கோபம் இருந்தால் திட்டிவிடு
ஆத்திரம் இருந்தால் அடித்துவிடு
மௌனத்தை விட்டு விடு
என்னிடம் நீ பேசிவிடு
மாலதிக்கான மாதாந்திர மருத்துவ பரிசோதனை நாளும் வந்தது. அவளை பரிசோதித்த மருத்துவரின் முகம், சற்றே ஒர் நொடி தயங்கி பின் சீரானது.
அப்போதைக்கு அவர்கள் முன் எல்லாம் சரியாக இருப்பதாக சொல்லி அனுப்பிய மருத்துவர், அதன் பின்னர் நாராயணனை தனியாக சந்தித்து மாலதியின் உடல்மிகவும் பலவீனமானது என்றும், குழந்தை பிறக்கும் வரை மிகுந்த கவனத்துடன் பராமரிக்குமாறும் சொன்னார்.
மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு சென்று வந்த நாள் முதலே மைத்துனரின் முகம் சரியில்லாது இருந்ததை கவனித்து வந்த பார்வதி, நாராயணனை தனியே அழைத்து விபரம் கேட்டார்.
தன் மனைவியின் உடல் நிலையை பற்றி மருத்துவர் சொன்னதிலிருந்தே அவளது உடல் நலம் குறித்து கவலை கொண்டிருந்த நாராயணன், அண்ணியிடம் தன் கவலை குறித்து பகிர்ந்து கொண்டார்.
குறிப்பாக இது மாலதிக்கு தெரிய வேண்டாம், அவள் மிகவும் பயந்துவிடுவாள் எனவும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இவர்கள் பேசிக்கொண்டதை மாலதியும் கேட்டு கொண்டிருந்ததை பாவம் இருவரும் அறியவில்லை.
அன்றிரவு தன் கவலையை கணவரிடம் பகிர்ந்து கொண்ட பார்வதி, அப்போது முதல் மாலதிக்கு பிடித்தமான சத்தான உணவு முறை கவனிப்பு என்று ஒரு அன்னையெனவே மடிதாங்கினார்.
மறு மாதம் பரிசோதனை முடிவுகள் ஓரளவு முன்னேற்றம் காட்டினாலும், மருத்துவரின் எச்சரிக்கையால் வீட்டில் மிகுந்த கவனத்துடன் பார்த்து கொள்ளப்பட்டாள் மாலதி.
நாராயணன் அவள் ஆசை பட்டவற்றை எல்லாம் வாங்கி தர, பாஸ்கரோ தன் சித்தி மாலதியை விட்டு நொடிப்பொழுது கூட நகர்வதே இல்லை.
ஈஸ்வரனோ இன்னும் ஒரு படிமேல் போய் வளைகாப்பு செய்ய தன் தம்பியின் மாமியாருக்கு தகவல் சொல்ல நினைத்தார்.
மாலதி பிடிவாதமாக மறுத்து விட, மகளென நினைக்கும் தன் தம்பி மனைவியின் மனம் கோணக்கூடாது என்று தற்காலிகமாக தன் யோசனையை தள்ளி வைத்தார்.
பின் மாலதிக்கு தாங்களே தந்தையும் தாயுமாய் நின்று வளைகாப்பு செய்தனர் ஈஸ்வரன் பார்வதி தம்பதி.
இந்த அளவிற்கு தன்னை தாங்கும் புகுந்த வீட்டு உறவுகளின் பிரியத்தால் மகிழ்ச்சியில் திளைத்தாள் மாலதி.
இந்த மகிழ்ச்சி நீடிக்குமா?....
பொறுத்திருந்து பார்ப்போம்-(தொடரும்)
No comments:
Post a Comment