முல்லை நிலத்து மக்களை காவல் காப்பதற்கென்றே கடவுள் அமைத்து தந்த காட்டு மரங்கள், பகைவர்கள் தம் மண்ணின் மக்களுடைய மாடுகளை கவர்ந்து செல்வதை கண்டு ஆத்திரம் கொண்டு பேயாட்டம் ஆடின. வழி நெடுக சிறுவயது அனழேந்தியின் விரல் ஸ்பரிசம் பட்டு வளர்ந்திருந்த அசோக மரங்கள் யாவும், எரியும் தீயைப்போன்ற நெருப்பு நிறத்து பூக்களை தரைமேல் கொட்டி, புயல் வேகத்தில் வருபவனது புரவிக்கு பாதம் நோகாமல் பார்த்துக்கொண்டன. காரிருள் கானகத்தினுள், காட்டாறு கரைபுரண்டு ஓடும் கரைதனிலே, கார்மேகங்கள் கூடி போர்முரசு போல் முழங்கி அவனது வருகையை அயலவர்களுக்கு தெரிவித்திட, மின்னல் ஒளியினில் வேல்விழி சிவக்க சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருந்தவன், கள்வர்களின் கண்களுக்கு காலனெனவே தெரிந்தான்.
காண்போர் இதுவும் ஒருவகை மலைக்குன்றெனவே ஆச்சரியப்படும் வகையில் அகன்று உயர்ந்து திமிராய் விம்மி நிமிர்ந்திருந்த அவன் நெஞ்சத்தில் சந்தனப் பூச்சும் சூரிய சுவடு பதித்த முத்தாரமும் நீக்கமற நிறைந்திருந்தது. பட்டுத் துணியால் ஆன தலைப் பாகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த அவனது சுருண்டு நீண்ட தலைமுடி, புரவியின் வேகத்தினால் புயல்காற்றில் சிக்கிய வேப்ப மரம் போல் இங்குமங்கும் நிலையின்றி ஆடியது. முத்தாரம் தொங்கும் அவன் மேனியின் முன் பகுதி முழுக்க போரில் பெற்ற காயத்தின் விளைவால் உருவான செந்நிற தழும்புகள் ஆங்காங்கே காணப்பட்டன. அவன் இடையின் இடதுபுறம் மரகத மாணிக்கம் பதிக்கப்பெற்று பொன்னாலான நீண்ட போர்வாள் அசைந்தாட, அவனின் வலது கையில் பகைவரைப் புறமுதுகு காட்டி ஓட வைக்கும் வெற்றி வேலுடன் வீசும் குளிர் காற்றினை கிழித்துக்கொண்டு அவன் பாய்ந்து வந்தான்.
அவன் வந்துவிட்டான் என்பதை கண்ட மாத்திரத்திலேயே கள்வர்கள் கூட்டத்தில் திடீர் சலசலப்பு உண்டாகி, இருந்ததில் பாதி பேர் உயிருக்கு அஞ்சி கானகத்தினுள் தலைதெறிக்க தப்பியோடி மறைந்துவிட்டனர். மீதி பாதி பேரும் தப்பி செல்ல சொல்லி கெஞ்சும் மனதிடம், 'நின்றாலும் சென்றாலும் மரணமென்ற ஒன்று உனக்கு உறுதியான பிறகு, அதை எதிர் வரும் வீர வாளுக்கே பரிசளித்துவிடு மனமே...' என்று கை கால்கள் நடுங்க தத்தமது மனதோடு மன்றாடிக் கொண்டிருந்தனர்.
கயவர்களின் கூட்டத்திற்கு முன்பாக தனி ஒருவனாக, இருள் வண்ண பின்புலத்திலிருந்து வெள்ளை நிற புரவியில் முன் வந்து நின்றான் அவன். விண்ணில் வெட்டும் மின்னல் ஒளியினில் புரவியிலிருந்து இறங்கி வருபவனின் சந்தனம் பூசப்பட்ட மஞ்சள் நிற தேகமும், இடையின் இடப்பக்கம் ஆடும் பொன் வண்ண வாளும் மட்டும் பளிச் பளிச்சென்று தோன்றி மறைந்தது. தட்... தட்டென்று அவன் தன் கைவேல்தனை ஆற்றங்கரை பாறைகளில் தட்டியபடி நடக்கும் ஓசையும், தாங்கள் கவர்ந்து வந்த ஆநிரைகள் தங்களின் காப்பாளன் வந்து விட்ட மகிழ்ச்சியில் கத்தும் ஓசையும், அங்கே காற்றெங்கிலும் கலந்து ஒலித்தது.
