமார்த்தர் “இதுவும் ஒரு வகை மீன்தான் அதிகமாக தின்று கொழுத்து விட்டால் இப்படிக் கால்கள் முளைத்து விடும்” என்று விளக்கம் கூறினார்.


“அப்படியானால் கால் முளைத்த மீன்களைக் கட்டிப் போட்டு, வீட்டிலேயே வளர்க்கலாம்!” என்றான் மட்டி


அதற்குப் பிறகு, மண்டு போட்ட தூண்டிலில் ஒரு சிறிய மீன் மட்டுமே மாட்டியது.


“குருநாதா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. படகுக்கு வெளியே நிறைய மீன்கள் இருந்தாலும் கொஞ்சம் தான் நமக்குக் கிடைக்கின்றன. அதனால் படகில் சில ஓட்டைகளைப் போட்டு, பக்கத்தில் கொஞ்சம் பூச்சிகளை வைத்து விடுவோம்! அந்தப் பூச்சிகளைத் தின்பதற்காக, மீன்கள் ஓட்டை வழியாகப் படகுக்குள் வரும். உடனே லபக் என்று பிடித்துக் கொள்ளலாம்!” என்றான் முட்டாள்.


“சபாஷ்! சரியான யோசனை!” என்று முட்டாளைப் பாராட்டினார், பரமார்த்தர்.


அவன் யோசனைப்படி படகிலிருந்த ஆணிகளால், ஆளுக்கு ஒரு ஓட்டை போட்டனர்.


அவ்வளவு தான்! அப்போதே கடல் நீர் குபுகுபு என்று படகுக்குள் பாய்ந்து வந்தது.


அதைக் கண்ட சீடர்கள் “ஐயோ” என்று கத்திக் கொண்டு எகிறிக் குதித்தனர். அதனால் இன்னும் கொஞ்சம் ஆட்டம் கண்டது படகு. படகு முழுவதும் நீர் நிரம்பி விடவே, கடலுக்குள் மூழ்கியது. குருவும் சீடர்களும் லபோ திபோ என்று அலறியபடி நீருக்குள் தத்தளித்தனர்.


அவர்கள் போட்ட சப்தத்தைக் கேட்டு, அங்கு வந்த சில மீனவர்கள் நீந்திச் சென்று அனைவரையும் காப்பாற்றினர்.


மடத்துக்கு வந்து சேர்ந்த சீடர்கள், “நம் படகு எப்படிக் கவிழ்ந்தது?” என்று கேட்டனர்.


“கடலும், மீன்களும் சேர்ந்து சதித் திட்டம் செய்து தான் நம் படகைக் கவிழ்த்து விட்டன! என்றார் பரமார்த்தர்.


“அப்படியானால், எப்படியாவது கடலின் திமிரையும் மீன்களின் கொட்டத்தையும அடக்க வேண்டும்” என்றான் மட்டி


குருவே! முடிந்தவரை மீன்களைப் பிடித்துக் கொன்று விடுவோம்” என்றான் மடையன்.


“ஆமாம்! சும்மா விடக்கூடாது. மறுபடியும் மீன் பிடிப்போம், வாருங்கள்” என்றான் முட்டாள்.


மறுநாளும் மீன்பிடிக்கப் புறப்பட்டனர்.


கடலுக்குள் சென்றதும், “குருவே! எங்களை விட உங்கள் மீது தான் மீன்களுக்குக் கோபம் அதிகமாக இருக்கும். அதனால், தூண்டில் போடுவதற்குப் பதில், உங்களையே கயிற்றில் கட்டி கடலுக்குள் இறக்கி விடுகிறோம்” என்றான் மட்டி.


“உங்களைக் கடிப்பதற்காகக் கடலில் உள்ள எல்லா மீன்களும் வரும். உடனே நாங்கள் எல்லா மீன்களையும் பிடித்து விடுகிறோம்” என்றான் மடையன்.


குரு சற்று நேரம் யோசித்தார். “நீங்கள் சொல்வதும் சரியே” என்றார்.


உடனே சீடர்கள் அவரைக் கயிற்றில் கட்டி, கடலில் தூக்கிப் போட்டனர். நீச்சல் தெரியாத பரமார்த்தர், நீருக்குள் மூழ்கியதும் மூச்சுவிட முடியாமல் துடித்தார்.


நீரின் மேல் பரப்பில் காற்றுக் குமிழிகள் வருவதைக் கண்ட சீடர்கள், “அடேயப்பா! நம் குரு நிறைய மீன்களைப் பிடிக்கிறார் போலிருக்கிறது” என்றனர்.


பரமார்த்தரின் வயிறு முழுவதும் நீர் நிரம்பியதால் குமிழிகள் வருவது நின்றன.


எல்லா மீன்களையும் பிடித்து விட்டார் என்று நினைத்த சீடர்கள், நீரிலிருந்து குருவைத் தூக்கினர்.


ஆனால் பரமார்த்தரோ மயங்கிக் கிடந்தார்.


“மீன்களோடு நீண்ட நேரம் சண்டை போட்டதால் களைத்து விட்டார்!” என்றான் மட்டி.


கண் விழித்த பரமார்த்தர், “சீடர்களே! இன்னும் நம் மீது, கடலுக்கு இருக்கும் கோபம் தீரவில்லை. எப்படியோ நான் இந்தத் தடவை தப்பித்துக் கொண்டேன். இனிமேல், கடல் பக்கமே போகவேண்டாம்!” என்றார்.


கடைசியில் கடலையும் மீன்களையும் திட்டிய படி அனைவரும் கரை சேர்ந்தனர்.



No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.