This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Tuesday, 16 October 2018

பலி பீடம்

பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும். பொதுவாக பலி பீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது, தாமரை மலர் வடிவம் போன்று அமைக்க பட்டிருக்கும். அந்த பீடங்களில் சிற்பங்கள் இருக்கும். சில ஆலயங்களில் வெறும் பீடம் மட்டும் இருக்கும்.


பலி பீடம் என்றதும் பலரும் தங்கள் மனதில், இது ஏதோ உயிர் பலியிடும் இடம்போல என்றுதான் நினைப்பார்கள். அப்படியல்ல.. அது நமது மனதில் உள்ள தீய எண்ணங்களை, குணங்களை பலியிடும் இடம் என்பதே சரியானது.


அதெப்படி தீய குணத்தையும், தீய எண்ணத்தையும் பலியிடுவது?


மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும், அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கெட்ட குணங்கள் நீக்க முடியாததாக இருக்கவே செய்யும்.


இப்படி கெட்ட குணத்துடனும், எண்ணத்துடனும் கருவறைக்குச் சென்றால், கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்? நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நமக்கு இறைவன் அருளை வழங்குவார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை கொண்டவர்கள்தான் கடவுளை அடையமுடியும். அவர்களின் அருகில்தான் கடவுளும் வருவார்.


எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது, நாம் நல்ல மனிதனாக மாறி விடுகிறோம்.


இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம். உயிர்ப்பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடுமானது உயர்வுக்குரியது. இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன.


பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும்.


பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன.


பலி பீடத்தை பொதுவாக ‘பத்ரலிங்கம்’ என்று அழைப்பார்கள். பலி பீடம் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவ மலம், பலி பீடத்தில்தான் ஒதுங்கியிருக்கும். எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். ‘நான்’ என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும்.


சிலர் ‘எல்லாமே நம்மால் தான் நடக்கிறது’ என்ற மாயையில் சிக்கித் தவிப்பார்கள். அகந்தையுடன் நடந்து கொள்வார்கள். அந்த இறுமாப்பை பலிபீடம் அருகில் நின்று பலியிட வேண்டும். பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். ஆலயத்தின் கருவறையானது வடக்கு, மேற்கு திசையை பார்த்தபடி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறையானது கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும்.


மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும் போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது.


அதுபோல பலிபீட வழிபாட்டை ஒரு தடவை, இரண்டு தடவை மட்டும் செய்து விட்டு நிறுத்தி விடக் கூடாது. 3, 5, 7, 9, 12 என்ற எண்ணிக்கையில் வணங்க வேண்டும். அந்த சமயத்தில் நம்மிடம் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் 6 கெட்ட குணங்களை பலியிடுவதாக மனதில் நினைத்து வணங்க வேண்டும்.


பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும்; ஆசீர்வதிக்கும்.


பலி பீடத்துக்கு ‘பலி நாதர்’, ‘மாயச் சக்கரம் என்றும் பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு - இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடத்தைக் கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், ‘ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு’ என்று வேண்டுவதற்கு சமமாகும்.


பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக் பாலகர்களை உணர்த்துகிறது.


இந்த 8 பலி பீடங்களும் ஒவ்வொரு கோவிலின் ஆகம விதிகளுக்கு ஏற்ப கோவில் பிரகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு தலைமை பலி பீடமாக நந்தி பின்புறம் உள்ள பலி பீடம் அமையும். பொதுவாக தலைமை பலி பீடம், மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.


சில கோவில்களில் பலி பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதைச் சொல்லும் வழிபாட்டு முறை இதுவாகும்.


சக்தி தலங்களில் தலைமை பலி பீடம் தவிர பிராம்மி, மகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களை உணர்த்தும் பலி பீடங்களும் அமைத் திருப்பார்கள். அந்த பலி பீடங்களையும் மறக்காமல் வழிபட வேண்டும்.


பலி பீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால் நம்மிடம் உள்ள தேவையற்ற காமம் போய் விடும். ஆசை போய் விடும். கோபம் போய் விடும். தீராத பற்று போய் விடும். நெறி பிறழாத தன்மை உண்டாகும். பேராசை வரவே வராது. உயர்வு - தாழ்வு மனப்பான்மை விலகும். வஞ்சகக் குணம் வரவே வராது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், பலிபீடம் மனிதனை மனிதம் கொண்டவனாக மாற்றுகிறது.


எனவே பலி பீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்கு கொண்டு வாருங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும். கோவிலில் கோபுர வாசலுக்கும் கொடி மரத்திற்கும் இடையில் உள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர். இதை ‘பலி போடுதல்’ என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது.


              

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.