எந்த நொடியும் உயிர் பிரியலாம் எனும் அச்சத்திலிருந்த கள்வர் கூட்டத்தினர் உயிருக்கு அஞ்சி ஒன்றாய் கூடி நின்றனர். அக்கூட்டத்தின் தலைவன் முன்பு வந்து நின்ற அனழேந்தி, தன் வலக் கையிலிருந்த வேலை விண்ணைப் பார்த்து செங்குத்தாக நிற்கும் படியாக, ஒரே குத்தில் ஓங்கி அடித்து தரையில் பாய்ச்சினான். அவனுடைய கை வாளை நோக்கி நகர நகர, இங்கே இவர்களின் இன்னுயிர் தன் விடுதலைக்கான நொடியினை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது பளிச்சென்று வெட்டிய மின்னல் ஒளியில் அவன் கண்களுக்கு ஏதோ ஒன்று தெரிய, வாளை எடுக்காமல் மீண்டும் வேல் கம்பையே பற்றிக்கொண்டான்.
மின்னலை பின்தொடர்ந்து வரும் பேரிடியை விட இறுக்கமான குரலில், "எதற்காக எம் மண்ணின் மந்தையினை களவு கொள்ள நினைத்தீர்கள்?...." என்றான்.
"களவு எங்கள் தொழில், ஆதலால்...." என்று இழுக்க,
"உங்களுக்கு கள்வர்களைப் போல மாற்று ஆடையும் மாற்று அணிகலன்களையும் கொடுத்த மடையன், கள்வர்களின் உடல் மொழியினை கற்றுக் கொடுக்காமல் விட்டு விட்டான். கள்வர்கள் எப்போதும் ஒரே இடத்தில் ஒன்று கூடி நிற்க மாட்டார்கள், இது படை வீரனின் செயல். எப்பொழுதும் ஆளுக்கொரு திசையில் பதுங்கியிருந்து தாக்குவதே கள்வர்களின் பழக்கவழக்கம். பாதகமில்லை, அந்த பிழைதான் இப்போது உங்களின் உயிரை உடலோடு இறுக்கி பிடித்து இருக்கின்றது. உண்மையில் நீங்கள் களவிற்கு வந்திருந்தால் இன்னேரம் தலை தனியே கழன்றிருக்கும்... வீணாக என் வாளுக்கு வேலை வைக்காமல் வந்த வழியே திரும்பிச் செல்லுங்கள்..." என்ற அனழேந்தி, விசிலடிப்பது போல ஒருவித குரல் எழுப்பியதும் மாடுகள் அனைத்தும் அவன் நடக்கும் திசையில் அவனை பின் தொடர தொடங்கியது.
'இனி திரும்பி செல்வதா? இல்லை இங்கே நிற்பதா?' என்றறியாமல் கள்வர்கள் கூட்டம் தங்களுக்குள்ளேயே குழம்பிக்கொண்டு நிற்க அனழேந்தி, "திரும்பிச் செல்ல மனமில்லை என்றாலும், நெடுநேரம் இங்கேயே நிற்காதீர்கள் காட்டு மிருகங்கள் நீர் அருந்த மலையிலிருந்து இறங்கி வரும் பொழுது இது. என்னைப்போல் மானுடர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டிய அறநெறி அவற்றிற்கு கிடையாது. போர்க்களத்தில் துறக்க வேண்டிய உயிரை பொறுப்பின்றி இங்கே தொலைத்து விடாதீர்கள், இப்போது கிளம்பினாலும் போதும் விடிவதற்குள் ஆற்று பாதையிலேயே நடந்தீர்களெனில் இக்காட்டை கடந்து விடலாம். கிளம்பும் முன்பாக உங்களின் வழக்கமான தோரணைக்கு மாறிவிட மறந்து விடாதீர்கள்..." என்று சொல்லிக் கொண்டே புரவியின் கழுத்து கயிறை பிடித்தபடி நடந்தான்.
அனழேந்தியை ஆக்ரோஷமாகவே பார்த்து பழகிய அவர்களுக்கு கல்லுக்குள் ஈரம் போல அவனுள் மறைந்து கிடந்த மனிதம் இன்றுதான் முதன் முறையாக புரிந்தது. கள்வர்களின் தலைவன் அனழேந்தியின் பின்னால் ஓடிவந்து, "ஐயனே... நாளை அந்தி சாயும் வரையில் உங்களை ஆநிரைகளை காட்டி கானகத்திற்குள் அலைய வைத்திருக்க வேண்டும் என்பது எங்களுக்கு விடுக்கப்பட்ட கட்டளை. எங்களை இப்பணிக்கு அமர்த்தியவர் தங்களைப்போல இரக்கம் கொண்டவர் இல்லை, அவர் அளித்த வேலையை முழுதாக முடிக்காவிட்டால், எங்களின் ஆயுளையே முடித்துவிடுவார். தாங்கள் தானமளித்த எங்களின் உயிரை நாங்கள் இப்பிறவி முற்று பெரும் வரை அனுபவிக்க வேண்டுமெனில், நீங்கள்...." என்று வார்த்தையை முடிக்க முடியாமல் இழுத்தான்.
தென் மேற்கு திசையில் தன் ராஜ்யத்திற்கும் செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்த அனழேந்தி, அப்படியே தன் பாதையை வடமேற்காக மாற்றி நடந்து கானத்திற்குள் சென்று மறைந்தான். மரங்கள் அடர்ந்த அந்த இருள் வனம் அவனை தாய் வீட்டிற்கு திரும்பிய மகனை போல தன் மடிமேல் தாங்கிக்கொண்டது.
அரண்மனையின் எழுநிலை மாடத்தில் இளவளவன், "அன்னையே.... எனக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை என்றறிந்த பின்னும், யாரைக்கேட்டு இவருடன் இணைந்து சம்பந்தம் பேச முடிவு செய்தீர்கள்?..... " என்று அம்மாளிகையே அதிரும்படியாக கர்ஜித்தான் இளவளவன்.
அந்த ராஜ்ஜியத்தின் மகாராணி பொன் நிறததில், அரக்கினை உருக்கி வடித்தார் போன்ற பூ வேலைப்பாடுகள் நிறைந்த பட்டுபுடவையினை கட்டி இருந்தார். அவர் மேனியில் பூட்டியிருந்த ஆபரணங்கள் செல்வச் செருக்கோடும் செம்மாந்த அழகோடும் நிலவொளியில் ஜொலித்தன. அவருடைய நீண்ட கூந்தல் கொடும் வெயிலில் பாலைவனத்தில் பாயும் ஆற்றினை போல வெண்மையாக நெளிந்து வளைந்து காற்றில் ஆடிக்கொண்டு இருந்தது. நெற்றி மூன்றாம் பிறைபோல் பிரகாசமாக இருக்க, கடைக்கண்ணில் மக்களுக்கு உதவிடும் கோடை மழைபோல் கருணை குடி கொண்டிருந்தது. இலவம் பூ இதழ்போல் சிவந்திருந்த அவரின் இதழ்களின் வழியே இனிய சொற்கள் மலர்ந்தன.
"இளவளவா... இத்தனை கோபம் எதற்கு? உன் அனுமதிக்கென இத்தனை நாட்களாக காத்திருந்த என்னையும் சிற்பிகாவின் தந்தையையும் நீ இப்படி நிந்திக்கலாமா?"
"பேச்சை மாற்றாதீர்கள் அம்மா... திருமண பேச்சுவார்த்தை நிகழ்ந்ததா இல்லையா? அதை மட்டும் கூறுங்கள்."
"நிகழ்ந்தது..."
"ஏன் இப்படி செய்தீர்கள் அம்மா?"
"நான் ஒன்றும் உனக்கு விருப்பம் இல்லாத பெண்ணை மணமுடிக்க சொல்லி கட்டாயப் படுத்தவில்லையே... நீயும் இரும்பொறை இளவரசி சிற்பிகாவும் இளமையிலிருந்து ஒருவரையொருவர் உயிராய் விரும்புகிறீர்கள் என்ற உண்மை இந்த ராஜ்ஜியம் முழுவதும் தெரிந்தது தானே, பழைய பகையை இன்னும் எத்தனை நாள் தலைமேல் தூக்கிக் கொண்டு திரிய போகிறாயடா?..."
"தங்களின் தமையன் மன்னிக்கும் அளவிற்கும் சிறிய தவறா செய்திருக்கிறார்?"
இரும்பொறை அரசன், "அந்த ஒரு தவறுக்காக இன்னும் எத்தனை முறை என்னை பழிதீர்க்க போகிறீர்கள் இளவரசே? அப்படியே செய்தாலும் அதை என்னோடு நிறுத்திக் கொள்ளக் கூடாதா என் மகள் சிற்பிகா என்ன பாவம் செய்தாள்? தாங்கள் என்னுடனான உறவை முறித்துக் கொண்ட பொழுதே, அவளும் தங்கள் மீது கொண்ட காதலால் தகப்பனை தனியே தவிக்க விட்டுவிட்டு தங்களோடு வந்தவள் ஆயிற்றே.... தமையனின் பெயரை சொல்லி இன்னும் எத்தனை காலம் அவளை தள்ளி வைக்க போகின்றீர்கள்? இல்லை என் மீது இருக்கும் கோபத்தால் என் மகளை காலம் முழுவதும் திருமணம் செய்யாமல், தங்கள் அரண்மனை தாதியாக்கி கொள்ளும் நினைப்பா?"
"நிறுத்துங்கள்......." என்ற ஒற்றை வார்த்தையில் சகலமும் நின்று போயிற்று. இளவளவனது கோபத்தில் அளவினை அவன் வெளியேற்றும் மூச்சுக்காற்றே அம்மூத்த வயதினர்களான அண்ணன் தங்கை இருவருக்கும் அறிவுறுத்தியது.
சில நொடிகளுக்குப் பிறகு தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன், "கேளுங்கள் இரும்பொறை அரசே! குண்டலங்கள் ஆடும் உங்களின் இரு செவிகளையும் நன்றாக திறந்து வைத்து கேட்டுக் கொள்ளுங்கள்... தங்களின் புதல்வி சிற்பிகா என்று என் கழுத்தில் மாலை சூட்டினாளோ அந்த நொடியே, அவள் மனதால் என் மனைவி ஆகி விட்டாள்."
"இளவயது பொம்மைக் கல்யாணம் ஊருக்கு ஆதாரமாகாது இளவரசே..."
"ஆனால் எங்கள் காதலுக்கு அதுதான் அஸ்திவாரம். தங்கள் மகள் மீது தங்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறதோ அதைவிட அதிகமான பாசத்தை என் மனைவியின்பால் நான் வைத்திருக்கிறேன். நாட்கள் நகர்ந்தாலும், ஆண்டுகள் கடந்தாலும், ஏன் ஆயிரம் ஜென்மம் கழித்து நாங்கள் பிறந்தாலும் அவளைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனதாலும் தொட மாட்டேன்... இனி இன்னொரு வார்த்தை என்னவளை பற்றி தரக்குறைவாய் பேசினாள் தங்களின் நாக்கு துண்டிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்."
"வளவா... என்ன பேச்சு இது? ஆயிரம்தான் இருந்தாலும் அவன் உன் தாய் மாமனடா, எனக்கு கொடுக்கும் மரியாதையை அவருக்கும் கொடுக்க மறவாதே. இறுதி முடிவாக சொல்கிறேன், நானும் உன் தந்தையும் என்ன செய்தாலும், அது உங்களுக்கும் நம்முடைய ராஜ்யத்திற்கும் நன்மை பயப்பதாகவே இருக்கும், ஆதலால் இம்முடிவை நீ ..."
"இருந்தும் திருமணம் செய்யப் போகின்ற என்னிடம் நீங்கள் முன்கூட்டியே அனுமதி கேட்டிருக்க வேண்டுமில்லையா மகாராணி?"
"மன்னரின் நேரடி உத்தரவின் பேரில் செய்தேன் இளவரசே..."
"தந்தை சொன்னால், 'முதலில் முடி இளவரசன் மணமாகாமல் இருக்கையில் இரண்டாமவனுக்கு மணம் நிகழ்த்துவது தவறு' என்று நீங்கள் அவருக்கு அறிவுறுத்த வேண்டாமா?"
"எத்தனை நாட்களுக்கு நான் இதையே சொல்லி அவரை சரிக்கட்டுவது மகனே? நாங்கள் என்ன வேண்டுமென்றே அனழேந்திக்கு மணம் செய்விக்காமல் இருக்கிறோமா? அவன் ஒப்புக் கொள்ள மறுத்தால் உன் அன்னையால் நாட்டின் மன்னனை எதிர்த்து என்ன செய்ய முடியும் சொல்? அதுவும் போக ராஜகுலவிருத்தி யாகம் செய்விக்க வேண்டிய நாள் நெருங்கி வருகிறது என்பதை நீயும் அறிவாய் இல்லையா? நம் முறைப்படி குறைந்தது இரண்டு ராஜ குலத்து தம்பதிகளாக யாகத்தில் பங்கேற்க வேண்டும் எனும் நியதியை நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டுமா? திருமண பேச்சினை எடுத்தாலே உன் தந்தை என்னை மேட்டிற்கு இழுக்கிறார், உன் தமையன் என்னை பள்ளத்திற்கு இழக்கிறான், நீயோ இருவரையும் சேராது தனிவழி செல்கிறாய். இப்பொழுது விஷயம் என் கை மீறி சென்றுவிட்டது, மூவரும் மூன்று விதமாக பேசுகையில் தனி ஒருவளாக என்னால் என்ன செய்ய முடியும் மகனே...."
"என்னிடம் இதை முன்பே சொல்லி இருக்கலாமே? என்னால் என் தமையனை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க முடியும். நீங்கள் யாக தினத்திற்கு முன்பு ஒரு நல்ல இளவரசியை தேடி பார்த்து வையுங்கள், நான் தமையனை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறேன்"
"இப்படி ஒரு முடிவை நீ எடுப்பாய் என்று முன்பே தெரிந்திருந்தால் நான் இந்த சங்கடத்திற்கு ஆளாகி இருக்க மாட்டேனே... அண்ணனும் தம்பியும் எப்பொழுது பார்த்தாலும் இலை மறை காயாய் பேசிக் கொள்கிறீர்கள். அறிவிலும் வாள் வீச்சிலும் சிறந்தவர்களாகிய உங்கள் இருவரது மனநிலையை என்னால் பார்வையால் கணிக்க முடியவில்லையே மகனே! போனது போகட்டும், நீ அனழேந்தியிடம் விரைவில் பேசி பார்த்து முடிவு சொல். உங்கள் இருவரது திருமணமும் ஒரே மேடையில் நிகழ்ந்தால் அதைக் கண்டு இன்பம் கொள்பவர் என்னைப் போல எவரும் இல்லை..."
"ஆகட்டும், அண்ணனிடம் பேசுவது எனது பொறுப்பு திருமண வேலைகளை கவனித்துக் கொள்வது உங்கள் பொறுப்பு... நான் வருகிறேன்..." என்று இருவருக்கும் பொதுவாய் சொல்லிவிட்டு திரும்பி நடந்தவனது முதுகினை, இரும்பொறை தேசத்து அரசனின் விழிகள் கோபக்கனலோடு பார்த்துக் கொண்டிருந்தன.
'அன்னையிடம் வாக்கு கொடுத்து விட்டோமே தவிர, அண்ணனை எப்படி திருமணத்திற்கு சரிக்கட்டுவது? இதுநாள் வரையில் அவன் தன்னுடைய விருப்பத்தை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றி கொண்டதே கிடையாதே....' என்ற சிந்தனையோடு அனழேந்தியின் அறையினை வந்தடைந்தான்.
அனழேந்தியின் அறைக்காவலர்கள் இளவளவனிடம், "இளவரசே! தங்களின் தமையனார் கள்வர்களிடமிருந்து கால்நடைகளை மீட்க கானகம் சென்றிருக்கிறார்...." என்று பவ்யமாக தெரிவித்தனர்.
"நமரி ஒலியை கேட்டதும் நானும் அதனை அறிந்தேன் வீரர்களே... ஆயினும் அண்ணனிடம் நான் அளவளாவ வேண்டிய முக்கிய செய்தி ஒன்று உள்ளது. ஆதலால் அவர் எப்பொழுது அரண்மனை திரும்பினாலும் அவரிடம் நான் வந்து சென்ற தகவலை தெரிவியுங்கள்."
"ஆகட்டும் இளவரசே!"
நடந்து முடிந்த களேபரத்தில், தான் மந்திரத்தால் பொம்மையாக்கிய யாளியைப் பற்றி முழுவதுமாய் மறந்திருந்த இளவளவன், பிரச்சனைகள் மட்டுப்பட்டதும் அவள் ஞாபகம் வரவே விறுவிறுவென தன் அறைக்கு வந்தான். அங்கே இரும்பொறை தேசத்துக் இளவரசி சிற்பிகாவையும் காணவில்லை மரப்பாவையான யாளியையும் காணவில்லை...
அறையின் மூலையில் இருந்த இருசப்பன், "இளவரசே, தங்களுக்கென நெடு நேரம் காத்திருந்த இளவரசியார், இப்பொழுதுதான் தன் மாளிகைக்கு சென்றார்... நான்காம் ஜாமம் நிகழும் நேரம் என்பதால் தாங்கள் அவரைத் தேடி வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தி விட்டு சென்றார்... தங்களது மரப்பாவையை நாளை மாலை தங்களிடம் தந்துவிடுவதாய் தகவல் தெரிவித்துவிட்டு சென்றார்..." என தகவல் தெரிவித்தான்.
"கோபமாக சென்றாளா?"
"இல்லை இளவரசே... எம்மன்னனின் மகள் விவரம் தெரியாத வயதிலேயே தங்களுக்கு மாலை சூட்டியவர், தாங்கள் கொண்ட சபதத்திற்காக திருமணத்திற்கு முன்பே தன் பிறந்தகம் விட்டு இங்கு வந்து தங்கி இருப்பவர், இப்பொழுது கூட நீங்கள் இதைத்தான் செய்வீர்கள் என்று முன்பை அறிந்திருந்தவர், அவர் தங்கள் மீது கோபம் கொள்வாரா? உங்களுக்கும் ஓய்வு தேவை என்ற ஒரே காரணத்திற்காக வரவேண்டாம் என்றுரைத்தார்..."
"உம்மன்னனை ஏனடா இங்கு இழுக்கிறாய்? அவர்தான் உன்னை என்னிடம் கொடுத்துவிட்டாரே பிறகென்ன எம்மன்னன்? பொல்லாத மன்னன்..."
"மரத்தின் கிளைகள் எவ்வளவு உயரம் சென்றாலும், அது தோன்றிய இடம் மண் என்பதை யாராலும் மறுக்க முடியாது இளவரசே... அது போலத்தான் நானும். அடிமையாக வந்தவனை மெய்க்காப்பாளனாக மாற்றியது தங்களின் பெருந்தன்மை, அதற்காக நான் பிறந்த மண்ணையும் மன்னனையும் நீங்கள் குறை கூறினால் என்னால் ஏற்க முடியுமா அரசே? வேண்டுமானால் எதிர்த்து பேசியமைக்காக என்னை இரண்டு அடி அடித்துக் கொள்ளுங்கள், உயர்ந்த உள்ளம் கொண்ட தங்களின் கையால் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் நான்..."
"உயர்ந்த உள்ளமா? அண்ணனை விட எனக்கது சற்று குறைவடா... அவன் தன்னால் பிற உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக மெய்க்காப்பாளர்களையும் வீரர்களையும் தன்னோடு இருக்க வேண்டாம் என்றுவிட்டு எங்கு சென்றாலும் தனியே செல்கின்றான்... உடன் பிறந்தவன் என்ற போதும் என்னோடு பேசுவதற்கும் அன்பு பாராட்டுவதற்கும் இடம், பொருள், ஏவல் எல்லாம் சரி பார்த்து செய்கிறான். என்னை காப்பதற்கென்றே கடந்த ஏழு ஆண்டுகளாக ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை வருத்திக் கொள்கிறான்... அதன் வரிசையில் இப்பொழுது அவனுடைய திருமணமும் சேர்ந்து விட்டதடா... நான் இங்கே பஞ்சு மஞ்சத்தில், பட்டுத் தலையணையில் தலை வைத்து, பவள மல்லி வாசனையில், காதலியின் வதனத்தை பக்கத்து மாளிகையின் சாளர துவாரத்து வழியே பார்த்துக்கொண்டு படுத்திருக்கிறேன். ஆனால் அவன்???"
இளவளவன் வருத்தத்திற்கான காரணம் நியாயம்தான். ஏனெனில், அதே நேரத்தில் வெண்குடை கீழ் இருக்க வேண்டிய அவ்வேந்தனின் மூத்த மைந்தன், கொடிய வனவிலங்குகள் நடமாடும் இருள்படர்ந்த காட்டுக்குள், மீட்டு வந்த மாடுகளின் நடுவே, இடிமழை இரைச்சலுக்கும் மழைக்காற்றுக்கும் விருந்தாளியாக, தன் வெந்நிற புரவியின் முதுகில் விண்ணைப் பார்த்தபடி படுத்து கிடந்தான்.
No comments:
Post a Comment